Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ராமபிரான் அருளும் ஆலயங்கள்

பெயர்: ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில்

ஊர்: சென்னை மேற்கு மாம்பலம் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில். ஆந்திர மாநிலம் ஹரிதாஸ் மடத்தினால் கட்டப்பட்ட கோயில். 1927ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தட்சிணா பத்ராசலம் என்கிற பெயரும் வழங்கப்படுகிறது. திருநீர்மலை திவ்யதேச ரங்கநாதர் தீர்த்தப் பரிகிரஹம் (பெருமாள் இடம் மாறி அருள் பாலிப்பது) இங்கு விளங்குவதாக நம்பப்படுகிறது. சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேதராய் காட்சி தர, வீர ஆஞ்சநேயர், யோக நரசிம்மர் மற்றும் ரங்கநாதருக்கும் சந்நதிகள் உள்ளன. சீதாதேவி, ராமர் மடியில் சேவை சாதிக்கிறார்.

தாயார்: ஸ்ரீ சீதா லட்சுமண சமேத கோதண்டராமர் ரங்கநாயகி. சீதாதேவி மடியில் அமர்ந்துள்ளார்.

செல்லும் வழி: தியாகராய நகர் மேட்லி சாலையிலிருந்து தண்டவாளத்தைத் தாண்டி மேற்கே செல்லும் வழியில் இடப்புறம் உள்ள கே.ஆர்.கோயில் தெருவில் உள்ளது. கே.ஆர். என்பது கோதண்டராமரைக் குறிக்கும். மாம்பலம் ஸ்டேஷன் கணினி முன்பதிவு நிலையம் தாண்டி உள்ள பாலத்தைக் கடந்தால் கோயில்.

பெயர்: ஸ்ரீ தர்ப்ப சயன ராமர் மற்றும் ஸ்ரீ சதுர்புஜ கோதண்டராம சுவாமி தேவஸ்தானம்.

ஊர்: பௌன்பதர்கூட்டம், காஞ்சி புரம் - 603405.

மூலவர், தாயார்: ஸ்ரீ தர்ப்ப சயன ராமன் மற்றும் சங்கு, சக்கரம், வில், அம்புடன் சதுர்புஜ ராமரி சீதாதேவி. வேதாந்த தேசிகர் தன் யாத்திரையின் போது இத்தலத்தில் இரவில் தங்கினார். நித்தம் வணங்கும் ஹயக்ரீவருக்கு தீர்த்தத்தை நிவேதனமாகச் சமர்ப்பித்து உறங்க, மறுநாள் காலையில் விவசாயிகள் அவருடைய வெள்ளைக் குதிரை பயிரை மேய்ந்து பாழ் செய்கிறது என முறையிட, ஹயக்ரீவருக்கு நீர் மட்டும் கொடுத்ததனால் அது பசியாறவில்லையோ என பிரார்த்திக்க குதிரை மேய்ந்த இடமெல்லாம் பொற்கதிர்களானது. அவை தூற்றிய போது பொன்னாக விழுந்ததால் பொன்பதர் கூட்டம் எனப் பெயர் பெற்றது. இந்தத் தலத்திலேயே சதுர்புஜ ராமர் கோயிலில் ராமர் சங்கு சக்கரத்துடன் விளங்குகிறார். அஞ்சலியுடன் லட்சுமணர், பவ்ய ஆஞ்சநேயர் கல்யாண கோலத்துடன் காட்சி கொடுக்கிறார். இந்தப் பொன்கதிர்கள் சாலில் வைத்துப் பாதுகாக்கப்பட்ட இடம் சாலூர் (சால் - பெரிய மண்பானை) என்றும், எடை போட்ட இடம் எடையூர் என்கிற பெயரோடும் விளங்குகின்றன.

செல்லும் வழி: செங்கல்பட்டை அடுத்து 6 கி.மீ தூரத்தில் பொன்விளைந்த களத்தூர் உள்ளது. அங்கிருந்து வல்லிபுரம் சாலையில் மேலும் 5 கி.மீ. சென்றால் ஊர். ஒத்திவாக்கம் ரயில்வே லெவல் கிராஸிங் அருகே உள்ளது.

பெயர்: வேட்டவராயப் பெருமாள் மற்றும் கோதண்டராம சுவாமி திருக்கோயில்.

ஊர்: ஆலத்தூர், விழுப்புரம் - 604303.

மூலவர், தாயார்: ஸ்ரீ வேட்டை வெங்கடராய பெருமாள், ஸ்ரீ கனகவல்லி. ஆதி காலத்தில் இத்தலத்தில் பெருங்காட்டில் கௌண்டிய முனிவர் கடும் தவம் செய்த போது இவ்வூருக்கு வேட்டை மார்க்கமாக வந்த திருப்பதி வேங்கடவன் அவருக்குக் காட்சி தந்து பின் இவ்வூர் பிடித்துப்போக இங்கேயே தங்க திருவுளம் கொண்டதாகவும் வரலாறு. 6 கல்வெட்டுகள் கொண்ட இந்தக் கோயில் பிற்காலச் சோழர் மற்றும் விஜயநகரக் காலத்தியது. கல்வெட்டில் தற்கால கனகவல்லி தாயார் பெயர் கோமளவல்லி நாச்சியார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செல்லும் வழி: திண்டிவனம் வட்டத்தில் உள்ள ஆலத்தூர் என்னும் ஊரில் வேட்டவராயப் பெருமாள் மற்றும் கோதண்ராம சுவாமி திருக்கோயில் உள்ளது. இது மரக்காணத்திலிருந்து சூணாம்பேடு வழியாக சென்னை செல்லும் பேருந்து தடத்தில் 10 கி.மீ உள்ளது.

பெயர்: ஸ்ரீ சீதா ராம அனுமத் சமேத ஸ்ரீ ராமர் திருக்கோயில்.

ஊர்: நாகேயநல்லூர், சேலம் - 621231.

மூலவர், தாயார்: ஸ்ரீ சீதா ராம அனுமத் சமேத ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ பிரமராம்பிகா உடனுறை மல்லிகார்ஜுனர். கேட்டவரம்பாளையம் தலத்தில் எவ்வாறு ஓர் நூற்றாண்டாக அகண்ட திவ்ய நாம சங்கீர்த்தனம் நடைபெறுகிறதோ இத்தலத்திலும் சுமார் 86 ஆண்டுகளாக அவ்வாறே பாகவதர்களால் நாம சங்கீர்த்தனம் நடைபெறுகிறது. ராம பாணத்தைவிட, ராமநாமத்திற்கு பலம் அதிகம் என புராணம் மூலம் அறிவோம். இத்தலத்து மூர்த்தங்கள் பத்ராசல ராமதாஸரால் ஆராதிக்கப்பட்டவையாகும். கஷ்ட நிவர்த்தியினையும் தோஷங்களையும் நீக்கக் கூடிய பெருமாள் இவர். பரமாச்சாரியாரின் ஆசி பெற்ற நித்ய அக்னிஹோத்ரி அனந்தநாராயண வாஜபேயாஜியால் போற்றப்பட்ட ராமர் இவர். ஒவ்வோர் ஆண்டும் ஸ்ரீ ராம நவமி விமர்சையாக நடைபெறுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன் அரசாண்ட முத்துவீர பூபாலன் என்னும் குறுநிலமன்னனின் அமைச்சரான நாகையா என்பவர் ஸ்ரீ சைலம் ஜோதிர்லிங்கத்திற்கு இணையான மல்லிகார்ஜுனர் மற்றும் பிரமராம்பா (மல்லி மலர், அதன் மேல் மொய்க்கும் வண்டு பிரமரம் என்கிற பொருள்பட) பிரதிஷ்டை செய்த கோயில். பெரும் சிவத்தொண்டு புரிந்து சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ நரசிம்ம பாரதியிடம் தீக்ஷை பெற்ற பூஜ்ய ஸ்ரீ ராமானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் சமாதியும் அருகே உள்ளது. தொன்மை மிக்க இப்பகுதியில் இப்போது சிறப்பாக நாம சங்கீர்த்தனம் நடைபெறுகிறது.

செல்லும் வழி: சேலம் - நாமக்கல் - காட்டுப்புத்தூர் பாதையில் உள்ளது. முசிறியிலிருந்து - தொட்டியம் வழியாக செல்லும் திருச்சி காட்டுப்புத்தூர் சாலைப் பேருந்துகளும் செல்லும். நாமக்கல்லிலிருந்து காட்டுப்புத்தூருக்கு தடம் எண் 15-பி மற்றும் 15-டி செல்கிறது.

பெயர்: ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோயில்.

ஊர்: கோவை ராம்நகர், கோவை - 641009.

மூலவர், தாயார்: ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி. கோவை நகரத்தில் பிரசித்தமாக விளங்கி வரும் திருக்கோயில். இவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுபவர்கள் பெரும் பயன் அடைகின்றனர். ராம நாமத்தின் வலிமையினை அனுமன் மூலம் உணர்த்திய பெருமான் கொடிய துன்பங்களிலிருந்து நிவர்த்தி அளிக்கக் கூடியவர். இங்கு ராமநவமி உற்சவம் விசேஷமாக நடைபெறுகிறது. 76 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

செல்லும் வழி: கோவையில் ராம் நகரின் பிரதானப்பகுதியில் உள்ளது.