Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தெளிவு பெறுவோம்

?ராகு தோஷம், சர்ப்ப தோஷம், நாகதோஷம் ஆகிய மூன்றும் ஒரே தோஷம்தானா இல்லை மூன்றும் வெவ்வேறு தோஷங்களா? ஒரு ஜாதக கட்டத்தில் ராகு-கேதுக்களின் எப்படிப்பட்ட அமர்வுநிலையில் யார் யாருக்கெல்லாம் பாதிப்பு வரும்? அடிக்கடி பாம்புகளை பார்ப்பதும் கனவில் தூக்கத்தின்போது பாம்புகளைக் காண்பதும் ராகு தோஷத்தின் வெளிப்பாடா?

- சுபராமா, தஞ்சை.

சர்ப்ப தோஷம், நாகதோஷம் இரண்டும் ஒரே பொருளைத் தரக்கூடிய வார்த்தைகள். இந்த இரண்டும் ஒன்றுதான். ராகு தோஷம் என்பது ஜாதகத்தில் ராகுவின் அமர்வுநிலையை வைத்து அறியப்பட வேண்டிய ஒன்று. ராகு-கேதுக்களின் பொதுவான அமர்வு நிலையை மட்டும் வைத்து இவர் இவருக்கு இதுபோன்ற பாதிப்பு வரும் என்று சொல்ல முடியாது. அது ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பிற்கு ஏற்றவாறு மாறுபடும். லக்னத்தில் ராகு, ஏழில் கேது, இரண்டு மற்றும் எட்டில் ராகு-கேது மற்றும் ராகு-கேதுக்களுக்கு இடையில் மற்ற கிரஹங்கள் அனைத்தும் உள்ளடங்கி இருக்கின்றன அதனால் இது காள சர்ப்ப தோஷம் என்றெல்லாம் பொதுவாகச் சொல்லப்படுவதைக் கொண்டு பாதிப்பு வரும் என்று தீர்மானிக்கக் கூடாது. இது முற்றிலும் தவறான கருத்து. இந்த அமைப்பு ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் வெவ்வேறு மாதிரியான பலன்களைத் தரும். ஒரு சிலருக்கு இந்த அமைப்பே கூட மிகவும் நற்பலன்களை உண்டாக்கும். நேரில் அடிக்கடி பாம்புகளைப் பார்ப்பவருடைய ஜாதகத்தில் ராகு-கேதுவின் பலம் என்பது கூடியிருக்கும். இதனை தோஷமாகக் கருதக்கூடாது. கனவில் பாம்பினைக் கண்டால் அருகிலுள்ள மாரியம்மன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்து கொள்வது நல்லது.

?வாஸ்துபடி துளசிச் செடிக்கு ஏற்ற இடங்கள் யாவை?

- சுந்தரி, சேலம்.

வீட்டின் முற்றம், தலைவாயிலும் பின்புற வாயிலும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் பட்சத்தில் பின்புற வாயிலில் இருந்து 5 அடி தூரத்திற்குள் அமைப்பது, கிழக்கு, மேற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு திசைப் பகுதிகள் உகந்தது.

?ஒரு ஜாதகத்தில் வர்கோத்தமம் கண்டறிவது எப்படி? வெளிநாடு செல்லும் யோகம் ஜாதகத்தில் எப்படி அமையும்?

- என்.ஜெயக்குமரன், திருநெல்வேலி.

ஜாதகத்தில் ராசி, நவாம்சம் என்று இரண்டு கட்டங்களை குறித்திருப்பார்கள். ஒரு கிரஹம் இந்த இரண்டு கட்டங் களிலும் ஒரே ராசியில் அமைந்திருந்தால் அதனை வர்கோத்தமம் என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு சூரியன் ராசி மற்றும் நவாம்சம் இரண்டிலும் மேஷ ராசியில் அமர்ந்திருந்தால் சூரியன் வர்கோத்தமம் பெற்றிருக்கிறார் என்று பலன் சொல்வார்கள். இவ்வாறு வர்கோத்தமம் பெறுகின்ற கிரஹம் வலிமையுடன் செயல்படும் என்றும் பலன் உரைப்பார்கள். வெளிநாடு செல்வதற்கு லக்ன பாவம், ஒன்பதாம் பாவம், பத்தாம் பாவம், பன்னிரெண்டாம் பாவம், சந்திரன், குரு, ராகு, கேது ஆகிய கிரஹங்களின் அமர்வுநிலை மற்றும் அவரவர் ஜாதகத்தில் நடைபெறும் தசாபுக்தி ஆகியவை தீர்மானம் செய்யும்.

?வீட்டில் தேனீ கூடு கட்டுவது நல்லதா, கெட்டதா?

- வி.எஸ்.ரவிபிரசாத், கோவை.

வீட்டிற்குள் கட்டுவது கெடுதலைத் தரும். அதே நேரத்தில் வீட்டுத் தோட்டத்தில் கட்டுவது நல்லது. தோட்டம் என்றால் அது அளவில் பெரிதாக இருக்க வேண்டும். வீட்டின் பின்புற வாயிலுக்கும் கூடு கட்டும் இடத்திற்கும் இடையே குறைந்த பட்சம் 60 அடி தூரமாவது இருக்க வேண்டும். தேனீ கூடு கட்டுகின்ற இடம் தென்கிழக்கு மூலையாக இருக்கக் கூடாது.