Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சில நேரங்களில் நம்முடைய கனவுகள் பலிக்கிறதே?

?இறைவன் சாந்தமானவர். உண்மை அப்படியிருக்க கொடூர தோற்றத்தை சிருஷ்டித்து பக்தர்கள் வழிபடுவது ஏன்?

- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

இறைவன் சாந்தமானவர்தான் என்றாலும் ஹிரண்யகசிபு போன்ற அரக்கர்களை வதம் செய்ய நரசிம்மமூர்த்தியாக அவதாரம் எடுக்க நேர்கிறதே. அதேபோல நம்முடைய மனதில் உள்ள அசுர குணங்கள் அழிய வேண்டும் என்றால் உக்கிர மூர்த்தியாக இறைவனை பாவித்து வணங்குகிறோம். நமக்கு நாமே கட்டுப்பாட்டினை விதித்துக் கொண்டு தவறு செய்தால் இறைவன் நம்மை தண்டிப்பான் என்ற எண்ணத்தை நம்மையும் அறியாமல் மனதிற்குள் ஆழப் பதிய வைக்க இதுபோன்ற உருவ வழிபாட்டினைச் செய்கிறோம். அதேபோல நம்மை நோக்கி வரக் கூடிய தீயசக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கவும் இறைவன் அந்த தீயசக்திகளை அழிப்பதற்கு ஏதுவாகவும் இதுபோன்ற இறை மூர்த்தங்களை சிருஷ்டித்து வணங்கி வருகிறோம்.

?சில நேரங்களில் நம்முடைய கனவுகள் பலிக்கிறதே?

- வண்ணை கணேசன், சென்னை.

நமது ஆழ்மனதில் உள்ள எண்ணங் களில் வெளிப்பாடுதான் கனவுகள் என்பது. அந்த கனவுகள் பலிக்கும்போது நம்முடைய சிந்தனையும் செயலும் ஒருமுகப்பட்டிருக்கிறது என்று பொருள். நேரம் நன்றாக இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம். அதுபோன்று கனவுகள் பலிக்கும் காலத்தில் நல்லதையே நினைத்து நல்லதையே கனவாகவும் கண்டு நன்மை பெறவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

?எந்த உடை அணிந்து ஆலயம் சென்று இறைவனை வணங்க வேண்டும்?

- த. சத்தியநாராயணன், அயன்புரம்.

நமது பாரம்பரிய உடைகளை அணிந்துதான் ஆலயம் சென்று இறைவனை தரிசிக்க வேண்டும். நாகரிகம் என்ற பெயரில் நவீன ஆடைகளை அணிந்துகொண்டு ஆலயத்திற்குச் செல்லக் கூடாது. ஆண்கள் வேட்டியுடன் இடுப்பில் துண்டினை சுற்றிக் கொண்டு மேல்சட்டை அணியாமல் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். பெண்கள் புடவையை உடுத்திக்கொண்டு ஆலயத்திற்குச் செல்ல வேண்டும்.

?வீட்டில் தென்னை மரம் வளர்க்கலாமா?

- ஜெ. மணிகண்டன், வேலூர்.

வீட்டுத் தோட்டத்தில் தென்னை மரம் வளர்க்கலாம். ஆனால் வீட்டின் தோட்டத்து வாயிலில் இருந்து 30 அடி தூரத்தில் தென்னை மரம் அமைந்திருந்தால் வீட்டிற்கு நல்லது.

?சுவாமிக்கு நிவேதனங்களை (நைவேத்யம்) எப்படிச் செய்ய வேண்டும்? இதற்கென்று தனியாக மந்திரங்கள் உள்ளனவா?

- ரெங்கசாமி, தாராபுரம்.

மந்திரங்கள் கற்றறிந்த வேத விற்பன்னர்களும் ஆலய அர்ச்சகர்களும் நிவேதனத்தை செய்யும்போது நிவேதன பொருட்களை வைத்து அந்தப் பண்டங்கள் உள்ள பாத்திரத்தைச் சுற்றி நீர்விட்டு காயத்ரி மந்திரத்துடன் பிராணன், அபானன், வ்யானன், உதானன், சமானன் ஆகிய பஞ்ச பிராணன்களுக்கு உணவைச் சமர்ப்பிக்கிறேன் என்று மந்திரம் சொல்வார்கள். ஆனால், மந்திரம் அறியாத சாதாரண பொதுமக்கள் அதுபோல் மந்திரம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நைவேத்யம் என்றால் சமர்ப்பணம் என்று பொருள். உள்ளார்ந்த அன்புடன் கூடிய பக்தியோடு தூய்மையான பண்டங்களை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் என்ற மனோபாவம் இருந்தாலே போதுமானது. நிவேதன பொருட்களை இறைவனுக்கு முன்னால் வைத்து இதை நான் சமர்ப்பிக்கிறேன் என்று மனதில் தியானித்தாலே போதுமானது. சுருங்கச் சொன்னால் மந்திரம் இல்லாமல் நைவேத்யம் செய்யலாம் ஆனால், பக்தி சிரத்தை இல்லாமல் செய்யவே கூடாது. நைவேத்யம் செய்வதற்கு மந்திரத்தைவிட பக்தியுடன் கூடிய சிரத்தையே முக்கியம் என்பதே உங்கள் கேள்விக்கான நேரடியான பதில்.

?கோயிலில் அபிஷேகத்தின்போது பக்தர்களிடமிருந்து சில்லறை காசுகள் வாங்கி கலசநீரில் கலந்து அபிஷேகம் செய்வதேன்?

- மல்லிகா அன்பழகன், சென்னை.

ஸ்வர்ணாபிஷேகம் என்ற பெயரில் இதுபோன்று செய்கிறார்கள். அந்தக் காசுகளை மீண்டும் பக்தர்களிடமே சேர்ப்பித்து விடுவார்கள். இறைவனின் பிரசாதமாக பக்தர்கள் அந்தக் காசுகளை தங்கள் இல்லத்தில் பத்திரப்படுத்தி வைப்பார்கள். ஆனால், இவ்வாறு செய்வதற்கு சாஸ்திர ரீதியாக எந்தவிதமான ஆதாரமும் இல்லை. இதுபோன்ற விஷயங்கள் பக்தர்களின் நம்பிக்கையின் பேரில் செய்யப்படுகிறது.

?கோயிலில் தினமும் கல்யாண உற்சவம் போன்ற உற்சவங்கள் நடைபெறுகிறதே, இதன் தாத்பர்யம் என்ன?

- வாணிஸ்ரீ , திருச்சி.

சிவசக்தியின் இணைவே இந்த பிரபஞ்ச இயக்கத்திற்கான காரணம். ஒன்று நிலை ஆற்றல், மற்றொன்று இயக்க ஆற்றல். இந்த இரண்டின் இணைவே இந்த உலகம் இயங்குவதற்கான முக்கியமான காரணம். ஆன்மிக ரீதியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றாகுதல். அதாவது நாம் இறைவனோடு இணைகின்ற நிலையை உணர்த்துவதே கல்யாண உற்சவம் என்பது. இந்த கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்ளும்போது மனம் இறைவனிடத்தில் ஒன்றிணைகிறது. இறைவன் நம்முடனேயே இருக்கிறான் என்ற உணர்வினையும் தருகிறது. அதனால்தான் ஆலயங்களில் திருக்கல்யாண உற்சவம் என்பது சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பி வைக்கவும். ன் எதற்கு எப்படி? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004.