இரண்டு விஷயம். இந்த ஸ்ரீரங்கம். கிருஷ்ணாவதாரம். இந்த குவலயா பீட சம்ஹார வரலாற்றில் இந்த இரண்டு விஷயமும் இணைகிறது. கிருஷ்ணாவதாரம் வருகிறது என்று நமக்குத் தெரியும். ஆனால், ஸ்ரீரங்கத்தைப்பற்றிய விஷயங்கள் எங்கு வருகிறதெனில், இந்தக் குவலயா பீட சம்ஹாரம் செய்யும்போது, அந்த குவலயா பீட யானையினுடைய பூர்வ ஜென்ம விஷயங்களை, அதாவது முற்பிறவி கதை ஒன்று உள்ளதாக வருகிறது. அந்த முற்பிறவி கதையொன்று புராணங்களில் சொல்லப்படுகின்றது.
இந்த குவலயா பீடம் என்கிற யானை முற்பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியினுடைய புத்திரனாக, ஒரு அசுரனாக இருந்ததாகவும் அப்படி அவன் அசுரனாக இருந்தபோது அவனுக்கு மந்தகதி என்று பெயர். இந்த மந்தகதி என்கிற அசுரன் மகாபலிச் சக்ரவர்த்தியின் மகனாக பிறந்தான்.
இந்த மந்தகதி என்பவன் ஸ்ரீரங்கத்திற்கு பெருமாளை தரிசனம் செய்ய வருகின்றான். இந்த இடத்தில்தான் ஸ்ரீரங்கத்தினுடைய தொடர்பு வருகின்றது. இவன் அசுரன் என்பதால் உருவத்தில் பெரியவன். அவனுடைய பெயருக்கு ஏற்றாற்போல் மெதுவாக நடக்கக்கூடியவன். ஆனால், இவனுடைய வலிமையினால் என்ன செய்கிறானெனில் தன்னுடைய இரண்டு கைகளாலும் அந்த பக்தர்களையெல்லாம் இரண்டு கைகளாலும் தள்ளி விட்டுவிட்டு, அப்படியே நேராகச் சென்று பெருமாளைத்தரிசனம் செய்கிறான். அப்படி தரிசனம் செய்துவிட்டு வரும்போது அப்போது அங்கு அமர்ந்திருந்த முனிவரை இந்தச் செயல் கோபப்படுத்துகின்றது.
மந்தகதியைப் பார்த்து முனிவர் சொல்கிறார். ‘‘உன்னுடைய வலிமையைக் காண்பிப்பதற்காக இப்படி பக்தர்களையெல்லாம் இப்படி தள்ளிவிட்டு பெருமாளை பார்க்கிறாய். இது பார்ப்பதற்கு எப்படி இருந்ததெனில், ஒரு மதம் பிடித்த யானைபோல் இருந்தது. அதனால், அடுத்த ஜென்மத்தில் நீ யானையாகப் போ என்று சபித்துவிட்டார்.’’
மந்தகதி தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டான். இதற்குப் பிறகு முனிவரும் மனமிரங்கி, ‘‘நான் உனக்கு சாபவிமோசனம் கொடுக்கிறேன். நீ யானையாகப் போனால் கூட, பகவானே சாட்சாத் கிருஷ்ணாவதாரம் எடுத்து வந்து உன்னை சம்ஹாரம் செய்து, உனக்கு மோட்சம் கொடுப்பார்” என்று சாப விமோசனம் கொடுத்தார். இந்த மந்தகதிதான் குவலயா பீடமாக வந்து பிறக்கிறான். அப்படி வரும்போதுதான் பகவான் அவன் தந்தங்களை ஒடித்து சம்ஹாரம் செய்கிறார்.
இந்த வரலாற்றை ஏன் குறிப்பிட வேண்டுமெனில், அவன் பெயரை பாருங்கள். மந்தகதி. அவன் செய்த பெரிய தவறு என்ன? பக்தர்களை தன்னுடைய கைகளால் விலக்கி விட்டது. இங்கு ஆண்டாள், மருப்பொசித்த மாதவன் என்று சொல்லும்போது ஸ்ரீரங்கத்தையும் கிருஷ்ணாவதாரத்தையும் இணைக்கிறாள். இது ஒரு விஷயம். இன்னொரு விஷயம் என்னவெனில், இதற்குள்ளாக இருக்கும் அந்தர்முகமான விஷயம் என்னவெனில், பக்தர்களை அவன் கைகளால் விலக்கினான் அல்லவா… ஞானம் வருவதற்கு முன்னால் அநாதி காலமாக இருக்கக் கூடிய வாசனையினால் இந்த பக்தன் வந்து சத்சங்கத்தை விலக்கி விடுவான். அப்படி விலக்கி விடக்கூடிய அந்த அஞ்ஞான வாசனை இருக்கிறதல்லவா… அது என்ன செய்யுமெனில் சத்சங்கத்தை விலக்கி வைத்துவிட்டு துச் சங்கத்தினூடேயும், லௌகீக சங்கத்திலேயும் இருக்கின்றபோது இவன் முன்னேறி பகவானை அடையக் கூடிய அந்த நிலையானது மந்தகதி ஆகிவிடும். வைகுண்டம் புகுவது மண்ணவர் விதியே… என்று சொன்னால் கூட பகவானை அடைவது மெதுவாகிப் போகும். அப்படி மந்தகதியாக இருந்தவனை குவலயா பீடமாக வரும்போது தந்தத்தை ஒடித்து சம்ஹாரம் பண்ண மாதிரி, நமக்குள் ஜென்ம ஜென்மமாக இருக்கும் அஞ்ஞான வாசனையை குவலயா பீடத்தை சம்ஹாரம் செய்ததுபோல் சம்ஹாரம் செய்கிறார். அதனால், பகவான் மருப்பொசித்த மாதவன்.
அப்படி வாசனா பலத்தை சம்ஹாரம் செய்யும்போது என்ன நடக்கிறதெனில், சத்சங்கத்தை விலக்கி விட்டுவிட்டு லௌகீகத்திற்கு போகக்கூடிய அந்த வாசனை அங்கு சம்ஹாரம் ஆகின்றது. சத்சங்கம் அவனுக்கு கிடைக்கும்போது மந்தகதியாக இருந்தவனுக்கு ஞான வேட்கை வருகின்றது. இவனுக்குள் பக்தி வருகிறது. அப்போதுதான் இவனுக்கு கைங்கரியத்தில் ஆர்வம் வருகிறது. ஆச்சார்ய சம்மந்தம் வருகிறது. எல்லாம் கிடைக்கும்போது அவனுக்கு சத்சங்கம் கிடைக்கிறது. சத்சங்கம் கிடைத்து அதன்மூலமாக ஆச்சார்ய சம்மந்தமும், ஆச்சார்யன் மூலமாக தத்துவார்த்த உபதேசங்களும்… பகவானுடைய மூச்சுக் காற்றாக… பகவானுடைய மணமான பரிமளமாக வேத வேதாந்த தத்துவார்த்த உபதேசங்களும், அவனுடைய வாய்ச்சுவையாக இருக்கக் கூடிய அஷ்டாக்ஷ்ரம் த்வயம், சரம ஸ்லோகங்களும் உபதேசங்களும் அவனுக்கு கிடைத்து அதை அவன் அனுசந்தானம் செய்கிறான். இந்த உபதேசத்தை உணர்வது வாய்ச்சுவையை உணர்வது. இது இரண்டும் அவனுக்குள் நடக்கின்றது.
இப்படி நடக்கக் கூடிய இந்த விஷயத்தை, இப்படி பகவானுக்கும் பக்தனுக்கும் நடக்கக்கூடிய விஷயத்தை, இன்னும் சொல்லப்போனால் பிராட்டிக்கும் பெருமாளுக்கும் நடக்கக்கூடிய நாயகி நாயகா பாவத்தில் (bhavam) நடக்கக்கூடிய விஷயத்தை சங்காழ்வான் மூலமாக நமக்கு ஆண்டாள் நமக்கு எடுத்துக் காண்பிக்கிறாள். இந்தப் பாசுரத்தின் கடைசி வரியில், விருப்புற்றுக் கேட்கின்றேன்… சொல்லாழி வெண் சங்கே… அதாவது ஆழி வெண் சங்கு என்று குறிப்பிடுகிறாள். ஆழி வெண் சங்கு என்று ஏன் குறிப்பிட வேண்டுமென்று பார்க்கும்போது, ஆழி என்றால் கடல் என்று அர்த்தம். கடலிலிருந்து உற்பத்தியான வெண்மையான சங்கம் என்று அர்த்தம். நம் எல்லோருக்கும் தெரியக்கூடிய அர்த்தம். ஆழி என்பதற்கு கம்பீரம் என்று ஒரு அர்த்தம் உண்டு. கம்பீரமாக இருக்கக்கூடிய வெண் சங்கே என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இதையெல்லாம் தாண்டி ஆழி என்றால் சக்கரம் என்று அர்த்தம். ஏன் இங்கு ஆண்டாள், சொல்லாழி வெண் சங்கே என்றால்… இங்கு சக்கரத்தையும் ஏன் சேர்க்க வேண்டுமென்று பார்ப்போம்.
பொதுவாக பகவானுடைய ரூபத்தை தியானம் செய்ய வேண்டுமென்றாலும் கூட, தியான ஸ்லோகத்தில் பகவானை தியானம் செய்ய வேண்டுமென்று ஆரம்பித்தால் கூட, எங்கு தொடங்குமெனில்… ச சங்கச் சக்கரம்… ச கிரீட குண்டலம் … என்றுதான் தியான ஸ்லோகமே ஆரம்பிக்கின்றது. அப்போது நாராயணன் என்று சொன்னாலே எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சங்கும் சக்கரமும். இது இரண்டும் எல்லா நேரமும் சேர்ந்தே இருக்கக் கூடியது. சங்கும் சக்கரமும் எப்போதுமே பகவானின் திருக்கரங்களில் இருக்கக் கூடியது. ஒரு பக்தனுக்கு முதலில் நினைவுக்கு வரக்கூடியது. சங்கும் சக்கரமும்தான். எப்படி நினைவுக்கு வருகிறதெனில், தியான ஸ்லோகத்தினால் மட்டுமல்ல. அவனுடைய உருவத்தை தரிசிப்பதனால் மட்டுமல்ல. ஆச்சார்யன் சமாஷ்ரயணம் செய்து வைக்கும்போதும், பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைக்கும்போது தோள்களில் பொறிக்கக் கூடியது வரைக்கும் சங்கு சக்கரம்தான். இப்படி எல்லாமே சங்கு சக்கரம்தான். இப்படி பகவானை நினைவு படுத்தக்கூடிய இரண்டு விஷயங்கள் சங்கும் சக்கரமும்தான்.
(தொடரும்)


