Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சொக்கவைக்கும் சோமநாதபுரம்!

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: சென்னகேசவர் கோயில், சோமநாதபுரம், கர்நாடகா.

காலம்: ஹோய்சாள மன்னர் மூன்றாம் நரசிம்மரின் தளபதியான சோமநாதரால் பொ.ஆ.1268-ல் கட்டி முடிக்கப்பட்டது.

கோயில்கள் என்பவை இறைவனை வழிபட்டு அருள் பெறுவதற்கான இடங்கள் மட்டுமல்ல; அவை அந்த காலத்தின் ஈடு இணையற்ற கைவினைத் திறனையும், கட்டடக் கலை அறிவையும் உலகிற்குப் பறைசாற்றும் கலைக் கூடங்களாகவும் திகழ்கின்றன. அந்த வகையில், கர்நாடக மாநிலத்தின் சோமநாதபுரத்தில் அமைந்துள்ள சென்னகேசவர் கோயில், ஹோய்சாள கட்டடக் கலையின் உச்சமாகக் கருதப்படுகிறது.

தனித்துவமான நட்சத்திர வடிவ அமைப்பு

ஒவ்வொரு ஹோய்சாள கோயிலும் ஒரு குறிப்பிட்ட பாணியைப் பின்பற்றினாலும், அவை ஒவ்வொன்றும் ஒரு தனித் துவமான கலை நுணுக்கத்தைக் கொண்டிருக்கும். சோமநாதபுரம் கோயில் ஒரு நட்சத்திர வடிவ மேடையின் (Star-shaped platform) மீது அமைக்கப்பட்டுள்ளது. ஹோய்சாள கட்டடக்கலை பாணியின் மிக முழுமையான மற்றும் நேர்த்தியான உதாரணமாக இந்தக் கோயில் திகழ்கிறது.

`திரிகூட’ அமைப்பு மற்றும் தெய்வங்கள்

இந்தக் கோயில் `திரிகூட’ (Trikuta) வகையைச் சேர்ந்தது. அதாவது, மூன்று கருவறைகள் ஒரு பொதுவான மண்டபத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இக்கோயில், கிருஷ்ண பரமாத்மாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இங்கு கிருஷ்ணர் மூன்று வடிவங்களில் காட்சியளிக்கிறார்:

* ஜனார்த்தனர்.

* வேணுகோபாலர்.

* கேசவர் (தற்போது இந்தச் சிலை சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளது)

`சென்ன கேசவர்’ என்றால் `அழகிய கேசவர்’ என்று பொருள். புகழ்பெற்ற கட்டடக்கலை அறிஞர் ஜார்ஜ் மிட்செல் கருத்துப்படி, இக்கோயில், ஹோய்சாள பாணியின் வளர்ச்சிப் பாதையில் எட்டப்பட்ட ஒரு சிகரமாகும்.

கண்ணைக் கவரும் கூரை அமைப்புகள்

ஹோய்சாளர்களின் நுணுக்கச்சிற்ப வேலைப்பாடுகள் உற்று நோக்குகையில் வியப்பு, பிரம்மிப்பு, பொறாமை என்று சகல ஆச்சரிய உணர்வுகளும் ஏற்படும். சோமநாதபுர ஆலயத்தின் மேற்கூரையில் உள்ள அழகிய சிற்ப நுணுக்கங்கள் அடங்கிய அரைக்கோள வடிவ உள் விதான அமைப்பு, ஹோய்சாளக் கலையின் உச்சம் எனப் பாராட்டப்படுவதில் வியப்பேதுமில்லை.இந்தக் கோயிலின் மிக வியக்கத்தக்க அம்சம், அங்குள்ள 16 சதுர வடிவ அலங்காரக் கூரைகள் (Ceilings) ஆகும்.

இவை ஒவ்வொன்றும் அரைக்கோள (Domical Dome) வடிவிலும், ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்ட அழகிய வேலைப்பாடுகளுடனும் காணப்படுகின்றன. பூத்துக் குலுங்கும் வாழைப்பூ, தாமரை இதழ்கள் மற்றும் பாம்பு முடிச்சுகள் போன்ற இயற்கை உருவங்கள் கல்லில் உயிர்பெற்றுள்ளன. பல அடுக்கு களாக, எண்கோண வடிவில், ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட கல்லாலான இந்த அமைப்புகளைப் பார்க்கும்போது, சிற்பிகளின் கடின உழைப்பும் கற்பனைத் திறனும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

வியக்க வைக்கும் விதானம்!

வெவ்வேறு கருவிலான ஒவ்வொரு எண்கோண வடிவ விதானத்தையும் நுணுக்கமாக செதுக்கி, இணைத்து, கட்டமைக்க எவ்வளவு நாட்கள், எத்தனை சிற்பிகள் உழைத்தனரோ!

அதிலும் வண்ணக்கலவையுடன், பல அடுக்குகளுடன் மலர்ந்து விரிந்துள்ள அற்புத வாழைப்பூவினை அண்ணாந்து பார்த்து நிற்கும் போது ஏற்படும் கழுத்து வலியையும் மறக்கச் செய்து விடுகின்றது அதன் சிற்ப நுட்பம். இந்தக் கூரைகள் பழங்காலத்தில் வர்ணம் பூசப்பட்டிருந்தன. பல நூற்றாண்டுகள் கடந்த பின்பும், இன்றும் தென்படும் மங்கலான வண்ணங்கள் அந்தக் காலத்தின் கலை நுணுக்கத்திற்குச் சான்றாக உள்ளன.

வரலாற்றுச் சோகம்

மூச்சு முட்ட வைக்கும் அழகியலைக் கொண்ட இந்தக் கோயிலில், துரதிர்ஷ்டவசமாக, தற்போது வழிபாடு எதுவும் நடைபெறுவதில்லை. டெல்லி சுல்தான்களின் படையெடுப்பின் போது இக்கோயில் சிதைக்கப்பட்டு, சிலைகள் சேதப்படுத்தப்பட்டதால், இது ஒரு வழிபாட்டுத் தலமாக அல்லாமல் ஒரு வரலாற்றுச் சின்னமாகவே இன்று பாதுகாக்கப்படுகிறது.

மது ஜெகதீஷ்