Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

அக்னி நட்சத்திரம் ஆரம்பம் 4.5.2026 திங்கட்கிழமை

அக்னி நட்சத்திரம் (கத்தரி வெயில்) துவங்குகிறது. அக்னி நட்சத்திரம் என்பது ஆண்டுதோறும் சித்திரை மாத இறுதியில் (ஏப்ரல் - மே) சூரியன் பரணி நட்சத்திரத்தின் 3-ம் பாதத்தில் தொடங்கி கார்த்திகை நட்சத்திரம் முழுவதும் வலம் வரும் மிக வெப்பமான காலமாகும். இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். அக்னி நட்சத்திரத்தை முன் 7 நாட்கள், பின் 7 நாட்கள் எனப் பிரிப்பர். இது மிக கடுமையான காலம்.சிவபெருமானுக்கு ‘தாரா பாத்திரம்’ மூலம் நீர் சொட்டுச் சொட்டாக விழுமாறு ஏற்பாடு செய்வது அல்லது லிங்கத்திற்கு இளநீர் மற்றும் பன்னீர் அபிஷேகம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். வெப்பத்தைத் தணிக்கும் தெய்வங்களான மாரியம்மன் (அம்மன் வழிபாடுகள்), ஐயப்பன் மற்றும் முருகப் பெருமானுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து வழிபடலாம்.

இந்த காலத்தில் தானம் செய்வது மிகச் சிறந்தது. குறிப்பாக:

1.நீர் பந்தல்: தாகத்தில் இருப்பவர்களுக்குத் தண்ணீர், மோர், பானகம் தானம் செய்வது.

2.விசிறி தானம்: தேவையுள்ளவர்களுக்கு விசிறி அல்லது குடை வழங்குவது.

3.காலணி தானம்: வெறும் காலில் நடப்பவர்களுக்குச் செருப்பு வாங்கித் தருவது.

காயத்ரி மந்திரம் மற்றும் ஆதித்ய ஹிருதயம் போன்ற சூரிய வழிபாட்டு மந்திரங்களை அதிகாலையில் சொல்வது உடல் மற்றும் மன வலிமையை அதிகரிக்கும்.

சாஸ்திரப்படி, இந்த 21 நாட்களும் ஏழை எளியவர்களுக்கு அல்லது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தயிர் சாதம் அல்லது பானகம் வழங்குவது பித்ருக்களின் ஆசியையும், தெய்வ அருளையும் பெற்றுத்தரும் என்பது நம்பிக்கை.பொதுவாக கத்தரி வெயிலில் புதிய முயற்சிகள், வீடு மாறுதல் போன்றவற்றைத் தவிர்ப்பர், ஆனால் திருமண நிச்சயம் போன்ற மங்கல காரியங்களைச் செய்யலாம் எனச் சில ஜோதிடக் கருத்துக்கள் உள்ளன.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் விழா தொடக்கம் 6.5.2026 புதன்கிழமை

ஆண்டின் 12 மாதங்களும் சிறப்பாக திருவிழாக்கள் நடைபெறும் திருக்கோயில் ஸ்ரீரங்கம். பங்குனியில் ஆதி பிரம்மோற்சவம் நடந்த கையோடு சித்திரைத் தேர் உற்சவம் இன்று தொடங்குகிறது. ஸ்ரீரங்கத்தில் சித்திரைத் தேர் திருவிழா வழக்கமாக 11 நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த நாட்களில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருவிழாவின் 11-ஆம் திருநாள் அன்று நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் தேர் 7.5.2026 - வியாழக்கிழமை

பெரம்பலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் சித்திரை பெருந் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமரிசையாக நடைபெறும். இவ்விழா பூச்சொரிதல் உற்சவமாத் தொடங்கும் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 10:00 மணிக்கு நடைபெறும் தொடர்ந்து நாளை ஊஞ்சல் உற்சவமும், நாளை மறுநாள் விடை யாற்றியும் நடைபெறும்.