Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கங்கைகொண்ட சோழபுரத்தின் கவின்மிகு சிற்பங்கள்

சிற்பமும் சிறப்பும்

அமைவிடம்: பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம்.

காலம்: முதலாம் ராஜேந்திர சோழன் (பொ.ஆ.1014-1044) தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், உலகத்தரம் வாய்ந்த கற்சிற்பங்களின் கலைக்களஞ்சியமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு சிற்பமும் ஒரு உன்னதமான கலைப்படைப்பாக, நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளது.

முதலாம் ராஜேந்திர சோழன்: ஒரு சாம்ராஜ்யத்தின் நாயகன்

ராஜராஜ சோழனுக்கும் திரிபுவனமாதேவியாருக்கும் மார்கழி திருவாதிரை நன்னாளில் மகனாகப் பிறந்தவர் முதலாம் ராஜேந்திரசோழன். இவருடைய இயற்பெயர் `மதுராந்தகன்’. தன் தந்தையிடமிருந்து பரந்த சாம்ராஜ்யத்தை மட்டுமல்லாமல், போர்க் கலைகளையும் மரபுரிமையாகப் பெற்றார்.பொ.ஆ.1014-ல் அரியணை ஏறிய ராஜேந்திரசோழன், தென்னிந்தியா முழுவதும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தினார். இவருடைய ஆட்சிக்காலத்தில், சோழப் பேரரசு வங்காளம், பர்மா, இந்தோ - சீனா, மலாய் தீபகற்பம், சிங்கப்பூர், அந்தமான் நிக்கோபார், மாலத்தீவு மற்றும் இலங்கை வரைபரவியிருந்தது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ் ஒரு ஆட்சி மொழியாக மாறியதற்கு, இவருடைய கடல் கடந்த வெற்றிகளே முக்கியக் காரணம்.

கங்கைகொண்ட சோழபுரம்

கங்கை வரை சென்று வெற்றி பெற்றதன் நினைவாக, கி.பி. 1023-ல் `கங்கைகொண்ட சோழபுரம்’ என்ற புதிய நகரத்தை அவர் உருவாக்கினார். அடுத்த 250 ஆண்டுகளுக்கு இந்த நகரம் சோழர்களின் தலைநகராக விளங்கியது. ஒட்டக்கூத்தரின் `மூவருலா’, ஜெயங்கொண்டாரின் `கலிங்கத்துப்பரணி’ போன்ற இலக்கியங்களில் இந்த நகரின் பெருமை பேசப்படுகிறது.

கோயிலின் கட்டடக்கலைச் சிறப்புகள்

தஞ்சை பெரிய கோயிலின் பிரதியெடுப்பாக இக்கோயிலைக் கட்ட, ராஜேந்திரசோழன் விரும்பினார். எனினும், சிற்பக்கலையில் இது தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ளது.

விமானம்

182 அடி உயரமுள்ள இக்கோயிலின் விமானம், வளைந்த (Concave) அமைப்பைக் கொண்டது. தஞ்சை பெரிய கோயில்`ஆண்மை’த் தன்மையுடனும், கங்கைகொண்ட சோழபுரம் `பெண்மை’த் தன்மையுடனும் (மென்மையான வளைவுகளால்) காட்சியளிப்பதாகச் சொல்லப்படுகிறது.

லிங்கம்

கருவறையில் உள்ள சிவலிங்கம், 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையாரையும் கொண்டது. இது மிகப்பெரிய சிவலிங்கங்களில் ஒன்றாகும்.

துவாரபாலகர்கள்

நுழைவாயிலில் உள்ள 18 அடி உயரமுள்ள பிரம்மாண்ட துவாரபாலகர்கள், அச்சத்தையும் பக்தியையும் ஒரு சேர வரவழைக்கின்றனர்.

குறிப்பிடத்தக்க சிற்பங்கள்

இக்கோயிலின் கோஷ்டங்களில் உள்ள சிற்பங்கள் கலை, ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாகும்

சண்டேச அனுகிரக மூர்த்தி

சிவனும் பார்வதியும் சண்டேஸ்வரருக்கு அருள் புரியும் காட்சி (இது ராஜேந்திரசோழனின் முடிசூட்டு விழாவைக் குறிப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது).

ஞான சரஸ்வதி, அர்த்தநாரீஸ்வரர், நடனமாடும் கணபதி, நடராஜர், காம தகன மூர்த்தி, காலந்தகர், ஆலிங்கன மூர்த்தி, பிட்சாடனர் ஆகியோரை கல்லில் கொண்டு வந்த கலைஞர்களின் கைவண்ணம் வியக்க வைக்கிறது. ``கங்கைகொண்ட சோழபுரத்துச் சிற்பங்கள் கற்பனைத் திறனுக்கும், நேர்த்தியான உருவாக்கத்திற்கும் பெயர் பெற்றவை. அவை உயிர் துடிப்புடனும், கலை நயத்துடனும் காட்சியளிக்கின்றன’’

தற்போதைய நிலை

1902-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கீழ் அணைக்கட்டு (Lower Anaicut) கட்டுவதற்காக இக்கோயிலின் வெளிச்சுவர் கற்களைக் கொண்டு சென்றாலும், இன்றும் இக்கோயில் தனது கம்பீரத்தை இழக்காமல் காட்சி யளிக்கிறது. இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை (ASI) இக்கோயிலைப் பராமரித்து வருகிறது.

மது ஜெகதீஷ்