Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தெளிவு பெறுவோம்

?சிவனுடைய தலையில் பிறையை வைத்திருப்பவராகவும், கங்கையைச் சிரசில் ஏந்தியவராகவும், கழுத்தில் பாம்பை அணிந்தவராகவும், உடம்பில் புலித்தோலைப் போர்த்திக் கொண்ட வராகவும் காட்டுவது ஏன்?

- வெங்கடரமணன், சென்னை-74.

பகவான் சத்தியசாய்பாபா இதற்கான காரணத்தை அழகாக ஓரிடத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, நாம் எப்படி வாழவேண்டும் என்பதைக் காட்டுவதே சிவசொரூபம். ஜடாமுடியில் அவர் வைத்திருக்கும் சந்திரன் நம்முடைய இன்பமும், துன்பமும் மாறிமாறி வளர்பிறையாகவும், தேய்பிறையாகவும் வரும் என்பதைக் காட்டுகிறது. அங்கே தேங்கி நிற்கும் கங்கை என்றும்-எப்போதும் மனத்தைக் கங்கையைப் போல வைத்திருக்க வேண்டும் என்று உணர்த்துகிறது. கங்கையில் எவ்வளவோ அழுக்கும் அசுத்தமும் சேருகின்றன. ஆனால் அதன் தூய்மை கெடுவதில்லை. அதைப்போல எவ்வளவோ ஆசாபாசங்கள் நம்மை அலைக்கழித்தாலும், நம்முடைய மனம் அதனால் கெட்டுப் போய்விடக்கூடாது. ஒவ்வொரு நிமிடமும் நம்மைப் பாவக் குழியில் தள்ள நச்சுப் பாம்பாக சூழ்நிலை சுற்றிக் கொண்டு காத்திருக்கிறது. ஆனால், அந்த விஷம் உள்ளே இறங்க நாம் விட்டு விடக்கூடாது. இதையே, கழுத்தைச் சுற்றிய பாம்பை அணிந்த சிவபெருமான் விஷத்தைக் கண்டத்தில் (கழுத்தில்) தேக்கிக் கொண்டவராகக் காட்டுகிறார். மிருக உணர்ச்சிகள் நம்மைப் பாதிக்கலாம். ஆனால், அவற்றிலிருந்து உயர்ந்த மனித உணர்வுடன் நாம் வாழவேண்டும். புலித்தோல் போர்த்திய பெருமான் அதையே நமக்குக் காட்டுகிறார். உடம்பின் ஒரு பகுதியில் தேவியை வைத்துக் கொண்டிருந்தாலும் சிவபெருமான் காமத்தை வென்றவர்; காமனையே எரித்தவர். அதைப்போல நாமும் உலகியலைப் பற்றி வாழ்ந்தாலும் காமத்துக்கு அடிமையாகாமல் அதைத் தூய்மைப் படுத்தி வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

?அவதாரம் என்பது என்ன? இறைவன் மனித உருவில் வந்தும் லீலைகளைச் செய்திருக்கிறான். அடியவர்கள் மனித உருவிலிருந்தும் அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

- லலிதா, திருவானைக்காவல்.

ஒருமுறை புலவர் கீரன் அவர்கள் இதற்கான பதிலை தன்னுடைய உரையில் அளித்திருக்கிறார். அதை நாம் இங்கு பார்ப்போமா! அவதாரத்தில் இரண்டு வகைகள் உண்டு. இறைவனே மனித உருவத்தில் வந்து நாம் எப்படி வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டலாம். சரியான முறையில் வாழாதவர்களைத் தண்டித்து, சரியாக வாழ்பவர்களைக் காப்பாற்றி தர்மத்தை நிலைநாட்டலாம். இராமவதாரம், கிருஷ்ணாவதாரம் என்பன இது போன்றவைதான். இவை பூர்ணாவதாரங்கள். இதில் தெய்விகம்தான் இருக்கும். மானுடனுக்கு உள்ள பலவீனங்கள் இருக்காது. ஆனால், மனிதனைப் போல வாழ்ந்து, மனிதன் இப்படி இருக்க வேண்டும் என்பதை இறைவன் உணர்த்துகிறான்.இறைவனுடைய அருளைப் பெற்று உலகத்தில் மனிதனாக வாழவரும் அடியார்களும் உண்டு. இது அம்சாவதாரம். இந்த அவதாரத்திலும் தெய்விகம் இருக்கிறது. ஆனால் அது தெய்விக அருளாக வந்து நிறைகிறது. இவர்கள் மனிதனைப் போலவே வாழ்ந்து, மனிதனுக்குரிய சுகதுக்கங்களை அனுபவித்து, லௌகிகமான உணர்ச்சிகளின் போராட்டத்துக்கு இடையே வாழ்க்கை நடத்தி, பிறகு இறைவனின் தனிக் கருணையால், உயர்வு பெற்று, பக்தி மார்க்கத்தை மனிதர்களுக்குக் காட்ட, இறைவன் அருளால் கிடைத்த சக்தி மூலம் அற்புதங்களை வெளிப்படுத்தி, வழிகாட்டுகிறார்கள். மனிதர்களைப் போலவே அவர்களும் வாழ்வதால், அவர்களைப் பின்பற்று வதும் எளிதாகிறது. மனிதனுக்குரிய பலவீனங்களுடன் வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு மனம் திருந்தி வாழ்வில் உயர்வு பெற்றவர்களாக அவர்கள் இருப்பதால், தவறு செய்தவர்களும் கூடத் திருந்தி வாழமுடியும் என்ற நம்பிக்கையைப் பெறுகிறார்கள். இரண்டு விதமான அவதாரங்களுமே மனிதனின் பண்புகளை உயர்த்த எடுக்கப்பட்டவைதான். இரண்டிலும் தெய்வம் நமக்கு ஒவ்வொரு விதமாக வழிகாட்டுகிறது.

?ஏன் வெவ்வேறு விதமான தோற்றமும், முகஅமைப்பும், செயல் வடிவமும் கொண்ட விக்கிரகங்கள் இருக்கின்றன? கடவுளை இப்படிப் பல்வேறு வடிவங்களாக நாம் நினைத்து வழிபடுவதின் பொருள் என்ன?

- உமாமகேஸ்வரி, கும்பகோணம்.

நாம் ஓர் அழகான ஆணையோ, பெண்ணையோ பார்க்கும்போது மனத்தில் மென்மையான உணர்வுகள் தோன்றுகின்றன. உடல்பலம் மிகுந்த ஒரு பயில்வானைப் பார்க்கும்போதும், விளையாட்டுகளில் சாகசம் செய்வதைக் காணும் போதும், மனத்தில் வீர உணர்ச்சி எழுகிறது. ஓர் உணர்ச்சி மிகுந்த தாயையும் - குழந்தையையும் பார்க்கும்போது மனத்தில் உணர்ச்சிகள் கனிந்து எழுகின்றன. வெவ்வேறு விதமான விக்கிரக வடிவங்கள் யாவும் இப்படிப்பட்ட மென்மையான உயர்ந்த உணர்ச்சிகளை நம் உள்ளத்தில் தோற்றுவிப்பதற்காக எழுந்தவையே.பைரவர், காளி போன்ற உக்கிரகமான தோற்றம் கொண்ட உருவங்கள் நமது மனத்தில் வீர உணர்வைத் தோற்றுவிக்கின்றன. சரஸ்வதி, லட்சுமி போன்றவை கலை உணர்வைத் தூண்டிவிடுகின்றன. இராமர், கிருஷ்ணர் போன்ற உருவங்கள் மனத்துக்கு மென்மையான உணர்வைத் தோற்றுவிக்கின்றன. காமாட்சி, பராசக்தி போன்ற வடிவங்கள் தாய்மை உணர்வுக்கு மேன்மை தருகின்றன. இப்படி வாழ்க்கையில் நாம் உணரும் உணர்ச்சிகளை ஒட்டியே இந்த விக்கிரகங்களின் வடிவங்களும் அமைந்தன. வாழ்வு இயலை ஒட்டி அமைந்ததே நமது வழிபாடும் ஆகும்.

?பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவோருக்குத்தான் சோதனைகள் அதிகமாக வருகின்றன. நெறியுடன் வாழ நினைப்பவர்களுக்குத்தான் சிரமம் அதிகமாக இருக்கிறது. கடவுள் ஏன் அப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதில்லை?

- கருணாகரன், தூத்துக்குடி.

பகவான் பாபாவிடம் அடிக்கடி இந்தக் கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டேயிருக்கும் அதற்கு அவர் அளித்த பதிலையே இங்கு அளிக்கின்றோம். உலோகங்களில் மிகவும் தூய்மையானது தங்கம். அதுவே விலைமதிப்பிலும் மிக உயர்ந்தது. அதைத்தான் நகை செய்வதற்காக நெருப்பில் போட்டு உருக்கி, சுத்தியால் தட்டி, நீட்டி, வளைத்துச் சரிப்படுத்துகிறார்கள். பயிர்களில் மிக இனிமையானது கரும்பு. அதைத்தான் நாம் நசுக்கிக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்துக் காய்ச்சுகிறோம். நல்ல பொருட்களுக்கு எப்போதும் இப்படிப்பட்ட அனுபவம் உண்டாவது வழக்கம். ஆனால், அதனால் நன்மையே விளையும் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாண்டவர்கள், வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்டார்கள். ஆனால், அதற்காக அவர்கள் சலித்துப் போகவில்லை. தாயின் சொற்படி, நடந்து, பகவான் கிருஷ்ணன் காட்டிய வழியைப் பின்பற்றி வாழ்க்கையை நடத்தினார்கள். தொடர்ந்து துன்பங்கள் வந்தபோதும் நெறியை விட்டு விலகவில்லை. பீஷ்மர் குருக்ஷேத்திரத்தில் அம்புகளின் மீது மரணப் படுக்கையில் இருந்தபோது கண்ணீர் வடித்தார். ‘‘பிதாமகரே, தாங்கள் ஏன் கண்ணீர் வடிக்கிறீர்கள்?’’ என்று கேட்டான் அர்ஜுனன். ‘‘நல்லவர்களாகிய நீங்கள் (பாண்டவர்கள்) இதுவரை பட்ட சிரமங்கள் எல்லாம் என்னுடைய மனத் திரையில் தெரிகின்றன. அதனால் நான் கண்ணீர் வடிக்கிறேன். ஆனால் இன்னொன்றும் எனக்குப் புரிகிறது. நல்லவர்களுக்கு ஆண்டவன் எப்போதும் கூடவே துண் இருப்பான். பதவி ஆசையோ, பணத்துக்கான மோகமோ இன்றி அவர்கள் வாழும்போது, வாழ்க்கையின் நன்மைகளை ஆண்டவன் அவனாகவே முடிவில் கொண்டு வந்து கொடுப்பான். இதை நான் இந்த வேளையில் உணருகிறேன்’’ என்றார் பீஷ்மர்.

பீஷ்மர் சொன்ன வார்த்தைகளை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவன் சோதனைகளைக் கொடுப்பது, நம்முடைய மனத்தைப் பக்குவப்படுத்தி நல்ல பண்புகளை உண்டாக்குவதற்காகத் தான். அந்த முயற்சியில் நாம் கடவுளை நோக்கி ஓர் அடிவைத்து நடந்தால், அவர் பத்து அடிகள் வைத்து நம்மை நோக்கி வருவார். பக்தர்களான நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோரின் வாழ்க்கைக் கதைகளும் இதையே நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன.