உண்டவல்லி குடைவரை குகைகள் - பாறையைக் குடைந்து செதுக்கப்பட்ட சிற்பக்கலைஅற்புதம்:
பண்டைய பாரதத்தின் குடைவரை தொழில் நுட்பத்தில் குறிப்பிடத்தக்கது உண்டவல்லி குகைகள் (Undavalli Caves). பொ.ஆ. 4 முதல் 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கிழக்கு நோக்கிய குடைவரைக் குகைகள், நான்கு அடுக்குகளுடன் கொண்ட ஒற்றைக்கல் குடைவரை அமைப்பிற்குப் பெயர் பெற்றது.
வரலாற்றுப் பின்னணி:
விஷ்ணுகுண்டின மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் (பொ.ஆ.420-620) இக்குடைவரை வளாகம் விரிவுபடுத்தப்பட்டுப் பெரும் மாற்றங்களைக் கண்டது. இது குப்தர் காலத்தின் மரபுசார் குடைவரை வடிவமைப்புடன், சாளுக்கிய பாணியின் தாக்கங்களையும் கொண்டு விளங்குகிறது.பாரத வரலாற்றின் இடைக்காலம் வரை இக்குகைகள் தொடர்ச்சியாக பல்வேறு அரச வம்சத்தினரின் கொடை ஆதரவு பெற்றிருந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. கொண்டவீடு ரெட்டி மன்னர்கள் மற்றும் விஜயநகரப்பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் (கி.பி. 12 முதல் 14-ஆம் நூற்றாண்டு) தொடர்பான கல்வெட்டுக் குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை.
நான்கு நிலைகளின் சிறப்புகள்:
தரைத் தளம் / முதல்நிலை: பௌத்தம் மற்றும் முந்தைய சமணக் குடைவரைப் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகக் கருதப்படும் மூன்று தனிச்சந்நதிகள் உள்ளன. இங்கு பொ.ஆ. 7-8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புராணக் கதை ஓவியங்களும், பிற்கால சுவரோவியங்களும் இன்றும் எஞ்சியுள்ளன.
இரண்டாம் நிலை: இந்தக் குகை வளாகத்தின் தலையாய கலைப் பொக்கிஷம் குடைவரைத் தூண்கள் கொண்ட செவ்வக மண்டபமாகும். இதில் ஒற்றைக்கல்பாறையில் வடிக்கப்பட்ட 16 அடி நீள பிரம்மாண்ட அனந்தசயன விஷ்ணு, ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார். மேலும், வைணவ புராணப் புடைப்புச்சிற்பங்களும், பிற்காலத்தில் சேர்க்கப்பட்டு, தற்போது புனரமைக்கப்பட்டுள்ள ஆழ்வார்களின் உருவச்சிலைகளும் இங்கு இடம்பெற்றுள்ளன.
மூன்றாம் நிலை: சாளுக்கிய கலைப்பாணியிலான செதுக்கல்களுடன், நேர்த்தியான சிங்கம் மற்றும் யானைச் சிற்பங்கள் அலங்கரிக்கும் தூண்கள் கொண்ட மாடங்கள் உள்ளன.
நான்காம் நிலை / உச்சிப் பகுதி: உட்புறமாக அமைந்த மூன்று சந்நதிகளைக் கொண்ட, முழுமை பெறாத மேல் அடுக்கு இதுவாகும்.
இம்மலைச்சரிவு நெடுகிலும் பல சிறிய அளவிலான குடைவரைக் குகைகளும் காணப்படுகின்றன. இக்குடைவரைகளின் பொறியியல் சிறப்பினை 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் நில அளவையாளரும் தொல்பொருள் ஆய்வாளருமான காலின் மெக்கென்சி (Colin Mackenzie) வெளியுலகின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
அமைவிடம்: உண்டவல்லி குகைகள் (விஜயவாடா அருகில்), குண்டூர் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம்.இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையால் (ASI) மத்திய அரசால் பாதுகாக்கப் பட்ட தேசிய நினைவுச் சின்னமாகப் பராமரிக்கப்பட்டுவருகிறது.
மது ஜெகதீஷ்


