``அரசர் உங்களை அழைத்து வரச் சொன்னார். அவர் அனுப்பிய பல்லக்கு இதோ! உங்கள் வீட்டு வாயிலில் தயாராக இருக்கிறது. போகலாமா?’’ என்றார், அரண்மனை அதிகாரி. அதிகாரியாக இருந்தும் அவர் பேச்சில் பணிவு இருந்தது. அவர் சொல்லைக்கேட்ட வடமலையப்பர், உடனே சென்று பல்லக்கில் அமர்ந்தார். பல்லக்கு மதுரையை அடைந்தது. மனதார அம்பாள் மீனாட்சியையும், சொக்கநாதரையும் தரிசித்த வடமலையப்பர், அரண்மனை சென்று, அரசரை வணங்கினார். அரசரின் உள்ளம்,``இந்தக் கல்விமானால் நம் ஆட்சி மென்மேலும் சிறப்படையும்’’ என்ற எண்ணத்தில் விம்மியது. அந்த விம்மல் வார்த்தைகளை வெளிப்படுத்தியது.
``புலவரே! திருநெல்வேலி பகுதிக்குத் தலைவராக உங்களை நியமித்து உள்ளேன். நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம்! உங்களைப் பற்றி எல்லாம் தெரியும். சோழ நாட்டைச் சேர்ந்த நீங்கள் வறுமையில் தவழ்ந்தது; அதன் காரணமாகத் தீவிரமாகக் கல்வி கற்று பெரும் புலவராக ஆனது; இருந்தும் இன்னும் வறுமையில் உழல்வது என்று உங்களைப் பற்றிய தகவல் எல்லாமே எனக்குத் தெரியும். உங்கள் பெருமை உங்களுக்குத் தெரியாது. அது தெரிந்ததால்தான், நான் உங்களைத் திருநெல்வேலிக்குத் தலைவராக நியமித்தேன்’’ என்றார் அரசர்.
தன்பெருமை தானறியாத் தன்மையரான வடமலையப்பர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவரது நிர்வாகத்தின் கீழ் திருநெல்வேலி சீமை, பல வகைகளில் சிறப்புற்று விளங்கியது. அதைக்கண்ட அரசர், அந்த மகிழ்ச்சியிலேயே இறைவனடி சேர்ந்தார். அந்த அரசர் திருமலை நாயக்கர்! இவர், கி.பி.1659ல் மறைந்த பின், சொக்கநாத நாயக்கர் அரசரானார். சொக்கநாத நாயக்கர் ஆட்சியிலும் வடமலையப்பர் திருநெல்வேலிக்குத் தலைவராக இருந்தார். அப்போது தமிழும் தமிழ்ப் புலவர்களும் மிகவும் ஆதரிக்கப்பட்டார்கள்.
`தமிழின் செவிலித்தாய் வடமலையப்பர்’ என்று எல்லோரும் பாராட்டினார்கள். பாராட்டு மழை, வடமலையப்பரை நனைத்துக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில்,``இந்த மழை இருக்கும்போது நாம் எதற்கு?’’ என்பது போல், மழை நின்று போனது. நிலங்கள் விளையவில்லை. பயிர் பச்சைகள் கருகிப் போய்ப் பூமியை மூடின. நிலத்திற்கு உண்டான வரியைச் செலுத்த முடியாத பலர், திருநெல்வேலிச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களில் நாராயண தீட்சிதரும் ஒருவர். திருமால் பக்தியிலும், தமிழ்ப் புலமையிலும் ஈடு இணையற்று விளங்கிய அவர், சிறையில் மிகுந்த துயரத்தை அடைந்தார். திருமால்தான் காப்பாற்ற வேண்டும். அவரிடம் முறையிடுவோம் என்று தீர்மானித்த நாராயண தீட்சிதர், அவரது ஊரான தென்திருப்பேரையில் குடி கொண்டிருக்கும் பெருமாளை நோக்கிப் பாடல் பாடி முறையிட்டார்.
தினம் ஒரு பாடலாக பாடப்பட்டது. ஒரு திங்கள் கடந்தது; அதாவது 30 நாட்கள் ஆயின. தீட்சிதர்,``திருமாலே! திங்கள் ஒன்று போய்விட்டது. திருவுள்ளம் இரங்கவில்லையே. ஏன்?’’ என்று உள்ளமுருகிப் பாடி முறையிட்டார்.
``திங்கள் ஒன்றாக சிறை இருந்தோம் இச்சிறை அகற்றி
எங்கள் தம்பால் இரங்காதது என்னோ? இசை நான் மறையின்
சங்கமும் கீதத்தமிழ்ப் பாடலும் சத்த சாகரம் போல்
கொங்கு தென் பேரைப் புனிதா! கருணைப் புராதனனே!’’
- என்று பாடி முறையிட்டார்.
பலன் ஏதும் விளையவில்லை. அதற்காகத் தீட்சிதர் பாடல் பாடுவதை நிறுத்திவிடவில்லை; ``வடமலையப்பர், தமிழின் அருமை பெருமைகளை அறிந்தவர். அந்த வடமலையப்பர் சென்று, வரி கட்ட முடியாததற்காகத் தமிழ்ப் புலவர்களையா சிறையில் அடைப்பார்? நான் சிறையிலிருப்பது வடமலையப்பருக்கு தெரிந்திருக்காது. தெரிந்திருந்தால் இந்நேரம் அவரே வந்து என்னை விடுதலை செய்திருப்பார். என் நிலையை அவருக்கு எப்படித் தெரிவிப்பது? அது சரி! தரையில் இருந்து குருவி கத்தினால், ஆகாயத்தில் இருக்கும் நிலவுக்குக் கேட்கவா போகிறது? இறைவன்தான் இன்னலை நீக்க வேண்டும்’’ என்று
வள்வார முரசதிர் கோமான் வடமலையப்பன் முன்னே;
``விள்வாரும் இல்லை இனி எங்கள் காரியம்
வெண் தயிர் பால் கள்வா! அருட்கடைக் கண்பார்!
கருணைக்களிறு அழைத்த புள்வாகனா!
அன்பர் வாழ்வே! தென்பேரைப் புராதனனே!’’
- என்ற பாடலைப் பாடி மயக்கம் போட்டு விழுந்தார்; மூச்சு மட்டும் வந்து கொண்டிருந்தது.
சிறை அதிகாரியின் காதில் தீட்சிதரின் பாடல் விழுந்தது; ``ஆஹா! இவர் தமிழ்ப் புலவர் போலிருக்கிறது. வடமலையப்பர் தமிழ்ப் புலவர்களை உயிராகவும் தமிழையே உணவாகவும் கருதுபவர். அவரிடம் இத்தகவலைச் சொல்ல வேண்டும்’’ என்று நினைத்த அவர், உடனே வடமலையப்பரிடம் சென்று,``மன்னா! தென் திருப்பேரையில் உள்ளவர்களில் பலர் வரி செலுத்தவில்லை.
வரி செலுத்தாதவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் புலவர் போலிருக்கிறது. தன் குறையை குழைக்காதரிடம் (நவதிருப்பதி தலங்களில் ஒன்றான தென்திருப்பேரை ஸ்ரீ மகரநெடுங்குழைக்காதர் பெருமாளைக் குறிக்கவே ``குழைக்காதரிடம்’’ என்று குறிப்பிடப்படுகிறது) முறையிட்டு பாடிக் கொண்டிருந்தார். பாடலில் உங்கள் பெயரும் இருந்தது’’ என்று கூறினார். அதைக் கேட்டதும் வடமலையப்பருக்கு உடல் ஆடியது; ``தமிழ்ப் புலவர்களுக்காகவே ஆட்சிப் பொறுப்பை ஏற்ற என் நிர்வாகத்தில் இப்படியா? எதிர்காலச் சந்ததி என்னைத் தமிழ்க் கொலைஞன் என்றல்லவா ஏசுவார்கள்? தமிழே சிறைப்பட்டுவிட்டது! ஹும்!’’ என்று உறுமிவிட்டுக் குதிரை மேல் தாவி ஏறினார். ஒரு சில வினாடிகளில் வடமலையப்பர், தீட்சிதர் இருந்த சிறையில் முன்னால் நின்றார். ஆனால் தீட்சிதரோ...
கண்களை மூடியபடி குழைக்காதரைப் பாடிக் கொண்டிருந்தார். அவரது கண் களில் இருந்து வழிந்த கண்ணீர் அவர்மார்பை நனைத்துக் கொண்டிருந்தது. அதைக் கண்ட வடமலையப்பர்,
``அற்புதம்! அற்புதம்! தமிழே உருவம் கொண்டு வந்திருக்கிறது. அது தெரியாமல் சிறைப்படுத்தி விட்டேனே! புலவரே! ஐயா! என்னை மன்னியுங்கள்! இதோ! உங்களை விடுதலை செய்கின்றேன்’’ என்றார்.
தீட்சிதர் மறுத்தார்;``வடமலையப்பரே! என்னைப்போல் பலர் இச்சிறையில் இருக்கிறார்கள். எனக்கு மட்டும் விடுதலை ஏன்?’’ என்றார். அவரது உள்ளக் கருத்தை உணர்ந்த வடமலையப்பர்,
``அனைவரையும் விடுதலை செய்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, சிறை அதிகாரியிடம் ஏதோ உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து வண்டிகள் பல, சிறைவாயிலில் வந்து நின்றன.
தீட்சிதர் உட்பட விடுதலை ஆனவர்கள் அனைவரும் அவற்றில் ஏற்றப்பட்டு அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு அறுசுவை விருந்து காத்திருந்தது. வடமலையப்பரே முன்னால் நின்று பரிமாறினார். விடுதலை அடைந்தவர்கள் எல்லோரும் வயிறார உண்டுவிட்டு,``அப்பாடா! நாராயண தீட்சிதரால் நாங்கள் விடுதலை அடைந்தோம்’’ என்று சொல்லித் தீட்சிதரை மனமாரப் புகழ்ந்தார்கள்.
பெருமாள் பக்தியில் தோய்ந்திருந்த தீட்சிதரோ, அப்புகழ்ச்சியால் நாணம் கொண்டு, தரையைப் பார்த்தபடி இருந்தார். சற்று நேரம் அங்கே மௌனம் நிலவியது. அந்த மௌனத்தை வடமலையப்பர் கலைத்தார்;``தீட்சிதரே! நீங்களும் உங்களைச் சார்ந்த இவர்களும், இனிமேல் நிலவரி செலுத்த வேண்டாம். உங்கள் நிலங்களை எல்லாம் இறையிலி நிலங்களாக (இறையிலி நிலங்கள் என்பவை அரசிற்கு அல்லது நிலக் கிழார்களுக்கு எவ்வித வரியும் செலுத்தத் தேவையில்லாத வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலங்களாகும்) அறிவித்து விட்டேன்’’ என்றார். தீட்சிதரும் அவரோடு இருந்தவர்களும் மகிழ்ச்சியுடன் ஊர் போய்ச் சேர்ந்தார்கள். திருநெல்வேலியில் அவர்கள் சிறை இருந்த தெரு `காவல்புரைத் தெரு’ என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
- பி.என்.பரசுராமன்



