Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

யோகியருக்கெல்லாம் யோகியாக இருக்கும் அம்பிகை

சென்ற இதழின் தொடர்ச்சி…..

கௌலிநீ - குல யோகிநீ

ராமாவதாரத்தில் பார்த்த ரிஷிகள் எல்லோரும் கிருஷ்ணாவதாரத்தில் கோபிகைகளாக வந்தனர். அதற்கடுத்து பார்த்தால், சைதன்ய சம்பிரதாயத்தில் ஒரு விஷயம் உண்டு. பிருந்தாவனத்தில் சிவபெருமானே கூட ராச லீலையை பார்ப்பதற்காக பெண் வேஷம் போட்டுக் கொண்டு கோபேஸ்வரராக வந்தார். அவரும் கோபியராக வந்தார். ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஒரு கட்டத்தில் எல்லோருமே நாயிகா பாவத்தில் கொண்டு வந்து விடுவார்கள். நம்மாழ்வார் பராங்குச நாயகியாகவும். திருமங்கை ஆழ்வார் பரகால நாயகி ஆகிவிடுவார். பெரியாழ்வார் யசோதையாகிவிடுவார். அம்மாவாக ஆகிவிடுவார்.

இறுதியாக அந்த உயர்ந்த நிலையை அடையும்போது எல்லோருமே குல யோகிநீதான். அப்போது கௌலிநீ ஆக அவள்தான் இருக்கிறாள். குல யோகிநீ யாக அவள்தான் இருக்கிறாள்.

மீண்டும் இன்னொரு முறை புரிந்து கொள்வோம்.

1. அம்பிகையே path. Traveller, destination.

2. அம்பிகையே சத்தியம்… அவளே வழி… அவளே ஜீவன்..

3. அம்பிகையேஅறிவாகவும்… அவளே அறியப்படும் பொருளாகவும்… அவளே அறிபவனாக இருக்கிறாள்.

4. அம்பிகையே சாத்தியமாக இருக்கிறாள். அவளே சாதனையாக இருக்கிறாள். அவளே சாதகனாகவும் இருக்கிறாள்.

இதற்கான கோயிலாக நாம் சப்த விடங்க தலங்களில் ஒன்றான திருவாய்மூர் தலத்தைச் சொல்லலாம். ஏனெனில், இறைவனை அடையக் கூடிய வாயாக இந்தத் தலம் இருப்பதால் வாய்மூர் எனப்பட்டது.

திருவாய்மூர் என்பது சப்த விடங்க தலங்களில் ஒன்று. இந்த விடங்க தலங்கள் அனைத்தும் குண்டலிணீ ரூபமானது. இங்கு தியாகராஜர் ஆடும் தாண்டவத்திற்கு கமல நடனம் என்று பெயர். இந்த விடங்கருக்கு நீல விடங்கர் என்று பெயர். இந்தக் கமல நடனம் என்பது தாமரை மலர் காற்றில் இப்படியும் அப்படியும் அசைவது போன்று இருக்கும். அதாவது ஒரு சாதகன் குண்டலீனியின் உள் அனுபவத்தில் அந்த சக்கரத்தின் அசைவானது கமல நடனம் போன்று இருப்பதை தரிசிப்பான். மேலும், இந்த சப்த விடங்கங்களும் ரகசியமானது. நம் உள்ளார்ந்த சக்கரங்களில் விழிப்பை ஏற்படுத்தக் கூடியது.

திருவாய்மூரில் ஒரு லீலை நடைபெற்றது. சூட்சுமமாக வேதாரண்யத்தில் கண்ணுக்கு தெரியாமல் இருந்த பகவானை, திருஞானசம்மந்தர் அப்பருக்கு காண்பித்துக் கொடுத்தார். ஏனெனில், அப்பர் பத்து பாடல்கள் பாடி கதவை திறந்தது வேதாரண்யம். ஆனால், சம்மந்தருக்கோ ஒரு பாடலிலேயே கதவு திறந்தது. அதற்கான காரணமாக ஈசனே அப்பரின் பாடலை கேட்க ஆசைப்பட்டார் என்று சொல்வார். ஆனாலும், அப்பருக்கு இது வருத்தமாக இருந்தது.

அப்பருக்கு இறைவன் ‘‘வாய்மூரில் இருப்போம் வா” என்று உணர்த்திய திருத்தலம். ஆனால், வாய்மூரில் அப்பர் கையை பிடித்துக் கொண்டு ஞானசம்மந்தர் இங்கு சுவாமியை காட்டிக் கொடுத்ததாக ஒரு லீலை உண்டு.

வெளிப்படையாக தெரியாத ஒன்றை குரு காட்டிக் கொடுப்பது போன்று அது இருந்தது. குரு பரம்பரை பிரகாரம் ஞானசம்மந்தர் அப்பருக்கும் முன்னே இருக்கிறார். அவரே முதல் ஆச்சார்யான். மேலும், வாய்மூர் என்பது வழியை காட்டிக் கொடுப்பதால் இத்தல ஈசனுக்கு வாய்மூர்நாதர் என்று பெயர். எப்படி லலிதா சஹஸ்ரநாமத்தை வசின்யாதி வாக் தேவதைகளில் ஒன்றான கௌலிநீ என்பவள் சொன்னாளோ… அதேபோல இங்குள்ள அம்பிகையின் திருநாமம் பாலின் நன் மொழியாள். சமஸ்கிருதத்தில் க்ஷீரோப வசனி என்பதாகும். இந்தப் பெயரே சஹஸ்ரநாமத்தையும் அறிந்து கொள்ளும் சக்தியை அளிக்கும் என்பது திண்ணம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 124ஆவது சிவத் தலமாகும்.

இத்தலம் திருவாரூருக்கு அருகேயும், திருக்குவளைக்கு அருகேயும் உள்ளது. இந்த திருக்குவளையும் சப்த விடங்க தலங்களில் ஒன்றாகும்.

ரகசியங்களுக்கெல்லாம் ரகசியமான அம்பிகைகள்

அகுலா - ஸமயாந்தஸ்தா

- ஸமயாசார தத்பரா

- என்கிற மூன்று நாமங்களை சேர்த்து பார்க்கப் போகிறோம்.

இதற்கு முன்பு நாம் குலம், குல மார்க்கம், குலாசாரம் என்றெல்லாம் பார்த்தோம்.

குலம், குல மார்க்கம், குலாசாரம் நமக்கு என்ன காண்பித்துக் கொடுத்தது.

இதற்கு நிறைய விதமான அர்த்தங்கள் பார்த்திருக்கிறோம். யோக மார்க்கமாக மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம் வரையிலுமான அர்த்தங்களை பார்த்திருக்கிறோம். மேலும், இந்த சுஷும்னா நாடி போகின்ற இந்த பாதைக்கு குலம் என்று பெயர். சரீரத்திற்கும் குலம் என்று பெயர். ஞான மார்க்கத்தில் த்ரிபுடி இல்லாத நிலைக்கு குலம் என்று பெயர். அப்படியெல்லாம் இருக்கக் கூடியவள்தான் கௌலிநீ. அந்த குலத்திற்கு இருக்கக் கூடியவள். அவளை உபாசனை செய்யக் கூடிய மார்க்கத்திற்கு குலமார்க்கம் அல்லது குலாசாரம் என்று பார்த்தோம். அதிலேயும் குல மார்க்கம் மற்றும் குலாசாரம் என்பது பஹிர்முக அதாவது வெளிப்புறமான உபாசனையை குறிப்பிடுகிறது என்பதை பார்த்தோம். ஸ்ரீசக்ர பூஜை, மேரு என்றெல்லாம் இந்த உபாசனையை அளித்திருக்கிறது என்பதையும் பார்த்தோம்.

இப்படி பஹிர்முகமாக, வெளிப்புறமாக உபாசனை செய்யும்போது, ஒரு கட்டத்தில் மீண்டும் உள்ளே வரவேண்டும். அந்தர்முகமாக திரும்ப வேண்டும். இப்படி பஹிர்முகமாக பார்த்துக் கொண்டே வந்த சாதகனுக்கு, இந்த சஹஸ்ரநாமத்தில் வசின்யாதி வாக்தேவதைகள் ஒரு வளைவு அல்லது உள் பக்கமாக திருப்பம் கொடுக்கிறார்கள்.

இவ்வளவு நேரமாக குலம், குலாசாரம் என்றெல்லாம் விவரித்தார்கள் அல்லவா? இது மொத்தமும் அம்பாளின் சொரூபம்தான். ஆனால், வெளிப்புறமாக எந்த அம்பிகையின் சொரூபத்தை define செய்தாயோ, அப்படியே அதற்கு எதிராக அந்தர்முகமாக அவளுக்கு சொரூபம் உண்டு. நீ பஹிர்முகமான (வெளிப்புறமுள்ள) சொரூபத்தை பார்த்தால், உன்னை அந்தர்முக சொரூபத்தில் கொண்டுபோய் சேர்க்கும். இந்தப் புரிதல் இல்லாமல் வெளிநோக்கி மனதை செலுத்துவதில் பயனில்லை. உள்நோக்கி திருப்புவதற்கு வெளிப்புறமுள்ள பாதையை தேர்ந்தெடுத்து திருப்புவதுதான் இந்த உபாசனையின் விஷயமே.

அப்படி உள்ளே திரும்பும்போது அம்பாள் எப்படி இருக்கிறாள் எனில், இவ்வளவு நேரம் குலம் என்றெல்லாம் பார்த்துக் கொண்டே வந்தோம். இந்த குலத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவளாக இருக்கிறாள். இந்த குலத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவளாக இருக்கின்ற அந்த நிலைக்குத்தான் அகுலா என்று பெயர். சென்ற நாமங்களில் சொன்ன எல்லா வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்டவள். எல்லா வர்ணனைகளுக்கும் காருண்யத்திற்காக இறங்கி வருகிறாள். ஆனால், இந்த வர்ணனைகளுக்குள் அவளை அடக்க முடியாது. அதனால் அவளை அகுலா என்று அழைக்கிறார்கள்.

அம்பாளை குலம் என்றும், சிவ பெருமானை அகுலம் என்றும் சொல்கிறோம். அகுலம் என்கிற சிவத்தன்மையானது எல்லாவற்றையும் மீறி, எல்லாவற்றையும் கடந்து இருக்கும். அம்பாள் காருண்யமாக நமக்காக எல்லாவற்றிலும் இறங்கி இறங்கி வருவதால் குலம். அறிவு, அன்பு எல்லாமே சிவம்தான். ஆனால், எல்லாவற்றையும் கடந்து இருக்கும். சக்தியானது இதற்குள் பிரவேசித்து நமக்குள் செயல்படும். நமக்குள் அன்பாக, அறிவாக, குண்டலீணியாக செயல்படுகிறாள். அப்பாற்பட்ட நிலையில் இருக்கக் கூடியதற்கு அகுலம் என்றும், செயல்படக் கூடிய நிலையில் இருப்பதற்கு குலம் என்றும் பெயர். நம்முடைய சரீரத்திலேயே அகுல சஹஸ்ராரம் என்று ஒன்று இருக்கிறது. குல சஹஸ்ராரம் என்று ஒன்று இருக்கிறது. அகுல குண்டலிணீ என்றொரு சக்தி இருக்கிறது. குல குண்டலிணீ என்றொரு சக்தி இருப்பதை பார்த்தோம். இன்னும் ஆழமாகப் பார்த்தால் இந்த இரண்டு சக்திகளும் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட நிலையிலும் செயல்படும். எல்லாவற்றிற்கும் உட்பட்ட நிலையிலும் செயல்படும்.

ஒரே நேரத்தில் சக்தி நமக்கு உட்பட்ட நிலையில் செயல்படும். அப்படி செயல்படக் கூடிய சக்திக்கு சர்வ அந்தர்யாமி என்று பெயர். அதே சக்தி நமக்கு அப்பாற்பட்ட நிலையிலும் செயல்படும். அப்படி செயல்படக் கூடிய சக்திக்கு சர்வ வியாபி என்று பெயர். சர்வ வியாபியாக அகுலாவாக இருப்பதும் அவள்தான். சர்வ அந்தர்யாமியாக குலாவாக இருப்பதும் அவள்தான்.

இப்படி எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு இருக்கும்போது எப்படி உபாசனை செய்வது?

அது கஷ்டம். அதனால், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு இருப்பவளை, நமக்குள் ஆத்ம சொரூபமாக பார்த்து மட்டும்தான் உபாசனை பண்ண முடியும். அப்படி அந்தர்முகமாக பார்த்து பண்ணும் உபாசனைக்கு, சமயா… என்று பெயர். இதற்கு சமய மார்க்கம் அல்லது சமயாசாரம் என்று பெயர்.

இந்த சமய மார்க்கம் இருக்கிறதல்லவா… சமயாசார உபாசனைக்குள் அவள் ரகசியமாக இருப்பதால், அவளுக்கு சமய அந்தஸ்தா என்று பெயர். இதற்கு முன்பு நாம் குல மார்க்கத்திற்குள் ரகசியமாக இருப்பதால் அவளுக்கு குலாந்தஸ்தா என்று பார்த்தோம்.

இப்படி சமயாசாரம் என்கிற அந்தர்முக உபாசனையின் மூலம் அடையப்படக் கூடியவள். சம்யாசாரம் என்கிற உபாசனையினால் மிகுந்த மகிழ்ச்சியை அடைபவள். யாரெனில், அந்தர்முகமாக அந்தராத்மாவாக இருக்கக் கூடிய அம்பாள். அதனால் அவளுக்கு சமயாசார தத்பரா என்கிற இன்னொரு பெயர் உண்டு. சமயாசாரம் என்று சொல்லப்படக் கூடிய, அந்தர்முக உபாசனையினால் மகிழ்பவள். அந்தர்முக உபாசனைக்கு உரியபவளாக இருப்பவள். அந்தர்முக உபாசனையினால் உபாசிக்கப்படும் ஆத்ம சொரூபியாக இருப்பவள். யாரெனில், லலிதா மஹாதிரிபுரசுந்தரி. அதனால் அவளுக்கு சமயாசார தத்பரா என்று பெயர்.

சரி, இந்த சமயாசாரத்தை எப்படிச் செய்வது?

குல மார்க்கம், குலாசாரத்திற்கு பத்ததி இருக்கிறதல்லவா?

மஹாமேரு எனில் இப்படியிருக்கும். அம்பாள் விக்ரமெனில் இப்படி இருக்கும். தேவி கட்கமாலா, த்ரிசதீ, சஹஸ்ரநாம அர்ச்சனை இருக்கிறது. நவாவரண பூஜை இருக்கிறது. அதற்குரிய திரவியங்களெல்லாம் இப்படி சேகரிக்க வேண்டும். அந்த திரவியங்களைக் கொண்டு இப்படியெல்லாம் பூஜை செய்ய வேண்டும். தூப, தீப நைவேத்தியங்களெல்லாம் செய்து, தீபாராதனைகளெல்லாம் செய்து உபசாரங்கள் செய்து பூஜையை செய்ய வேண்டும். இது பஹிர்முகமான வெளிப்புறமான பூஜையாகும்.

(சுழலும்...)