Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வெற்றியின் முதல் கதவு

ஒரு நாட்டின் அரசன் வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்தான். அரண்மனையின் பிரம்மாண்டமான கோட்டைக் கதவை கைகளால் திறந்து தள்ள வேண்டும். அதைத் திறப்பவன் நாட்டின் ஒரு பகுதியை பரிசாகப் பெறுவான். ஆனால், தோற்றுவிட்டால், அவனுடைய இரண்டு கைகளும் வெட்டப்படும் என்ற கடுமையான நிபந்தனையும் இருந்தது.

இந்த அறிவிப்பைக் கேட்ட மக்கள் அனைவரும் பயந்தனர். ‘‘என்ன ஆகும்?”, ‘‘தோற்றுவிட்டால் வாழ்க்கையே முடிந்து விடும்!” என்று எண்ணி, யாரும் போட்டியில் கலந்து கொள்ளத் துணியவில்லை.

அப்போது ஒரு சாதாரண இளைஞன் மட்டும் தைரியமாக முன்னே வந்தான். அவனைப் பார்த்தவர்கள், ‘‘மகனே! தோற்றுவிட்டால் உன் கைகளை இழந்து விடுவாய். உன் எதிர்காலம் என்ன ஆகும்?” என்று கேட்டனர்.

அதற்கு அந்த இளைஞன் அமைதியாகப் புன்னகைத்து, ‘‘வென்றால் நான் அரசனைப்போல வாழ்வேன். தோற்றால் என் கைகள் மட்டும்தான் போகும்; என் தைரியமும் உயிரும் அல்ல. முயற்சி செய்யாமல் வாழ்வதைவிட, முயற்சி செய்து தோல்வியடைவதே மேல்.” என்றான்.

அவன் கோட்டைக் கதவை நம்பிக் கையோடு தள்ளினான். அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்தனர். கதவு ஒரே நொடியில் திறந்துவிட்டது! காரணம்... அந்தக் கதவிற்கு தாழ்ப்பாள் போடப்படவே இல்லை.

மக்களின் பயமே அந்த கதவு பூட்டப்பட்டிருக்கும் என்ற உணர்வுதான்; ஆனால் உண்மையில் கதவு எப்போதோ இரகசியமாக திறந்திருந்தது.

இறைமக்களே, நம் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான ‘‘பூட்டப்படாத கதவுகள்” இருக்கின்றன. ஆனால், பயம் என்ற கற்பனையான பூட்டை நாமே போட்டு, வாய்ப்புகளை விட்டு விலகுகிறோம். தோல்வி நம்மை அழிப்பதில்லை; முயற்சி செய்யாத மனநிலையே நம்மை தோற்கடிக்கிறது.

ஒரு விதை மண்ணுக்குள் புதையாமல் மரமாக முடியாது. ஒரு கப்பல் கரையோரத்தில் பாதுகாப்பாக இருக்கலாம்; ஆனால் அது கரையில் நிற்பதற்காக உருவாக்கப்படவில்லை. அதுபோல, மனிதனும் பாதுகாப்பாக வாழ்வதற்காக மட்டுமல்ல, சாதனை படைப்பதற்காகவே படைக்கப்பட்டவன்.

வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே இருக்கும் மிகப் பெரிய சுவர் திறமையல்ல; தன்னம்பிக்கையின்மையே ஆகும். பயம் எப்போதும் ‘‘முடியாது” என்று எண்ண வைக்கும். ஆனால் நம்பிக்கை மட்டும் ‘‘ஒருமுறை முயற்சி செய்து பார்” என்று மெதுவாகச் சொல்லும். அந்த ஒரு முயற்சிதான் பல நேரங்களில் வாழ்க்கையின் மிகப்பெரிய கதவைத் திறக்கிறது.

முயல்ஆமை கதையில் முயலின் தோல்விக்குக் காரணம் ஆமை அல்ல; அதன் அலட்சியம். அதுபோல பலரின் தோல்விக்குக் காரணம் சூழ்நிலையல்ல; முயற்சி செய்யாத மனநிலையே.

‘‘என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.” (பிலிப்பியர் 4:13) என இறைவேதம் கூறுவதை நினைவில் கொள்ளுங்கள்.

‘‘வெற்றியாளர்கள் பயமே இல்லாதவர்கள் அல்ல; பயத்தைவிட தங்களுடைய நம்பிக்கையை பெரியதாக மாற்றியவர்கள்.” நீங்கள் தள்ளாமல் இருக்கும் கதவு திறக்காது. நீங்கள் தொடங்காத பயணம் வெற்றியைச் சந்திக்காது. இன்று உங்கள் வாழ்க்கையின் கதவை இறைநம்பிக்கையோடு தள்ளுங்கள். அது பூட்டப்பட்டிருக்கலாம் என்று நினைப்பதை விட, திறந்திருக்கலாம் என்ற நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்.

- அருள்முனைவர். பெ. பெவிஸ்டன்