Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புண்ணிய புரட்டாசி மாதத்தின் தெய்வீக பெருமைகளும், பலன்களும்!

சூரிய பகவானின் சஞ்சார நிலையை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும், பன்னிரண்டு மாதங்களாக, ஜோதிடக் கலை வகுத்துள்ளது!

இதன் அடிப்படையில், ஆதவன், புதனின் ராசியான கன்னியில் சஞ்சரிக்கும் ஒரு மாதக் காலம், "கன்னியா மாதம்" எனவும், புரட்டாசி மாதம் எனவும் போற்றிக் கொண்டாடப்படுகிறது. சூரிய பகவான், "ஆதவன்", "பகவான்", "தினகரன்", "ஞாயிறு", என்ற பல பெயர்களால் பூஜிக்கப்படுகிறார். மறைந்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பூஜை மற்றும், தர்ப்பணங்கள் ஆகியவற்றின் பலன்களை, நம் மூதாதையர்களிடம் தனது சுவர்ணமயமான கிரணங்கள் மூலமாக சேர்ப்பவர் சூரியனே! ஆதலால்தான் அவருக்கு, "பித்ரு காரகன்" என்ற தெய்வீகப் பெருமையும் உண்டு!!

நோய் தீர்க்கும் பல உயர்ந்த மூலிகைகளுக்கு, அத்தகைய தெய்வீக சக்தியை அளித்தருள்பவரும் சூரிய பகவானே ஆவார்!

சரும நோய்களுக்கும், முக்கியமாக இதயம் சம்பந்தமான மற்றும் ஏராளமான கோளாறுகளுக்கும், மனித உடலில் தேவையான அளவிற்கு சுத்த ரத்தம் உற்பத்தியாவதற்கும் அருமருந்தாக விளங்குவதும் சூரிய பகவானின் சக்தியே ஆகும் என்பதை புராதன, பிரசித்திப் பெற்ற ஆயுர்வேத மருத்துவ நூல்கள் வலியுறுத்திக் கூறியுள்ளன.

பாரதப் புண்ணிய பூமியின் புராதன மருத்துவ நூல்கள் சூரியனின் கிரணங்களுக்கு உள்ள நோய் தீர்க்கும் சக்தியைப் புகழ்ந்து, போற்றுகின்றன.

மேலை நாட்டு மருத்துவ நிபுணர்களும், குறிப்பிட்ட பல சரும நோய்களுக்கு சூரிய கிரணங்களையே கையாண்டு வருவதும், உலகமறியும்.

இன்றும், பல குறிப்பிட்ட சரும நோய்களுக்கு, நோயாளியை சூரிய வெளிச்சத்தில் அமர்த்துவதை (சூரியக் குளியல்) பல மேலை நாட்டு மருத்துவ சிகிச்சை நிறுவனங்கள் சிகிச்சை முறையாகப் பயன்படுத்தி வருவது யாவரும் அறிந்ததே!

சூரிய பகவானை, அதி தேவதையாகக் கொண்டுள்ள, காயத்ரி மகா மந்திரத்திற்கு, குறிப்பிட்ட சில மன நோய்கள், மற்றும் சரும சம்பந்தமான பாதிப்புகள், நோய்கள் ஆகியவற்றை குணமாக்கும் வல்லமை உள்ளதை ஆயுர்வேத நூல்கள் விவரித்துள்ளன.

இன்றும் கேரளாவிலுள்ள, பிரசித்திப் பெற்ற பல ஆயுர்வேத மருத்துவமனைகளில் "சூரிய சிகிச்சை" முறை நடைமுறையில் உள்ளது.

"குஷ்டரோகம்", "வெண்குஷ்டம்", ஆகியவற்றிற்கு, தினமும் நோயாளியை குறிப்பிட்ட நேரத்திற்கு சூரிய வெளிச்சத்தில் அமர அல்லது படுக்க வைக்கும் சிகிச்சை முறை இன்றும் பல ஆயுர்வேத மருத்துவமனைகளில் கடைப்பிடித்து வருவதைக் காண்கிறோம்.

சூரியனின் கிரணங்களுக்கு, இதயம் சம்பந்தமான பல நோய்களைத் தீர்க்கும் சக்தி உள்ளதை, மிகப் பழமையான "அஷ்டாங்க ஹிருதயம்" எனும் ஆயுர்வேத கிரந்தம் விவரிக்கிறது.

சக்திவாய்ந்த, ஏராளமான நோய்தீர்க்கும் மூலிகைகள் சூரியனின் சக்தியினால் வளர்வதை ஆயுர்வேதம் எடுத்துக் கூறுகிறது.

"ஸ்ரீஆதித்திய ஹ்ருதயம்" என்னும் மகா மந்திரத்தை அகத்திய மாமுனிவரிடமிருந்து, உபதேசம் பெற்ற ஸ்ரீராமபிரான், இம்மந்திரத்தின் சக்தியினால், இலங்கையின் மன்னனான ராவணனை, யுத்தத்தில் தோற்கடித்ததாக ஸ்ரீ மத் ராமாயணம் விவரிக்கிறது.

நோய்களின் தன்மைகளை அறிந்து கொள்வதற்கு, "நாடி ஜோதிடம்" எனும் வைத்திய முறை, இன்றும் பல வைத்தியர்கள் கடைப்பிடித்து வருவது அனைவரும் அறிந்ததே!

உலகிலுள்ள பல மூலிகைகளுக்கும் நோய் தீர்க்கும் வல்லமையை அளிப்பது சூரிய பகவானே என்பதை மிகப் புராதனமான வைத்திய நூல்கள் விளக்கியுள்ளன.

உலகில் ஏராளமான ஜீவ ராசிகள், பயிர்கள் ஆகியவை உயிர் வாழ்வதற்கு சூரியனின் சக்தியே காரணகர்த்தாவாகும் என்பதை அதர்வண வேதம் விவரித்துள்ளது.

பூவுலகின் அன்றாட காலகட்டத்தை, இரவு, பகல் எனப் பிரித்துள்ளதற்கு, சூரிய பகவானின் சஞ்சார நிலையே காரணமாகும்.

மனித உடலில் ரத்தம் சேர்வதற்கும், அந்த ரத்தம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், இதயம் ஆரோக்கியமாக இயங்குவதற்கும், சூரிய பகவானின் சக்தியே காரணமாகும் என ஆயுர் வேதம் கூறுகிறது.

மானிட உடலில் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும், இதயம் சரியாக இயங்குவதற்கும், சூரிய பகவானின் கிரணங்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு.

சூரிய பகவான், சுவர்ணமயமான (தங்கம்) தனது தேரில் மூவுலகங்களையும் வலம் வருவதாக நான்கு வேதங்களும் ேபாற்றிக் கொண்டாடுகின்றன.

வேதகாலத்தில், "நைமிசாரண்யம்" எனும் தெய்வீக வனத்தில் (அடர்ந்த காடு) மகரிஷிகள், உத்தமிகளான தங்கள் மனைவியரோடு, தெய்வீகமான வாழ்க்கை நடத்தி வந்ததை, புராதன நூல்கள் பெருமையுடன் பேசுகின்றன.

அத்தகைய தெய்வீகப் பெருமை பெற்றவர்களில் வசிஷ்டர், அருந்ததி, அகத்தியர், லோபாமுத்திரை ஆகியோரைக் கூறலாம்!

"கணவரே கண்கண்ட தெய்வம்...!" என வாழ்ந்த, மகா உத்தமியான நளாயினி, தனது பதிவிரதா சக்தியினால், சூரியனே உதயமாவதைத் தடுத்து, நிறுத்தினாள்!

அத்தருணத்தில், சூரிய பகவானே நேரில் எழுந்தருளி, நளாயினியை சமாதானப்படுத்தியதாக, புராதன நூல்கள் விவரித்துள்ளதைப் படிக்கும்போது, சூரியனின் பெருமையும், கற்புடைய பெண்டிரின் உயர்வையும் நம்மால்

புரிந்துகொள்ள முடிகிறது.

அமாவாசை, மாதப்பிறப்பு, சூரிய - சந்திர கிரகணக் காலங்கள், ஆகியவற்றின்போது, நமது பித்ருக்களுக்கு (மறைந்த முன்னோர்கள்) நாம் ஆற்றும் பூஜைகளின் (தர்ப்பணம், திதி ஆகியவை) பலன்களை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பதும், சூரியனே ஆவார்.

தனது சுவர்ணமயமான தேரில் ஓய்வில்லாமல், சதா அனைத்து உலகங்களையும் பவனி வரும் சூரிய பகவானை உலக மக்கள் மட்டுமின்றி, தேவர்களின் உலகமான சொர்க்கத்திலும், மகரிஷிகளும், சித்தர்களும், தேவர்களும் தேவ மங்கையரும் அனுதினமும் பூஜித்து வருவதாக, வேதங்கள் விளக்கியுள்ளன.

தினமும் சூரியனை பக்தி சிரத்தையுடன் பூஜித்து வந்தால், எந்த வியாதியும் நம்மை அணுகாவண்ணம் காத்தருள்வார் என "சூரிய சித்தாந்தம்" கூறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், மறைந்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும், திதி பூஜைகளின் பலன்களைத் தேடிச் சென்று, உரியவர்களிடம் சேர்ப்பவர் சூரிய பகவானே! ஆதலால்தான், கதிரவனை "பித்ருகாரகர்" என வேதங்கள் போற்றிப் புகழ்கின்றன.

சூரிய கிரகணம் நிகழும்போது, நாம் செய்யும் பித்ரு பூஜைகளுக்கு, விசேஷ சக்தியும், புண்ணிய பலனும் உண்டு என புராதன நூல்கள் விவரிக்கின்றன.

பாரதப் புண்ணிய பூமியில் சூரிய பகவானுக்கென்று சில விசேஷ திருத்தலங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது, குருக்ஷேத்திரமாகும். அங்குள்ள "சூரிய குண்டம்", மற்றும் "பிரம்ம சரஸ்" என்ற தெய்வீகக் குளங்கள் இன்றளவும் பிரசித்திபெற்றவை.

மகா பாரத யுத்தம் முடிந்த பிறகு, ஸ்ரீ கிருஷ்ண பகவானும், தருமர் உள்ளிட்ட பஞ்சபாண்டவர்களும், இதர மன்னர்களும், குரு ேக்ஷத்திர யுத்தத்தில் தனது இன்னுயிரை நீத்த ஏராளமான வீரர்களுக்கும், ஈமச் சடங்குகளைச் செய்ததாக, மகாபாரதம் விவரிக்கிறது.

குரு ேக்ஷத்திரத்தில் திகழும், "பிரம்ம சரஸ்" எனும் தெய்வீக தடாகத்தில், பித்ரு பூஜைகள் செய்வதன் பெருமையை, ஸ்ரீமத் மகாபாரதம் எடுத்துக்கூறுகிறது.

இத்தகைய தெய்வீகப் பெருமையையும், சக்தியையும் கொண்டுள்ள சூரிய பகவான், ஒவ்வொரு ராசியையும் கடப்பதற்கு, சுமார் ஒரு மாதக் காலம் பிடிக்கிறது!

இவ்விதம் கடக்கும்போது, மேஷ ராசியில் சஞ்சரிக்கும்போது, சூரியன் உச்சகதியையும், துலாம் ராசியைக் கடக்கும்போது, நீச்ச கதியையும் (பலம் குறைந்த நிலை) அடைகிறார்.

ஜோதிடக் கலையில், சூரியனுக்கென்று விசேஷ பெருமையும், சக்தியும் கூறப்பட்டுள்ளன. ரிக்வேதம், பகலவனின் பெருமையை அதியற்புதமாக விளக்குகிறது.

பிரசித்திபெற்ற யாக்ஞவல்கியர்கர் என்ற மகரிஷிக்கு காத்தியாயினி, மைத்ரேயி என இரு தேவிமார்கள்! அனைத்து வேதங்களையும், அவற்றின் சூட்சுமங்களையும் சூரிய பகவானிடமிருந்து நேரிடையாகக் கற்றறியும் பேறு பெற்றவர் ஆவார்.

ஸ்ரீ ராமபிரான், "ஆதித்ய ஹிருதயம்" எனும் ஸ்தோத்திரத்தினால், சூரிய பகவானை ஆராதித்து, ராவணனை யுத்தத்தில் வெல்லும் சக்தியைப் பெற்றதாக ஸ்ரீ மத் ராமாயணம் கூறுகிறது.

இத்தகைய சக்தியும், பெருமைகளையும் பெற்றுத் திகழும் சூரிய பகவான், கன்னி ராசியைக் கடக்கும் காலத்தையே புரட்டாசி மாதம் அல்லது கன்னியா மாதம் எனக் கொண்டாடுகிறோம். கன்னி ராசிக்கு, அதிபதி புதன் கிரகமாவார்!

"கல்வி" எனும், பெறற்கரிய பேற்றினை அளித்தருளும் சக்தி புதனிடம் இருப்பதால், அவரை ஜோதிடக் கலை "வித்யாகாரகர்" எனப் போற்றிப் புகழ்கிறது.

ஜனன கால ஜாதகத்தில், புதன் சுப பலம் பெற்றிருப்பின், உலகம் போற்றும் அறிவாளராகவும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கு பவர்களாகவும் திகழ்வார்கள் என வராகமிகிரரின், "பிருஹத் ஜாதகம்" எனும் பிரசித்திப் பெற்ற ஜோதிட நூல் விவரித்துள்ளது.

உலகப் புகழ் பெற்ற ரவீந்தரநாத் தாகூர், வின்ஸ்டன் சர்ச்சில், அடால்ப் ஹிட்லர், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் ஜாதகங்களில் புதனின் ஆதிக்கம் உயர்ந்து விளங்குவதை அவர்களின் ஜாதகங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

வசீகரமான முகப் பொலிவு, கவர்ச்சிகரமான அடுக்கு மொழிகளுடன்கூடிய பேச்சுத் திறன், உயர்ந்த கல்வித் தகுதி ஆகியவற்றை அளிக்கும் சக்தி கொண்டவர் புதனாவார்.

ஜனன கால ஜாதகத்தில், புதனும் சுக்கிரனும் சுப பலம் பெற்று சேர்ந்திருப்பின், அரசியலில் கொடிகட்டிப் பறப்பார்கள் என பண்டைய ஜோதிட நூல்கள் கூறியுள்ளன.

கல்வியில், சிறந்து விளங்குவதற்கு ஜாதகத்தில், புதன் சுப பலம் பெற்று இருக்க வேண்டும் என்பதை புராதன ஜோதிடக் கிரந்தங்கள் வலியுறுத்துகின்றன.

"பிருஹத் ஜாதகம்", "காலப்ரகாஸிகா", "ஜோதிட அலங்காரம்" மற்றும் "பிருஹத் ஸம்ஹிதை" ஆகிய பண்டைய ஜோதிட நூல்கள், புதன் கிரகத்தின் பெருமைகளை விவரிக்கின்றன.

அரசியலில் பிரசித்துப் பெற்று விளங்குவதற்கு, ஜனன கால ஜாதகத்தில், புதன் சுப பலம் பெற்றிருக்க வேண்டும். அரசியல் மற்றும் கல்வி ஞானியாகப் போற்றப்படும் திரு. ராதாகிருஷ்ணனின் ஜாதகத்தில், புதன் சுப பலம் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இவ்விதம், மானிட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும், தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு விளங்குகின்றன, நவகிரகங்களும்! ஒவ்வொரு மனித வாழ்க்கையும் கிரகங்களின் அதிகாரத்தில்தான் உள்ளன!!

இனி, இம்மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய நிகழ்வுகளையும், கிரக சஞ்சார பலன்களையும் காண்போமா?

புரட்டாசி 1 (18-9-2026) வெள்ளிக்கிழமை - புரட்டாசி மாதப் பிறப்பு.

புரட்டாசி 3 (20-9-2026) ஞாயிற்றுக்கிழமை - அதுக்க நவமி விரதம். பெயரிலேயே இவ்விரதத்தின் மகிமைகளை உணர முடியும். துக்கம் என்றால், சோகம்! அதுக்கம் என்றால், சந்தோஷம். நம் தோஷங்களனைத்தும், சந்தோஷமாக மாற்றியமைக்கச் செய்திடும் வல்லமை படைத்ததே இவ்விரதம். பல வகைகளிலும் நமக்கு ஏற்பட்ட தடங்கல்கள், துக்கங்கள் அனைத்தும் விலகிடும்.

புரட்டாசி 5 (22-9-2026) செவ்வாய்க்கிழமை - ஏகாதசி மற்றும் சிரவண விரதம். இன்று உபவாசம் இருப்பது அனைத்து பாபங்களையும் போக்கும்.

புரட்டாசி 6 (23-9-2026) புதன்கிழமை - துவாதசி. வாமன ஜெயந்தி. பகவான் ஸ்ரீ வாமனராக அவதரித்த புண்ணிய தினம். மேலும், இன்றைய தினமானது "சியாமா ரஹஸிய" மற்றும் "தசமஹாவித்யா நாம" மந்திரங்களில் கூறப்பட்டுள்ளதுபோல், ஆதி பராசக்தியானவள், எவ்வாறு திருமால் தசாவதாரங்களை எடுத்தருளினாரோ அதேபோன்று, ஸ்ரீஆதிபராசக்தியும் பத்ரகாளி, தாரா, மஹாஷோடசீ (பாலா திரிபுர ஸுந்தரி), புவனேஸ்வரி, திரிபுர பைரவி, சின்ன மஸ்தா, தூமாவதி, மாதங்கி, கமலா ( ஸ்ரீ மஹாலட்சுமி) பகளாமுகீ தசாவதாரங்களை எடுத்து, துஷ்டர்களை அழித்து, நல்லோர்களைக் காத்தருளினாள். இவ்வடிவானது, ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் ஏற்படும் அனைத்துவித நவகிரக தோஷங்களனைத்தையும் போக்கக்கூடியதாக அமையப் பெற்றுள்ளது. இன்று ஸ்ரீ புவனேஸ்வரி ஜெயந்தி. இன்றைய தினத்தில், ஸ்ரீ தேவி பாகவதம் கேட்டாலும், படித்தாலும், மனத்தளவில் நினைத்தாலுங்கூட நவகிரக தோஷங்கள் அனைத்தும் விலகிடும். சகல சம்பத்துக்களுடன் கூடிய, ஐஸ்வர்யங்களும் உங்களை வந்தடையும்.

கீழ்கண்ட தசமஹாவித்யா நாம மந்திரத்தை பாடி, மனத்தினால் சிந்திக்க, நம் பாபங்கள் அனைத்தும் தீயினிற் தூசாகிடும். சகல நன்மைகளும் உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாகக் குடியிருக்கும் பேறு பெறுவீர்கள்.

காளீ தாரா மஹா வித்யா ஷோடஸீ

புவனேஸ்வரி பைரவீ சின்ன மஸ்தா வித்யா தூமாவதீ ததா

மாதங்கீ ஸித்த வித்யாச கமலா பகளாமுகீ

ஏதாதஸ மஹாவித்யா ஸர்வ தந்த்ரேஷு கோபிதா

புரட்டாசி 7 (24-9-2026) வியாழக்கிழமை - பிரதோஷம். மாலையில் திருக்கோயில் தரிசனம் பாபங்களைப் போக்கும்.

புரட்டாசி 8 (25-9-2026) வெள்ளிக்கிழமை - ஸ்ரீநடராஜர் அபிஷேகம்.

புரட்டாசி 9 (26-9-2026) சனிக்்கிழமை - பெளர்ணமி விரதம். மேலும், இன்றைய தினம் உமா மகேஸ்வர விரதம். நெடுநாளாக மணமேடைக்காகக் காத்திருக்கும் கன்னியருக்கு நல்ல மணமகன் அமைந்திடவும், தம்பதியருக்குள் அந்நியோன்யக் குறைபாடுகள் அனைத்தும் களைந்திடச் செய்யும் வல்லமை படைத்தது இவ்விரதம்.

புரட்டாசி 10 (27-9-2026) ஞாயிற்றுக்கிழமை - மஹாளயபட்சம் ஆரம்பம். மகான் ஸ்ரீஅப்பைய்ய தீட்க்ஷிதர் அவதாரத் தினம்.

புரட்டாசி 12 (29-9-2026) செவ்வாய்க்கிழமை - சங்கடஹர சதுர்த்தி. மஹாபரணி.

புரட்டாசி 13 (30-9-2026) புதன்கிழமை - கார்த்திகை விரதம்.

புரட்டாசி 16 (3-10-2026) சனிக்கிழமை - மத்தியாஷ்டமி.

புரட்டாசி 17 (4-10-2026) ஞாயிற்றுக்கிழமை - அவிதவா நவமி.

புரட்டாசி 19 (6-10-2026) செவ்வாய்க்கிழமை - சர்வ ஏகாதசி.

புரட்டாசி 20 (7-10-2026) புதன்கிழமை - துவாதசி. சன்னியஸ்த மஹாளயம்.

புரட்டாசி 21 (8-10-2026) வியாழக்கிழமை - பிரதோஷம்.

புரட்டாசி 22 (9-10-2026) வெள்ளிக்கிழமை - சஸ்திரஹர மஹாளயம். மற்றும் கேதார விரதம்.

புரட்டாசி 23 (10-10-2026) சனிக்கிழமை - சர்வ மஹாளய அமாவாசை.

புரட்டாசி 24 (11-10-2026) ஞாயிற்றுக்கிழமை - நவராத்திரி பூஜை ஆரம்பம்.

புரட்டாசி 25 (12-10-2026) திங்கட்கிழமை - ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு உகந்த அவதரித்த நட்சத்திரம். இன்றைய தினத்தில், மாக்கோலமிட்டு, ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, நெய் தீபமேற்றிவைத்து, துளசி தளத்தினால் அர்ச்சித்து, பானகம் நைவேத்தியம் செய்தல் வேண்டும். பிறரின் அசூயையினால் நமக்கு கெடுதல் செய்விக்க செய்த செயல்கள் அனைத்தும் ஏவல், பில்லிசூன்னியம் போன்றவை தீயினிற் தூசாவதோடு, இவற்றைச் செய்த தீயவர்களையே திருப்பித் தாக்கும் வண்ணமாக அமையப்பெறும்.

புரட்டாசி 27 (14-10-2026) புதன்கிழமை - சதுர்த்தி விரதம்.

புரட்டாசி 29 (16-10-2026) வெள்ளிக்கிழமை - சஷ்டி விரதம். மேலும், சரஸ்வதி ஆவாஹனம்.