Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இறுதி வேதம் - இணையற்ற அருட்கொடை

குர்ஆன் என்றால் நேர்வழி என்றும் ஒரு பொருள் உண்டு. சத்தியம் - அசத்தியம், நன்மை - தீமை, வெற்றி - தோல்வி ஆகியவற்றின் பாதையை அது மனிதனுக்குத் தெளிவாகக் காட்டுகிறது. மனிதனின் எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண, குர்ஆனின் பக்கம் சென்றாலே போதும். மனிதனிடமுள்ள அருட்கொடைகளிலேயே மிகப் பெரியது மனிதனிடம் உள்ள அறிவாற்றல்தான் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், இறைவேதம் அதையும்விடப் பெரிய அருளாகும். அது அறிவுக்கே ஆசிரியனாகத் திகழ்கிறது. இறைவன் வேத வழிகாட்டுதல்களை வழங்காமல் இருந்திருந்தால், நிலைமை என்னவாகியிருக்கும்? மனிதன் தன்னிடமுள்ள அறிவின் துணை கொண்டு உலகியல் பொருள்கள், அவற்றின் பயன்பாடுகள், அவற்றைக் கையாளும் வழிமுறைகள் ஆகியவற்றை வேண்டுமானால் கண்டறிந்திருக்க முடியும். ஆனால், தர்மம், அதர்மம், நீதி, அநீதி இவற்றை எல்லாம் இனம் காண்பதற்கு சாத்தியமில்லாமல் போயிருக்கும்.

இயல்பாகவே மனிதனிடம் காணப்படும் ஒழுக்க உணர்வு, நற்சிந்தனை இவையெல்லாம் வேதம் அவனுக்கு அளித்த வெகுமதியாகும். இந்த வேத வெளிச்சத்தின் ஒளிக்கீற்றுகள் இல்லாது போயிருந்தால், மனிதர்களிடத்தில் மனிதத் தன்மை என்ற ஒன்றைக் கண்டுபிடிக்கவே முடியாமல் போயிருக்கும். காரிருளில் மனிதன் சிக்கித் தடுமாறக் கூடாது என்பதற்காகவே இறைவன் தன் வேதவெளிப்பாட்டின் மூலம் அவ்வப்போது தன் தூதர்கள் வாயிலாக மனிதனுக்கு நேர்வழி காட்டிக் கொண்டிருந்தான்.

இறுதியாக முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலம் இந்தக் குர்ஆனை கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அருளினான். அன்றிலிருந்து இன்று வரை இனி என்றென்றும் இறுதிவரை மனித குலத்திற்கு வாழ்வின் தெளிவான பாதையைக் காட்டும் உண்மையான இறைவேதமாக இது ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.

குர்ஆன் என்பது வெறும் சட்ட நூல் அல்ல. தத்துவங்கள், நீதிபோதனைகள், அத்தாட்சிகள் ஆகியவற்றின் கருவூலமாகும். மனித அறிவுக்கு முன்னால் ஏற்றி வைக்கப்பட்ட, என்றுமே அணைந்திடாத, எவராலும் அணைத்திட முடியாத ஒளிவிளக்காகும். இறுதி வேதமான குர்ஆன் தன்னைப் பற்றிக் கூறும்போது,

“இது இறைவனின் வேதமாகும். இதில் யாதொரு ஐயமும் இல்லை. இறையச்சம் உடையோர்க்கு இது சீரிய வழிகாட்டியாகும்” (குர்ஆன் 2:2) எனத் தெளிவுபடக் கூறுகிறது.

இன்னோர் இடத்தில் மனித இனம் முழுவதையும் அழைத்துப் பேசுகிறது.

“மனிதர்களே, உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அறிவுரை உங்களிடம் திண்ணமாக வந்துள்ளது. இது இதயங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தக்கூடியதாகவும், தன்னை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களுக்கு வழிகாட்டக்கூடியதாகவும், ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்றது.” (குர்ஆன் 10:57) ஆம். இறுதி வேதம் ஓர் இணையற்ற அருட்கொடை.

இந்த வார சிந்தனை

“இது (இந்தக் குர்ஆன்) மக்களுக்குரிய தெளிவான விளக்கமாகும். மேலும் இறைவனை அஞ்சி வாழ்வோர்க்கு வழிகாட்டியும் அறவுரையுமாகும்” (குர்ஆன் 3:138)

- சிராஜுல்ஹஸன்.