Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தன்னைத் தானே பூசித்த தயாபரன்

உலகில் உள்ள பூசைகள் யாவற்றிலும் உயர்ந்தது சிவபூசை. சிவபூசை யொன்றே இம்மையில் அமைதியுடன் மன மகிழ்ச்சியையும், மறுமையில் மோட்சத்தையும் அளிக்க வல்லதாகும். பல்வேறு பிறவிகளில் புண்ணியம் செய்தவர்களே பூவும் நீரும் கொண்டு சிவபூசை செய்யும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அப்படி வாய்ப்பைப் பெற்றவரில் சிலரே முழுமையாக ஈடுபட்டு முயன்று அன்புடன் பூசை செய்து மேன்மை பெறுகின்றார்கள். பிரமன், திருமால், இந்திரன், முருகன், விநாயகர், அம்பிகை, மன்மதன் முதலான முதன்மைத் தேவர்கள் யாவரும் சிவபூசை யாலேயே மேன்மை பெற்றுள்ளனர். சிவபூசை பூசையொன்றே குற்றங்களை நீக்கி குணத்தைத் தரவல்லதாகும்.

ஒப்பற்றதும் உயர்வானதுமான சிவலிங்க பூசையின் மேன்மையை உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் தானே சிவபூசை செய்து காட்டுகின்றார். தனது அருட்குறியான மகாலிங்கமூர்த்தியை ஆகம முறைப்படி சிவபெருமான் தானே பூசித்ததைக் கண்டு எல்லோரும் மகிழ்ந்தனர். அந்த அருள் வரலாற்றையே தன்னைத் தான் பூசித்தது என்ற ஐதீக விழாவாக அன்பர்கள் கொண்டாடி வருகின்றனர்.புராண வரலாற்றில் மூன்று முறை சிவன் தன்னைத் தான் பூசித்த வரலாறு சிறப்புடன் குறிக்கப்பட்டுள்ளது. முதல் நிலையில் அவர் ஆதிசைவனாக வடிவம் கொண்டு திருவையாற்றில் ஐயாறப்பனைப் பூசை செய்தார். இது திருவாசகத்தில் ஐயாரதனில் சைவனாகியும் என்று குறிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நிலையில் சோமசுந்தர பாண்டியன் எனும் பெயரில் பாண்டிய மன்னனாக மதுரையில் வீற்றிருந்து அரசாண்ட போது சிவபூஜை செய்ததாகும். நாடும் நாட்டு மக்களும் நலம் பெற மன்னர்கள் சிவபெருமானையும் இஷ்ட தெய்வங்களையும் வழிபட்டனர்.அவ்வகையில் மதுரையின் மன்னராக சோமசுந்தர பாண்டியர் என்னும் பெயரில் வீற்றிருந்து மீனாட்சியுடன் அரசாண்ட சிவபெருமான், அங்கயற்கண்ணி உடனாய சோமசுந்தர ஆலவாய் அழகனை வழிபட்டுவந்தார். அத்துடன் தனக்கென தனிக்கோயில் கட்டி அதில் சிவலிங்கமூர்த்தியை அமைத்து வழிபட்டுவந்தார். இது மாமன்னனாக இருந்து சிவ பெருமான் சிவபூசை செய்த நிலையாகும்.

மூன்றாவதாகச் சிவபெருமான் மான், மழு ஏந்தி முக்கண்ணராகக் காளகண்டமும், திருநீற்றுப் பூச்சும், கொன்றைமாலையும், கங்கையொடு வெண்பிறை துலங்கும் செஞ்சடை கொண்ட வேதியனாக உமாமகேசுவர கோலத்தில் இருந்து சிவபூசை செய்ததாகும். இது சிவபெருமான் தனது மேலான சிவ வடிவுடன் இருந்து சிவபூசை செய்த அனேக சமயங்களில் பெருமான் தன்னைத் தான் பூசித்து மக்களுக்குக் காட்டியிருந்த போதிலும், மேலே குறித்த மூன்று வரலாறுகளே அதிகமாக மக்களால் போற்றப்படுகின்றன. அவற்றை இங்கே காணலாம்.

நாகலட்சுமி