தீக்குச்சிக்குள் சிறைப்பட்டிருக்கும் ஒளி!
அது தானாகத் தோன்றாது, அதை யாராலும் தோற்றுவிக்கவும் முடியாது. ஒளியை இல்லாததாக்கினால்தான் இதன் இருப்பு புரியும். அது - இருட்டு!
உண்மைதான், உலகத்தில் இருள் என்ற ஒன்று இல்லை. ஆனால் நாம் அதை அனுபவிக்கிறோம். இருள் என்று நாம் எதைச் சொல்கிறோம்? வெளிச்சம் இல்லாததைத்தானே? ஒளி இருக்கும் இடத்தில் இருட்டுக்கு வாய்ப்பே இல்லை. சீனாவில் மின்சார விளக்கு ஸ்விட்ச் சிலவற்றில், ‘லைட் ஆன்' (ஸ்விட்ச் ஆன்) என்றும் ‘டார்க் ஆன்' (ஸ்விட்ச் ஆஃப்) என்றும் குறிப்பிட்டிருப்பார்கள்! அதாவது ஒளி இல்லையென்றால்தான், இருள்.
அப்படிப்பட்ட இருளில் தடுமாறுகிறோம், இயல்பாக செயல்பட இயலாமல் போகிறது. ஆனால் ஒரு டார்ச் லைட் இருந்தால், அதனால் விலகும் இருளால், நாம் தைரியமாக அடியெடுத்து வைக்கிறோம். அஞ்ஞானம் என்பதும் இருட்டு போன்றதுதான். ஆனால் ஞானம் என்ற ஒளி இல்லாவிட்டால் அந்த இருட்டு நம்மை முழுமையாக
ஆக்கிரமித்துக்கொண்டுவிடுகிறது.
ஞானேன து ததக்ஞானம் யேஷாம் நாசிதமாத்மன
தேஷாமாதித்யவஜ்ஞானம் ப்ரகாசயதி தத்பரம் (5:16)
‘சூரியன் உதிக்கும்போது அதுவரை நிலவி வந்த இருள் காணாமல் போய்விடுகிறது. அதேபோல ஞானம் தோன்றும்போதும் அஞ்ஞானமும் அழிந்து போகிறது. சூரியன் பிரபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருட்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவது போல ஆத்ம ஞானம், பரப்பிரம்மத்தை நேராக விளக்குகிறது. அதாவது ஆத்ம ஞானமும், பிரம்ம ஞானமும் ஒன்றே' என்கிறார் கிருஷ்ணன்.அஞ்ஞானம் என்பதை உறங்கும் ஒளி என்று சொல்லலாம். அதாவது தீக்குச்சிக்குள் சிறைப்பட்டிருக்கும் ஒளி! தீக்குச்சி உரசப்பட்டால் அதிலிருந்து ஒளி பிறக்கிறது. இந்த ஒளி திடீரென்று ஆகாசத்திலிருந்து இறங்கியதா? இல்லை, தீக்குச்சிக்குள்ளேயே இருந்தது. தேடல் என்ற உரசலில், உயிர்த்த ஞானம் அது. உடனேயே இருள் விலகுகிறது. அதாவது அஞ்ஞானம் அகலுகிறது. ஞான விழிப்பு ஏற்பட்டுவிடுகிறது.
ஞானம் அடைவதற்கான அடிப்படைத் தேவை தன்னம்பிக்கை. ஆனாலும் இதில் ‘தான்' இருக்கக் கூடாது. அதாவது, முதலில் தன்னைப் புரிந்து கொள்வது. வீட்டில் இருக்கும்போது நெற்றியில் விபூதி இட்டுக் கொள்வதும், வெளியே போகும்போது அதை அழித்துவிட்டுச் செல்வதும் உண்மையான பக்தி ஆகாது. இது வெளி நபருக்காகக் காட்டிக் கொள்ளும் வேஷம். வீட்டிலுள்ளோர் ‘இவன்தான் எத்தனை பெரிய பக்திமான்' என்று வியக்க வேண்டும்; அதே சமயம் இவன் ஆஸ்திகனாக இருந்தாலும், ஆஷாடாபூதி இல்லை என்று வெளியே இருப்பவர்களும் நினைத்துக் கொள்ள வேண்டும் என்ற தன்னம்பிக்கையற்ற வாழ்க்கை! ஆக, இவன் தனக்காக வாழவில்லை; பிறருக்காக வாழ்கிறான். பிறருடைய விமரிசனத்துக்கு ஆட்படாமல், அவர்களுடைய பாராட்டுக்காக வாழ்வது என்பதுதான் அஞ்ஞானத்தின் வித்து.
பிறக்கும்போது எல்லா நற்குணப் பொக்கிஷங்களுடன்தான் பிறக்கிறோம்; ஆனால் அந்தக் குழந்தைத் தன்மை, அதாவது தனித்தன்மை மறைந்துவிட, பிறர் தோளில் தொற்றிக் கொள்கிறோம். நம்மால் நடக்க முடியும்தான்; ஆனாலும் சுமக்கப்பட்டுச் செல்வதில் சுகம் காண்கிறோம். அதாவது அடுத்தவர் எண்ணங்களை ஒட்டியே வாழ்கிறோம். ‘இல்லை, மாட்டேன்,' என்று சொல்ல வேண்டிய இடங்களில் ‘வந்து… சரிதான்…' என்று இழுக்கிறோம்.
‘நோ' என்று சொல்வதற்குத் தயக்கமாக இருக்கிறது. ஏன் இந்த ஸ்திரமின்மை? எதிராளி வருத்தப்படுவாரே என்ற இரக்க உணர்வா, அவர் கோபப்பட்டுவிடுவாரோ என்ற பயமா, அவரை ஏன் அனாவசியமாகப் பகைத்துக்கொள்வானேன் என்ற நட்பு இழக்க விரும்பாத அனுசரணையா? இதையெல்லாம்விட முக்கியமான காரணம், நாம் நாமாக, நம் உறுதியான, நேர்மையான எண்ணப்படி வாழத் தயங்குவதுதான்! அடுத்தவருக்காக வாழ்வதாகிய இழி உணர்வால்தான் பொறாமையும், பகையும், வக்கிர மோகமும் உருவாகின்றன. நம் மனசுக்குள் வெளிச்சம் இல்லை; ஆகவே இருள் சூழ்ந்து கொள்கிறது. நியாயமாகத் தெரிந்த கருத்தைப் பிறரிடம் தெரிவிக்க முடியாமல் நம் தேவைகளும், ஆசைகளும், பயங்களும், அவநம்பிக்கையும் நம்மைக் கட்டிப்போட்டு விடுகின்றன.
துக்கம் யாருக்கு வருகிறது? எதிர்பார்ப்பவர்களுக்குதான் வருகிறது. என் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்று சிந்திக்கும்போதே, விருப்பங்கள் மூட்டை, மூட்டையாக மனசில் வந்து உட்கார்ந்து கொண்டு பெரும் பாரத்தை உண்டாக்கி விடுகின்றன. சாப்பாடாவது ஓர் அளவுக்கு மேல் உள்ளே இறங்காது. ஆனால் ஆசை மட்டும், ஒன்று நிறைவேற இன்னொன்று, அது நிறைவேற வேறொன்று என்று ஓயாத கடல் அலையாக ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கிறது. இதெல்லாம் தன்னைத் தானே புரிந்து கொள்ளாத அஞ்ஞானத்தின் அவலம்தான். தன்னைத் தானே அறிந்து கொள்வதுதான் ஆத்ம ஞானம்.
இவ்வாறு அந்தகரணம் தூய்மையாக விளங்குபவன் மீது பரமாத்மாவின் தோற்றம் ஒளியாகப் படர்கிறது. அவனுடைய முகமே, உடலே பிரகாசிக்கிறது. ஞானவானின் கண்களில் கலக்கம் இருக்காது. அது வெறித் தவாறு இருப்பதாகத் தோன்றினாலும், அதில் உயிர்ப்பு இருக்கும்; பரமாத்மாவின் சாயல் தெரியும். ஏனென்றால் இவனுக்கு எல்லாம் பரமாத்மாவே. அதனால், அவன் தனக்குள்ளேயே அந்தப் பரம்பொருளைக் கண்டு விடுவதால், புறத் தேடல் அவனுக்கு அனாவசியமாகிறது. பரமாத்மாவை ஞானி பார்க்கும் இடமெல்லாம் மட்டுமல்ல, அவன் கண் மூடியிருந்தாலும், அவரை, அவனால் காண முடியும். உறக்கத்திலும் அவன் அவரோடே இருக்கிறான்.
ஆமாம், அவனுடைய சரீரம் உறங்கினாலும், ஆத்மா, பகவானுடனேயே லயித்து விடுகிறது. ‘ஆறு மாத உறக்கம், ஆறு மாத விழிப்பு என்ற சாபத்தில் வாழ்ந்திருந்த கும்பகர்ணன், ஆறு மாதங்கள் உறங்கியிருந்தாலும், அவனுடைய ஆன்மா மட்டும் தூங்கவேயில்லை. அதனால்தான் அவ்வாறு துயில் எழுந்தவுடன், ஒழுக்க சீலனான அவன், அண்ணன் ராவணனிடம், ‘சீதையை விடுவித்துவிட்டாயா?' என்று கேட்க முடிந்தது,‘ என்கிறார் ஆன்மிக சொற்பொழிவாளர் திருமதி டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள்.
விழித்துக்கொண்டே உறங்குவது சாதாரண மானுடரின் தன்மை; ஆனால் ஞானியோ உறக்கத்திலும் விழித்திருக்கிறான். அந்த விழிப்பில் அவன் பகவானின் திவ்ய தரிசனம் காண்கிறான். தன்னை மேலும் புனிதனாக்கிக் கொள்கிறான்.
தத்புத்தயஸ்ததாத் மானஸ்தந்நிஷ்டாஸ் தத்பராயணா
கச்சந்த்ய புனராவ்ருத்திம் ஞானநிர் தூதகல்மஷா (5:17)
‘‘பிரம்மத்திலேயே தன் புத்தியை லயித்திருப்பவன், தானே பிரம்மம் என்று உணர்பவன், அதிலேயே உறுதியாக நிலைத்திருப்பவன், அதையே தன் புகலிடமாகக் கொண்டவன், அத்தகைய ஞானத்தால் பாபங்கள் அற்றவனாகிவிடுகிறான். அதோடு அவன் ஜன்மமெடுக்கும் பிணியிலிருந்தும் விடுபட்டு பரகதி அடைகிறான்.''ஓர் ஒளி இருளைத் தேடிக் கொண்டு போக முடியுமா? போனால் அதற்கும் முன்பாக இருளும் எங்கோ போய் ஒளிந்து கொண்டு விடுகிறதே! அதுபோல, பிரம்ம ஞானத்தை அடைபவன், உள்ளும், புறமும், எங்கும் பிரம்மத்தையே காண்கிறான். தன்னையே பிரம்மமாக நினைத்துக்கொண்டிருப்பவனுக்கு வேறென்ன தோன்றும்? ஆகவே இவனே பிரம்ம ஞானியாகிறான். இவ்வாறு தானே பிரம்ம சொரூபமாகிவிடும்போது, பிறவி என்பதுதான் அவனுக்கு ஏது, எதற்கு?
‘யுக்தியினால் பெறப்படும் ஞானம் ஒருவகையானது என்பதையும், தியானத்தினால் வரும் ஞானம் வேறானது என்பதையும், ஈஸ்வர தரிசனத்தால் அதையும்விட முற்றிலும் மேலான ஞானம் உதயமாகிறது என்பதையும் தெரிந்து கொண்டிருக்கிறேன்,'
என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.
தத்ரூபம் என்கிறோம், சாட்சாத் என்கிறோம், பரப்ரம்மம் என்கிறோம். எல்லாம் அதுவே, அது ஒன்று மட்டுமே என்பதுதான். அந்த ஒன்றுடன் இணைந்துவிட்ட பிறகு, அதாவது தத்ரூபமாகிவிட்ட பிறகு, ஒருவனிடமிருந்து ‘நான்' போய் விடுகிறது. அதனாலேயே அவன் மீண்டும் பிறப்பெடுக்காமல், ‘நான்‘ என்பதை முற்றிலுமாகத் தொலைத்து விடுகிறான்.ஏனென்றால் நம் வாழ்க்கையின் எல்லா துக்கங்களும் ‘நான்’ ஆல் வருவதுதான். ‘நான்’ இல்லை என்றால் துக்கமே இல்லை என்ற நிலையை நாம் உணர்ந்திருக்கிறோமா? இல்லை.
‘நான்’, ‘எனது’, ‘எனக்கு’ என்பதெல்லாம்தான் உலகியல் வாழ்க்கையிலேயே நம்மை நரகத்தை அனுபவிக்க வைக்கிறது. ஆம், நான் பெருகப் பெருக, வியாபிக்க, வியாபிக்க, நரக வேதனைகளும் அதிகரிக்கின்றன. மிக மிக சாதாரண உதாரணம் ஒன்றைச் சொல்லலாம்: காது கேளாததன் முக்கியமான, அடிப்படைக் காரணமே, இவன் என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்ற மனப்பான்மைதான்!ஆகவே, எங்கேயும் எல்லாமும் பரம்பொருளே என்ற வெளிச்சம் தோன்றுகிறதா, அங்கே ‘நான்' என்ற இருட்டு மறைந்து விடுகிறது.
திருநாவுக்கரசர், ஆறாம் திருமுறையில்,
‘‘நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலையில்லோம்
எமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம் இன்பமே எந்நாளுந் துன்பமில்லை
தாமார்க்குங் குடியல்லாத்தன்மை யான சங்கரனர் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகினோமே’’
- என்று நெக்குருகுகிறார்.
என் இறைவனைத் தவிர வேறு யாருக்கு நாம் அடிமை செய்வது? அவனைப் புகலிடம் கொண்டால் இறப்புக்கும் அஞ்ச வேண்டியதில்லையே! அதாவது இறப்பு - பிறப்பு என்ற சுழலில் சிக்க வேண்டியதில்லையே! அதனால் நரகம் என்ற இடர் தீண்டாதே! சங்கரன் என்ற பரப்பிரம்மத்தைச் சரணடைந்து விட்ட பிறகு அஞ்ஞானப் பிணியும் சேரத்துணியுமா?
பரமாத்மாவிடம் ஒன்றிவிடும் பக்குவம் கிட்டிய திருநாவுக்கரசரை, ‘அப்பர்’ (தந்தை) என்று அழைத்துப் போற்றினார் திருஞானசம்பந்தர். இதில் வினோதம் என்னவென்றால், முதியவரான நாவுக்கரசரின் அதே ஆத்ம பக்குவம், பதினாறே வயதான சம்பந்தருக்கும் ஏற்பட்டதுதான். அவருக்கு மட்டுமா அவருடைய இளம் மனைவி மற்றும் அடியார்கள் என்று அனைவருக்குமே அந்த உயர்நிலை கிட்டியது.
அதனால்தான்,
‘‘காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே’’
- என்று மனம் உருகிப் பாடினார். ஆச்சாள்புரம் தலத்தில் உள்ள சிவலோக தியாகேசர் திருக்கோவிலில் இவ்வாறு பாடிய அவர் உடனே ஒளிச் சுடரானார். ஆருடைய மனைவி, அடியவர்கள் அனைவருமே அவ்வாறு சுடர்களாக மாறி, ஆதி அந்தமில்லாத ஜோதிஸ்வரூபனான ஈசனுடன் கலந்தார்கள். இவ்வாறு ஜோதியுள் கலந்த சுடராகும் அனுபவம்தான், அதற்கான மனப்பக்குவம்தான் ஆத்ம ஞானம்.
சம்பந்தரின் அனுபவம் உணர்த்துவது என்னவென்றால், எந்தக் கணத்தில் ஒருவன் தன்னை இழக்கிறானோ, அந்தக் கணத்திலிருந்து வாழ்க்கை ஓர் உற்சவமாகிவிடுகிறது. அது ஒரு ஆனந்தமான நிருத்தியம். அதாவது ஆனந்த உன்மத்தம். அதுவே சமாதிநிலை. அதற்கு முன்னால் வாழ்க்கைப் பாதையில் முட்கள் நிறைந்திருந்தன. அது வருத்தங்களாலும், வேதனைகளாலும் சூழ்ந்திருந்தது. ஏக்கத்தில் அது அமிழ்ந்திருந்தது, அதனாலே துர்வாசனை கொண்டிருந்தது.
ஆனால் பரமாத்மாவுடன் ஒன்றிடும் பக்குவம் பெற்றிட்டால் அதுவே பரமானந்தமாகி விடுகிறது. இதற்குப் பிறகு முட்கள் இல்லை, வருத்தங்கள், வேதனைகள் இல்லை, ஏக்கம் இல்லை, துர்வாசனையும் இல்லை. இதைத்தான் கிருஷ்ணரும் சொல்கிறார்: ‘‘அந்தக்கரணம் சுத்தமாவதால் ஆத்மா விழிப்படைந்துவிடுகிறது. அதனாலேயே பரமாத்மாவுடன் தத்ரூபமாக ஒன்றிவிட்டால், தனது பிரகாசத்தை பரம பிரகாசத்தில் இழந்து விட்டால், பிறகு ஒருவரும் திரும்புவதில்லை.’’
(கீதை இசைக்கும்)
பிரபு சங்கர்


