Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செல்வங்கள் அள்ளித் தரும் சுந்தரராஜப் பெருமாள்

*தூத்துக்குடி

திருப்பாற்கடலில் பள்ளி கொள்வதை மறந்து அங்கிருந்து விரைந்து வந்து பக்தர்களின் இதயக் கடலில் வாழ இறங்கி வந்தவன் திருமால் என்று வைணவ அடியார்கள் பாராட்டுவார்கள். அந்த கருணை வள்ளல், முத்து விளையும் தூற்றியூர் என்ற அந்நாளைப் பெயரையும், தூத்துக்குடி என்ற இந்நாளையப் பெயரையும் உடைய துறைமுகநகரில் கோயில் கொண்டிருக்கிறான். இந்தியா மீது படையெடுத்த மன்னன் மாலிக்காபூர், வழியில் கண்ட திருக்கோயில்களை எல்லாம் நாசமாக்கினான். அவனுடைய நாசவேலையில் சிக்கவிருந்த ஸ்ரீதேவி - பூதேவி சமேத சுந்தரராஜப் பெருமாளின் அர்ச்சா உருவை பக்தர்கள் தந்திரமாகச் செயல்பட்டு, அவற்றை புலிப்பாஞ்சான் குளம் என்ற இடத்தில் மறைத்து வைத்து பாதுகாத்தனர்.

படையெடுப்பு பயம் அகன்றதும், மக்கள் தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் திருக்கோயில் அமைத்து, சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் பெருமாளை வழிபாடு செய்து வருகின்றனர்.

`திரு மந்திர நகர்’ என்ற காரணப் பெயரையும் இத்தலம் கொண்டுள்ளது. நிலைக் கோபுரத்தையும், முன் பந்தக்கால் மண்டபத்தையும், எழிலார்ந்த சிற்பத் தூண்களையும் கொண்ட இந்தத் திருக்கோயிலின் கதவுகளும் அழகுற அமைந்திருக்கின்றன. வாசலின் மேல்புறம் கஜலட்சுமியின் திருவுரு உள்ளது. உள்ளே நுழைந்ததும் காணப்படும் மகா மண்டபத்தில் உயர்ந்த கொடிமரம், பலிபீடம், கருடன் ஆகியவை இடம் பெற்றிருக்க, அங்குள்ள முன்பக்க சுவரில் பெரிய அளவில் ஸ்ரீதேவி - பூதேவி உடனுறை சுந்தரராஜப் பெருமாளின் வண்ண ஓவியம், மனம் கவரும் வகையில் தீட்டப்பட்டிருக்கிறது.

அடுத்து, அர்த்த மண்டபம், கருவறை. வெளியே துவாரபாலகர்களின் கம்பீரத் தோற்றம். சுந்தரராஜப் பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக மூன்றடி உயரத்தில் சங்கு, சக்கரதாரியாய் நான்கு திருக்கரங்களுடன் ஆதிசேஷன் குடைபிடிக்க, கிழக்கு நோக்கி நின்ற கோல தரிசனம் அருளி பரவசமூட்டுகிறார்.

தன்னை வேண்டுவோரின் துயர்களை துடைத்து வரப்பிரசாதியாய் விளங்கி வரும் இப்பெருமாள், மறுமைப் பேற்றில் பக்தர்களுக்கு வைகுண்ட வாசத்தையும் அருளுவதால் ``வைகுண்டபதி’’ என்ற சிறப்புப் பெயரையும் கொண்டுள்ளார். உற்சவ மூர்த்திகளும் மூலவரின் திருநாமத்தையே பூண்டுள்ளார்கள். இம்மூர்த்திகளும் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோரும் அம்மண்டப வெளிப்புறத்தில் எழுந்தருளியுள்ளனர். தல விருட்சமான துளசி, தனி மாடத்தில் வைத்துப் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றது.

பிராகாரச் சுற்றில் உயரமான ஆறு படிக்கட்டுகள் கொண்ட, தனித்தனி சந்நதியில் ஸ்ரீதேவி - பூதேவி, ஆண்டாள் ஆகியோர் தரிசனமளிக்கிறார்கள். ஆலய முன் மண்டபத்தின் இடதுபுறத்தில் உள்ள தனிச் சந்நதியில், ஏழடி உயரத்தில் சிரசின் பின்னால் சூரியப் பிரபை அலங்கரிக்க வீரமும், கருணையும் பொலியும் திருமுகத்துடன் பக்தர்களைஈர்க்கிறார் ஆஞ்சநேயர்.

அமைவிடம்: தூத்துக்குடி ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது இக்கோயில்.

ஜெயசெல்வி