Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அனைத்திற்கும் அப்பாற்பட்ட அளவிட முடியாதவள்

184. நிஸ்துலா, 185. நீலசிகுரா, 186. நிரபாயா, 187. நிரத்யயா, 188. துர்லபா, 189. துர்க்கமா, 190. துர்க்கா, 191. துக்க ஹந்த்ரீ, 192. ஸுக ப்ரதா.  இந்த நாமங்களில் முதல் நான்கு நாமங்கள் என்பது நாம் ஏற்கனவே பார்த்த நிர்க்குண உபாசனை குறித்த நாமங்கள் என்றே கொள்ளலாம். முதல் நாமாவான நிஸ்துலா என்பதைப் பார்ப்போம். துலா என்று கேள்விப்பட்டிருப்போம். துலா என்றால் தராசு என்று பொருள். தராசை எதற்கு நாம் உபயோகப்படுத்துவோம். மேலும், அந்த துலாவில் இரண்டு பகுதிகளிலும் இரண்டு தட்டுகள் இருக்கும். ஒரு தட்டில் பொருளும். இன்னொரு தட்டில் எடைக் கல்லும் இருக்கும். அப்போது இந்த எடைக்கு இந்த எடை சரியாக வருமா என்று அளக்கப்படுகிறது. இதற்குப் பிறகு அந்தப் பொருள் அளக்கப்படு கிறது. நிஸ்துலா என்றால் அளக்க முடியாதது. ஒன்றை வைத்துக்கொண்டு விட இன்னொன்று என்று ஒப்பீடு செய்ய முடியாது.

எனவே, அம்பிகையை விட உயர்ந்த வஸ்து இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே கிடையாது. தமிழில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவள் என்று சொல்வார்கள். சமானாகித வர்ஜிதா என்று சொல்வார்கள். ஜே. கிருஷ்ணமூர்த்தி கூட, Truth is immesurable என்று எப்போதும் சொல்வார். அம்பிகையைவிட எதுவும் இல்லை என்பதை நிர்குணமாகவும் சொல்லலாம். சகுணமாகவும் சொல்லலாம். இதற்கு அடுத்ததாக நீல சிகுரா - இதுவரையிலும் நிர்குணமாகவே சொல்லிக் கொண்டிருந்த வசின்யாதி வாக் தேவதைகள், மீண்டும் நம்மை அம்பாளின் சகுண ரூபத்தை சொல்லி அதையே இங்கு நீலசிகுரா என்று வர்ணிக்கிறார்கள்.

நீல சிகுரா என்றால் நீல நிறமுடைய கூந்தலை உடையவள் என்று பொருள். நீல நிறமுடைய கூந்தல் என்பது அவளுடைய அழகைக் காண்பிக்கிறது. அவள் உருவமற்றவளாக இருந்தாலும் இங்கு நமக்காக உருவமுள்ளவளாக வருகிறாள் என்று காண்பிக்கிறது. இன்னும் குறிப்பிட்டு நீல நிறக் கூந்தல் என்று சொல்வதற்கும் காரணம் உண்டு. இந்தப் பிரபஞ்சத்தில் விரிந்து பரந்து இருக்கக் கூடிய எல்லா நிறங்களும் நீல நிறமாகத்தான் இருக்கும். நாம் வானத்தை எடுத்துக் கொண்டால் விரிந்து பரந்த வஸ்துதான். அதுவும் நீல நிறம்தான். கடலும் நீல நிறம்தான். மலைகள் கூட தூரத்திலிருந்து பார்த்தால் நீலமாகத்தான் தெரியும். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் விரிந்து பரந்து இருக்கிறாள். அவளுடைய சரீரம்தான் இந்த பிரபஞ்சம். அவளுடைய கூந்தல் அதாவது கேசம்தான் பிரபஞ்சமாக விரிந்து பரந்து இருக்கிறது. அதைத்தான் இங்கு நீல சிகுரா என்கிறார்கள்.

இதற்கு அடுத்ததாக நிரபாயா என்கிற நாமம் வருகின்றது. இந்த பிரபஞ்சத்திற்கு தோற்றமும் அழிவும் உண்டு என்று சொல்கிறோம். அம்பாள் இந்த பிரபஞ்ச சொரூபியாக இருப்பதால் அவளுக்கு இந்த தோற்றமும் அழிவும் உண்டா எனில், இல்லை என்பதே பதில். எனவே, இங்கு நிரபாயா என்றால் அழிவற்றவள் என்றே பொருள். இதற்கு அடுத்ததாக நிரத்யயா என்கிற நாமம். இது ஒரு முக்கியமான நாமமாகும். தனக்கென்று ஒரு எல்லை வகுத்துக் கொண்டிருப்பது. நாமெல்லாம் எப்படி தர்மத்தை மீறக் கூடாது என்று வைத்துக் கொண்டிருப்பதுபோல, அம்பாளும் என்றைக்கும் தர்மத்தை மீற மாட்டாள். அதனால், அம்பாளுக்கு நிரத்யயா என்று பெயர்.  அடுத்ததாக துர்லபா என்கிற நாமம் வருகின்றது. அம்பிகையானவள், நிர்குணமாக இருப்பதால் அவ்வளவு அம்பிகையை எளிதாக தன்னகத்தே சுருக்கிக் கொண்டு உணரமுடியாது. உணர்ந்து கொள்ள முடியாது.

பெரிய யோகிகள், மகான்களெல்லோரும் ஒரு கட்டத்திற்கு மேலே அதை விளக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள். அதனாலேயே மகான்கள் மௌனமாகி விடுகிறார்கள். நாம் ஒரு உயரத்தில் வைத்திருந்தோமானால் அந்த உயரத்தை விட பன்மடங்கு உயர்ந்ததாக இருக்கிறது. உணர்தலும் உணந்ததற்கும் அப்பாலாக இருக்கிறாள். அவ்வளவு எளிதாக capture செய்ய முடியாததால், இந்த நாமம் அம்பிகையை ‘துர்லபா’ என்று விளக்குகிறது. இதற்கு அடுத்த நாமங்களான துர்க்கமா, துர்க்கா என்பது குறித்துப் பார்ப்போம்.

அம்பிகையானவள் துர்லபமாக இருக்கிறாள் என்று சொன்னால் கூட, அவளையே அடைந்த பக்தர்களுக்கு அவள் சுலபமானவள். அப்படி தன்னையே சரண் என்று அடைந்த பக்தர்களை, குழந்தைகளை கோட்டை போன்று அரணாக நின்று காப்பற்றுபவள். ஒரு அரசன் எப்படி சுற்றிலும் கோட்டை கட்டி நாட்டு மக்களை அரண் அமைத்து காப்பாற்றுவானோ... அதுபோல அம்பிகை காப்பதால் அம்பிகைக்கு துர்க்கமா - துர்க்கா என்று பெயர். துர்க்கமா என்றால் நமக்கு இடையூறாக இருக்கக் கூடிய விஷயங்களை அழிக்கக் கூடியவள். புராணப்படி துர்க்கமன் என்கிற அசுரனை அம்பிகை அழித்ததால் அவளுக்கு துர்க்கமா என்று பெயர் வந்தது. துர்க்கா என்றால் நமக்கு கோட்டை மாதிரி இருந்து காப்பாற்றுவாள் என்று பொருள்.

இதற்கு அடுத்து, துக்க ஹந்த்ரீ - ஸுகப்ரதா எனும் நாமங்கள். இப்போது நிர்குணமாக அம்பிகை சொல்கிறோம். சகுணமாகச் சொல்கிறோம். பிரபஞ்சமாக அவளே விரிந்திருக்கிறாள் என்று சொல்கிறோம். துர்லபம் என்று சொல்கிறோம். கிடைக்க மாட்டாள் என்று சொல்கிறோம். உணர முடியாதது என்றும் சொல்கிறோம். நம்மைக் காப்பாற்றுவாள் என்றெல்லாமும் சொல்கிறோம். இதெல்லாம் எதற்கு என்றால், மிகவும் எளிமையானது. இந்த இரண்டு நாமங்கள் அதற்கான காரணத்தை நமக்கு காண்பித்துக் கொடுக்கிறது. ஒன்று துக்க ஹந்த்ரீ. இன்னொன்று சுக ப்ரதா.

நமக்கு அநாதி கர்ம வாசனையினாலும், மூல அஞ்ஞானத்தினாலும் ஏற்பட்டிருக்கக் கூடிய இந்த துக்கத்தை நிவாரணம் செய்வதால் அம்பிகைக்கு துக்க ஹந்த்ரீ என்று பெயர். இந்த துக்கத்திற்கு நாம் சம்ஸாரம், பிறப்பு, இறப்பு என்றெல்லாம் என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இப்படி துக்கத்தை நிவாரணம் செய்து, நமக்கு பரமானந்தத்தை அளிப்பதால் சுக ப்ரதா என்று பெயர். இப்போது மேலே பார்த்த முதல் ஏழு நாமங்களின் லட்சியார்த்தமே கடைசி இரண்டு நாமங்கள்தான்.ஒரு வீட்டில் அம்மா காலை முதல் இரவு வரை நிறைய விஷயங்கள் செய்வார்கள். ஒரு சில நேரம் அன்போடு இருப்பார்கள். சிலசமயம் கோபமாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு தெரிந்த சில விஷயங்கள் செய்வார்கள். குழந்தைகளுக்கு தெரியாமல் சில விஷயங்கள் செய்வார்கள். ஆனால், என்னதான் செய்தாலும் அம்மா செய்கின்ற எல்லா விஷயமும் குழந்தைக்கு கெட்டதை விலக்கி நல்லதைச் செய்ய வேண்டுமென்பதிலேயே கவனமாக இருக்கும்.

எப்படி நம் வீட்டிலுள்ள ஒரு அம்மா இப்படிச் செய்கிறாளோ, அதேபோல ஜகன்மாதாவான அம்பிகையானவளும் நம்முடைய துக்கத்தை போக்குவாள். நமக்குச் சுகத்தைக் கொடுப்பாள். இதற்கான கோயிலைப் பார்ப்போம். மேற்சொன்ன நாமங்களில், அம்பாளின் பரம மங்களமான மந்த்ரமாகவே கருதப்படுகிற ஒரு நாமம் இந்த ஸ்லோகத்திற்குள் இருக்கிறது. அதுவே துர்க்கா என்கிற நாமம். எப்படி ராம, கிருஷ்ண, சிவ, நாராயண நாமங்களை மகா மந்திரங்களாகச் சொல்கிறோமோ, அதுபோல துர்க்கா என்கிற நாமமே அம்பாளின் மகா மந்திரமாகும். துர்க்கா… துர்க்கா… என்று சொன்னாலே மகாமந்திர ஜபமாகும்.சில கோயில்களில் மூல மூர்த்தியை விட பரிவார தேவதா மூர்த்தங்கள் பிரசித்தியாக இருக்கும். அப்படி ஒரு தலமே கும்பகோணத்திற்கு அருகேயுள்ள பட்டீஸ்வரம் துர்க்கை ஆகும். இவள் இத்தலத்தில் பெரும் வரப் பிரசாதியாகத் திகழ்கிறாள்.

(சுழலும்...)