Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஸ்ரீசக்ரம் அமைந்த திருத்தலங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்ரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன. லலிதா ஸஹஸ்ரநாமத்தை இயற்றிய வசின்யாதி வாக்தேவதைகள் எண்மரும் இதில் எழுந்தருளியுள்ளனர்.

பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புனுகு, சந்தனம் சாத்தப்படுகிறது.

கும்பகோணம் மற்றும் மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன் உள்ள மகாமேரு, சாந்தானந்த சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.

ஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவியின் முன் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனின் உக்கிரம், ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரத்தால் தணிக்கப்பட்டது.

திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரி தேவியின் ஒரு காதில் ஸ்ரீசக்ர தாடங்கத்தையும், ஒரு காதில் சிவசக்ர தாடங்கத்தையும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

கொல்லூர் மூகாம்பிகையின் மகிமைக்கு காரணம் தேவியின் முன் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீசக்ரமே.

சென்னை காளிகாம்பாள் ஆலய மேருவில் அந்தந்த மாத்ருகா அட்சரங்கள் அந்தந்த ஸ்தானத்தில் செதுக்கப்பட்டுள்ளன.

சென்னை திருவல்லிக்கேணி அனுமந்தலாலா தெருவில் உள்ள காமகலா காமேஸ்வரி சந்நதியிலும் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சென்னை நங்கநல்லூரில் திதிநித்யா தேவிகளின் சக்கரங்களும், விக்கிரகங்களும் இரு புறங்களிலும் திகழ 16 படிகளின் மேல் மகாமேருவுடன் கோலோச்சுகிறாள் ராஜராஜேஸ்வரி.

நேபாளம் குஹ்யேஸ்வரி ஆலயத்திலுள்ள தாமரை மொட்டின் நடுவே அமைந்துள்ள ஸ்ரீசக்ரத்தை அனைவரும் தொட்டு பூஜிக்கலாம்; அதில் பொங்கிவரும் தீர்த்தத்தை தலையில் தெளித்துகொண்டு பிரசாதமாகவும் உட்கொள்ளலாம்.

திருப்போரூர் முருகன் ஆலய பிராகாரத்தில் சிதம்பர சுவாமிகள் நிறுவிய சக்கரத்தை தனி சந்நதியில் தரிசிக்கலாம்.

தாம்பரம், மாடம்பாக்கத்திலுள்ள தேனுபுரீஸ்வரர் ஆலய தேனுகாம்பாள் சந்நதியில் ஸ்ரீசக்ரம் உள்ளது.

தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூர் பாதையிலுள்ள பண்ருட்டிக்கண்டிகை தலத்தில் பூரணமகாமேருவிற்கு இருபுறங்களிலும், வாராஹி, மாதங்கி மற்றும் திதி நித்யா தேவியர் பதினைந்து பேரும் யந்திர வடிவாக அருள்கிறார்கள்.

திருச்சி மலைக்கோட்டையில் சுகந்த குந்தளாம்பாளின் சந்நதி ஸ்ரீசக்ர வடிவில் அமைந்திருக்கிறது.

கேரளாவில் ஓணத்தக்குளம் அருகே உள்ள செட்டிக்குளத்தில் அம்பிகை சந்நதியில் ஸ்ரீசக்ரம் பொருத்தப்பட்டிருக்கிறது.

காசி ஹனுமான் காட்டில் முத்துஸ்வாமி தீட்சிதர் ஆராதனை செய்த சிவலிங்கத்தின் உச்சியில் ஸ்ரீசக்ரம் பொறிக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடி ராஜகோபாலன், தேவியின் அம்சமான கோபாலஸுந்தரியாக விளங்குகிறார். அதனால் அவர் திருவடிகளில் ஸ்ரீசக்ரம் வைத்து வழிபடப்படுகிறது.

திருவிடைமருதூரில் மூகாம்பிகை முன் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், ரமணாஸ்ரமத்தில் ஸ்ரீசக்ரத்திற்குத் தனி சந்நதி உள்ளது.

புன்னைநல்லூர் மாரியம்மனின் முன் சக்கரப் பிரதிஷ்டை செய்தவர், மகான் சதாசிவபிரமேந்திரர்.

தொகுப்பு: எஸ்.கிருஷ்ணஜா