Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தொடரும் ஞானத் தேடல்!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 125 (பகவத்கீதை உரை)

பூர்வாப்யாஸேன தேனைவ ஹ்ரியதே ஹ்யவசோபிஸ

ஜிக்ஞாஸுரபி யோகஸ்ய சப்தப்ரஹ்மாதிவர்ததே (6:44)

‘‘முந்தைய பிறவியில் யோக ஞானத்தை அடைய ஒருவன் சற்றே முயற்சி செய்திருந்தாலும் போதும், இந்த ஜன்மத்தில் தன்னிச்சையாகவே அதை நோக்கி அவன் நடை பயில்வான்.’’

அந்த ‘விட்ட குறை’ ஒருவனுக்கு இருக்குமானால், அதன் பலனாகவே அவன் இறையம்சத்தை நோக்கி இப்பிறவியிலும் ஈர்க்கப்படுகிறான். அதாவது இப்போது அவன் லௌகீக விஷயங்களில் ஈடுபட்டிருந்தாலும், அவற்றுக்காக அவன் நேரத்தையும், புலன்களையும், மனதையும் செலவிட்டிருந்தாலும், இவற்றையெல்லாம் மீறிய ஓர் ஆகர்ஷணத்தால், ஞானப் பிரகாசத்தை நோக்கிச் செல்பவனாகிறான், என்கிறார் கிருஷ்ணன்.

ஒரு கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. அந்தத் திருவிழாவைப் பற்றியோ, அந்தக் கொண்டாட்டத்துக்கு நாயகனாக/நாயகியாக விளங்கும் இறைப்பொருளைப் பற்றியோ கொஞ்சமும் சிந்திக்காத ஒருவன், ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் அந்தக் கூட்டத்தில் இருப்பானானால், அவன் தன் முயற்சி இன்றியே, கூட்டத்தின் பக்தி பூர்வ உந்துதலால், தானும் அந்த அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவன் ஆகிறான். அவர்களோடு சேர்ந்து அவனும் கோயிலுக்குள் செல்கிறான், இறைவனைத் தொழுகிறான். இதைத்தான் பூர்வ ஜன்மத் தொடர்பு, இறை ஈர்ப்பின் அனிச்சைச் செயல் என்கிறார், கிருஷ்ணன்.

இந்த உதாரணத்தை சுவாமி சித்பவானந்தர் இன்னொரு வகையாகவும் விளக்குகிறார்: இரண்டு போர் வீரர்கள், எதிரிகளின் திடீர்த் தாக்குதலால் செயலற்றுப் போகிறார்கள். அதனால் இருவரும் எதிரி நாட்டினரால் கைது செய்யப் படுகிறார்கள். அவர்களில் ஒருவன் தன் சுக வாழ்க்கையை முன்னிருத்தி, எதிரி நாட்டவர்களுக்கு அடிமையாக வாழத் தயாராக இருக்கிறான். ஆனால் இன்னொருவனோ, தான் எப்படியாகிலும் பகைவர்களிடமிருந்து தப்பித்துவிடவேண்டும் என்று முயற்சி செய்கிறான். நண்பனைப் போல தேச துரோகியாக மாற இவன் விரும்பவில்லை. இவனுடைய யோகத் தேடல், தன் நாட்டின் வெற்றி என்பதாக இருந்தது.

அதற்குக் குந்தகம் விளைவிப்பதுபோல தான் நடந்து கொண்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். ஆகவே அனைத்து உபாயங்களையும் பிரயோகித்து விடுதலைக்கு முயல்கிறான். இந்த ‘யோக தியான'த்தில் அவன் எதிரிகளிடமிருந்து சிக்கி உயிரிழப்பானாகில் அது இந்தப் பிறவியின் கணக்குக்கு முற்றுப்புள்ளி ஆகும்; ஆனால் அடுத்த பிறவியில் தொடரும்! ஆனால் சரணடைந்தவனுக்கோ, இந்த ஞானத்தேடல் சிறிதும் இல்லாததால், இன்னும் எத்தனை பிறவி எடுத்து, தீமைகளை இழைத்து, அந்தத் தேடலுக்கு முயற்சிக்க வேண்டியிருக்குமோ!

இச்சமயத்தில் நம் பாதுகாப்புத் துறையின் விமானப் போர் வீரர் அபிநந்தன் வர்த்தமானுடைய சாகசங்களை நினைவு கூரலாம். அந்த நாள், 2019ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி. அதற்கு முந்தைய பாகிஸ்தானின் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. அப்போது பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்துவிட்ட அபிநந்தனின் விமானம், அந்நாட்டு ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

உடனே சேதப்பட்ட விமானத்திலிருந்து பாராசூட் மூலமாக கீழே இறங்கினார் அபிநந்தன். ஆனால், அதற்குள் தன்னைச் சூழ்ந்து கொண்ட பாகிஸ்தான் மக்களிடம், தான் இறங்கிய பகுதி எது என்று தெரிந்து கொள்வதற்காக ‘நான் இந்தியாவில்தான் இருக்கிறேனா?’ என்று கேட்டார். அதற்கு மக்கள், ‘ஆம்’ என்று அவருக்கு மறைமுக கிண்டல் பதில் அளித்தார்கள். உடனே உணர்ச்சிப் பெருக்குடன் இந்தியாவை வாழ்த்தும் வகையில் முழக்கங்களை ஓங்கி ஒலித்தார்.

அதேசமயம் கூடியிருந்தவர்கள் பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் இடவே, தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்த அபிநந்தன், உடனே தன் கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டுக் கொண்டே ஓடிச்சென்று, எதிர்பட்ட ஒரு குளத்திற்குள் குதித்தார். அதோடு, தன்னுடன் இருந்த ஆவணங்கள் எதிரிகள் கையில் கிடைத்து விடக்கூடாதே என்று அவற்றை அழிக்க முற்பட்டார்.

அதற்குள் எதிரிகள் அவரை நோக்கிப் பலமுறை சுட்டார்கள். அந்தத் தோட்டாக்களிலிருந்து தப்பிக்க நீருக்குள் மூழ்கித் தன்னைக் காத்துக் கொண்டார். அதேசமயம் விவரம் தெரிந்து பாகிஸ்தான் ராணுவம் அங்கே வர, அபிநந்தன் சிறைப் பிடிக்கப்பட்டார். எதிரிகள் தங்கள் ராணுவ பாணியில் அவரை நடத்தினாலும், தன் தேசபக்தியைக் கைவிடாத அபிநந்தன், அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு, இந்தியத் தரப்பிலான எந்த ராணுவ ரகசியத்தையும் வெளியிடவே இல்லை.

உடனடியாக இச்செய்தி இணைய தளத்தில் வெளியாகவே, உலகமே பரபரப்பாகியது. பிறகு இந்திய அரசாங்கத்தின் வெளி உறவு அமைச்சகம் மூலமாக உலக நாடுகள் நிர்ப்பந்தம் கொடுக்க, அபிநந்தன் விடுதலை பெற்று இந்தியாவை வந்தடைந்தார். அபிநந்தனைப் போன்ற முற்பிறவி ஞானவான்களைத்தான் சுவாமி சித்பவானந்தர் குறிப்பிடுகிறார்.

இத்தகையவர்களை கிருஷ்ணன், ‘ஜிக்ஞாசு’ என்கிறார். அறிவை விரும்புபவர், தெய்வீக உண்மைகளைத் தேடுபவர் என்று அர்த்தம். ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக வாழாமல், மெய்யறிவு என்ற ஞானத்தை அடைவதற்காக இறைவனை நாடும் யோகி!ஆனாலும் இந்த ஜிக்ஞாசுகளையும்விட, யோகப்ரஷ்டர்கள் மேலானவர்கள்; ஏனென்றால் தளராத முயற்சி உடைய இவர்கள், விரைவில் யோகாரூடர்களாக, முக்தர்களாகத் திகழ்வார்கள் என்கிறார் கிருஷ்ணன்.

இருள் சூழ்ந்த அறைக்குள் சிக்கிக் கொண்டவனுக்கு, மேற்கூரையிலிருந்து சிறு கீற்றாக சூரிய ஒளி தெரிகிறது; உடனே அவனுக்குள் நம்பிக்கையும் ஒளிர்கிறது, இந்த இருட்டு விரைவில் விலகும், கீற்று, பேரொளியாய் உள்ளே பரவும் என்று! காரணம், அடர்ந்த இருளே ஆனாலும், அந்த ஒளிக் கசிவை மறைக்கவோ, தடுக்கவோ அதனால் இயலவில்லை. என்பதுதான். ஞானத்தேடலில் ஈடுபட்டிருப்பவனுக்கு இந்த ஒளி மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. அதைப் பிடித்துக் கொண்டு, பிரகாசத்தை நோக்கி அவன் பயணிக்கத் தொடங்கி விடுகிறான். அவன் மட்டுமல்ல, யோகத்தில் கொஞ்சமாக ஆர்வம் காட்டுபவனே ஆனாலும், அவனாலும் வேதங்கள் சொல்லும் காமத்திற்குட்பட்ட கர்மங்களை எளிதாகக் கடந்து செல்ல முடியும் என்கிறார் கிருஷ்ணன்.

வேதம், மனித வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும், எல்லா கர்ம இச்சைகளையும் பேசுகிறது. அவற்றிலிருந்து மீள்வது எப்படி என்றெல்லாமும் விவரிக்கிறது. அது ஒரு அகராதி மாதிரி. அகராதி, ஆயிரக் கணக்கான சொற்கள் இருந்தாலும் ஊடே, ஊடே சில எதிர்மறை சொற்களையும், வசைகளையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. இது அகராதி தொகுப்பின் பொதுவான நியதி. அந்த அகராதியை எப்படி ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற மெய்யறிவைப் பெற வேண்டும். அதில் விளக்கம் தரப்படும் ஆபாச சொற்களை மட்டும் தேடிக் கண்டு பிடித்து, அகராதியே சுத்த மோசம் என்று சொல்வதைப் போலதான் வேதத்தை விமரிசிப்பதும். மனித குலத்தின் பிரதிநிதியாக விளங்குகிறது வேதம். அதே மனிதர்களின் மனப்பாங்குதான் அதனுள் மோசமான சொற்களை, அவற்றுக்கான விளக்கங்களைத் தேடுவதும்.

இத்தகைய காமக் கர்மத்திலிருந்து விலகி, உண்மையைத் தேடுபவன் தான் யோகி. இதைத்தான் கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு உணர்த்துகிறார். வேதங்களில் சொல்லப் பட்டிருக்கும் நியமங்கள் அனைத்தையும் செய்யலாம். யாகம் இயற்றலாம், ஹோமம் நடத்தலாம். அதைவிட, எல்லா சடங்கு, சம்பிரதாயங்களின் எல்லையையும் கடந்து பரம்பொருளை அடையும் வழியை நோக்கி முன்னேற, யோகத்தில் காட்ட வேண்டிய ஆர்வம் மிகவும் முக்கியம். இந்த ஆவலே நியமங்கள் எல்லாவற்றையும்விட உயர்ந்தது என்கிறார் அவர்.

சுருக்கமாகச் சொல்வதானால், ஞானத்தைத் தேடும் எந்த சிறு முயற்சியும் வீணாவதில்லை. அது இப்பிறவியில் இல்லாவிட்டாலும், அடுத்தடுத்த பிறவிகளில் பரம்பொருளை நோக்கி வழிநடத்தும். ஆன்மிகத் தேடல் என்பது பிறவிகள் தோறும் தொடரும் என்பதற்கு ஸ்ரீ மத் பாகவதத்தில் இடம் பெற்றிருக்கும் ஜடபரதன் கதை ஓர் உதாரணம். மன்னர் பரதர், ஆட்சிப் பொறுப்பைத் துறந்து வனத்தில் தவம் புரியச் சென்றார்.

தன் மனதுக்கேற்ப, ஓர் நதிக்கரையில் ஆழ்ந்த தவத்தில் அவர் ஈடுபட்டிருந்தபோது, புலி ஒன்று கர்ப்பிணியான ஒரு மானைத் துரத்தி வந்தது. அதைக் கண்டு பயந்த மான், நதிக்குள் பாய்ந்தது. அப்போதே தன் குட்டியை ஈன்றுவிட்டு, நீந்திச் சென்றது. இந்த சந்தடியில் தவம் கலைந்த பரதர், மான் குட்டியை புலி இரையாக்கிக் கொள்ளுமோ என்று அஞ்சி, புலியை விரட்டிவிட்டு, குட்டி மானை எடுத்து தானே வளர்க்க ஆரம்பித்தார். நாளாவட்டத்தில் தவத்தை மறந்து மானிடம் மாறாத அன்பு கொண்டு அதனை ஒரு தாய்போலப் பராமரித்தார். அவரை மரணம் நெருங்கியபோதும், அவர் மானின் நினைவாகவே இருந்தார்.

இதற்கு இனி யார் புகலிடம் தருவார் என்று மனம் வருந்தினார். அதனாலேயே அடுத்த ஜன்மத்தில் அவர் ஒரு மானாகவே பிறந்தார். இரைதேடி, அதே வனப்பகுதிக்கு அவர் வந்தபோது பூர்வ ஜன்ம நினைவு அவருக்கு வந்தது. ‘அடடா, ஒரு மான் மீது கொண்ட பாசத்தால், தவத்தை அரைகுறையாக விட்டுவிட்டோமே' என்று எண்ணி வருந்தினார். அதற்கு அடுத்த பிறவியில் அவர் மானுடனாக ஜன்மமெடுத்தார். பூர்வ ஜன்ம நினைவுகளால், உலகில் எந்தப் பற்றுமின்றி, எந்த சுகத்துக்கும் இச்சைப்படாமல் அழுக்கு பூசிய உடலோடு வாழ்ந்து வந்தார். தலைக் கேசம் நீண்டு இவரை ஒரு பித்தன்போலவே தோற்றமளிக்க வைத்தது. இதனாலேயே இவர் ஜடபரதர் என்றழைக்கப்பட்டார்.

இவ்வாறு மனத்தளவில் பெரும் யோகியாகத் திரிந்த இவர், கால்போன போக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்நாட்டு மன்னனைச் சுமந்த பல்லக்கு ஒன்று அவரைக் கடந்து சென்றது. பல்லக்குத் தூக்கிகளில் ஒருவனுக்கு திடீரென்று உடல் நலம் குன்றிவிடவே, அவனால் தொடர்ந்து தூக்கிச் செல்ல இயலவில்லை. அப்போது ஜடாபரதரைப் பார்த்த சேவகர்கள், அவனுக்கு பதிலாக இவரைப் பல்லக்குத் தூக்க நிர்ப்பந்தித்தார்கள். அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல்,சிவிகை தூக்கியானார். ஆனால் போகும் வழியில் அடிக்கடி நடை தடுமாற பல்லக்கு அப்படியும், இப்படியுமாக ஆடியது. உடனே உள்ளிருந்த மன்னன், ‘‘உடல் பெருத்து, திடகாத்திரமாக விளங்கும் உன்னால் ஒழுங்காகப் பல்லக்கைத் தூக்க முடியவில்லையா? அதற்குள் களைத்து விட்டாயா, என்ன?'' என்று கோபமாகக் கேட்டான்.

ஜடாபரதரோ மெல்லச் சிரித்து, ‘‘நீ யார்? மன்னன் என்று சொல்லிக் கொள்கிறாயே, உண்மையில் நீ யார்? நான் உடல் பெருத்தவன் என்று நீதான் சொல்கிறாய். ஆனால் நான் எங்கே பல்லக்கைச் சுமந்தேன்? எப்போது களைத்தேன்?'' என்று கேட்டார். உடனே மன்னன் பதைபதைத்துப் பல்லக்கை விட்டுக் கீழே இறங்கினான். ஜடபரதர் ஒரு ஞானி என்பதைப் புரிந்து கொண்டான். அவரைப் பணிந்து அவர் சொன்னதன் உட்பொருளை விளக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொண்டான்.

‘‘உடல் பருத்திருக்கிறது என்றாய். ஆனால் உடல் வேறு, உள்ளிருக்கும் ஆன்மா வேறு. ஆன்மா பருத்திருக்கிறதா, உன்னால் கண்டு பிடிக்க முடியுமா? உடல் வயதுக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கும், ஆனால் ஆன்மா நிரந்தரமானது, மாறுதலுக்கு உள்ளாகாதது. இந்த உடல், நிலை இல்லாதது என்பதால் ‘நான் பெருத்தவன் இல்லை' என்றேன். அதேபோல உன்னை மன்னன் இல்லை என்றும் சொன்னேன். ஏனென்றால் உனக்கெல்லாம் மேலாக, மகாப் பெரிய மன்னன் ஒருவன் இருக்கிறான்.

அவன்தான் இறைவன். உறவு, பந்தம், பாசம் என்று குடும்பச் சூழலில், தீராத ஆசைகளை வளர்த்துக் கொண்டு நீ அல்லல் படுகிறாய். இந்தத் துன்பத்திலிருந்து விலக ஞானம் பெற வேண்டும். அது ஒரே பிறவியில் கிட்டாது போனாலும், அதற்கான தேடல் இருந்தால், நிச்சயமாக அடுத்த ஏதேனும் ஒரு பிறவியில் ஈடேறும்,'' என்று விளக்கினர் ஜடாபரதர். நம்மிடையேகூட தூய பக்திமான்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் இப்பிறவியில் ஆன்மிக நாட்டம் கொண்ட அன்பர்கள்! இவர்கள் அத்தனை பேரும் தங்களது முன் ஜன்மத்துத் தேடலைத் தொடர்கிறார்கள் என்றுதான் அர்த்தம்!

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்