குடும்பத்தில் வறுமை
இங்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம்பூதிரிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் வேதங்களிலும், மந்திரங்களிலும் வல்லவர்கள். அப்படி இருந்தும் அந்த குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. இந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு நம்பூதிரி, அருகில் உள்ள திருவஞ்சிக்குளம் சென்று அங்குள்ள குளத்தில் தண்ணீர் எடுத்து சிவனை நீராட்டி பாடல்களை பாடி ஸ்தோத்திரம் செய்து திரும்புவார். இப்படி 12 வருடங்களாக செய்துவந்தார். ஆனால் வறுமை ஒழியவில்லை.
இந்த நிலையில் தண்ணீர் எடுக்க சென்றவருக்கு திகைப்பு. குளத்தை ஒட்டி ஒரு உருவம் நின்றிருந்தது. அதனை சுற்றி ஒளி வெள்ளம். நம்பூதிரி பயந்து யார் நீ என கேட்டார். அதற்கு அந்த உருவம் யாராக இருந்தால் என்ன?! உனக்கு இந்த மாணிக்கக்கல் வேண்டுமா என்றது. அது மாணிக்கக்கல் தானா என்று ஒருவரிடம் கேட்டு வரும்வரை நீ காத்திருக்க வேண்டும் என்றார் நம்பூதிரி. அதற்கு அந்த உருவம் சம்மதித்தது.
வாசுகி பாம்பு
அந்த கல்லுடன், தம்பிரான் வீடு சென்று தன் சந்தேகத்தை நம்பூதிரி கேட்டார். தம்பிரான் சோதித்து, உண்மையிலேயே இது மாணிக்கக் கல்தான் என்றுகூறி அதனை தனக்கு கேட்டார். இதனை கொடுத்தவர் கேட்பார் எனக்கூறி கல்லை திரும்ப வாங்கிக் கொண்டுவந்து, அந்த உருவத்திடம் கொடுத்தார், நம்பூதிரி. மகிழ்ந்த அந்த உருவம்,
``இந்தா இதனை நீயே வைத்துக்கொள்’’ என கொடுக்க முன்வந்தது. அதற்கு நம்பூதிரி;
``நீ யார் என காட்டாமல் வாங்கிக் கொள்ளமாட்டேன்’’ எனக் கூற, அதற்கு அந்த உருவம்,
``நான் யாரென காட்டினால் நீ பயப்படுவாய்’’ எனக் கூறியது.
``பயப்பட மாட்டேன் காட்டு’’ எனக் கேட்டதும்,
``நான் வாசுகி பாம்பு’’ என தன் உருவத்தை சிறியதாக காட்டியது. நம்பூதிரி ஒரு நிமிடம் பயந்தாலும், மறுநிமிடம் கையெடுத்து கும்பிட்டார். உடனே அது தன்னை பழைய உருவத்திற்கு மாற்றிக் கொண்டு, மாணிக்கக்கல்லை நம்பூதிரியிடம் கொடுத்து,
``இது உங்கள் வீட்டில் இருக்கும்வரை வறுமையே வராது, குறையாத செல்வம் வரும். உன் 12 வருடங்கள் பிரார்த்தனை முடிய இன்னமும் 3 நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளது. அதனை முடித்துவிட்டு, இந்த கல்லை உன் வீட்டில் கொண்டு போய் வைத்துக் கொள். நீ வீட்டில் நுழைந்ததும் உன்னை பின் தொடர்ந்து நாகராஜர் உன் வீட்டிற்கு வருவார். முதலில் உன் கண்ணுக்கு தெரிவார், அதன் பின் இரண்டு மூன்று நாட்களில் நாகயட்சியும் வருவாள். அதுவும் உன் கண்ணுக்கு தெரியும். அந்த இருவருக்கும் பகுதியில் சிலைகள் தயார் செய்து வைக்கவும்’’ எனக் கூறி மறைந்தது. அத்துடன் சுற்றி இருந்த பிரகாசமும் மாயமானது. மூன்று நாட்கள் முடிந்து. மாணிக்கக்கல்லுடன் நம்பூதிரி வீட்டுக்குள் நுழைந்ததும், பின்னாடியே வாசுகி கூறியபடியே நாகராஜர் பாம்பும் வீட்டினுள் நுழைந்தது.
வீட்டின் கிழக்கு பகுதிக்கு சென்று, படம் எடுத்தபடி நின்றது. ஆச்சர்யத்துடன் நம்பூதிரி பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மாயமாய் மறைந்தது. மூன்று நாட்களுக்குப்பின் நம்பூதிரியின் சகோதரி, குடையுடன் வெளியே சென்றுவிட்டு, திரும்பிவந்து ஒரு இடத்தில் குடையை வைத்த போது, அதிலிருந்து ஒரு பாம்பு வெளிவந்து கிழக்கு பகுதிக்கு சென்று, நாகராஜர் படம் எடுத்த அதே இடத்தில் சென்று நின்றது. பிறகு அதுவும் மாயமானது.
தோல்நோய் குணமாகுதல்
நம்பூதிரி, சிலைகளை பிரதிஷ்டை செய்தபோது, அசரீரியாக நாகராஜர் பேசினார்.
``பெரிய இரு விளக்குகளை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தொடர்ந்து எரிய வைக்கவேண்டும். அதில் வரக்கூடிய சாம்பலை நாகதோஷத்தால் தோல் பாதிப்புக்கு உள்ளானவர்கள், தோல் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவினால், குணமாவதுடன், பாம்புகள் உங்கள் குடும்பத்தை தீண்டாது. மீறி தீண்டினாலும் விஷம் ஏறாது. ஆனால், கடித்த பாம்பு செத்துவிடும் எனக் கூறி நிறுத்திவிட்டதாம்.
இந்த நம்பிக்கைகள் காலம் காலமாய் தொடருகின்றன. பரம்பரை பரம்பரையாக பூஜைகளை நம்பூதிரிகள் செய்து வருகிறார்கள். இதனால்தான் இதற்கு ``பாம்பு மேக்காடு’’ என பெயர் வந்தது. பாம்புகள் பற்றி நிறைய கதைகள் உலாவுகின்றன. அதிலிருந்து ஒன்று.
பாம்புகள் சுற்றிக்கொள்ள...
பிரபல கொள்ளையன் செக்கண்ணன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள், பல இடங்களில் கொள்ளையடித்துவிட்டு, இந்த மேக்காடு மனைக்கு வந்தனர். இங்குள்ள பரிகாரப் பொருட்கள், பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கிளம்பிய போது, அவர்களை ஏராளமான பாம்புகள் சூழ்ந்து கொண்டன. அப்போது அன்றைய நம்பூதிரி ஏதோ சப்தம் வருகிறதே என விளக்குடன் வந்து பார்க்க, திருடர்களை பார்த்து;
``யார் நீங்கள் என கேட்க, ஐயா.. நாங்கள் திருடர்கள். உங்கள் வீட்டில் கிடைத்ததை திருடி புறப்பட்டபோது இந்த பாம்புகள் எங்களை சுற்றிக் கொண்டுள்ளன. தாங்கள்தான் எங்களை காப்பாற்ற வேண்டும்’’ எனகூற, நம்பூதிரியும் உடனே பிரார்த்திக்க, பாம்புகள் விலகி, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டார்கள்.
அழகான சர்ப்ப கபு
சாலக்குடி ரயில் நிலையத்தில் இறங்கி கோயிலுக்கு எளிதாக செல்லலாம். வழியில் பாம்புகள் வரையப்பட்ட சுவரை தரிசிக்கலாம். அடுத்து வடக்குப்பக்கம் திரும்பினால், பாம்பு வடிவங்களுடன் கூடிய நுழைவுவாயிலை காணலாம். தொடர்ந்து நடந்து சென்றால், உயரமான மரங்களை தாண்டி கோயிலை அடையலாம். இதனை ``சர்ப்ப கபு’’ என அழைக்கின்றனர்.வீடுதான் கோயில். இன்றைய சூழலுக்கு ஏற்ப வெளிப்பக்கம் நவீன கட்டடமாய் உள்ளது.
சர்ப்பதோஷம்
கார்த்திகை மாதம் முதல் தேதியிலிருந்து 41 நாட்கள் தொடர்ச்சியாகவும், ஆவணியில் முதல் ஏழு நாட்கள் அனைவரும் மனை அருகில் வரை அனுமதிக்கப்
படுகிறார்கள்.மற்ற நாட்களில் நுழைய முன் அனுமதி வேண்டும். இந்த கோயிலினுள் நுழைந்து நேராக வீட்டின் கிழக்குப்பகுதிக்குச் சென்றால், அங்கு நாகராஜர், நாகயட்சி ஆகியோர் உள்ளனர். அங்கு அணையா விளக்கு ஒன்றும் உள்ளது. சர்ப்பதோஷம் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். பால் அபிஷேகம் மட்டுமே நேர்த்திக் கடன். எண்ணெய் பிரசாதம் தருகிறார்கள். மனையை சுற்றி நாகபிரதிர்ஷ்டைகள், பகவதி, காளி தேவியும் உள்ளனர். புனித குளம் உள்ளது.
கோயில் திறப்பு: காலை:7:00 மணி முதல் மாலை: 5:00 வரை.
தொடர்புக்கு: 91-480-2890453/2890473/2890475.
அமைவிடம்: கேரளாவின் திருச்சூர் பகுதியில் முகுந்தபுரம் தாலுக்காவில் மாலாடவுன் அருகே வடமாவில் இந்த கோயில் அமைந்துள்ளது. இது நாகதோஷம் உள்ளவர்களை தேடி வரச் செய்யும் இடம்.



