வீட்டில் கடவுளை பூஜிப்பதற்கும், கோயிலுக்குச் சென்று வழிபடுவதற்கும் என்ன வித்தியாசம்? ஆலயத்தில் வழிபடுவதால் நமக்குக் கிடைக்கும் சிறப்பான பலன் என்ன?
?வீட்டில் கடவுளை பூஜிப்பதற்கும், கோயிலுக்குச் சென்று வழிபடுவதற்கும் என்ன வித்தியாசம்? ஆலயத்தில் வழிபடுவதால் நமக்குக் கிடைக்கும் சிறப்பான பலன் என்ன?
- ராதாகிருஷ்ணன், பவானி.
பாலில் நெய் மறைந்திருப்பதைப் போல, எல்லா இடங்களிலும் இறைவன் நிறைந்து மறைந்திருக்கிறான். கடைந்த தயிரில் வெண்ணெய் திரண்டு வருவதைப் போல, ஞானிகள் உள்ளத்திலும், திருக்கோயிலிலும் இறைவன் விளங்கிக் காட்சி அளிக்கிறான். மற்ற இடங்களில் இறைவனை நினைத்துத் தியானிப்பதனாலும், துதிப்பதனாலும், வழிபடுவதனாலும் வினைகள் வெதும்புகின்றன. கோயிலில் இறைவனை வழிபட்டால், வினைகள் வெந்து, எரிந்து, கருகி, நீறாகி விடுகின்றன.
‘கொடிய வெயிலில் துணியை வைத்தால், அத்துணி வெதும்புமேயன்றி, வெந்து சாம்பலாகாது, சூரிய காந்தக் கண்ணாடியை வெயிலில் வைத்து, அதன் கீழே குவிந்து வரும் சூடான கதிரில் துணியை வைத்தால், அது கருகிச் சாம்பலாகி விடுகிறது. நேர் வெயிலுக்கு இல்லாத ஆற்றல், சூரியகாந்தக் கண்ணாடியின் கீழேவரும் வெயிலுக்கு உண்டு.
பரந்து விரிந்திருக்கின்ற கதிரவனுடைய கதிர்களின் வெப்பத்தை ஒன்றுபடுத்தி, தன் கீழேயுள்ள இடத்திற்குச் சூரிய காந்தக் கண்ணாடி பாய்ச்சுகிறது. பிறகு, வேறு இடங்களில் இறைவனை வழிபடுவது, வெயிலில் வேட்டியைக் காய வைப்பது போலாகும். ஆகையால் மற்ற எல்லா இடங்களிலும் வழிபட்டாலும், திருக்கோயிலில் இறைவனை வழிபாடு செய்வது இன்றியமையாததாகும்.
‘‘மாலற நேயம் மலிந்தவர் வேடமும்ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே’’
- என்பது சிவஞான போதம்.
நமது திருக்கோயில்களில், உள்ள திருவுருவங்கள் தேவர்களாலும், முனிவர்களாலும், நால்வர்கள், ஆழ்வார்கள் ஆகிய ஆன்றோர்களாலும் நிறுவப்பட்டு-துதிக்கப்பட்ட காரணத்தால் வரங்களை அளிக்கின்றன. இத்தகைய தனிச்சிறப்பைப் பெற நாம் ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதே மிக உயர்ந்ததாகும்.
?ஜபம், தியானம், பஜனை ஆகிய பல வழிகளாலும் நாம் கடவுளைப் பற்றிச் சிந்திக்கிறோம். ஆனால், மேலோரான ஆசாரிய புருஷர்கள் மௌன விரத்தையே முக்கியமாகக் கடைப்பிடிக்கிறார்கள். இது ஏன்? மற்றவர்களும் மௌன விரதம் இருப்பது, மற்ற எல்லாவித விரதங்களையும்விட சிறந்ததா?
- கணேஷ்குமார், விருத்தாசலம்.
ஆத்மாவை ஒளிபெறச் செய்வதே மௌனம் என்று சொல்லப்படும். அது வாயை மூடிக் கொண்டிருப்பது மட்டும் அல்ல. மௌனம் என்பது தியானத்தில் மிக உயர்ந்ததாகும். அதனால் மௌன விரதம் இருப்பவர்கள் கண்ணை விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தாலும், பார்வையை உள்முகமாகத் திருப்பிக் கொள்கிறார்கள். அவர்கள் பேசாமல் இருப்பது மட்டும் அமைதி அல்ல. தன்னைச் சுற்றிலும் அமைதியைத் தேடிக் கொண்டு, நமது மனத்துக்குள்ளும் அமைதியை அவர்கள் நாடுகிறார்கள். அதனால் ஆசாரிய புருஷர்கள் மௌனவிரதம் அனுஷ்டிப்பதை மிக முக்கியமாக ஏற்கிறார்கள்.
மௌன விரதம் என்பது வாய் பேசாதிருப்பது மட்டும் அல்ல. சிந்தனை எல்லாவிதத்திலும் கட்டுக் கடங்குவதேயாகும். அதனால் மௌனவிரதம் இருப்பவர்கள் கையால் காகிதத்தில் எழுதிக் காட்டுவது, ஜாடை செய்வது, முகபாவனையிலும், தலை அசைப்பிலும் உணர்த்த முயலுவது போன்றவைகளில் ஈடுபட்டால், மௌன விரதத்தை அனுஷ்டிப்பதாகக் கொள்ள முடியாது. அமைதி என்பது நம்முடனேயே எப்போதும் இருக்கிறது. அது நமக்குள்ளேயும் இருக்கிறது. ஆகையால் அதை நாம் அடையாளம் கண்டு கொண்டு பயன்பெற வேண்டும். அதற்குரிய முயற்சியும் பயிற்சியுமே மௌன விரதம் ஆகும்.
நம்முடைய இந்திரியங்களிலேயே அதிக சக்தி வாய்ந்தது நாக்கு. அதனாலேயே நமக்குத் தடைகளை ஏற்படுத்தி, சாதனைகளில் குறுக்கிடும் விஷமத்தனமும் அதில் அடங்கி இருக்கிறது. அதை அடக்கவே மௌனத்தை ஆயுதமாக நாம் பயன்படுத்துகிறோம். வாய்ச்சொல் அடங்கும்போது, மனம் வழிக்கு வருகிறது. மற்ற சிந்தனைகளிலிருந்து திரும்பி அடக்கம் பெறுகிறது. நாக்கு ஓய்வு பெறும்போது, மூளையின் சக்தி விழித்துக் கொண்டு வலுப் பெறுகிறது. கூர்ந்து சிந்திக்கவும், மனத்தை ஆடாமல் வைத்துக் கொள்ளவும் முயலுகிறது. அந்த நிலையில் இறைவனைப் பற்றி நினைத்து தியானிப்பதும் எளிதாகிறது. அதனாலேயே மௌன விரதம் பக்தி மார்க்கத்தில் ஒரு மிக முக்கியமான சாதனமாகப் பயன்படுத்தப்படுகிறது.
?சாஸ்திரங்களைப் படிக்கும்போது எனக்குச் சந்தேகங்கள் ஏற்படுகின்றன. சிலசமயம் அவற்றை நம்புவதற்கே மனம் தயங்குகிறது. இந்த நிலையில் என்னால் வேதாந்த நூல்களைப் படித்துப் புரிந்து கொண்டு கடைபிடிக்க முடியுமா?
- செந்தில்வேலன்,கும்பகோணம்
எந்தப் பொருளை நாம் இந்திரியங்களாலோ, மனத்தினாலோ புரிந்து கொள்ள முடியாதோ, அந்தப் பொருளைப் பற்றிச் சொல்லிக் கொடுப்பதே வேதம். ஆகையால் வேதாந்த நூல்களைப் படிப்பதற்கு, இந்தச் சாதாரண நூலறிவைக் கடந்த மனச் சாதனம் தேவைப்படுகிறது. கடவுளிடம் அசையாத பற்று இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை இருந்து பரமாத்மாவின் சாட்சாத்காரம் (அறிவு) கிடைத்தால்தான் ஒருவனுக்கு நிச்சயம் நித்ய சுகம் கிடைக்கும். இப்படி பரமாத்மாவை அறிந்து கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
முதலில் நல்ல சிந்தனைகள் உள்ள பாதையில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆத்மாவைப் பற்றி தெரிந்து கொள்ள முற்பட வேண்டும். அதைப்பற்றிக் கூறும் நூலை நன்கு படிக்க ஒருவன் பாடுபட வேண்டும். இப்படிப் படிப்பது ஏன்? படிக்கும்போது அவனுக்கு அதில் கூறப்பட்ட முறைகள் தெளிவாகிறது. முறைகள் தெளிவானால் நம்பிக்கை பிறக்கிறது. நம்பிக்கை உண்டானால் சரியாகச் சிந்திக்கும் தகுதியும் உண்டாகிறது. ஒன்றுமே அறியாமல் நாமாகவே, ‘இப்படியும் இருக்கலாம்’ என்று எண்ணிக் கொண்டு போனால் கடைசியில்.
‘‘நாயம் லோகோஸ்தி ந பரோ ஸூகம் ஸம்சயாத்மன்’’ என்று கூறியுள்ளபடி, ‘‘சந்தேகப் பேர்வழிக்கு இந்த லோகமும் கிடையாது; பரலோகமும் கிடையாது. எந்த சுகமும் கிடையாது!’’ என்று ஆகிவிடும். அதைவிட நாஸ்திகனாகவே இருந்து விடுவதே மேல்! நாமே படிக்க முயலும்போது இந்தக் குழப்ப நிலை உண்டாவது சகஜம். புத்தகம் மட்டும் நமக்கு அறிவைக் கொடுத்து விட முடியாது. புத்தகத்தில் மட்டும் உள்ள கல்வியும், அடுத்தவனிடம் உள்ள ெசல்வமும், காரியம் வரும் வேளையில், அறிவாகவும் செலவுக்கு உகந்ததாகவும் பயன்படுவதில்லை. ஆகையால் இதை உணர்ந்து கற்று அனுபவித்து கடைப்பிடிக்கும் அனுபவஸ்தரான குருவிடம் முறைப்படி படித்துக் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது சந்தேகமோ, தடுமாற்றமோ இன்றித் தெளிவு பெறமுடியும்.


