Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஸ்ரீ அகஸ்தீஸ்வரமுடைய நாயனார் கோயில்!

ராஜகோபுர தரிசனம்!

வெள்ளனூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது அகஸ்தீஸ்வரமுடைய நாயனார் கோயில். கி.பி 989ம் ஆண்டு, முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் இருந்தே இக்கோயில் உள்ளது. முன்பு இந்த ஊரை தென் சிறுவாயில் நாட்டு வெள்ளனூர் என்று அழைத்து வந்ததாக ேகாயிலின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பல நூற்றாண்டுகளாக தென்திருவாசல் நாட்டின் மைய வழிபாட்டுத் தலமாக இக்கோயில் விளங்கியது.

கோயிலின் அர்த்தமண்டபம் கி.பி. 1070ம் ஆண்டு, வீர ராஜேந்திர சோழனின் ஏழாம் ஆட்சியாண்டில் கட்டப்பட்டுள்ளது. பிறகு மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சித்திரை திருவிழா பத்து நாள் கொண்டாடப்பட்டுள்ளது. அவரின் காலத்தில்தான் கோயிலில் பூஜைகள் மற்றும் திருத்தப் பணிகளுக்காக நிலங்கள் வழங்கப்பட்டதாக பதிவு உள்ளது. இந்தக் கோயில் சிறந்த சிற்பங்களை கொண்டுள்ளது.

ஆலயத்தில் இரண்டு சிவன் கோயில்கள் உள்ளன. அதில் ஒன்றில் மட்டுமே தற்போது வழிபாடு நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் திருவிழா நடைபெறும். ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயிலின் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் மற்றும் கோபுரம் ஆகியவை 11 மற்றும் 12ம் நூற்றாண்டு சோழர் கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்டவை.

ஜ்யேஷ்டா, சப்தமாத்ருக்கள், சுப்ரமணியர், பைரவர் போன்ற சோழர் கால சிற்பங்களும், அழகிய வெண்கல உருவங்களும் உள்ளன.இங்குள்ள இரண்டாவது சிவன் கோயில் இடிந்த நிலையில் உள்ளது. கைலாசநாதர் என்று அழைக்கப்படும் அந்தக் கோயில் பாண்டியரின் இறுதிக் காலம் மற்றும் விஜயநகர ஆரம்ப கால கட்டிட அமைப்பினை காட்டுகிறது. ஸ்ரீ அகஸ்தீஸ்வரமுடைய நாயனார் கோயிலின் கோபுரம், இக்கோயிலின் கட்டிட வரலாற்றை வெளிப்படுத்தும் முக்கிய கூறாகும். 11 மற்றும் 12ம் நூற்றாண்டு சோழர் கால கட்டிடக்கலையின் அடிப்படை அம்சங்களை தாங்கி, பின்னர் பாண்டியர் மற்றும் ஆரம்ப விஜயநகர காலங்களில் ஏற்பட்ட மாற்றங்களின் தாக்கத்தையும் கோபுரங்களில் காணலாம்.

கோபுரத்தின் அடிப்படை பகுதி தாமரை வடிவ அமைப்பில் உறுதியான அடித்தளத்துடன் காணப்படுகிறது. அதற்கு மேலாக உயர்ந்து செல்லும் பகுதிகளில், சோழர் காலத்துக்கே உரிய எளிமையான வடிவமைப்பினை காணலாம். கோபுர சுவர்களில் முன்வெளிப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட குடைகள் பஞ்சர வடிவ அலங்காரங்களுடன் காணப்படுகின்றன. இந்தக் குடைகளின் இருபுறங்களிலும் வட்ட வடிவ தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சில பகுதிகளில் பலகோண மற்றும் எட்டுக்கோண தூண்கள் செங்குத்து அலை அலங்காரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கோபுர அலங்காரங்களில் கும்ப பஞ்சரம், புஷ்பபொடிகை கருக்கள் மற்றும் பத்மம் வடிவங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவை சோழர் காலத்தின் நுணுக்கத்தையும் பாண்டியர் காலத்தின் அழகிய அலங்கார பாணியையும் ஒருங்கிணைக்கின்றன. மேல் பகுதிகளில் காணப்படும் பலகைகள் மெல்லிய சதுர வடிவ அமைப்பில் இருப்பது பின்னர் கால கட்டிட வளர்ச்சியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் இந்தக் கோபுரம் ஒரே காலத்தில் கட்டப்பட்டதாக இல்லாமல் சோழர் அடிப்படையில் தொடங்கி பாண்டியர் வழியாக ஆரம்ப விஜயநகர கால கட்டிட மாற்றங்களையும் தாங்கிய பரிணாம வடிவமாக திகழ்கிறது.இதனால் கோபுரம் வெறும் நுழைவாயிலாக மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல அரசகுடிகளின் கட்டிடக்கலை மாற்றங்களை ஒரே அமைப்பில் காட்டும் வரலாற்றுச் சான்றாகவும் விளங்குகிறது.

தொகுப்பு: திலகவதி