மனிதன் பேசத் தொடங்கிய காலத்திலிருந்தே இறைவனைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறான். வேதங்கள், உபநிடதங்கள், தத்துவ நூல்கள், பக்திப் பாடல்கள் என்று இறைவனைப் புரிந்துகொள்ள எத்தனையோ வழிகள். ஆனால், இத்தனைச் சொற்களுக்கும் அப்பால் ஒரு நிலை இருக்கிறது. அங்கே பேசுவதற்கு ஒன்றுமில்லை. கேட்பதற்கு ஒன்றுமில்லை.
அறிந்துகொள்ள வேண்டிய பொருள் என்று தனியாக எதுவுமில்லை. அறிபவனும் அறியப்படுவதும் ஒன்றாகி நிற்கும் நிலை அது. அந்த நிலையை மௌனம் என்று சொல்கிறோம்.
மௌனம் என்றால் பேசாமல் இருப்பது மட்டும்தானா? அப்படியென்றால், வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் எல்லோருமே ஞானிகள் ஆகிவிட வேண்டுமே! அப்படியில்லை. வாயின் மௌனம் வேறு; மனத்தின் மௌனம் வேறு. மனத்தின் மௌனத்தையும் கடந்து, ‘நான்’ என்ற அகந்தை அடங்கி, தன்னுடைய உண்மையான இயல்பில் நிலைத்திருப்பது இன்னொரு நிலை.
இந்த மௌனத்தின் ஆழத்தைத் தன்னுடைய பாடல்களில் உணர்த்தியவர் தாயுமானவர். அதே மௌனத்தை நேரடியான ஆன்மிக அனுபவமாகவும், ஆத்ம விசாரமாகவும் நமக்குக் காட்டியவர், ஸ்ரீரமண மகரிஷி. இருவரும் வாழ்ந்த காலம் வேறு. அவர்களுடைய உபதேச முறைகள் வேறு. ஆனால், அவர்கள் சுட்டிக் காட்டும் உண்மை ஒன்றுதான். இறைவனை வெளியே தேடிக் கொண்டிருக்கும் மனிதன், ஒருகட்டத்தில் தன்னையே திரும்பிப் பார்க்க வேண்டும். அந்தத் தேடலின் முடிவில்தான் உண்மையான அமைதி இருக்கிறது.
தாயுமானவர் பாடல்களில் ‘சும்மா இருத்தல்’, ‘பேசா மௌனம்’ போன்ற சொற்கள் அடிக்கடி நம் கவனத்தை ஈர்க்கின்றன. இங்கே சும்மா இருப்பது என்பது சோம்பேறியாக இருப்பதோ, எந்த வேலையும் செய்யாமல் இருப்பதோ அல்ல.
மனம் இடைவிடாமல் உருவாக்கிக் கொண்டிருக்கும் எண்ணங்களிலிருந்து விடுபட்டு, இயல்பான அமைதியில் நிலைத்திருப்பது. நம்முடைய மனத்தைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள். உடல் ஓய்வாக இருந்தாலும், மனம் ஓய்வாக இருப்பதில்லை. நேற்று நடந்ததை நினைக்கிறது. நாளை நடக்கப்போவதை எண்ணிக் கவலைப்படுகிறது. ஒருவர் சொன்ன வார்த்தையை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறது. நடக்காத ஒன்றையும் கற்பனை செய்து வருத்தப்படுகிறது. வெளியில் எந்தச் சத்தமும் இல்லாத போதுகூட, உள்ளே ஒரு பெரிய சந்தை நடந்துகொண்டிருக்கிறது! இந்த மன ஓட்டம் அடங்கினால் என்ன நடக்கும்? உலகம் மறைந்துவிடுமா? நம்முடைய கடமைகள் நின்றுவிடுமா? அப்படியில்லை.
உலகம் வழக்கம்போல இயங்கும்
நாமும் நம்முடைய கடமைகளைச் செய்வோம். ஆனால், உள்ளே தேவையற்ற அலைச்சல் குறையும். தாயுமானவர் சுட்டிக்காட்டும் மௌனத்தின் சாரம் இதுதான். இறைவனைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பதைவிட, அவனை உணர்வதற்கான அக அமைதியை அடைவது முக்கியம். இறைவனைப் பற்றிய ஆயிரம் விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஒரு நிலை. இறைவனை அனுபவிப்பது இன்னொரு நிலை. சர்க்கரையின் இனிப்பைப் பற்றி எவ்வளவோ பேசலாம். ஆனால், அதைச் சுவைத்தால்தான் இனிப்பு என்ன என்பது தெரியும். அதேபோல, மௌனத்தைப் பற்றிப் பேசுவது வேறு; மௌனத்தில் நிலைத்திருப்பது வேறு.
மௌனமே உபதேசம்
ஸ்ரீ ரமண மகரிஷியின் உபதேசத்தைப் புரிந்துகொள்ள இந்த வேறுபாடு மிகவும் உதவும். ரமணரிடம் பலர் பலவிதமான கேள்விகளுடன் வந்தார்கள். இறைவன் யார்? ஆன்மா என்றால் என்ன? மனத்தை எப்படி அடக்குவது? முக்தியை எப்படிப் பெறுவது? என்று கேள்விகள் தொடர்ந்தன. ஆனால், ரமணரின் உபதேசத்தின் தனிச் சிறப்பு, எல்லாக் கேள்விகளுக்கும் நீண்ட விளக்கங்களைக் கொடுப்பதில் இல்லை. கேள்வி கேட்பவனை அவனுடைய மூலத்தை நோக்கித் திருப்புவதில்தான் இருக்கிறது. அவருடைய மௌன உபதேசம் புகழ்பெற்றது. அந்த மௌனம் என்பது பேச முடியாமல் இருப்பதல்ல. சொல்லால் முழுமையாக விளக்க முடியாத ஓர் உண்மையை, தன்னுடைய இருப்பின் மூலமாக உணர்த்துவது.
ஒருவர் அமைதியாக அமர்ந்திருக்கலாம். ஆனால், அவருடைய மனத்தில் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கலாம். இன்னொருவர் பேசிக்கொண்டே தன்னுடைய கடமைகளைச் செய்துகொண்டிருக்கலாம். ஆனாலும், அவருக்குள் ஆழமான அமைதி இருக்கலாம். எனவே, மௌனம் என்பது வெளிப்புறச் செயல்களைக் கொண்டு மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அது உள்ளத்தின் நிலை. ரமணரின் பார்வையில், நம்முடைய இயல்பான நிலை ஆத்ம சொரூபமே. எண்ணங்களும் மன அலைச்சல்களும் அந்த இயல்பை மறைப்பது போலத் தோன்றுகின்றன.
அவை அடங்கும்போது, புதிதாக ஒன்றைப் பெற வேண்டியதில்லை. ஏற்கெனவே நம்முள் இருக்கும் உண்மை வெளிப்படுகிறது. இதற்காகக் காட்டுக்குச் செல்ல வேண்டுமா? குகையில் வாழ வேண்டுமா? உலக வாழ்க்கையைத் துறக்க வேண்டுமா?
அவசியமில்லை
வெளிப்புறச் சூழல் உதவியாக இருக்கலாம். ஆனால், உண்மையான மௌனம் உள்ளத்தில்தான் மலர வேண்டும். ‘நான் யார்?’ - ஆத்ம விசாரத்தின் தொடக்கம், தாயுமானவர் காட்டும் மௌனப் பாதைக்கும் ரமண மகரிஷி காட்டும் ஆத்ம விசாரத்துக்கும் இடையே இங்கே ஒரு நெருக்கமான தொடர்பைப் பார்க்க முடிகிறது. ரமண மகரிஷியின் புகழ்பெற்ற உபதேசம் ‘நான் யார்?’ என்பதாகும். இது ஒரு தத்துவக் கேள்வி மட்டுமல்ல, அதற்கான விடையைப் புத்தகங்களில் தேட வேண்டிய கேள்வியும் அல்ல. நம்முடைய கவனத்தை வெளி உலகத்திலிருந்து திருப்பி, நம்மையே ஆராயச் செய்யும் ஒரு வழி. பொதுவாக, ‘நான் யார்?’ என்று கேட்டால், நம்முடைய பெயரைச் சொல்வோம். நம்முடைய தொழிலைச் சொல்வோம். நம்முடைய குடும்ப உறவுகளைச் சொல்வோம்.
நான் இந்த உடல், இந்த மனம், இந்த வாழ்க்கை என்று பல அடையாளங்களை முன்வைப்போம். ஆனால், இவை அனைத்தையும் அறிந்துகொண்டிருக்கும் அந்த ‘நான்’ யார்? உடல் மாறுகிறது. குழந்தைப் பருவ உடல் இப்போது இல்லை. எண்ணங்கள் மாறுகின்றன. விருப்பங்கள் மாறுகின்றன. உணர்ச்சிகள் மாறுகின்றன. நேற்று மகிழ்ச்சியாக இருந்த விஷயம் இன்று மகிழ்ச்சியைத் தராமல் போகலாம். இவ்வளவு மாற்றங்களுக்கு இடையிலும், ‘நான் இருக்கிறேன்’ என்ற உணர்வு மட்டும் தொடர்ந்து இருக்கிறது. அந்த ‘நான்’ என்ற உணர்வின் உண்மையான இயல்பை ஆராய்வதுதான் ஆத்ம விசாரம்.


