Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பிறப்பே அறியானை பெற்றவள்

காரைக்கால் அம்மையார் கதை - 3

சண்டேஸ்வர குருக்கள் தனதத்தரைப்பற்றி விவரிக்கும்போதே, தனதத்தரின் குடும்பம், தன்நிலைக்கு சற்றும் குறைந்ததில்லை என்பதும், தன்தகுதிக்கும், கவுரவத்திற்கும் நேரானது என்பதும் நிதிபதிக்கு புரிந்தது. அதுமட்டுமல்ல, செவிவழிச் செய்தியாக தனதத்தரைப்பற்றி, சிறப்பாக அவருக்கு தெரிந்திருந்தது. அவற்றையெல்லாம் விட, பக்தியும், ஒழுக்கமும், கல்வியறிவும், கற்புநெறியும், பெரியோரிடம் பெருமரியாதையும் கொண்ட புனிதவதியின் குணநலன்களைப்பற்றி, குருக்கள் சிலாகிக்கும்பொழுது, நிதிபதியின்மனது நிறைந்தது.

ஈசன்மீது அவள்கொண்ட பக்தியும், உலகாளும் ஈசனை “அப்பா”வென அழைக்கிற குணமும், அந்த பக்தியாலும், குணத்தாலும், அவ்வப்போது ஈசனின்மீது போற்றியாக, சிறுசிறு பாடல்களை புனிதவதி எழுதுவாளென்றும், அப்படி, தான் இயற்றியப் பாடல்களை, கைலாசநாதர் முன்நின்று, அழகாகப் பாடுவாளென்றும் சொன்னபோது, மிகுந்த சந்தோசமாயிருந்தது.எல்லாவற்றிற்கும் மேலாக, தினமும் சிவனடியார் ஒருவருக்கு உணவிட்டபின்னரே, தான் உணவுண்ணும் விரதத்தை, புனிதவதி நோற்றிருக்கிறாள் என்பதை குருக்கள் சொல்லி கேட்டபோது, நிதிபதி உள்ளுக்குள் நெகிழ்ந்துபோனார். அதைக் கேட்ட அந்தக்கணமே, “இவளே என் இல்லத்தின் மருமகள்” என உறுதியானார்.

இருவரும் பேசிக்கொண்டிருந்தபோதே, இடையில் வந்த பரமதத்தன், தான் வாசலில் பார்த்த, பெண்ணைப் பற்றித்தான் இவர்களிருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது, மெல்லமெல்ல புரிந்து சந்தோசமானான்.மனதுநிறைந்த நிதிபதி, தன்விருப்பத்தையும், சம்மதத்தையும், சண்டேசுவர குருக்களிடம் தெரிவித்து விடைபெற்றார். இல்லம் திரும்பி தன் மனைவி, மகன், சுற்றத்தாருடன் கலந்து பேசி, சரியான காலஅவகாசத்தில், அவர்கள் சம்மதமும் அறிந்தபின்னர், முறையாக, பெண் கேட்டு, பேச விருப்பம் தெரிவித்து, தனதத்தருக்கு தகவலனுப்பினார்.

அதற்கு முன்பே, பரமதத்தன் குறித்த விவரங்களை விசாரித்திருந்த தனதத்தரும் சந்தோஷமாய் சம்மதம் சொல்ல, அக்கால வழக்கப்படி மகவுட்பேசுதல் என்கிற மரபுப்படி, பெண்பார்க்க நிதிபதி பக்கமிருந்து முதலில் ஆறு சுமங்கலிப் பெண்கள், தனதத்தர் இல்லம் வந்து, பரமதத்தனின் உயர்ந்த குணநலன்களை சொல்லி, பெண்கேட்டனர். புனிதவதியைக் கண்டதும் மிகவும் பிடித்துப்போய், சந்தோஷமாய் குலவையிட்டு, மங்கலவார்த்தை சொல்லி கிளம்பினர்.

திருமணப் பேச்சின் அடுத்த நகர்வாக, சீர்வரிசை குறித்து பேச்சு வந்தது. இக்காலம்போல் அக்காலத்தில், வரதட்சணையென்பது இல்லை. ஆனால், மணமகன் வீட்டார், பெண்ணைப் பெற்றவருக்கு, பொருட்களையும், சீர்களையும் வழங்கியே பெண்ணெடுப்பார்கள். “இவள் எங்கள் வீட்டு மருமகள் என்று ஊருக்கு உறுதி செய்வார்கள். அதற்கு “மகட்கொடை” என்று பெயர். அந்தவழக்கத்தின் மிச்சத்தையே, இக்காலத்தில் “பரிசம் போட்டாச்சு” என்கிற சொல்லால் அழைக்கிறோம்.

அப்படியான சீர்களை குறித்து பேசியபோது, ஒருகுழப்பம் வந்தது.தன் சுற்றத்தாருடனும், ஊர் பெரியோருடனும் வந்து சீர்களைக் குறித்து நிதிபதி கேட்கையில், பெரிதாய் ஆர்வம் காட்டாது, தங்கள் விருப்பம் என சொல்லிய தனதத்தருக்கு, ஒரேயொரு விருப்பமே இருந்நது. “எனக்கிருப்பது ஒரே மகளய்யா. அதனால் திருமணம் முடிந்தபின், மணமக்களை மணமகன் வீட்டிற்கு அனுப்பாது, எனது ஊரிலேயே ஒரு பெரிய மாளிகையில் தங்க வைக்கிறேன். மணமகனுக்கான சம்பாத்தியச் சூழலையும் நானே ஏற்படுத்தித் தருகிறேன்” என்றார்.

ஏறக்குறைய வீட்டோடு மாப்பிள்ளை என்கிற இந்த ஒப்பந்தம், மண மகன் வீட்டாரை சற்று முகம் சுளிக்க வைத்தது. குறிப்பாக, பரமதத்தனின் தாயினை கோபப்பட வைத்தது. ஆனால், நிதிபதியும், சபைப் பெரியவர்களும், தனதத்தரின் மகள்பாசத்தை அவருக்கு புரியவைத்தனர். காரைவனத்திற்கும்,நாகப்பட்டினத்திற்கும் அப்படியொன்றும் பெருங்காத தூரமில்லையென தெரிய வைத்தனர். மெல்ல, இருந்த வருத்தமும் தீர்ந்து, ஒரு நல்லநாளில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது.

புனிதவதிக்கு நடந்தவையெல்லாம் கவனிக்க ஆச்சர்யமாயிருந்தது.“என் பிரார்த்தனைப்படி, என்னை வேறெங்கும் நகர்த்தாது, உனது எல்லையிலேயே வைத்துக்கொண்டாயே அப்பா” என ஆச்சர்யப்பட்டாள். ஒரு அரைநாள் அடைமழையிலேயே, விரைவில் நிரம்பிவழிகிற பரந்த ஏரியைப்போல, சட்சட்டென எல்லாம் கூடிவந்து, அப்படி கூடிவந்தபோது எழுந்த சிறுகுழப்பமும், உடனே சரியாகிய தன்திருமணம், அவளுக்கு அதிசயமாயிருந்தது. பரமதத்தனின் நற்குணங்களை, தோழிகள் சொல்லக்கேட்டு, அவளுக்கும் மிகவும் பிடித்திருந்தது.

எதுவாயினும், தன் தாய்தந்தையரை பிரியாதிருக்கப்போகிறோம் என்பதைவிட கைலாசநாதரை பிரியமாட்டோம் என்பது அவளுக்கு அத்தனை சந்தோசமாயிருந்தது. புனிதவதி ஈசனின்கருணைக்கு நன்றிசொன்னாள். பெரியோர்கள் முடிவுசெய்த நன்னாளும் வந்தது. இரு பெரும்வணிகக் குடும்பங்களின் திருமணம் என்பதால் ஊரே திருவிழாபோலிருந்தது.பத்து நாட்களாக, திருமண வேலைகளில் பரபரப்பாயிருந்த தனதத்தர், பரந்த தன்மாளிகையின் முன்புறத்திலேயே, மகளின் திருமண ஏற்பாடுகளை செய்திருந்தார். மணமேடையில் புது மணல் பரப்பப்பட்டிருந்தது.

மரத் தூண்களும், சிற்பங்களும், அழகாக நிறுத்தப்பட்டிருந்தன. தோரணங்களாலும், மலர்ச் சரங்களாலும், அலங்கரிக்கப்பட்டிருந்தன. இருபுறத்திலும், முழங்கை உயர மரவிளக்குகள் சுடர் விட்டுக் கொண்டிருந்தன. மணமேடை மட்டுமல்ல, உறவுகளாலும், நண்பர்களாலும், ஊர் பெரியவர்களாலும், நிரம்பியிருந்த அந்த திருமணச் சபை முழுவதும், புதுமணலால் பரப்பப்பட்டிருந்தது. அன்று பூத்த புதுமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அப்படி திருமணச் சபையில் புதுமணல் பரப்புவதும், பூத்த மலர்களால் அலங்கரிப்பதுவும் அக்கால வழக்கமாயிருந்தது. மணமேடையில் நின்றிருந்த உறவுகளின்மத்தியில், நடுநாயகமாய் புன்னகையோடு பரமதத்தன் அமர்ந்திருந்தான். மணமேடையை சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த, வெற்றிலைப் பாக்கு, தேங்காய், பழங்கள் கொண்ட தட்டுகள் மத்தியில், அட்சதைகள் கொண்ட ஒரு தட்டில் பனையோலை தாலியிருந்தது.

பெரும்செல்வந்தரானாலும், அது அக்கால வழக்கமாயிருந்தது. அதில் பரமதத்தன் பெயரும், புனிதவதியின் பெயரும் வாழ்த்தி எழுதியிருந்தது. அந்தப் பனையோலைக்கு, “தால பத்திரம்” என்று பெயர். அதிலிருந்து தான், மங்கலநாணிற்கு தாலி என்ற சொல் வந்தது.கிழக்கு பார்த்து அமர்ந்திருந்த வாத்தியக்குழு, மங்கல இசை முழங்கிக் கொண்டிருந்தது. குமரிப் பெண்களின் சிரிப்பொலியும், குழந்தைகளின் கூச்சலொலியும், அந்த இடத்தின் இன்னொரு இசையாயின. இன்னொரு பக்கம் தயாராகிக் கொண்டிருந்த விருந்தின் வாசம், வந்தவர்களின் பசியை தூண்டிக் கொண்டிருந்தது.

இருள்நீங்கி, வெளிச்சம் பரவிய அந்த விடியலில், சரியான சுபமுகூர்த்த ஆரம்ப நாழிகையில், அலங்கரிக்கப்பட்ட புனிதவதி, மேடைக்கு அழைத்து வரப்பட்டு, மனையில் அமரவைக்கப்பட்டாள். முகூர்த்தம்நெருங்க, பெண்கள்குலவையிட, பெரியோர் ஆசிர்வதிக்க, பெற்றவர்கள் கண்கலங்க, வந்திருந்த நல்லோர்கள் அட்சதை தூவ, பரமதத்தன் புனிதவதியின் கழுத்தில் மங்கலநாண் சூட்டினான்.

அப்படிச் சூட்டும்போது, தலை கவிழ்ந்து புன்னகையோடு, குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த புனிதவதியை, சற்றே ஓரக்கண்ணால் பார்த்த பரமதத்தன், மிரண்டுபோனான். ஐந்துமுகம் கொண்ட குத்துவிளக்கைப்போல பிரகாசித்த, ஐவகை குணங்களைக் கொண்ட புனிதவதியின் முகம் அவனை மயக்கியது. “என்னவொரு பேரழகு” என வியந்தான். “நான் பாக்கியசாலி” அவனே அவனுக்கு சொல்லிக்கொண்டான்.

அப்படி அவன் வியந்த அந்தக் கணத்தில், புனிதவதியை, காரைக்காலம்மையாராக்கும் செயலுக்கு, புன்னகையுடன் சிவன் சித்தமானான். எல்லா சுபச்சடங்குகளும் இனிதாய் நிறைவேறியது. விழுந்து வணங்கிய புதுமணத் தம்பதியினர்க்கு, கண்ணீர் மல்க பெற்றோர்கள் ஆசி கூறினர். வந்த உறவுகளும், ஜனங்களும் வயிறார உண்டு, தம்பதியரை வாயார வாழ்த்தின.தன்மகள் திருமணத்தை நடத்தித் தந்த சண்டேசுவர குருக்களை, தனதத்தர் கண்கள் கலங்கியபடி வணங்கினார். பதறியபடி, வணக்கத்தை மறுத்த சண்டேசுவரகுருக்கள், “எல்லாம் அவன் செயல்” என வான்நோக்கி கைகாட்ட, தனதத்தர் கைலாசநாதர் கோபுரத்து திசைநோக்கி வணங்கி, மனதால்ஈசனின்தாள் பணிந்தார்.

கடைசியாக, பரமதத்தன் - புனிதவதி திருமணத்திற்குவந்து சிறப்பித்த அத்தனை ஜனங்களுக்கும், தலைக்கு மேல்கைகூப்பி நன்றிசொன்னார். திருமணவிழா நிறைவானது. ஏற்கனவே தனதத்தர் தந்திருந்த வாக்கின்படி, உள்ளூரிலேயே தம்பதியர் குடும்பம் நடத்த தனிஇல்லம் அமைத்துத் தரப்பட்டது. ஒரு நல்லநாளில் பரமதத்தனும், புனிதவதியும் புதுமனையில் பால்காய்ச்சிக் குடியேறினர். மனமொத்த தம்பதி களென இருவரும் செம்மையாக இல்லறம் நடத்தினர்.

பரமதத்தன் புனிதவதியை உள்ளங்கையில் தாங்கினான். தன்உயிரென நெஞ்சில் ஏந்தினான். கற்பொழுக்கத்தாலும் , பக்தியொழுக்கத்தாலும், இல்லறத்தை சிறப்பாய் நடத்திய புனிதவதி, தன் கணவனும், தன் கணவனைச் சார்ந்தவரும், மனம் நோகா வண்ணம் குடும்பம் நடத்தினாள். தன்மகளின் சந்தோஷ வாழ்வு கண்டு, மனம் மகிழ்ந்த தனதத்தர், சில காலத்திலேயே, உள்ளூர் வியாபாரத்தில் சில பொறுப்புகளையும், இனி போவதில்லையென முடிவெடுத்திருந்த, கடற்பயணத் தொடர்பு வியாபாரங்களின் பொறுப்பையும், பரமதத்தனிடம் ஒப்படைத்தார்.மிகுந்த மரியாதையுடன் தன் மாமன் வழங்கிய பொறுப்பை, பரமதத்தன் சந்தோசமாய் ஏற்றான். ஏற்கனவே முன்அனுபவமிருந்ததால், புது இடத்தில் தொழில் செய்வது அவனுக்கு அத்தனையொன்றும் சிரமமாக இல்லை.

எல்லாவற்றையும் விட, புனிதவதியுடனான திருமணவாழ்வு, அவனுக்கு மிகுந்த நிறைவாயிருந்தது. இல்லற தர்மம் வழுவாது குடும்பம் நடத்துகின்ற தன் மனைவியால் மனது நிறைந்திருந்தது. காலையில், தனக்குமுன் விரைவாக எழுந்து, குளித்து, இல்லக் கடமைகளை முடித்து, சிவ பூஜையை குற்றமின்றி செய்து, தனக்கான தேவைகளையும் மனமறிந்து முடித்து, நெற்றி நிறைய திருநீறும்,மங்கலப் பொட்டும், மாறாப் புன்னகையுமாய் நிற்கும் புனிதவதியை கண்டு கர்வப்பட்டான். தன் மாமன், மாமியை, தாய் தந்தையரென எண்ணி உபசரிக்கும் அவளது அன்பாலும், வந்த உறவுகளை வரவேற்று விருந்தளிக்கும் அற்புத விருந்தோம்பல் பண்பினாலும் மகிழ்ச்சியானான். தனக்காக காத்திருந்து, தான் உண்டபின்னே உண்ணும், மனையாளை கோபித்துக் கொண்டாலும், உள்ளுக்குள் அவள் அன்பினால், நெஞ்சு நெகிழ்ந்து போனான்.

ஆனால், அவள் விரத விஷயத்தில்மட்டும், பரமதத்தன் கோபப்பட்டான். பலமுறை சொல்லியும் கேளாது புன்னகையுடன் தவிர்த்த புனிதவதியிடம், அன்று சற்று வேகமாய் பேசினான்.

“இது என்ன முட்டாள்தனம் புனிதவதி, உன்னை வருத்திக் கொண்டு ஏன் இப்படி செய்கிறாய்.” “என் அப்பனுக்கு நன்றி சொல்லவே அத்தான்” புன்னகை மாறாது புனிதவதி பதில் கூறினாள்.“எதற்கு நன்றி.”

“இப்படியொரு அன்பான கணவனையும், அழகான வாழ்வையும் தந்ததற்கு”

“ஆனால், திருமணத்திற்கு முன்பேயே இப்படியொரு விரதமிருந்தாயாமே”

“அப்போது நல்லகணவனை வேண்டி. இப்போது நல்லகணவனை தந்தமைக்கு”

“அதுதான் உன்எண்ணமெனில் கோயிலுக்கு போ, உன் கைலாயநாதருக்கு அபிஷேகம் செய். கூடைகூடையாய் புஷ்பாபிஷேகம் செய்து கண்ணாரப் பார். சந்தோசப்பட்டுக் கொள். அதை விடுத்து, தினம் யாரோ ஒருவருக்கு, இல்லத்தில் உணவிட்டபின்னே தான் உணவுண்பேன் என்பது மூடத்தனம்.”என்றுமில்லாது இன்று சற்று கோபமாய் பேசுகிற பரமதத்தனை அமைதியாக நோக்கிய புனிதவதி மெல்லியகுரலில் பதில்பேசினாள்.

“அன்பிற்கினியவரே, அவர்கள் யாரோ ஒருவரில்லை, சிவனடியார்கள். ஈசனின் மறு உருவமென நான் நம்பும் சிவ ரூபங்கள்.”

“அப்போது ஈசனுண்டா உண்டா புனிதவதி?”

“ஈசனில்லாது இங்கு எதுஉண்டு சொல்லுங்கள்.”

“வாதம்வேண்டாம் புனிதவதி, தென்படாத இறைவனைதொழுதல் சரியா?”

“தேடாத எவருக்கும் தென்படான் ஈசன்.”

“தேடியவர்கள் எல்லோரும் கண்டனரா என்ன?”

“மண்ணில் புதைந்திருக்கும் ஒரு மரத்தின் ஆணிவேரை காண ஆழத் தோண்ட வேண்டும். தோண்டத் தோண்ட, என்றேனும் பிரமாண்ட மரத்தின் மூலம் கண்ணுக்கு தென்படும். அதேபோல, தன்னுள் அமர்ந்து, ஆழ்ந்து, அகழ்ந்து தேடியவர் நிச்சயம் காண்பார்கள்.”

“பிறகேன் இந்த தானங்கள், தர்மங்கள், வழிபாடுகள்?”

“ஆழ்ந்து செல்வதை தூண்டி விடவே இவைகள் அத்தான்.”

“ஆழ தோண்டத் தோண்ட, அடியோடு மரம் சாய்ந்து விடுமே.”

“இறைவனை ஆழ்ந்துதேடுபவர் மனமும் அடியோடு சாய்ந்து விடும். சிவசிந்தனை நிலையாகும். இங்கு மண்ணில் பிறரைச் சார்ந்திருத்தலே மனித குணமாயிருக்கிறது. மரத்தைப் பற்றிய கொடிபோல, அடுத்தவருடன் பிணைத்துக் கொள்ளுதலே மனித சிந்தையாயிருக்கிறது. பெற்றோரைப்பற்றியபடி பிள்ளைகள், பிள்ளைகளைப்பற்றியபடி பெற்றோர். கணவனைப்பற்றியபடி மனைவி, மனைவியைப் பற்றியபடி கணவன் என எல்லோரும், எவரையேனும் சார்ந்திருக்கிறோம். உண்மையில், ஈசனை சார்ந்திருப்பதே உயிர்களின் இயல்பு. உறவுகளின் மாயையில், நாம் நம் ஈசனை மறந்தே போய்விட்டோம். எனவே, பற்றுக பற்றுஇலான் பற்றினை. அப்படிப் பற்றிக்கொள்ள, தன்னை முழுமையாக அகழ்ந்து, ஆழ்ந்து தேட, மனம் முழுதும் சிவம் நிறையும். நிறைந்தபின், தினம்தினம் சிவதாண்டவ தரிசனம்தான்.”

“போதும் தர்க்கம் புனிதவதி, இல்லாதவர்க்கு, இயலாதவர்க்கு உணவிடுதல், பொருளுள்ளோரின் தர்மமென நான்நம்புகிறேன். வந்தோரின் வயிறுபுடைக்க உணவிடுதல் நம் வணிகமரபு. அதை சந்தோசமாய்செய். அள்ளியள்ளி வழங்கு. ஆனால், இப்படி பட்டினியிருந்து உன்னை வதைத்துக் கொண்டு, என்னையும் வதைக்காதே.” புனிதவதிமீது, பரமதத்தன், கொண்டிருந்த அன்பும், பாசமும், அவனை அப்படி பேசவைத்தது. பரமதத்தன் வயிறாற உணவிடுதலை தவறென்று சொல்லவில்லை. ஆனால், இல்லாத இறைவனுக்காக தன்னை வதைத்துக் கொள்ளுதல் ஏனென்ற எண்ணத்தில்தான் எதிர்த்தான்.

ஒரு கட்டத்தில், தான் எதிர்ப்பது புனித வதிக்கு வருத்தம் தருகிறது என்பது புரிந்து, அவள்மீது கொண்ட காதலால், “சரி, உன் விருப்பம்” என அனுமதி தந்தான். ஆனால், “உன் விருந்தோம்பலின்போது, நானிருக்கமாட்டேன்” என்றான். அதுமட்டுமில்லாது, “இனி நீ உணவுண்ண தயாரான பின்பே, அப்படி தயாராகியபின், உணவுண்ண அழைத்த பிறகே, வியாபார தலத்திலிருந்து இல்லம் வருவேன்” என்றான். புனிதவதியின்மீது கொண்ட அன்பினால் அதை கட்டளையாகவே இட்டான். அவனையும் அறியாமல், ஒரு சிவனடியார் உண்டபின்னே உண்ணும், புனிதவதியின் விரதத்தை, அவனும் மேற்கொண்டான்.

தன்னை ஏற்றுக்கொண்டவர், ஏங்கி யழைத்தாலும் வராத இறைவன், தன் இருப்பை குறித்து கேள்வி கேட்பவர்க்கு, தன்னை நிரூபிக்க, உடனே இறங்கி வருவான். அப்படி இறங்கி வர ஈசன் சித்தமானான். புனிதவதி கணவன்சொல் தலைமேல் கொண்டாள். இல்லம் தேடி வந்தாரை கணவன், மனைவி இருவரும் சேர்ந்து விருந்தோம்பல் செய்வது நல்ல பழக்கம். ஆனால், விருப்பமில்லாத தன் கணவனை வற்புறுத்தாது, தானே தனியாளாய் நின்று வருகின்ற சிவனடியார் மனம் கோணாது உணவிடுவாள். உண்ட சிவனடியார்மங்கலச் சொல்லால் வாழ்த்தி, கிளம்பிய பின்னர், கூடம் முழுவதும் துடைத்து, கணவன் உண்பதற்கான பதார்த்தங்களை எடுத்துவைத்து, வேலையாள் மூலம் சொல்லியனுப்புவாள். வந்த பரமதத்தன், ருசித்து உண்டு, களைப்பில் உறங்க, விசிறி விடுவாள். இவை அவளது அன்றாட வழக்கமாயிருந்தது.

அன்று வழக்கத்திற்கு மாறாக, முற்பகலிலேயே, வியாபாரத்தலத்திலிருந்து வேலையாள் வந்திருந்தான். அவன்கையில் பழக்கூடையிருந்தது. அந்த பழக்கூடையில் இரு மாம்பழங்களிருந்தன. புனிதவதி இதென்னவென்று வினவ, பரமதத்தனை பார்க்க வந்த கடற் பயணநண்பர் தந்ததாகவும், மதியஉணவின்போது உண்பதற்காக, பரமதத்தன் கொடுத்தனுப்பினாரென்றும் வேலையாள் சொன்னான். புனிதவதி பெற்றுக்கொண்டாள். மாம்பழத்தின் வாசனை, புனிதவதியின் நாசியை நெருடியது. அந்தப்பழங்களை வைத்தே, தன்இருப்பை பரமதத்தனுக்கு புரியவைக்க, ஈசன் எண்ணம் கொண்டது தெரியாத அவள், நாசியால் மாம்பழ வாசனையை ருசித்தபடியே, “எனக்கொன்று, அவருக்கொன்றென” சமையல் கூடத்தில் பிரித்துவைத்து, சமைக்க ஆரம்பித்தாள். சமைக்க ஆரம்பித்த அரைநாழிகையில், வீட்டு வாசலில், வெள்ளை நிறக்காளையொன்று கத்தியது. எட்டிப் பார்த்த புனிதவதி, சமையலறையிலிருந்து கீரைக் கட்டொன்றை, எடுத்து வந்து தந்ததும், காளை நாவால் சுருட்டியுண்டது. மீண்டும் அது ஹூம்காரமிட்டது.

சரி, காளை தானாய் நகர்ந்து போய்விடுமென, மீண்டும் அடுக்களைக்குள் நுழைந்த புனிதவதியை, “சிவோஹம்” என்ற ஒங்காரக் குரல் மீண்டும் அழைத்தது. திரும்பி வாசலைப் பார்க்க, கழுத்தில் ருத்திராட்ச மாலைகளுடன், கையில் பிச்சைப் பாத்திரத்துடன், இடுப்பில் திருநீற்றுப் பையுடன், “ஓம் நமசிவாய” சொல்லியபடி, ஒரு சிவனடியார் நின்றிருந்தார். அவருக்குப் பின்னே அந்த வெள்ளை நிறக்காளை நின்றிருந்தது. அந்தக் காட்சியை கண்டதும்,புனிதவதிக்கு தூக்கி வாரிப் போட்டது. தலையைச்சுற்ற, தூணை பிடித்துக் கொண்டாள்.

தொடரும்....

குமரன் லோகபிரியா