Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்

திருவானைக்கா என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் இருக்கும் ஜம்புலிங்கம், அன்னை அகிலாண்டேஸ்வரியால் உருவாக்கப்பட்டது. எம்பெருமானின் கட்டளைக்கிணங்க மானிடப்பெண்ணாக பூலோகத்தில் அவதரித்த பார்வதி தேவி, காவிரி ஆற்றில் நீரில் லிங்கம் வடித்தார். அம்பிகையின் திருக்கரங்களால் நீர் லிங்கமாக மாறியது. அதை வழிபட்டு பேரானந்தம் அடைந்தாள் அம்பிகை.ஜம்பு என்னும் முனிவர் எம்பெருமானை வேண்டி இங்கு தவமிருந்தார். அவரது பக்தியில் மகிழ்ந்த சிவன் அவருக்கு காட்சி தந்து, நாவல்பழத்தை அளித்தார். சிவன் கொடுத்ததாயிற்றே அதனால் கொட்டையையும் விழுங்கிவிட்டார் ஜம்பு முனிவர். அந்த கொட்டையிலிருந்து விதை முளைத்து செடியாக மாறி மரமாக வளர்ந்தது. சிரசு வெடித்து முக்தி பெற்றார் ஜம்பு முனிவர். நாவல் மரத்துக்கு “ஜம்பு’ என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்ததால், சுவாமி “ஜம்புகேஸ்வரர்’ என பெயர் பெற்றார்.

புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர், தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். சிவலிங்கம், கூரையில்லாமல் வெயில் மழையில் கிடந்தது. சிலந்தி, சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும், மற்றும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது.யானை, சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலை பின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க நினைத்த சிலந்தி, யானையின் துதிக்கையில் புக, யானையும் சிலந்தியும் போராட, கடைசியில் இரண்டும் மடிந்தன.

இவற்றின் பக்திக்கு மெச்சிய சிவபெருமான், யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி, மறுபிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன், யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலை மீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும். காளமேகப் புலவர் இங்குதான் பாடல் பாடும் ஞானம் பெற்றார்.

இத்தலத்தில் உள்ள தெய்வங்களுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்ரன், சனி, கேது ஆகிய கிரகங்கள் நாமாகரணம் செய்துள்ளன.

* லக்னத்தில் சுக்ரன் உள்ளவர்கள் இங்கு வழிபட்டு நாவல் மரத்திற்கு பால் ஊற்றினால் திருமணம் தாமதம் விலகும்.

* ஏகாதசி திதி அல்லது திருவோணம் நட்சத்திரம் அன்று இங்குள்ள குபேர லிங்கத்தை வழிபட்டு பாலில் வெல்லம் கலந்த சுவாமிக்கு நைவேத்யம் செய்து அதனை அங்குள்ள பக்தர்களுக்கு விநியோகம் செய்தால் குபேர சம்பத்து உண்டாகும்.

* இங்குள்ள பஞ்சமுக விநாயகருக்கு நான்கு தேங்காய்கள் உடைத்து வழிபட்டால் ஞானம் உண்டாகும்.

* வெள்ளிக்கிழமை வரும் பௌர்ணமி நாளில் அத்திப்பழம் சுவாமிக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும்.