Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பெருமாள் கோயிலில் நம் சிரசில் சடாரி சாற்றுவதன் மகிமைகள் என்னென்ன?

பகுதி 1

பெருமாள் கோவிலுக்குச் சென்று அந்த நீலமேக சியாமளனைச் சேவித்த பிறகு, சட்டென்று விலகி வந்துவிட மனம் வராது. அர்ச்சகர் ஒரு வெள்ளி, தங்கம் அல்லது செப்புக் கவசத்தை நம் தலையில் வைப்பார். அதன் பெயர் ‘சடாரி’. அது வெறும் உலோகத்தால் ஆன பொருள் அல்ல; அது எம்பெருமானின் பாதுகைகள். அதன் உச்சியில் இருப்பது அந்தத் திருவடி

களைத் தாங்கும் பாதுகைகளின் திருவுருவம். நம் ஆணவமும், அகங்காரமும் மண்டியிட வேண்டிய இடம் அதுதான்.

அந்தச் சடாரி நம் சிரசில் படும்போது, நம் வினைகள் யாவும் அந்தத் திருவடிகளில் சரணடைவதாக ஒரு ஐதீகம். அந்த ஒரு விநாடி ஸ்பரிசத்தில், பிரபஞ்சமே நம் தலைமேல் இறங்கி வந்து அமர்வது போன்ற ஒரு நிசப்தத்தை உணர முடியும்.“அது ஏன் தலையில் வைக்கப்பட வேண்டும்?” என்கிற கேள்விக்கு பின்னால் ஒரு உணர்வுப்பூர்வமான வரலாறு இருக்கிறது.

சடாரியின் வடிவம் ஒரு ரகசியத்தை உள்ளடக்கியது. அதன் ஒட்டுமொத்த வடிவம் ஒரு கவிழ்ந்த நிலையில் இருக்கும் தாமரை மலரைப் போன்றது. கவிழ்ந்த நிலையில் இருக்கும் அந்தத் தாமரை வடிவம், எம்பெருமானின் திருவடிகள் ஒருபோதும் வாடாதவை என்பதையும், எப்போதும் கருணை பொழியும் அந்த மலர்கள் அடியவர்களின் தலைமேல் தன் அருளைத் தேனாகப் பொழிவதையுமே குறிக்கிறது. பக்தியின் மொழியில் எம்பெருமானின் திருவடிகளும் அதைத் தாங்கும் பாதுகையும் வேறல்ல. இரண்டுமே அடியவன் தஞ்சம் புகும் ஒரே சரணாலயமாகவே கொள்ளப்படுகிறது. அதை நாம் சிரசில் ஏந்தும்போது அந்த மலரின் மணம் நம் புத்தியைச் சுத்தப்படுத்துகிறது என்பது ஐதீகம்.

சடாரி என்ற பெயருக்குப் பின்னால் ஒரு மாபெரும் சரித்திரமும், தத்துவமும் ஒளிந்து கொண்டிருக்கிறது. பொதுவாக ஒரு குழந்தை பிறந்தவுடன் ‘சடம்’ என்கிற மாயக் காற்று அதன் மீது படும்; அதுவரை இருந்த ஞானத்தை அழித்து அக்குழந்தையை அழச் செய்யும். ஆனால், பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார், பிறக்கும்போதே தன்னைச் சூழ்ந்த அந்த அஞ்ஞான வாயுவைச் சினந்து வென்றவர். அதனால் அவருக்கு ‘சடகோபன்’ (சடத்தை வென்றவன்) என்று பெயர்.

நம்மாழ்வாரின் போதனைகள் உலகெங்கும் உள்ள அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும், அனைவரும் முக்தி அடைய வழி காட்ட வேண்டும் என்கிற பேரருளின் அடையாளமே சடாரி. நம்மாழ்வார் தனது திருவாய்மொழியில், எம்பெருமானின் திருவடிகளை உறுதியாகப் பற்றிக்கொண்டால் நம் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்று போதிக்கிறார். இதுவே மோட்சத்தை அடையும் உலகளாவிய வழி. அந்தத் தத்துவத்தின் உருவமாகவே நம்மாழ்வார் எல்லா வைணவத் திருத்தலங்களிலும் ‘ஸ்ரீ சடாரி’யாக வீற்றிருக்கிறார்.

இந்தத் திருவடி வழிபாட்டிற்கு ஒரு ஆதி வரலாறு உண்டு. ராமாயணத்தில், தன் அண்ணன் ராமனின் அரியணையை ஏற்க மறுத்த பரதன், ராமனின் பாதுகைகளை வாங்கி வந்து சிம்மாசனத்தில் வைத்து பதினான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். ”இறைவனை விடவும் அவனது பாதுகைகள் சக்தி வாய்ந்தவை” என்கிற தத்துவத்திற்கு வித்திட்டவன் பரதன். அந்தப் பாதுகைகளின் வடிவமே இன்று நாம் காணும் சடாரி என்ற பார்வையும் உள்ளது.

கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த ஆழ்வார்களின் காலத்திலேயே இந்தத் திருவடிப் பெருமை வேரூன்றிவிட்டாலும், பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் தான் இது ஒரு முறையான ஆலயச் சடங்காகப் பரிணமித்தது. பாஞ்சராத்ர மற்றும் வைகானச ஆகம விதிகளின்படி, இது வெறும் வழக்கமாக இல்லாமல் ஒரு வழிபாட்டு முறையாகவே அங்கீகரிக்கப்பட்டது.

சடாரி நம் தலையில் படும்போது, நம்மாழ்வாரின் அந்த தெய்வீக ஞானம் நம்முள் பாய்ந்து, நம் அஞ்ஞானத்தை அழிப்பதாக ஐதீகம்.ஸ்ரீ வைஷ்ணவ தத்துவம் என்பது சரணாகதி எனும் ஒற்றைச் சொல்லில் அடக்கம். இறைவனுக்கும் சாதாரண ஆத்மாவிற்கும் இடையில் ஒரு மகத்தான பாலமாகத் திகழ்பவர் ஆச்சார்யன். சடாரியை வெறும் உலோகமாகக் கருதாமல் ஆழ்வாரின் திருமேனியாகப் பாவிப்பதன் ரகசியமும் இதுதான். அதன் உச்சியில் பதிந்திருக்கும் அந்த இரு திருவடிகள் எம்பெருமானுடையவை.

நம்மாழ்வார் இடைவிடாது தன் சிரசில் அந்தப் பாதங்களைத் தாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதன் குறியீடு அது. நாம் தலையைத் தாழ்த்தி சடாரியை ஏற்றுக்கொள்ளும் அந்த ஒரு நொடியில், ஆச்சார்யன் மூலமாக அந்தப் பரம்பொருளின் திருவடி நிழலை அடைகிறோம். இது வெறும் சடங்கல்ல. நம் தலைக்கனத்தை இறக்கிவைத்துவிட்டு, ஆச்சார்யனின் பரிந்துரையோடு இறைவனிடம் நம்மை ஒப்படைக்கும் உன்னதத் தருணம்.சடாரி என்பது ‘நித்யசூரி’களுக்குச் சமமானது. பரமபதத்தில் எப்போதும் பெருமாளுடனேயே இருக்கும் ஆதிசேஷன், கருடன் போன்ற நித்யர்களுக்கு இணையானது சடாரி. எம்பெருமானின் திருமேனிக்குச் சமமானது என்பதால்தான், பெருமாளுக்குத் திருமஞ்சனம் நடைபெறும் போதெல்லாம் சடாரிக்கும் திருமஞ்சனம் செய்விக்கப்படுகிறது.

ஒரு அரசனின் கிரீடத்தை எப்படி எவர் வேண்டுமானாலும் தொட முடியாதோ, அதே போல எம்பெருமானின் பாதங்களைச் சுமக்கும் பாக்கியம் பெற்று, முறையான தீட்சை பெற்று ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கும் பட்டர்கள் மட்டுமே அதைத் தொட அனுமதிக்கப்படுகிறார்கள். இது ஒரு பாதுகாக்கப்பட்ட புனித அதிகாரம்.சடாரியைச் சாற்றிக் கொள்ளும் போது ஒரு விநயம் தேவை. தலையைக் குனிந்து, இரு கைகளையும் கூப்பி, மிக மென்மையாக அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது நமது கர்வத்தை எம்பெருமானின் பாதங்களில் அடகு வைக்கும் செயல். ‘‘என் அறிவு, என் அதிகாரம் எல்லாம் உனது பாதங்களுக்குக் கீழே தான்” என்கிற சரணாகதித் தத்துவத்தின் உச்சம் இது.

சாதாரண பக்தர்களுக்குத் தலையில் மட்டும் வைக்கப்படும் சடாரி, மடாதிபதிகள், ஜீயர்கள் அல்லது ஆச்சார்ய புருஷர்களுக்குத் தலை மற்றும் இரண்டு தோள்களிலும் வைக்கப்படும். அவர்கள் இந்தத் தத்துவத்தை உலகெங்கும் சுமந்து செல்பவர்கள் என்பதைக் குறிக்கவே இந்த விசேஷ கௌரவம். உண்மையில், ஆகமங்களும் சாஸ்திரங்களும் ஒரு அசைக்க முடியாத உறுதிமிக்க ஸ்ரீ வைஷ்ணவனுக்கும் இத்தகைய மரியாதையைச் செய்ய அனுமதி அளிக்கவே செய்கின்றன. ஆனால், இன்றைய சூழலில் ஒருவரின் பக்தியின் ஆழத்தையும் அந்த அசைக்க முடியாத உறுதியையும் அடையாளம் காண்பது சாத்தியமற்ற ஒன்று என்பதால், காலப்போக்கில் இந்தச் சிறப்பு ஆச்சார்ய புருஷர்களுக்கு மட்டுமே உரியதாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.

மனித உடல் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து மூலக்கூறுகளால் ஆனது. நாம் சடாரியைத் தலையில் தாங்கும் போது, இந்த ஐந்து புலன்களால் வரும் கர்வம் அடங்கிப்போகிறது. சடாரி நம் தலையில் படும்போது, ‘சடம்’ சார்ந்த உடல் ஆசைகள் நீங்கி, ஆத்மா விழிப்படைகிறது என்று நம்பப்படுகிறது.பெருமாள் புறப்பாட்டின் போது, பட்டர்கள் ஒரு பட்டு வஸ்திரத்தைத் தலையிலோ அல்லது தோளிலோ போர்த்திக் கொண்டு, அதன் மேல் சடாரியைச் சுமந்து வருவார்கள். இது திருவடிகளுக்குச் செய்யப்படும் ராஜ மரியாதை. சடாரிக்கு முன்னால் தீவட்டி ஏந்திச் செல்வது, அஞ்ஞானம் எனும் இருளை நீக்கி, ஞானம் எனும் ஒளியை அந்தத் திருவடிகள் தருகின்றன என்பதைக் குறிக்கும் குறியீடு.

உற்ஸவ காலங்களில் ஆழ்வார்களுக்கும் சடாரி சாற்றப்படும். ஆழ்வார்களுக்குச் சடாரி சாற்றப்படும்போது அங்கு இருக்கும் அர்ச்சகர் அல்லது வேதமறிந்த ஒருவர், “எச்சரிக்கை சுவாமி எச்சரிக்கை அருளப்பாடு” என்று கூறி அந்தந்த ஆழ்வாரின் திருநாமத்தைச் சொல்லி அழைப்பார். இது ஒரு சாதாரண அறிவிப்பு அல்ல. அது ஒரு தெய்வீக வரவேற்பு.

ஆழ்வார்கள் எம்பெருமானின் அங்கங்களாகவே கருதப்படுபவர்கள். ஒரு பேரரசன் வரும்போது அவனுக்கு முன் கட்டியம் கூறி வரவேற்பது போல, அந்த ஆழ்வாருக்கே உரிய மரியாதையைத் தெரிவிக்கும் விதமாக இது அமைகிறது. இதில் ”எச்சரிக்கை” என்பது அந்த இடத்திலிருக்கும் பக்தர்களுக்கு மட்டுமல்ல; ஆழ்வாரின் பெருமையைக் கண்டு வியந்து நிற்கும் பிரபஞ்சத்திற்கே விடுக்கும் ஒரு ஜாக்கிரதை உணர்வு. ”இங்கே மகாஞானி ஒருவர் எழுந்தருளுகிறார், அனைவரும் ஒருமுகப்பட்டு கவனியுங்கள்” என்பதே இதன் உட்பொருள்.

“அருளப்பாடு” என்பது எம்பெருமானின் திருவருள் அந்த ஆழ்வாரின் வழியாகப் பொழியப்போகிறது என்பதைக் குறிக்கும். மேலும், பெருமாளின் சடாரி வரும்போது, ஆழ்வார் அதை எதிர்கொண்டு ஏற்கும் அந்த உன்னதமான தருணத்தில், அவருடைய பெயரையே எம்பெருமான் தன் திருவாக்காலேயே அழைத்துத் தன் திருவடி நிழலுக்கு அழைப்பதாக ஒரு ஐதீகம் உண்டு. அந்தப் புனித அழைப்பையே அங்கே இருக்கும் அத்யாபகர் பிரதிபலிக்கிறார்.

இதைக் குறித்துப் பேசும்போது எனக்கு ஒரு அனுபவம் நினைவுக்கு வருகிறது. நான் ஒருகாலத்தில் ஸ்ரீ பாதம் தாங்கியாக இருந்தேன். சில நேரங்களில் ஆழ்வார்களையும் சுமக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. அந்த நாட்களில், ஒரு தருணத்தில் பெருமாள் சடாரி நெருங்கி வந்த போது, நான் ”கைத்தலம்” என்று குரல் கொடுத்த அந்த நொடி, என்னோடு இருந்த மற்ற மூவரும் உடனே ஆழ்வார் அமர்ந்திருந்த அந்தத் பல்லக்கை பற்றிக்கொண்டு, நம்மாழ்வாரை அப்படியே கைத்தலத்தில் ஏந்தினோம். அதாவது, அதுவரை தோளில் சுமந்திருந்த அந்தத் பல்லக்கை மெல்ல இறக்கி, இரு கைகளாலும் ஏந்திப் பிடிக்கும் ஒரு மகா பாக்கியம் அது. தோளின் பாரம் குறைந்த அந்தத் தருணத்தில், எம்பெருமானின் ஆருயிர் தொண்டனை எங்கள் கரங்களாலேயே தாங்கி நிற்கும் அந்த விநயத்தை உணர முடிந்தது.

அந்த நேரத்தில் பட்டர், தன் இடது தோளில் பட்டு வஸ்திரம் போர்த்தியிருந்தார். வலது கை, சடாரியை இடது தோளில் அழுத்திப் பிடித்தபடி இருந்தது. அவர் ஆழ்வாருக்கு அருகில் வந்ததும், சடாரியை ஆழ்வார் தலையில் சாற்றினார். தலை, தோள், மீண்டும் தலை என்று மரபிற்கு உரிய முறையில் வைத்தார். நான் முன்புறத்தில் இருந்தேன். ஆழ்வாரின் முகத்தை மிக அருகில் பார்த்தேன். அந்த ஒரு நொடி, அந்த முகத்தில் நான் சரணாகதியைப் பார்த்தேன் என்று நினைத்தேன். சடாரி வரும்போது அவருடைய தலை இயல்பாகக் கீழே போவது போல இருந்தது. அது என் கற்பனையா என்று எனக்கே தெரியவில்லை. இந்த மாயை நிறைந்த உலகத்தில், எது கற்பனை, எது உண்மை என்று யார் அறிவார்.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக இருந்தது. ஒரு தத்துவத்தின் குறியீடாகத் திகழும் ஒரு பொருள், அந்தத் தத்துவத்தின் மூல வடிவத்தையே சந்திக்கும்போது, அருகில் நின்று அதைத் தரிசிக்கும் சாட்சிகள் மட்டுமே அதன் முழுமையான கனியைப் பெறுகிறார்கள். இங்கே சடாரி என்பது நம்மாழ்வாரின் உருவகம். அந்த உருவகமே, நம்மாழ்வாரின் திருமேனியில் வந்து அமர்கிறது என்றால் அது எத்தகையதொரு மகத்தான சங்கமம்! அது ஒரு பிம்பம் தன் மூலத்தோடு இணையும் தருணம். அந்தக் கணம், என்னைப் போல நெருக்கத்தில் நின்றவர்களுக்கு மட்டும் கிடைக்கும் ஒரு விசேஷ அனுபவம் அது. அந்தத் தரிசனம் இன்றும் என்னுள் அப்படியே தங்கியிருக்கிறது. கைத்தலம் ஏந்துவது என்பது பெருமாளின் சடாரிக்கு ஆழ்வார்களே அடிபணிந்து, பவ்யமாக ஏற்றுக்கொள்ளும் கண்கொள்ளாக் காட்சி.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் ஒரு மகா அதிசயம் நிகழ்கிறது. அங்கே எம்பெருமானை எப்போதும் விழி இமைக்காமல் பார்த்தவாறே நிற்கும் திருவடி ஹனுமனுக்கு, ஒவ்வொரு வீதிப் புறப்பாடின் போதும் சடாரி சாற்றப்படுகிறது. உலகிலேயே வேறு எங்கும் காணக் கிடைக்காத அரிய காட்சி இது. ஹனுமனுக்கு ஏன் இந்த விசேஷ கௌரவம்? அவர் எம்பெருமானின் திருவடிகளையே சதாசர்வ காலமும் சிந்தித்துக் கொண்டிருப்பவர்.

ஸ்ரீ வைஷ்ணவ மரபில் ஹனுமனுக்கு ‘சிறிய திருவடி’ என்றே ஒரு திருநாமம் உண்டு. ஆகாயத்தை அளந்த எம்பெருமானைச் சுமந்து செல்லும் கருடனை ‘பெரிய திருவடி’ என்று போற்றுவது மரபு. அவருக்கு இணையாக, காட்டில் ராமனும் லட்சுமணனும் நடந்து சென்றபோது, அவர்களைத் தன் தோள்களில் சுமந்து சென்ற அந்தப் பெரும் பாக்கியத்தினால் ஹனுமனும் எம்பெருமானின் வாகனமாக, அதாவது சிறிய திருவடியாகப் போற்றப்படுகிறார். உருவத்தால் சிறியவர் என்பதால் இந்தப் பெயர் வரவில்லை; எம்பெருமானைச் சுமந்து செல்லும் வாகனமாகவும், அவனது திருவடிகளையே தஞ்சமெனப் பற்றிக்கொண்டு தன்னையே அந்தப் பாதங்களில் சமர்ப்பித்த அந்தப் பவ்யத்தின் அடையாளமே இந்தப் பெயர்.

இன்னொரு உணர்வுப்பூர்வமான சடங்கு இங்கே அரங்கேறுகிறது. ஹனுமனுக்கு வரதனின் சடாரி மட்டும் அல்ல, பெருந்தேவி தாயாரின் சடாரியும் சாற்றப்படுவதுதான் அந்த மகா அதிசயம்.

காஞ்சி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள், வரதராஜப் பெருமாள் பெண் வேடம் பூண்டு, அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாக, நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். அன்னைக்கே உரிய அந்தப் பேரெழிலோடு எம்பெருமான் எழுந்தருளும் அந்தத் தருணத்தில்தான், பெருந்தேவித் தாயார் தன் எல்லையைத் தாண்டி வருகிறாள்.

பொதுவாகத் தாயார் ‘படி தாண்டாப் பத்தினி’ என்று போற்றப்படுபவர். எம்பெருமானைப் போல ஊர் ஊராகவோ அல்லது வீதி உலாவோ வராமல், ஆலயத்தின் மதில் சுவர்களுக்குள்ளேயே மௌனமாக உலா வரும் மரபைக் கொண்டவர் அவர். பல திவ்ய தேசங்களில் தாயாரின் சடாரியும் கூட சந்நதியின் எல்லையைத் தாண்டுவதில்லை. ஆனால், காஞ்சியில் அந்தப் பெருந்தேவித் தாயார் தன் சடாரி வடிவில் அந்த மதில் சுவர்களைக் கடந்து வெளியே வந்து, வீதியில் நின்றிருக்கும் தன் அடியவன் ஹனுமனுக்குத் தானே முன்வந்து அருளுகிறாள்.

(தொடரும்)

ஆகாஷ வாமன