Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

துன்பங்களை நொடிப் பொழுதில் நீக்கி அருளும் இடர்குன்றம் சுயம்பு நரசிம்மர்

*இடர்குன்றம்

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நரசிம்மர் திருத்தலங்கள் அமைந்துள்ளன. சில தலங்கள் மிகவும் வித்தியாசமானவை. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் வட்டத்தில் இடர்குன்றம் என்ற கிராமத்தில் குன்றின் மீது அமைந்துள்ள நரசிம்மர் தலம் மிகவும் வித்தியாசமானது. சிறிய தலமாக இருந்தாலும் சக்தி மிக்க தலமாக விளங்கி வருகிறது. தற்போதைய காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் இணைந்த பகுதியானது முற்காலத்தில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. தொண்டை மண்டலத்தில் இடையன் காடு என்ற ஒரு சிற்றூரில் இளைஞன் ஒருவன் ஆடு, மாடுகளை மேய்த்து வந்தான். அவ்வப்போது மரத்தடியில் அமர்ந்து தியானிப்பது அவனுடைய வழக்கமாக இருந்தது.

ஒருசமயம் அந்த இளைஞனுக்கு நரசிம்மரை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழ, பெரியோர்களிடம் அதற்கான வழியைக் கேட்டான். அவர்கள் தவமியற்றினால் நரசிம்மரை தரிசிக்கலாம் என்று தெரிவித்தார்கள். ஒருநாள் அந்த இளைஞன் காட்டிற்குள் ஒரு குன்றின் அருகே நடந்து சென்ற போது “இந்த குன்றே ஹரி. இங்கே நீ தவமியற்றினால் நரசிம்ம மூர்த்தியை தரிசிக்கலாம்’’ என்ற அசரீரி வாக்கு எழ, அந்த இளைஞன் அந்த குன்றின் மீது அமர்ந்து நரசிம்ம மூர்த்தியை நினைத்து தவமியற்றினான்.

ஒரு சித்ரா பௌர்ணமி தினத்தன்று நரசிம்ம மூர்த்தி அந்த இளைஞனுக்கு காட்சி கொடுத்தார். அப்போது அந்த இளைஞன் நரசிம்மரிடம் “தாங்கள் இங்கேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும். பக்தர்களின் இடர்களை நீக்கி அருள வேண்டும்” என்ற வேண்டுதலை சமர்ப்பிக்க நரசிம்மரும் அந்த மலைக்குன்றில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாய் நரசிம்மர் ஐந்து தலை நாகத்தின் கீழ் எழுந்தருளியுள்ளார். இப்பகுதி மக்கள் இத்தலத்திற்கு வந்து நரசிம்மரிடம் வேண்ட அவர்களின் இடர்கள் எல்லாம் உடனுக்குடன் நீங்கியதாக ஐதீகம். இக்குன்று இடர்குன்று என அழைக்கப்பட்டு பின்னர் மருவி இடர்குன்றம் என்று அழைக்கப்பட்டது.

எழுபத்தியோரு படிக்கட்டுகளைக் கடந்து சென்றால் சிறிய கருவறையில் சுயம்பு மூலவராக நரசிம்மர் காட்சி தருகிறார். கருவறையில் சுயம்பு மூலவருக்கு முன்பாக லட்சுமி நரசிம்மர் சிலாத்திருமேனியாக எழுந்தருளியுள்ளார். நம்மாழ்வார், பெரியாழ்வார், உடையவர் ராமானுஜர், தேசிகர் ஆகியோர் சிலா ரூபத்தில் எழுந்தருளியுள்ளனர். சுயம்பு நரசிம்ம மூர்த்திக்கு எதிர்புறத்தில் பெரிய திருவடி கருடாழ்வார் மூலவரை நோக்கி அமைந்துள்ளார். லட்சுமி நரசிம்மர் உற்சவராகவும் அமைந்துள்ளார். சுயம்பு நரசிம்மருக்கு அருகில் சித்தர் இடைக்காடர் காட்சி தருகிறார். மலைப்பாதையில் வழியில் சிறியதிருவடி அனுமனுக்கு ஒரு சந்நதி அமைந்துள்ளது. பிரதி சனிக்கிழமைகளில் அனுமனுக்கு வடைமாலை சமர்ப்பித்து விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.

நரசிம்ம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, சித்ரா பௌர்ணமி ஆகிய தினங்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், பிரதி சனிக் கிழமைகளிலும், சுவாதி நட்சத்திர தினத்தன்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.தினமும் காலை வேளைகளில் ஒருகால பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்திற்கு வந்து சுயம்பு நரசிம்மமூர்த்தியை தரிசித்தால் நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

வழக்கமாக தினமும் காலை எட்டுமணி முதல் பத்துமணி வரையிலும் இத்தலம் பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். சனிக் கிழமைகளில் மட்டும் காலை ஏழு மணி முதல் பதினொன்று முப்பது வரையிலும் மாலை ஐந்து மணி முதல் இரவு ஏழு மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருப்போரூர் செங்கற்பட்டு வழித்தடத்தில் கொட்டமேடு சந்திப்பிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இடர்குன்றம் அமைந்துள்ளது. மானாமதியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் திருப்போரூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், திருக்கழுக்குன்றத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் இடர்குன்றம் அமைந்துள்ளது.

ஆர்.வி.பதி