ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 127 (பகவத்கீதை உரை)
தபஸ்விப்யோதிகோ யோகீ ஞானிப்யோபி மதோதிக
காமிப்யஸ் சாதிகோ யோகீ தஸ்மாத்யோகீ பவார்ஜுன (6:46)
‘‘தவசிகளைவிட யோகி மேலானவன். இவன் ஞானவான்களை விடவும் உயர்ந்தவன். கர்மங்களை சிரத்தையாக இயற்றுபவனையும்விட சிறந்தவன். ஆகவே அர்ஜுனா, நீ யோகியாவாயாக. ‘‘யோகி என்பவன் நிராசையிலேயே நிலைத்திருப்பவன். அதனாலேயே இவனுக்கு எந்த விளைவாலும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதே இல்லை.
வெறும் கல்வி, சாஸ்திர ஞானம் படைத்தவனைவிட, அவற்றில் குறிப்பிட்டிருப்பதுபோல யோகம் பயில்பவன் சிறந்தவனாகிறான். பொதுவாகவே காமிய தபஸ் மற்றும் காமிய கர்மத்தை இயற்றுபவர்களுக்கு மறுமையில் மோட்சம், சொர்க்க வாழ்வு என்ற எதிர்பார்ப்பு இருக்கும். தவமியற்றுபவர் ஏதேனும் வரம் எதிர்பார்த்தே செய்கிறார்; அதேபோல யாகம் வளர்ப்பவர் பஞ்சம் நீங்க மழை பொழிய வேண்டும் என்பது போன்ற பலனை எதிர்பார்த்துதான் அவ்வாறு செய்கிறார்.
ஆனால், யோகிக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. அதனால்தான் இவனால் உலக வாழ்க்கையில் சஞ்சரித்துக் கொண்டே அதே வாழ்க்கை அளிக்கும் இன்ப, துன்பங்களைச் சமமாக பாவிக்கும் பக்குவத்தையும் அடைய முடிகிறது. இந்த யோக பிரஷ்டனுக்கு பூலோக வாழ்க்கையும், அடுத்து சொர்க்க வாழ்க்கையும் தாமாக வந்தமைகின்றன. காரணம், அவனுடைய நிராசையே. ஆசையற்ற மனசுக்கு இயல்பாகவே பேராற்றல் ஏற்படுவது இயற்கையே.
ராஜகுமாரனே ஆனாலும், அவனும் அரச பதவியில் இச்சை கொள்ளாதவனாக இருப்பானானால், அவனே யோகி. இதை நாம் ஸ்ரீ ராமன் என்ற புண்ணிய புருஷனின் அவதாரத்தின் மூலம் அறிய முடிகிறது. கம்ப ராமாயணத்தில், சுந்தர காண்டம், காட்சிப் படலம் அத்தியாயத்தில் ராமனின் இந்த குணத்தை விவரிக்கும் பாடல் ஒன்று இடம் பெற்றிருக்கிறது. ராவணனால் சிறைப்பிடிக்கப்பட்ட சீதை, அசோகவனத்தில் ராமனை நினைத்து ஏங்குகிறாள். அவனுடைய சீரிய குணங்களை எண்ணி எண்ணி மாய்ந்து போகிறாள். அவற்றில் ஒன்றாக கம்பர் வர்ணிக்கிறார்:
மெய்த் திருப்பதம் மேவு என்ற போதினும்
இத் திருத் துறந்து ஏகு என்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்
‘‘நாளை உனக்கு முடிசூட்டு விழா, என் வாரிசாக நீ அரியணையில் அமரப் போகிறாய், இந்த பாராளும் பெரும் பதவியை ஏற்கப் போகிறாய்,‘‘ என்று தசரதன் உரைத்தபோது முகத்தில் எந்த ஆரவார மகிழ்ச்சிச் சலனத்தையும் காட்டாமல் மென்முறுவலோடு தலைவணங்கி தந்தையாரின் சொற்களை ஏற்றான் ராமன். ஆனால், அன்றிரவே, சிற்றன்னை கைகேயி அவனை அழைத்து, ‘‘இக்கணமே நீ அரச வாழ்வைத் துறந்து கானகம் செல்; பதினான்கு ஆண்டுகளுக்குத் திரும்ப வராதே,‘‘ என்று கடுமையாக உரைத்தபோதும், முகத்தில் எந்தக் கோபச் சலனத்தையும் காட்டாமல் புன்னகையுடன் இதையும் ஏற்றான் அவன்.
‘இந்த இரு சம்பவங்களிலும் அவனுடைய முகம் சித்திரத்துத் தாமரை போல இருந்ததே‘ என்று எண்ணி எண்ணி மருகுகிறாள் சீதை. தீட்டப்பட்ட ஓவியம் நிரந்தரமானது. மாறாதது, மாற்ற முடியாதது. அந்தச் சித்திரத் தாமரையின் பொலிவு எப்படி நிரந்தரமோ, அதேபோல ராமனின் வதனமும் மலர்ச்சியோ, வாட்டமோ காணாமல் இருந்ததே என்று மாய்ந்து போகிறாள் சீதை.
இந்த இரு சந்தர்ப்பங்களில் ராமன், ஸ்தித ப்ரக்ஞனாகக் காட்சியளிக்கிறான். இதுதான் ஒரு யோகியின் உண்மையான நிலை. இதை மனங்கொள்ள வேண்டும் என்று அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார் கிருஷ்ணன்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இவ்வாறு விளக்குகிறார்: ‘‘சாஸ்திர ஞானத்தால் மட்டும் என்ன பலன்? பண்டிதர்களுக்கு கிரந்தங்களிலும், ஸ்லோகங்களிலும் நல்ல பரிச்சயம் இருக்கலாம். ஆனால், அவற்றைத் திருப்பித் திருப்பிச் சொல்வதில் பிரயோஜனமென்ன? கிரந்தங்களில் சொல்லியவற்றையெல்லாம் அனுபவத்துக்குக் கொண்டு வரவேண்டும். ஒருவனுக்கு உலகப் பற்று உள்ளவரை, அதாவது காமமும், காசாசையும் இருக்கும் வரையில், கேவலம் படிப்பு மட்டும் ஞானத்தையும், அதன் தொடர்பான மோட்சத்தையும் தந்துவிடுமா என்ன? லௌகீக வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் ஒருவன், ஒரு ஞானியைப் போல மேலான அறிவையும், புத்திசாலித்தனத்தையும் பெற்றிருக்கலாம்.
ஆனால், அவன் ஒரு யோகியைப் போல சாதனத்தில் சிரமப்படுபவனாக இருப்பான். அல்லது சந்நியாசியைப் போல எளிய வாழ்க்கையை வாழக் கூடியவனாக இருப்பான். என்றாலும், அவனுடைய முயற்சிகள் எல்லாம் பயனற்றவையே. ஏனெனில் அவனுடைய சக்திகள் வேறு மார்க்கத்தில் செலுத்தப்படுகின்றன. மேற்கூறியவையெல்லாம் அவன் ஈஸ்வரனுக்காக அல்லாமல், கௌரவம், அந்தஸ்து, செல்வம் இவற்றைப் பெறுவதற்காகவே செய்கிறான்.
‘‘யோகி தனித்துவமானவன் என்பதை வலியுறுத்த அவனை தபஸ்வியுடனும் ஒப்பிட வேண்டாம் என்கிறார் கிருஷ்ணன். லௌகீக வாழ்க்கையில் மனம் சிதறாமல் தன்னால் தவம் இயற்ற முடியாது என்ற பலவீனத்தால்தானே, ஒருவன் அமைதியான காட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! ஆனால் அந்த அமைதியும், இயற்கையும் அதன் மணமும், பறவைகளின் கூவலும், தென்றலின் வருடலும் நீடித்து நிலைபெற்றிருந்தால்தான் அவனாலும் தன் தவத்தைத் தொடர முடியும்! ஏதேனும் மாற்றம் ஏற்படுமானால், பறவையின் இன்குரலுக்கு மாற்றாக விலங்கின் வன்குரல் கேட்குமானால் அவனுடைய தவம் எளிதாகக் கலைந்து விடுகிறதே! அதாவது மாற்றமே இல்லாதமைதியான சுற்றுச் சூழலில்தான் அவனால் மனதை தவத்தில் ஈடுபடுத்த முடிகிறது. அதாவது மனச்சலனம் என்பது, தபஸ்வியால் தவிர்க்க முடியாதது.
நம் புராணங்களிலேயே உதாரணங்கள் பார்க்கலாம். விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்ற தவசீலர்களால் தம் கோபத்தைத் தவிர்க்கவே முடியவில்லையே! ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து விஸ்வாமித்திரர் பெற்ற அரிய வரத்தை, திடீர்த் தீப்பொறியாகக் கிளம்பிய கோபம் தீக்கிரையாக்கி விட்டதே! தன் தவ வலிமையால், வரங்கள் பெற்று அதனால் தான் நற்கதி அடைய வேண்டும் என்ற சுயநலம் இத்தகைய தபஸ்விகளிடம் நிறைந்திருந்தது.
தன் தவ ஆற்றலால், தன் மீது எச்சம் உமிழ்ந்த கொக்கை வெறும் பார்வையாலேயே சுட்டெரித்துச் சாம்பலாக்கிட முடிந்தது கொங்கணர் என்ற சித்தரால். ஆனால் அவருடைய கோபத்தால் ஒரு பதிவிரதையின் பக்கம்கூடப் போக முடியவில்லையே! தன்னை அவமதித்த அவளை, தீக் கண்களால் சுட்டெரிக்க அவர் முயன்றபோது, அவள்தான் எத்தனை அலட்சியமாக, ‘என்னை என்ன, அந்த கொக்கு என்று நினைத்தாயா, கொங்கணவா?‘ என்று கேட்டு அவரை நாணமுறச் செய்தாளல்லவா?
என்ன காரணம்? தபஸ்விக்கு தான் பெற்றிருக்கும் ஆற்றல் மீதான கர்வம், அதனாலேயே பிறரைத் துச்சமாக மதிக்கும் ஆணவம் என்று அமைதியுறாத மனத்தின் அடையாளங்களுடன் அவர்கள் திரிந்ததுதான். ஆனால் ஒரு யோகியின் மனநிலை கொண்ட பத்தினியால் அந்த தபஸ்வியையும் வெற்றி கொள்ள முடியும் என்பதை இந்தச் சம்பவம் நிரூபிக்கிறது. ‘ஆகவே தபஸ்வியையும் விட உயர்ந்தவன் யோகி. அந்த நிலையை அடைய இடையறாத பயிற்சியை மேற்கொள். ஏனென்றால், யோகம் என்பது உள்ளிடை மாற்றம்' என்று கிருஷ்ணன் அறிவுறுத்துகிறார்.
உலகியலில் போகத்தை அனுபவிப்பவனையும் பார்க்கிறோம்; அந்த போகத்தைத் தியாகம் செய்பவனையும் பார்க்கிறோம். கல்யாண பந்தியில் இலையில் நிறைய உணவுப் பொருட்கள் பரிமாறப் பட்டாலும், அவை ஒன்றுகூட மிச்சம் வைக்காமல் உண்கிறான் போகி. அதேசமயம், அதே பந்தியில், தனக்குப் பரிமாறப்படுவனவற்றை ‘வேண்டாம், வேண்டாம்' என்று மறுத்து ஏற்றுக் கொள்ளாத தியாகியும் இருக்கிறான். ஆனால் இருவருமே பிறர் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு செய்கிறார்கள் என்றே சொல்லலாம். தன்னைப் பார்த்து, ‘கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல், வேஸ்ட் பண்ணாமல் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டானே!' என்ற பாராட்டை போகி எதிர்பார்க்கிறான்; அதேபோல, ‘அட, மிகக் குறைவாக மட்டுமே ஏற்றுக் கொண்டு சாப்பிடுகிறாரே, நிறைய வாங்கிப் போட்டுக் கொண்டு உணவை வீணாக்காமல் இருக்கிறாரே,' என்று தியாகியும் எதிர்பார்க்கிறான்!
ஆனால், யோகியோ, ருசியை, ரசனையை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. தேவையான அளவுக்கு மட்டும் எடுத்துக் கொள்கிறான்; அதையும், எப்போது தேவையோ அப்போது மட்டும் ஏற்கிறான். ஆனால் உடனே அந்த ருசியை தன்னை விட்டு நீக்கி விடுகிறான். பந்திக்குப் போகும் ஆர்வத்தையோ, பந்திக்குப் பிறகான ருசி மயக்கதையோ அவன் கொள்வதில்லை.
இத்தகைய யோகிகள் வெளிப்படையானவர்களாக இல்லாததால், அவர்களைச் சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள முடியாதுதான். ஆகவே இத்தகைய யோகி நிலையை அர்ஜுனன் அடைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் கிருஷ்ணன்.
போர் என்று வந்துவிட்டால், எதிரிகளை அழிப்பதுதான் ஒரு க்ஷத்ரியனின் தர்மம். அதற்குப் பிறகு அந்த வெற்றியில் மமதை கொள்ளாமல், அந்த வெறியில் தொடர்ந்து அப்பாவிகளை இம்சிக்காமல் இருக்க வேண்டியதுதான் ஒரு யோகியின் பண்பு. ‘அந்த யோகியாக மாற நீ பயிற்சி மேற்கொள்,' என்கிறார் கிருஷ்ணன்.
யோகினாமபி ஸர்வேஷாம் மத்கதேனாந்தராத்மனா
ச்ரத்தாவான் பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத (6:47)
‘‘யார் சிரத்தையுடன் சித்தத்தை என்பால் வைத்து என்னப் பூஜிக்கிறானோ அவன் யோகிகள் எல்லாருள்ளும் மிக மேலானவன்.''பகவான் மீது ஆழ்ந்த சிரத்தை கொண்டு யோகம் இயற்றுபவர்களால் எளிதில் யோக நிலையை அடைய முடியும். ஆனால் புவியிலேயே பற்றறுத்து வாழ்ந்து, யோகப் பயிற்சி மேற்கொள்பவர்களால் அந்த நிலையை அடைய முடியாதா? முடியும். ஆனால் இதற்கு அதிக காலம் செல்லும். அடுத்தடுத்த பிறவிகள் வேண்டியிருக்கும். ஆனால் எப்போது ஒருவன் முழு சித்தத்தையுமே பகவானிடம் சமர்ப்பித்து விடுகிறானோ அவனுக்கு யோக நிலை விரைவில் சித்திக்கிறது.
அப்பா பையனுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கிறார். பையனுக்குத் தோதான குறைந்த உயர சைக்கிள். அவன் சைக்கிளில் உட்கார்ந்து கொள்ள, அப்பா சீட்டின் அடியைக் கையால் பிடித்துக் கொண்டு மெல்ல அவனை பெடல் இயக்கச் சொல்கிறார். இரு கைகளாலும் ஹாண்டில்பாரைப் பிடித்திருக்கும் பையனுக்கு பாலன்ஸ் தடுமாறுகிறது. அப்பா சீட்டைப் பிடித்த கையாலேயே அவனை நடுநிலை நிறுத்துகிறார். ஆனால் அப்பா அவ்வாறு தனக்கு கூடவே ஆதரவாக வருவதை அவன் கௌரவக் குறைச்சலாக நினைக்கிறான் பையன். சைக்கிளை ஓட்டிக் கொண்டே அவருடைய கையை எடுத்து விடுமாறு சொல்கிறான். ஆனால் அவனுக்குப் பயிற்சி போதாது என்று உணரும் அப்பா, தொடர்ந்து பிடித்துக் கொண்டே வருகிறார். அவனுக்கு எரிச்சல் கூடுகிறது. அன்றைக்கு விட்டு விடுகிறான். மறுநாள் அப்பா உதவியின்றி, தானே சைக்கிளை எடுத்து ஓட்டுகிறான்.
இப்போது அவனால் சைக்கிளை ஓட்டக் கற்றுக் கொள்ள முடியாதா? முடியும். ஆனால் நாளாகலாம், பலமுறை விழுந்து, விழுந்து எழுந்திருக்க வேண்டியிருக்கலாம். தான் விழுவதை யாராவது பார்க்கிறார்களா என்று வெட்கத்துடன் கவனிக்கலாம். அப்பாவின் ஆதரவுடன் கற்பதற்கு அவனுக்குக் ஓரிரு நாட்கள்தான் ஆகும் என்ற நிலை மாறி, தன்னிச்சையாகக் கற்பதால் கூடுதல் நாட்கள்கூட ஆகலாம் என்றாகிவிடும். இவ்வாறு அப்பாவிடம் பையன் காட்டும் சிரத்தை போலதான் பகவானிடத்திலும் ஒரு யோகி காட்டும் சிரத்தையும்.
இத்தகைய சிரத்தையை சரணாகதி என்றும் சொல்லலாம். இதுவே பரிபூரண யோகத்தை அளிக்கவல்லது.(பகவத் கீதையின் ‘தியான யோகம்' என்ற ஆறாவது அத்தியாயம் இத்துடன் நிறைவு பெறுகிறது. அடுத்த இதழிலிருந்து, ‘ஞான விஞ்ஞான யோகம்' என்ற ஏழாம் அத்தியாயம் ஆரம்பிக்கிறது)
(கீதை இசைக்கும்)
பிரபு சங்கர்


