Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வித்தை தரும் சரஸ்வதி பூஜையும்; வெற்றி தரும் விஜயதசமியும்

சரஸ்வதி பூஜை 19.10.2026 ; விஜயதசமி 20.10.2026

1. முன்னுரை

வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருகின்றன.பங்குனி மாதத்திலும் சித்திரை மாதத்திலும் வருகின்ற நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்று பெயர். வசந்த காலத்தில் வருவதால் வசந்த நவராத்திரி. அடுத்து ஆனி மாதத்திலும் ஆடி மாதத்திலும் வருகின்ற நவராத்திரி வராகி நவராத்திரி. வராகி அம்மனுக்கு குறிப்பாக பஞ்சமியில் மிகச் சிறப்பான பூஜைகள் செய்யப்படுகிறது. தை மாதம் மாசி மாதம் இணைப்பில் கொண்டாடப்படும் நவராத்திரி சியாமளா நவராத்திரி என்று வழங்கப்படுகிறது. இந்த நவராத்திரிகள் எல்லாம் பெரும்பாலும் சில கோயில்களிலும், ஒரு சில மாநிலங்களில் மட்டுமே கொண்டாடப்படுகின்றன. ஆனால் பாரத தேசம் மட்டுமல்ல, உலகம் முழுக்கக் கொண்டாடப்படும் நவராத்திரி “சாரதா நவராத்திரி” என்று சொல்லப்படும் புரட்டாசி நவராத்திரி.

சாரதா என்பது கலைமகளின் பெயர். முப்பெரும் தேவியருக்கும் இந்த நவராத்திரியில் சிறப்பு உண்டு என்றாலும், தென்னகத்தில் சரஸ்வதி பூஜை/ ஆயுத பூஜையை பிரதானமாகக் கொண்டாடுவது இந்த நவராத்திரியில் தான். ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரியின் கடைசி மூன்று தினங்கள் மிக முக்கியமானவை. (அஷ்டமி, நவமி, தசமி). அஷ்டமி துர்காஷ்டமி என்று வழங்கப்படுகிறது. இந்த நாளில் துர்கா தேவியை சிறப்பாக வழிபட்டு, தீமைகளை அகற்றி நல்லவற்றை அருள வேண்டும் என்று பிரார்த்திப்பது வழக்கம்.நவமி கலைமகளுக்குரிய பூஜை தினமாகக் கொண்டாடப்படுகிறது. தசமி வெற்றி தரும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி உற்சவத்தின் சரஸ்வதி பூஜையின் சிறப்பு பற்றியும் விஜயதசமியின் சிறப்பு பற்றியும் நாம் தெரிந்துகொள்வோம்.

2. வாக்தேவி

சரஸ்வதி தேவிக்கு வாக்தேவி என்ற பெயரும் உண்டு. அதாவது வாக்கின் தெய்வம். வேத மரபில் “வாக்” என்ற கருத்து தெய்வீகப் பேச்சுடன் தொடர்புடையது; பிற்காலத்தில் அது சரஸ்வதியுடன் இணைக்கப்பட்டது. சரஸ்வதி கல்வி, அறிவு, கலை, இசை, கவிதை ஆகியவற்றின் தெய்வமாகப் பரவலாகப் போற்றப்பட்டார். தமிழகத்தின் நாட்டுப்புற வழிபாட்டில் பேச்சியம்மன் என்ற தாய்த் தெய்வ வழிபாடு உண்டு. சில தமிழ் மரபு விளக்கங்களில் பேச்சியம்மனை சரஸ்வதி தேவியின் ஒரு வடிவமாகவே எடுத்துரைக்கின்றனர்.

3. முப்பெருந்தேவியர் வழிபாடு

நவராத்திரியின் ஒன்பது நாட்களையும் மூன்று பகுதிகளாகப் பிரித்து வழிபடும் மரபு நம்மிடம் உள்ளது. முதல் மூன்று நாள்கள் துர்க்கை வழிபாடு. அடுத்த மூன்று நாள்கள் மகாலட்சுமி வழிபாடு. கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதி வழிபாடு. மனித மனத்தில் தமஸ், ரஜஸ், சத்துவம் என்ற மூன்று குணங்கள் செயல்படுகின்றன. தமஸ் என்பது சோம்பல், அறியாமை, மந்தநிலை போன்றவற்றைக் குறிக்கும். ரஜஸ் என்பது ஆசை, பரபரப்பு, போட்டி, பேராசை போன்றவற்றைக் குறிக்கும். சத்துவம் என்பது தூய்மை, அமைதி, தெளிவு, ஞானம் ஆகியவற்றைக் குறிக்கும். முதல் மூன்று நாள்களில் துர்க்கையை வழிபடுவது நம்மிடம் இருக்கும் சோம்பல், பயம், அறியாமை, அகந்தை போன்றவற்றை வெல்ல வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அடுத்த மூன்று நாள்களில் மகாலட்சுமியை வழிபடுகிறோம். வாழ்க்கைக்கு செல்வமும் வளமும் தேவை. ஆனால் செல்வம் மட்டும் போதாது. அதை நல்ல வழியில் சம்பாதிக்கவும், நல்ல வழியில் பயன்படுத்தவும் வேண்டும். எனவே வாழ்க்கையை வளப்படுத்தும் நற்பண்பு களையும் இக்காலத்தில் நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

4. ஏன் கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதி வழிபாடு?

கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதிக்கு.ஏன்? வீரமும் வேண்டும். செல்வ மும் வேண்டும். ஆனால் அவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற புத்தி இல்லாவிட்டால் இரண்டுமே தவறான பாதைக்குச் செல்லலாம். அதனால்தான் இறுதியில் கலைமகளை நாடுகிறோம்.அறிவு வந்தால் தெளிவு வரும். தெளிவு வந்தால் சரியான முடிவு எடுக்கமுடியும். சரியான முடிவு வந்தால் வாழ்க்கையின் வீரமும் செல்வமும் பயனுள்ள வழியில் செலுத்தப்படும்.இதனால் நவராத்திரியின் இந்த மூன்று நிலை களையும் ஒரு எளிய வரியில் சொல்லலாம்: தீமையை வெல்வோம் - வளத்தைப் பெறுவோம் - அறிவால் அதைச்சரியாகப் பயன்படுத்துவோம்.

5. மூன்று நிலைகளை இப்படிப் பார்க்கலாம்

வாழ்க்கையில் செல்வம் வேண்டும். செல்வம் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவது கடினம்.அதே நேரத்தில் செல்வம் மட்டும் இருந்தால் போதுமா? அறிவுச் செல்வமும் வேண்டும்.“கற்றோர்க்குச் சென்ற இடமெல் லாம் சிறப்பு” என்று நம் முன்னோர் சொன்னார்கள். வீரம் இருந்தால் துணிச்சலுடன் செயல்பட முடியும். செல்வம் இருந்தால் பல காரியங்களைச் செய்ய முடியும். ஆனால் வீரத்தை எங்கே பயன்படுத்துவது, செல்வத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிப்பது புத்தி. அதனால்தான் நவராத்திரியின் மூன்று நிலைகளையும் இப்படிப் பார்க் கலாம்.தீமையை எதிர்க்கும் துணிவும் சக்தியும் பெறுவதற்கு முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடு நடத்துகிறோம். வாழ்க்கைக்குத் தேவையான செல்வமும் வளமும் பெறுவதற்கு அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமி வழிபாடு நடத்துகிறோம். அறிவு இல்லாத வீரமும் செல்வமும் ஆபத்தானது என்பதால் கிடைத்த சக்தியையும் செல்வத் தையும் சரியான வழியில் பயன்படுத்தும் அறிவு பெறுவதற்கு கலைமகள் வழிபாடு கடைசி மூன்று நாட்கள் நடத்துகிறோம்.

6. கல்வியின் மதிப்பு

ஒரு மனிதனுக்கு மிகச் சரியாக வழிகாட்டுவது வித்தை. சரஸ்வதியின் கையில் வீணையும் புத்தகமும் இருப்பது ஒரு வித்தையின் அழகான குறியீடு. வாழ்க்கையில் இசை போன்ற ஒழுங்கையும், புத்தகம் போன்ற தெளிவையும் அறிவு தர வேண்டும். அதனால்தான் சரஸ்வதி பூஜை என்பது மாணவர்கள் மட்டும் கொண்டாடும் நாள் அல்ல.அறிவை மதிக்கும் ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டிய நாள். நவராத்திரியின் ஒன்பதாவது நாள் மஹாநவமி சரஸ்வதி தேவிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. கல்வி, கலை, இசை, ஞானம் ஆகியவற்றை அருளும் அன்னையை சிறப்பாக வழிபடுவது வழக்கம். நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களும் கல்வி மற்றும் வித்தைக்கு முக்கியமான நாட்கள். சில மரபுகளில் சப்தமி நாளில் சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்து, புத்தகங்கள், இசைக்கருவிகள், கல்விக்குப் பயன்படும் பொருட்கள் ஆகியவற்றை வைத்து வழிபாடு தொடங்கப்படுகிறது. அடுத்த நாட்களான அஷ்டமி, நவமியில் அந்த வழிபாடு தொடர்கிறது.

7. கலைமகளுக்கு எத்தனை பெயர்கள்?

அறிவின் வடிவமாக இருப்பதால் வித்யா.

பேச்சின் வடிவமாக இருப்பதால் வாணி.

வேதத்தின் வடிவமாக இருப்பதால் வேதகர்ப்பா.

பிரம்மனின் சக்தியாக இருப்பதால் பிரம்மி.

அறிவின் வடிவமாக இருப்பதால் மகாவித்யா.

சரஸ்வதி அஷ்டோத்திர நாமாவளியிலும் பத்மாக்ஷி, ஞானமுத்ரா, பிரம்மி, சௌதாமினி, சுபத்ரா போன்ற பல பெயர்கள் வருகின்றன.

பாரதி ஒளியால் (அறிவு) அந்நாவல். Bha + ஸ்கரா = ஒளியைச் செய்பவன் (சூரியன்) * Bha + ரதி = ஒளியால் ஆனவள்(சரஸ்வதி) அறிவொளி மிக்கவருக்கு= பாரதி

தமிழ் மரபிலும் அவளுக்கு அழகான பெயர்கள் உண்டு. கலைமகள், நாமகள், நாமடந்தை, வாணி, பாரதி, சரஸ்வதி, வாக்தேவி, சாரதா, பிரம்மி, வீணாபாணி என்று பல பெயர்களால் அவளை அழைக்கிறோம்.

இந்தப் பெயர்களில் ஒவ்வொன்றும் ஒரு பொருளைச் சொல்கிறது.

8. அறிவின் வடிவம் கலைமகள்

அவள் வெறும் பள்ளிக்கூடக் கல்வியின் தெய்வம் அல்ல.

பேசும் வார்த்தைக்கு அழகு வேண்டும்.

எழுதும் எழுத்துக்கு பொருள் வேண்டும்.

கற்கும் அறிவுக்கு தெளிவு வேண்டும்.

நினைவுக்கு நிலை வேண்டும்.

இசைக்கு இனிமை வேண்டும்.

சிந்தனைக்கு ஒழுக்கம் வேண்டும்.

இவை அனைத்தையும் ஒருங்கிணைத்த வடிவமாகவே கலைமகளை நம் மரபு பார்க்கிறது.அதனால்தான் சரஸ்வதியின் கையில் புத்தகமும் வீணையும் காண்கிறோம்.

புத்தகம் அறிவைக் குறிக்கிறது.

வீணை கலையைக் குறிக்கிறது.

வெண்மை தூய்மையைக் குறிக்கிறது.

அறிவும் கலையும் தூய்மையான மனத்துடன் சேர்ந்தால்தான் அது உண்மையான வித்தையாகிறது.

9. அறிவு தரும் சரஸ்வதி வழிபாடு

கம்பர் இயற்றிய சரஸ்வதி அந்தாதியில் கலைமகளின் பெருமை மிக அழகாகப் பாடப்பட்டுள்ளது.அதில் ஒரு செய்யுள்:

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய

உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே

இருப்பளிங்கு வாராது இடர்.

எவ்வளவு அழகான கருத்து!அறுபத்து நான்கு கலைகளையும் உணர்ந்து கொள்ளும் அறிவைத் தருபவள் என் அன்னை சரஸ்வதி.அவளுடைய உருவம் தூய பளிங்கு போன்றது. அந்தத் தூய கலைமகள் என் உள்ளத்தில் குடிகொண்டிருந்தால், இடர்கள் என் உள்ளத்திற்குள் வந்து தங்காது என்பது இந்தப் பாடலின் ஆழமான பொருள்.

10. எப்படித் துன்பம் குறையும்?

இங்கே “இடர் வராது” என்பது வெளியில் எந்தத் துன்பமும் வராது என்று மட்டும் பொருள் கொள்ள வேண்டியதில்லை.துன்பம் வாழ்க்கையில் வரலாம். ஆனால் அதை எப்படி எதிர்கொள்வது? எந்த முடிவை எடுப்பது? எதைச் செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும்? என்பதைத் தீர்மானிக்கும் தெளிவை அறிவு தருகிறது. அதனால்தான் சரஸ்வதி வழிபாட்டை “கல்வி கிடைக்க வேண்டும்” என்ற வேண்டுதலோடு மட்டும் நிறுத்திவிடாமல், நல்ல அறிவும் தெளிந்த சிந்தனையும் வேண்டும் என்று வேண்டுவதாகப் பார்க்கலாம். உள்ளத்தில் அறிவின் ஒளி இருந்தால் குழப்பம் குறையும்.குழப்பம் குறைந்தால் பயம் குறையும். பயம் குறைந்தால் சரியான முடிவை எடுக்க முடியும். அதனால்தான் கம்பரின் இந்தச் செய்யுள் சரஸ்வதி வழிபாட்டின் பெரிய பொருளைச் சொல்லி விடுகிறது. கலைமகளை வணங்குவது அறிவுக்காக மட்டும் அல்ல. அறிவால் மனத்திற்குத் தெளிவு பெறுவதற்காகவும்.கலைமகளை வணங்குகிறோம். அதற்குத்தான் சரஸ்வதி பூஜை.

11. வேதத்தில் சரஸ்வதி

சரஸ்வதி என்ற பெயர் புராண காலத்தில்தான் தோன்றியது என்று நினைப்பது தவறு. ரிக் வேதத்தில் சரஸ்வதிக்கென்று தனியாகப் பாடப்பட்ட சூக்தங்கள் உள்ளன. குறிப்பாக ஆறாவது மண்டலத்தின் 61-வது சூக்தமும், ஏழாவது மண்டலத்தின் 95, 96-வது சூக்தங்களும் சரஸ்வதியைப் போற்றுகின்றன.வேதத்தில் சரஸ்வதி முதலில் ஒரு மகத்தான நதியின் உருவத்திலும் தோன்றுகிறாள்.“பெருக்கெடுத்து ஓடும் நதி” என்ற இயற்கை உருவம் மட்டுமல்லாமல், மக்களுக்கு வளம் தருபவள், அறிவைத் தூண்டுபவள் என்ற உயர்ந்த பொருளும் அவளுடன் இணைகிறது.காலம் செல்லச் செல்ல நதி என்ற உருவத்தைத் தாண்டி வாக்கு, அறிவு, கல்வி ஆகியவற்றின் தெய்வமாக சரஸ்வதி வழிபடப்படும் மரபு வலுப்பெற்றது. புராணங்களில் அவள் வாக்கின் அதிஷ்டான தெய்வமாகவும், அறிவு மற்றும் கல்வியின் தெய்வமாகவும் விளக்கப்படுகிறாள்.

12. நதியும் அறிவும்

இதில் ஒரு அழகான தொடர்பைப் பார்க்கலாம்.நதி ஓடிக்கொண்டே இருக்கிறது.அறிவும் அப்படித்தான். நீர் தேங்கி நின்றால் கெட்டுப்போகும். அறிவும் பகிரப்படாமல் தேங்கி நின்றால் அதன் பயன் குறையும்.நதி நிலத்தை வளமாக்குகிறது.அறிவு மனிதனை வளமாக்குகிறது.அதனால்தான் நம் முன்னோர் இயற்கையின் ஒரு பெரும் சக்தியான நதியையும், மனிதனின் உயர்ந்த சக்தியான அறிவையும் ஒரே “சரஸ்வதி” என்ற பெயருக்குள் பார்த்திருக்கலாம். வேதத்தில் தொடங்கிய இந்தப் பயணம், பின்னாளில் வீணை ஏந்திய கலைமகளாக நம் வீடுகளிலும் பள்ளிகளிலும் கோயில்களிலும் வந்துநிற்கிறது. நதி வாழ்க்கையை வளர்க்கிறது.அறிவு மனித வாழ்க்கையை உயர்த்துகிறது. இரண்டுக்கும் ஓர் அழகான பெயர் - சரஸ்வதி.

13. சரஸ்வதியின் குரு

கல்விக்கு தேவதை சரஸ்வதி.அப்படியானால் சரஸ்வதிக்கே குரு யார்?இந்தக் கேள்விக்கு வைணவ மரபு காட்டும் தெய்வீக வடிவம் ஹயக்ரீவர். ஹயக்ரீவர் என்றால் குதிரை முகம் கொண்டவர். அவர் மகாவிஷ்ணுவின் ஞான வடிவமாகப் போற்றப்படுகிறார். ஹயக்ரீவ உபநிஷத்திலும் ஹயக்ரீவர் ஞானம் மற்றும் அறிவின் பரம்பொருளாகப் போற்றப்படுகிறார். ஒரு காலத்தில் பிரம்மதேவர் வேதங்களின் துணையுடன் படைப்புத் தொழிலை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் வேதங்களைப் பறித்துச் சென்று பாதாளத்தில் மறைத்து வைத்தனர். பிரம்மன் திகைத்தார். அவர் மகாவிஷ்ணுவைச் சரணடைந்தார். உலகின் அறிவொளியான வேதங்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக மகாவிஷ்ணு குதிரை முகம் கொண்ட அற்புதமான வடிவத்தை எடுத்தார். அந்த வடிவமே ஹயக்ரீவர். ஹயக்ரீவர் ஞானத்தின் ஆதாரமாகப் போற்றப்படுகிறார்.

ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்

ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே.

ஞானத்தின் வடிவமாகவும், ஆனந்தமயமானவராகவும்,தூய்மையான ஸ்படிகம் போன்ற வெண்மையான உடல் (ஒளி) கொண்டவராகவும், அனைத்துக் கலைகளுக்கும் வித்தைகளுக்கும் ஆதாரமாக விளங்குபவரு மான ஸ்ரீ ஹயக்ரீவரை நான் வணங்குகிறேன் என்பது இந்த சுலோகத்தின் பொருள்.

மத்வ சம்பிரதாயத்திலும் ஹயக்ரீவ வழிபாட்டுக்கு சிறப்பான இடம் உண்டு. ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர் ஹயக்ரீவரின் சிறந்த பக்தராக விளங்கினார். அவர் ஹயக்ரீவ சம்பதா ஸ்தோத்திரம் உள்ளிட்ட ஹயக்ரீவர் தொடர்பான பல ஸ்தோத்திரங்களை இயற்றியுள்ளார். அதனால்தான் கல்வியைத் தொடங்கும்போது ஹயக்ரீவரை நினைப்பதும், சரஸ்வதியை வணங்குவதும் ஒரு பொருத்தமான ஆன்மிக மரபாக அமைந்திருக்கிறது.

14. தட்சிணாமூர்த்தியும் சரஸ்வதியும்

சரஸ்வதி என்றால் நம் நினைவுக்கு முதலில் வருவது வீணை. தக்ஷிணாமூர்த்தியை நினைத்தால் வீணை ஏந்திய வீணாதர தட்சிணா மூர்த்தி என்ற வடிவமும் நம் நினைவுக்கு வருகிறது. இருவரிடமும் இன்னொரு அழகான ஒற்றுமை உள்ளது. சரஸ்வதியின் கையில் ஸ்படிக மாலை காணப்படுகிறது. தக்ஷிணாமூர்த்தியின் கையிலும் ருத்ராட்ச மாலை அல்லது ஜபமாலை காணப்படுகிறது.வீணை இசையையும் நாதத்தையும் குறிக்கிறது. மாலை தியானத்தையும் மன ஒருமைப்பாட் டையும் குறிக்கிறது. புத்தகம் அறிவைக் குறிக்கிறது. அதனால் இரு தெய்வ வடிவங்களிலும் ஒரு பொதுவான செய்தியைப் பார்க்கலாம். சரஸ்வதி குழந்தைக்கு கல்வியைத் தரும் கலைமகளாகப் போற்றப்படுகிறாள். தக்ஷிணாமூர்த்தி மௌனமாகவே ஞானத்தை அருளும் குருவாகப் போற்றப் படுகிறார். ஒருவரிடம் வீணையின் நாதம்.மற்றொருவரிடம் மௌனத்தின் நாதம்.ஒருவர் கலை மூலம் அறிவைத் தருகிறார். மற்றொருவர் மௌனம் மூலம் ஞானத்தை உணர்த்துகிறார்.

சரஸ்வதி - வித்தை.

தட்சிணாமூர்த்தி - ஞானம்.

இரண்டையும் இணைப்பது மனத்தெளிவு.

15. எப்படி வழிபட வேண்டும்?

சரஸ்வதி பூஜை என்பது அறிவையும் கல்வியையும் செய்யும் தொழிலையும் அதற்கு உதவும் கருவிகளையும் மதிக்கும் ஒரு வழிபாடு. கலைமகளுக்கு வெண்ணிற மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு. சரஸ்வதிக்குரிய அஷ்டோத்திர நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்து வழிபடலாம்.வீட்டில் உள்ள புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் போன்ற கல்விக்குப் பயன்படும் பொருள்களைத் தூய்மையாக வைத்து அவற்றையும் பூஜையில் சேர்ப்பது வழக்கம். மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகங்களையும் வைத்து வழிபடுவார்கள். இது வெறும் பொருள்களை வைத்து பூஜை செய்வது மட்டுமல்ல.“இந்தப் பொருள்கள் மூலம் நாம் அறிவைப் பெறுகிறோம். எனவே அவற்றை மதிக்க வேண்டும்” என்ற எண்ணத்தை குழந்தைகளின் மனதில் ஏற்படுத்துவதுதான் இதன் அழகு.முடிந்தவர்கள் சரஸ்வதி நாமாவளி, சரஸ்வதி ஸ்தோத்திரங்கள், லலிதா சகஸ்ரநாமம் போன்றவற்றைப் பாராயணம் செய்து வழிபடலாம்.சாதம், பாயசம், சுண்டல், பொரி கடலை, பழங்கள் போன்ற எளிய நிவேதனங்களைச் செய்து படைக்கலாம். ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, ஜாதிக்காய் போன்ற வாசனைப் பொருள்கள் சேர்த்த தாம்பூலத்தையும் படைப்பது சில குடும்பங்களின் வழக்கம்.வழிபாட்டில் முக்கியமானது நிவேதனத்தின் அளவு அல்ல.நம் மனத்தின் தூய்மையும், அறிவை மதிக்கும் எண்ணமும்தான். சரஸ்வதி பூஜை நாளில் குழந்தைகளிடம் ஒரு புத்தகத்தைத் திறந்து வைத்து வணங்கச் செய்வதோடு நிறுத்தி விடாமல், அந்தப் புத்தகத்தில் இருந்து ஒரு நல்ல கருத்தையாவது கற்றுக்கொள்ளச் செய்வோம்.அதுவே கலைமகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை.

புத்தகத்தை வணங்குவது நல்லது.

புத்தகத்தைப் படிப்பது அதைவிட நல்லது.

படித்ததை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது அதைவிடச் சிறந்தது.

16. ஆயுதபூஜை - உழைப்பின் கொண்டாட்டம்

இன்று ஏறக்குறைய எல்லா தொழிலகங்களிலும், வணிக நிறுவனங்களிலும், கல்வி நிலையங்களிலும் ஆயுத பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வீதிகள் எங்கும் விழாக்கோலம். வண்ணவிளக்குகள், அலங்காரங்கள், ஆரவாரம் என்று எங்கு பார்த்தாலும் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி தெரிகிறது. தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படுகின்றன. சில நிறுவனங்களில் போனஸ் வழங்கப்படுகிறது. அலுவலகங்களிலும் கடைகளிலும் தங்கள் தொழிலுக்குப் பயன்படும் கருவிகளையும் இயந்திரங்களையும் சுத்தம் செய்து, சந்தனம் குங்குமம் வைத்து வழிபடுகிறார்கள். இதில் ஒரு நல்ல வாழ்க்கைத் தத்துவமும் இருக்கிறது. “இந்தக் கருவிகள்தான் நம் உழைப்புக்கு துணை. இந்த உழைப்புதான் நம் வாழ்க்கைக்கு ஆதாரம்.”

17. முயற்சியும் ஊக்கமும்

சென்ற ஆண்டு பெற்ற லாபத்திற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். அதே நேரத்தில், அடுத்த ஆண்டில் இன்னும் சிறப்பாக உழைத்து, தொழிலை விரிவுபடுத்தி, மேலும் பலருக்கு வேலைவாய்ப்பு கொடுத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தையும் இந்த நாள் உருவாக்குகிறது. அதனால் ஆயுத பூஜை என்பது இயந்திரங்களையும் கருவிகளையும் மட்டும் வழிபடும் நாள் அல்ல.

உழைப்பை மதிக்கும் நாள்.

தொழிலை மதிக்கும் நாள்.

உழைப்பின் மூலம் கிடைத்த வெற்றிக்கு நன்றி சொல்லும் நாள்.

அடுத்த வெற்றிக்காக புதிய முயற்சியைத் தொடங்கும் நாள்.

18. ஆயுத பூஜை

சரஸ்வதி பூஜையை ஆயுத பூஜை என்று அழைப்பதற்குக் காரணம் உண்டு. இங்கு “ஆயுதம்” என்ற சொல்லுக்கு போர் ஆயுதங்கள் மட்டும் என்று பொருள் இல்லை.நம் வாழ்க்கைக்கு உதவும் கருவிகள், சாதனங்கள், தொழிலுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் ஆயுதங்களாகக் கருதப்படுகின்றன. விவசாயியின் கலப்பை, தச்சரின் கருவிகள், கைவினைஞரின் உபகரணங்கள், தொழிற்சாலையின் இயந்திரங்கள், அலுவலகத்தில் பயன்படுத்தும் கணினி போன்றவை அவரவர் தொழிலுக்கான “ஆயுதங்கள்”.அதனால், மஹாநவமி நாளில் புத்தகங்கள், இசைக்கருவிகள், தொழில் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்கள் ஆகியவற்றைச் சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் வைத்து, மலர் சூட்டி பூஜை செய்கிறோம். இதன் பின்னால் இருக்கும் அழகான கருத்து:

“நமக்கு அறிவைத் தருவது சரஸ்வதி; அந்த அறிவைக் கொண்டு செயல் பட உதவும் கருவிகளும் இறைவனின் அருளால் கிடைத்தவையே.”அதனால்தான் ஒரே நாளில் சரஸ்வதி பூஜையும் ஆயுத பூஜையும் இணைந்து வருகிறது. ஒரு வரியில் சொன்னால்: “அறிவுக்கு சரஸ்வதி பூஜை; அந்த அறிவால் தொழில் செய்ய உதவும் கருவிகளுக்கு ஆயுதபூஜை.”

19. தமிழ் இலக்கியங்களில் ஆயுத பூஜை

ஆயுத பூஜையின் அடிப்படைச் சிந்தனை தமிழர்களின் பழைய இலக்கியங்களிலும் காணப்படுகிறது. ஆனால் ஒரு முக்கியமான வேறுபாட்டைச் சொல்ல வேண்டும்: இன்றுள்ள நவராத்திரி “ஆயுத பூஜை” என்ற அதே சடங்கு வடிவம் சங்ககாலத்தில் இருந்தது என்று நேரடியாகச் சொல்ல முடியாது. அதற்குப் பதிலாக, ஆயுதங்களைப் புனிதமாகக் கருதி வழிபட்ட பழக்கம் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. சிலப்பதிகாரத்தின் வேட்டுவ வரியில், போருக்குச் செல்லும் வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கொற்றவை முன்னிலையில் வைத்து வழிபட்டு, பின்னர் போருக்குச் செல்லும் செய்தி வருகிறது.இங்கு கொற்றவை போரின் வெற்றியை அருளும் தெய்வமாகக் கருதப்படுகிறாள். வில்லும் பிற போர்க்கருவிகளும் தெய்வத்தின் முன்னிலையில் வைத்து வழிபடப்படுவது குறிப்பிடத்தக்கது.

20. பதிற்றுப் பத்து - வாளுக்கு விழா

சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில், போர்வீரர்களின் வாளோடு தொடர் புடைய விழா பற்றிய குறிப்பு வருகிறது. கபிலர் பாடியதாகக் குறிப்பிடப்படும் இந்தப் பகுதி, ஆயுதம் வெறும் கருவியாக இல்லாமல் வீரத்துடனும் வெற்றியுடனும் தொடர்புபடுத்தப்பட்டிருந்ததை காட்டுகிறது. தொல்காப்பியப் பொருளதிகாரத்திலும் “வாள்மங்கலம்” என்ற ஒரு மரபு குறிப்பிடப்படு கிறது. போரில் வெற்றி பெற்ற வாளைப் போற்றும் ஒரு மங்கலச் செயல் இருந்ததாக உரையாசிரியர்கள் விளக்குகின்றனர். அதனால், ஆயுதத்தைத் தூய்மைப்படுத்தி, அதற்கு மங்கலம் செய்து, வெற்றியின் அடையாளமாகக் கருதும் எண்ணம் மிகவும் பழமையானது என்று கூறலாம்.

21. இன்றைய ஆயுத பூஜையுடன் எப்படி இணைகிறது?

பழைய காலத்தில் வாள், வேல், வில்போர்வீரனின் வாழ்க்கைக்குத் தேவையான கருவிகள் இருந்தன. இன்றோ அதே கருத்து விரிவடைந்து,

விவசாயிக்கு கலப்பை

தச்சனுக்குக் கருவிகள்

தொழிலாளிக்கு இயந்திரம்

ஓட்டுநருக்கு வாகனம்

மாணவருக்குப் புத்தகம்

கலைஞருக்கு இசைக்கருவி

- என்று அவரவர் வாழ்க்கையை நடத்த உதவும் கருவிகளும் வழிபடும் நிலைக்கு வந்திருக்கிறது. ஆயுதத்தைப் புனிதமாகக் கருதி, அதற்கு மங்கலம் செய்து, வெற்றிக்காக வழிபடும் மரபு பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிறது. அந்த மரபு காலப்போக்கில் வளர்ந்து, இன்று தொழில் கருவிகளையும் உள்ளடக்கிய ஆயுதபூஜையாகப் பரவியுள்ளது.”

22. இலக்கியத்தில் கலைமகள் வழிபாடு

கல்விக்கும் கலைக்கும் ஞானத்திற்கும் தெய்வமாகக் கலைமகளைப் போற்றும் மரபு நம் இலக்கியத்தில் நீண்ட காலமாக உள்ளது. வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதி, கையில் வீணையும் புத்தகமும் ஏந்தியவளாகக் காண்கிறோம்.கம்பர், சரஸ்வதி அந்தாதி எனும் நூலில் கலைமகளின் அருளையும் நினைவுகூர்கிறார். கவிதை என்பது வெறும் சொற்களின் சேர்க்கை அல்ல; தெய்வ அருள் பெற்றால்தான் கலை,கவிதை சிறக்கும் என்ற எண்ணம் நம் பழைய கவிஞர்களிடம் இருந்தது. பிற்காலத்தில் மகாகவி பாரதி, கலைமகளை வெறும் கல்வித் தெய்வமாக மட்டும் பார்க்கவில்லை. அறிவு, சுதந்திரச் சிந்தனை, படைப்பாற்றல் ஆகியவற்றின் வடிவமாகவும் கண்டார். இதனால் சரஸ்வதிபூஜை என்பது புத்தகங்களை வைத்து பூஜை செய்வது மட்டுமல்ல.

கல்வியை மதிப்பது,

கலையை மதிப்பது,

அறிவை வளர்ப்பது,

கற்றதை நல்ல வழியில் பயன்படுத்துவது

- என்ற உயர்ந்த எண்ணத்தை நினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது.அதனால்தான் குழந்தையின் முதல் எழுத்திலிருந்து ஒரு கவிஞனின் கவிதை வரை, இசைக்கலைஞனின் வீணையிலிருந்து அறிஞனின் நூல்வரை எல்லாவற்றுக்கும் பின்னால் கலைமகளின் அருள் இருக்கிறது என்று நம் மரபு கருதுகிறது.

23. பாரதியின் கலைமகள் துதி

கலைமகளை துதிக்கும் அற்புதப்பாடல் இது. இதற்கு நிகரான பாடல் இல்லை எனலாம்.

வெள்ளைக் கமலத் திலே-அவள்

வீற்றிருப் பாள் புக ழேற்றிருப் பாள்,

கொள்ளைக் கனியிசை தான்-நன்கு

கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்,

கள்ளைக் கடலமுதை-நிகர்

கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொல வே

பிள்ளைப் பருவத் திலே-எனைப்

பேணவந் தாளருள் பூணவந் தாள்.

பாரதியார் தன்னைத் தமிழ்த்தாயின் மைந்தனாகப் பாவிப்பதோடு, கலைம களாகிய சரசுவதியைத் தனது ஞானகுருவாகவும் தாயாகவும் உருவகப் படுத்திக் கவிதை பாடியுள்ளார். கவிதைக் கலையும், தமிழார்வமும் தனக்குச் சிறுவயதிலேயே கிட்டியது சரசுவதியின் அருளினால்தான் என்பதை “பிள்ளைப் பருவத்திலே-எனைப் பேணவந்தாளருள் பூணவந்தாள்” என்ற வரிகள் மூலம் அழகாக வெளிப்படுத்துகிறார்.அதனால் பாரதி என்ற கலைமகளின் பெயரே அவருக்குப் புகழாகி நிலைத்தது.

24. தமிழும் கலைமகளும்

‘வெள்ளைக் கமலத்திலே’, ‘கொட்டுநல் யாழினைக் கொண்டிருப்பாள்’ போன்ற வரிகள் சரசுவதி தேவியின் தூய்மை, கலை மற்றும் ஞானத்தின் வடிவத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.

கள்ளைக் கடலமுதை-நிகர்

கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே

என்ற வரிகள் தான் எத்தனை அற்புதம்கள் (மது) போன்றது தமிழ் இலக்கியத்தின் சுவை. அது படிப்பவர்களைப் பித்துக்கொள்ளச் செய்யும், மயங்கச் செய்யும் பேரினிமை கொண்டது.கடலமுது (அமிர்தம்) உண்டால் சாவு வராது (அமிர்தத்துவம்). அதுபோல, தமிழ் மொழியின் சுவையும் அதன் இலக்கியமும் என்றென்றும் அழியாதது; தலைமுறை தலை முறையாக என்றும் நிலைத்து நின்று வாழக்கூடியது (சாவாமை தரும் மொழி).(தமிழுக்கும் அமுதென்று பேர் - பாரதிதாசன்)

25. சரஸ்வதிதேவிக்கு ஆலயங்கள்

பொதுவாக மஹாலஷ்மிக்கும் பார்வதிக்கும் (துர்க்கை) ஆலயங்கள் அதிகம்.கலை மகளுக்கு தனி ஆலயங்கள் குறைவு என்றாலும் தனி ஆலயங்கள் இந்தியாவில் சில இடங்களில் உள்ளன. தமிழகத்தில் குறிப்பாக கல்வி, கலை, இசை தொடர்பான வழிபாட்டுடன் இணைந்த சில தலங்கள் உள்ளன.அதில் ஒன்று கூத்தனுர்.தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகில் உள்ளது கூத்தனூர். இங்கு அமைந்த இக்கோயில், தமிழ்நாட்டில் சரசுவதி தேவிக்கென்றே அமைந்துள்ள தனிச்சிறப்பு வாய்ந்த பிரசித்தி பெற்ற கோயிலாகும்.கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் தன் வாக்கால் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். விஜயதசமி நாளிலும், கல்விப் பருவம் தொடங்கும் முன்பும் குழந்தைகள் இங்கு வந்து ‘அட்சரப் பயிற்சி’ (வித்யா ஆரம்பம்) பெறுவது சிறப்பு.

26. ஞான சரசுவதி கோயில்

கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள மிகப்பிரசித்தி பெற்ற ஞான சரசுவதி கோயில் இது. வியாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பப்படும் இத்தலத்தில், குழந்தைகளுக்கான கல்வித் தொடக்க விழா (அட்சராப்பியாசம்) மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது.ஆதி சங்கர பகவத் பாதரால் கர்நாடகாவில் துங்க பத்ரா நதிக்கரையில் நிறுவப்பட்ட புகழ்பெற்ற சக்திபீடம் மற்றும் ஞான பீடம் சிருங்கேரி சாரதாம்பாள் கோயில். இங்கு மூலவர் சந்தனத்தால் ஆன சாரதாம்பாள் (சரசுவதி தேவி) வடிவில் அருள்பாலிக்கிறார்.கேரளாவின் கோட்டயம் அருகில் உள்ளது பணச்சிக்காடு தக்ஷிண மூகாம்பிகா கோயில். இக்கோயில், ‘சரசுவதி க்ஷேத்திரம்’ என்று போற்றப்படுகிறது. இங்குள்ள நீர்நிறைந்த ஒரு சிறிய குழிக்குள் சரசுவதி தேவி கண்ணுக்குத் தெரியாமல் வாசம் செய்வதாக ஐதிகம்.

27. சாரதா பீடம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மலையின் மீது அமைந்துள்ள மாய்ஹர் சாரதாதேவி கோயில்.இக்கோயில், அகில இந்திய அளவில் மிகவும் புகழ்பெற்ற சக்திபீடங்களில் ஒன்றாகும். இங்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சரசுவதி தேவியைத் தரிசிக்கின்றனர்.தெலங்கானாவில் காஞ்சி காமகோடி பீடத்தின் வழிகாட்டுதலோடு உருவாக்கப்பட்ட ஸ்ரீ வித்யா சரசுவதி கோயில், (வர்கல்) கல்வி மற்றும் ஞானம் அருளும் முக்கியத் தலமாகும்.இவை தவிர, காஷ்மீரில் வரலாற்றுச் சிறப்புமிக்க புகழ்பெற்ற ‘சாரதா பீடம்’ (தற்போது கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் உள்ள பழமையான சரசுவதி கோயில்) இந்தியத் துணைக் கண்டத்தின் ஆதிகாலக் கல்வி மையமாகவும் சரசுவதி வழிபாட்டுத் தலமாகவும் விளங்குகின்றது. ராமானுஜர் வாழ்வில் வரும் முக்கியத்தலம் இது. இங்குதான் அவருக்கு போதாயன விருத்தி நூல்(பிரம்ம சூத்ர உரை) கிடைத்தது. கலைமகள் ஸ்ரீபாஷ்யக்காரர் எனும் விருதை ராமானுஜருக்கு வழங்கிய தலம் இது.

28. வைணவக் கோயில்களில் சரஸ்வதி பூஜை

வைணவக்கோயில்களில் சரஸ்வதி பூஜை உட்பட நவராத்திரி உற்சவம் - தாயார் சிறப்பு உற்சவமாக நடைபெறும். நவராத்திரி உற்சவங்களில் ஒரு நாள் பெருமாள், வெண் பட்டாடை உடுத்தி, கையில் வீணையை வைத்துக் கொண்டு, கலைமகளின் கோலத்தில் காட்சி தருகின்றார். ஒன்பது நாள்களும் தாயார் புறப்பாடு நடக்கும். கொலு மண்டபத்தில் உற்சவ வைபவங்கள் நடைபெறும். 10 ம் நாள் தசமி அன்று பாரிவேட்டை அம்பு போடும் விழா நடைபெறும். அன்று புதுக் கணக்கு -கல்வி-புது வியாபாரம்- குழந்தைகளுக்கு கல்வியை தொடங்குவார்கள். சிலர் பொது விழாவாகவும் நடத்துகிறார்கள்.சரஸ்வதி பூஜை அன்று புத்தகங்கள், இசைக் கருவிகள் மற்றும் தொழிற்கருவிகளை தேவியின் முன்வைக்கும் ‘பூஜை வைப்பு’ என்ற நிகழ்வு நடக்கிறது. விஜயதசமி நாளன்று ‘பூஜை எடுப்பு’ நிகழ்ந்து, அன்றைய தினம் குழந்தைகளுக்குத் தங்க மோதிரத்தால் நாவில் ‘ஹரி ஸ்ரீ’ என்று எழுதி, அரிசியில் எழுதப் பழகும் ‘வித்யாரம்பம்’ மிகவும் விமரிசையாக நடத்தப்படுகிறது.

29. மற்ற மாநிலங்களில் சரஸ்வதி பூஜையும் விஜயதசமியும்

தெலுங்கானாவில் நவராத்திரி காலத்தில் பெண்கள் பலவகை இயற்கை மலர்களைக் கூம்பு வடிவில் அடுக்கிக் கோபுரம் போலச் செய்து, அதை கௌரி தேவியாக பாவித்து, அதைச் சுற்றி பாரம்பரியப் பாடல்கள் பாடி ஆடுவார்கள். ஆந்திரப் பிரதேசத்தில் விஜயவாடா கனகதுர்க்கை அம்மனுக்கு 10 நாட்களும் ‘தசாவதாரம்’ போல தினமும் ஒரு சிறப்பு அலங்காரம் செய்கிறார்கள். கர்நாடகாவில் இது ‘தசரா’ என்று அழைக்கப்படுகிறது. மைசூரில் சாமுண்டீஸ்வரி அம்மன் மகிஷாசுரனை வதம் செய்த இடத்தை மையமாகக் கொண்டு 10 நாட்கள் விழா நடக்கிறது. மைசூர் அரண்மனை லட்சக்கணக்கான விளக்குகளால் ஒளிரவிடப்படும். பத்தாம் நாள் விஜயதசமி அன்று, 750 கிலோ எடையுள்ள தங்கச் சப்பரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் விக்கிரகத்தை யானை மீது வைத்து எடுத்துச் செல்லும் ‘ஜம்பூ சவாரி’ ஊர்வலம் உலகப் புகழ் பெற்றது.

30. மேற்குவங்கத்தில் துர்காபூஜை

மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இது ‘துர்கா பூஜை’ என்று அழைக்கப்படுகிறது. பிரம்மாண்ட பந்தல்களில் துர்கை மகிஷாசுரனை வதம் செய்யும் மண் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை நாளன்று பிராண பிரதிஷ்டை செய்யப்படும். தொடர்ந்து மூன்று நாட்கள் விரதமிருந்து சாஸ்திரப்படி மிக விரிவான பூஜைகள் மற்றும் சண்டிஹோமம் செய்யப்படும். ‘தாக்’ மேளங்கள் முழங்க, தூபக்கலசம் ஏந்தி ஆடும் ‘துனுச்சி நிருத்யா’ நடைபெறும். பத்தாம் நாள் ‘விஜயதசமி’ அன்று சுமங்கலிப் பெண்கள் ஒருவருக்கொருவர் செந்தூரம் பூசிக்கொள்ளும் ‘சிந்தூர் கேலா’ நிகழ்வுக்குப் பின் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும் (விசர்ஜனம்)..இப்படி நாடு முழுதும் சரஸ்வதி பூஜையும் விஜயதசமியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.