Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

லலிதா சஹஸ்ரநாமத்தில் ஸ்ரீ மாதா நாமத்தின் மகிமை

ஸ்ரீ மாதா (ஸ்ரீ மாத்ரே நமஹ)

ஸ்ரீ மாதா என்பதே முதல் நாமமாகும். லலிதாம்பிகை படமோ அல்லது அம்பாளின் படத்திற்கு பூக்கள் சாற்றி ஸ்ரீ மாத்ரே நமஹ என்று சொல்லி அர்ச்சிக்கலாம். ஸ்ரீ மாத்ரே நமஹ என்பது அர்ச்சித்தலுக்குரிய நாமமாகும்.

ஸ்ரீ மாதா என்பதற்குப் பொருள் அன்னை, அம்மா என்பதாகும். இதில் ஸ்ரீ மாதா என்றால் சிறப்பு வாய்ந்த அன்னை என்பதாகும். ஸ்ரீ மாதா என்றால் சிருஷ்டி கர்த்தா என்று தொடங்கி ஆயிரம் ரகசிய உட்பொருட்கள் நிறைந்துள்ளன. ஒரு குழந்தை பிறந்தவுடன் அது அனுபவிக்கும் முதல் அவஸ்தை பசி. அந்தப் பசியை தீர்த்து வைப்பவளாக அம்மா இருக்கிறாள். முதல் அவஸ்தையான பசியை தீர்த்து வைத்தலிலிருந்து அவள் தொடங்கி விடுகின்றாள். அந்தக் குழந்தைக்கு தனக்கொரு அவஸ்தையெனில் அதை தீர்த்து வைப்பவளாக முதலில் அம்மாதான் வருகின்றாள் என்று தாய்மையின் அன்பும், பாசமும் அங்கு விதையாகப் போடப்படுகின்றது. அந்த உணர்வை அம்மாவுக்கு கொடுப்பதே அந்த ஆதி மாதாவான ஸ்ரீ மாதாதான்.

குழந்தை பிறந்தவுடன் அங்கு வாத்சல்யம் என்கிற பேரன்பு தன்னியல்பாக தாயிடம் சுரக்கின்றது. அதை சுரக்கச் செய்வது மட்டுமல்லாது அந்த வாத்சல்யம் என்கிற அன்புருவாக அந்த தாயுக்குள் இருப்பவளே ஸ்ரீ மாதா. அங்கு தொடங்கும் அந்த அன்பானது, எங்கு, எந்தத் துன்பம் வந்தாலும் சரிதான் அம்மா... அம்மா... என்று அழைத்து தன் துன்பத்தை தீர்க்க வேண்டுகின்றது. இவ்வாறு குழந்தை தான் முதலில் கண்டுகொள்வது இந்த மாதாவைத்தான்.

அந்த தாய் எனும் சரீரத்தை அளித்தது யார்? அவளுக்குள் ஒரு உயிரை வளரச் செய்து அந்த சரீரத்தினின்று இன்னொரு ஜீவனை உருவாக்கியது யார்? இதுபோன்று மனித சமூகம் மட்டுமல்ல மரம், செடி, கொடி, சகல தாவர சங்கமங்களும் தன்னுடைய எல்லா நிலைகளிலும் அன்னை எனும் அந்த உயர்ந்த தன்மை இலகுகின்றது. பசுவோ, புலியோ குட்டியை ஈனும்போது அடுத்த நிமிடம் நாவால் வருடிக் கொடுக்கின்றது. வலியில் அழும்போதும், துக்கத்தில் தவிக்கும்போதும், ஆபத்துக் காலத்திலும், பேரன்பு பொங்கும் சகல எல்லா உணர்வு மட்டங்களிலும் ஜீவன்களின் மனதிலிருந்து சொல்லாக வெளிவருவது அம்மா எனும் சப்தமே ஆகும்.

இதோ நம் எதிரே தெரியும் பிரபஞ்சத்தை கொஞ்சம் உற்றுப் பாருங்கள். சூரியன், நிலா, கடல், காடு, மலை, வானம், நட்சத்திரங்கள் என்று எவ்வளவு பெரிய பிரபஞ்சம். இவை அனைத்தையும் அவளே சமைத்திருக்கிறாள். அதை மறையச் செய்து மீண்டும் உருவாக்குகின்றாள். இந்த உருவாக்கம் எனும் அதிசயத்தை ஆச்சரியத்தை பாருங்கள் என்கின்றது இந்த நாமம். எப்படி அவள் தன்னை இப்படி விதம்விதமாக வெளிப்படுத்தியிருக்கின்றாள். நாம் அந்த பிரமாண்டத்தை பார்க்காது, ரசிக்காது நம் எதிரே உள்ள மகாபிரசாதமாக உள்ள இந்த பிரபஞ்சத்தை ஏதோ சாதாரணமாக நினைத்துக் கடக்கின்றோம்.

இந்த நாமம் என்னதான் சொல்கிறது. இந்த நாமம் அவளே அனைத்தையும் உருவாக்கியிருக்கிறாள் என்கின்றது. இந்த நாமமே சிருஷ்டியை தன்னிடத்தில் கொண்டதாகும். சிருஷ்டியை தொடங்கும் கணம் இந்த நாமமே முதலில் வெளிப்போந்து வருகின்றது.

சரி, இதிலிருந்து நான் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

நாம் சொல்லிக் கொண்டிருக்கின்ற இந்த நான் என்பதற்கு இங்கு ஒன்றும் வேலையில்லை. என்னால் அதாவது இந்த நான் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் அந்த அகங்காரத்தால் இங்கு எதையும் உருவாக்க முடியாது. நீங்கள் காரியமாற்றுவதுபோல, படைப்பை உருவாக்குவதுபோல ஒரு பிரமையை, இல்லாத ஒரு விஷயத்தை இந்த நான் எனும் அகங்காரம் உருவாக்கி வைத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். ஒரு கவளம் சாப்பாட்டை உண்டு செரிப்பது முதல் பூமியை தன் அச்சில் சுழலச் செய்து மீண்டும் மீண்டும் தன்னிலிருந்து அனைத்தையும் உருவாக்கியபடி இருப்பதை சொற்களெல்லாம் தாண்டி உணர்வுப் பூர்வமாக இருதயத்திலிருந்து நீங்கள் உணர்வீர்கள்.

எங்கு நீங்கள் சிந்திக்கிறீர்களோ அங்கு படைப்பின் ரகசியத்தை நீங்களே மறைத்துக் கொள்கிறீர்கள். அந்த மிகச் சிறிய எண்ணத்தின் அளவேயான படைப்பை மட்டுமே காட்டுகின்றது. எந்த இடத்தில் எண்ணங்களெல்லாம் ஒழிந்துபோய் மனதை தாண்டிய இடத்தில் நிற்கும்போது உண்மையான படைப்பு நிகழ்ந்து கொண்டேயிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அதைச் சொல்லால், எண்ணத்தால் தொடும்போது ஆதிப் படைப்பு மறைகின்றது. அந்த படைப்பை நிகழ்த்திக் கொண்டேயிருக்கும் அந்த மகா சக்திக்குத்தான் ஸ்ரீ மாதா என்று பெயர். ஸ்ரீ மாதா எனும் ஆதிசக்தி நிகழ்த்திக் கொண்டிருக்கும் சிருஷ்டியை அறிய வேண்டுமெனில் எண்ணங்கள் ஓய வேண்டும். மனம் நிற்க வேண்டும். மனதின் மூலமான நான் எனும் எண்ணம் தன் மூலத்தில் ஒடுங்க வேண்டும்.

அதெப்படி ஒடுங்கும்? இப்படி ஒடுங்காது இருப்பதற்குத்தான் பிறவி என்று பெயர். இந்தப் பிறவிக்கு மூல காரணம் வினைகள். வாசனைகள் என்கிற ஜென்ம ஜென்மாந்திர வினைகள். இந்த வினைகளை வேரறுக்க வேண்டுமெனில் இந்த அகங்காரத்தின் சொந்த சக்தியால் இயலாது. எனவே, எதுவொன்று பிறவியை அளித்ததோ அதுவே அந்த பிறவியிலிருந்தும் மீட்கும். இப்படி மீட்பதையே ஞானிகள் ஒடுக்குதல் என்கிறார்கள். இதை ஒடுக்கி இன்னொரு பிறவி இல்லாமல் செய்ய வேண்டுமென்றால் அது அந்த மகாசக்தியான ஸ்ரீ மாதா என்கிற லலிதா பரமேஸ்வரிகுத்தான் உண்டு. இந்த அகங்காரத்தால் எதையும் செய்ய முடியாது. அதுவேதான் மூலத்தில் சேர்த்து பிறவியை ஒடுக்க வேண்டும் என்று நிச்சயித்துக் கொண்டாலே போதும்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் அடிக்கடி ஒன்று கூறுவார். ‘‘இங்கு பாரப்பா... உன்னுடைய முயற்சியில் எதுவும் இல்லை. அனைத்தையும் அந்த தேவியே செய்கிறாள். எனவே, தனிமையில் அமர்ந்து அம்மா... அம்மா... என்று தாபத்தோடு அழு. அவள் தரிசனம் அளிப்பாள். அப்படி தாயாகி வர வேண்டுமென்று நாம் பிரார்த்திக்க சொல்லிக் கொடுக்கவே ஸ்ரீ மாதா எனும் நாமம் இங்கு ஏற்பட்டிருக்கின்றது.

இந்த ஸ்ரீ மாதா இன்னொரு வயிற்றில் பிறப்பதைத் தடுக்கும். திருஞானசம்பந்தருக்கு தாயாகி வந்து முலை சுரந்து ஞானப் பாலை அளித்து பிறவி அறுத்தவள் இவளே. பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிக்கு மதுரையில் தன் கயல்விழியால் ஞானத்தை அருளிய மீனாட்சி எனும் மாதாவும் இவளே. ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு காளியின் தரிசனத்தை அளித்து ஞான பூரணராக மாற்றிய வளும் இவள்தான்.

ஸ்ரீ மாதாவான இவளின் ஞானப்பாலை உண்டவர்களுக்கு இன்னொரு பிறவியில் இன்னொரு தாயின் பாலை உண்ணாத பெருநிலை கிட்டும், அதனால் இவள் அன்னையிலேயே சிறப்பு வாய்ந்த பேரன்னை ஆவாள். இந்தப் பிறவியில் நீங்கள் பார்க்கும் அன்னை அவளின் திவலை. இவளால் இன்னொரு பிறவி அறுக்க முடியுமா என தெரியவில்லை. ஆனால், அந்த ஸ்ரீ மாதா எனும் பிரமாண்டங்களின் அன்னை மட்டுமே கடைத்தேற்ற முடியும்.