Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புனர்பூ என்ற அர்த்த சன்யாச யோகம்

மனம் வெறுமையாக மாறுவது என்பது எல்லோராலும் நடக்காது, எல்லோராலும் முடியாது. பிறப்பு ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புதான் அந்த நிலையை உருவாக்கும். வாழ்வில் அதிக ஆசைப்படுதல்... இதை மனம்தான் செய்கிறது. வாழ்வில் அதிகமாக ஆசைப்படாமல் இருத்தல் இதையும் மனம்தான் செய்கிறது. இரண்டிற்கும் காரணம் மனம் எனில், மனத்தை அந்த நிலைக்கு தள்ளச் செய்கின்ற அமைப்புதான் சூட்சுமமாக ஆராயப்பட வேண்டும். நீண்ட நாளாக தடைகளை உண்டாக்கும் அமைப்பாகும். புனர்பூ தோஷம் என்பதை சாதாரணமானது அல்ல, அது மிகப்பெரிய மனஅழுத்தத்தை தரக்கூடிய தோஷம். ஏற்கனவே இதனைப் பற்றி ஏராளமான கருத்துகள் இருக்கிறது. அதனை தெளிவாகக் காணுதல் அவசியம்.

புனர்பூ தோஷம் என்பது என்ன?

ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் சந்திரனும் - சனியும் இணைந்திருந்தாலும், சந்திரனும் - சனியும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும், சனி சந்திரனுடைய நட்சத்திரத்தில் இருந்தாலும், சந்திரன் சனியினுடைய நட்சத்திரத்தில் இருந்தாலும் சந்திரனை சனி பார்வை செய்தாலும் அதற்கு ஜோதிட சாஸ்திரம் புனர்பூ என்ற தோஷமான யோகத்தை குறிப்பிடுகின்றது.

புனர்பூ தோஷத்தின் அடையாளங்கள் என்ன?

* பொருளாதாரம் சிறப்பானதாக இருக்காது எவ்வளவு உழைத்தாலும் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தாது.

* தோஷம் உடையவர்கள் இருக்கும் வீட்டில் பயன்படுத்தப்படாத கிணறு இருக்கும்.

* இவர்களின் முன்னோர்கள் தாய் வழியிலோ அல்லது தந்தை வழியிலோ யாரேனும் துர்மரணம் அடைந்திருக்க வாய்ப்புண்டு. இல்லாவிடில் நீர் நிலைகளில் துர்மரணம் ஏற்பட்டிருக்கும். அவர்களுக்கான சடங்குகள் எதையும்சரியாக செய்திருக்க மாட்டார்கள்.

* தோஷம் கொண்டவர்களின் மூதாதையர்களுக்கு சரியான தர்ப்பணம் செய்யாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

* இந்த தோஷம் உடையவர்கள் ஐ.டி துறையில் பணியாற்றுவதற்கான அமைப்புகள் அதிகம்.

* வீட்டில் உள்ள பெண்கள் கணவனுடன் சேர்ந்து வாழ முடியாத சூழ்நிலைகளை இந்த தோஷம் ஏற்படுத்துகிறது. வீட்டில் திருமணம் நடக்காத ஆண்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

* இவர்களின் வீட்டிற்கு அருகில் இடிந்த நிலையில் உள்ள பள்ளிக்கூடங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

* இந்த ேதாஷம் கொண்டவர்கள் இருக்கும் வீட்டில் எப்பொழுதும் தேவைகளுக்காக வருகின்ற நீர் வருகின்ற அமைப்புகளில் தடைகளை ஏற்படுத்தும்.

* இந்த தோஷத்தை இவர்கள் முழுவதுமாக எப்பொழுது உணர்வார்கள் என்றால், திருமணம் நடைபெறும் காலத்தில் தள்ளிக் கொண்டே போகும். சிலருக்கு திருமணப் பேச்சு முடிவாகி, திருமணம் நடைபெறும் நாள் அன்று திருமணம் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

* இவர்கள் திருமணத்திற்காக எந்தப் பெண்ணை பார்த்துச் செல்கிறார்களோ அவர்களுக்கு உடனே வேறு இடத்தில் திருமணம் நடைபெறும் வாய்ப்புகள் உண்டு.

* சிலருக்கு கர்மதோஷத்தின் ஒரு அமைப்பாக இந்த புனர்பூ தோஷம் உண்டு.

* அதிகமான மன அழுத்தத்தையும் சங்கடங்களையும் இவர்கள் கடக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும்.

* வீட்டிற்கு அருகில் சினிமா தியேட்டரோ அல்லது மதுபானக் கடையோ இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் அல்லது வீட்டிற்கு அருகில் பெரிய வாட்டர் டேங்க் (பொதுவான நீர்நிலைத் தொட்டிகள்) இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

* மனம் விரக்தி நிலைக்கு கொண்டு செல்லும். சிலருக்கு உறவினர்களே உதவ முன் வரமாட்டார்கள்.

* இவர்கள் அதிகமாக சினிமா பார்க்கும் வழக்கம் உடையவர்களாக இருப்பர். இவையெல்லாம் சில பாவகங்களை பொறுத்து சில மாறுதல்கள் அடையும்.

புனர்பூ தோஷத்திற்கான பரிகாரங்கள் என்ன?

* ஊனமுற்றவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். அவர்களின் ஆசீர்வாதம் உங்களை மேம்படுத்தும்.

* நவக்கிரகங்களில் உள்ள சந்திரன் மற்றும் சனிக்கு; திங்கள் கிழமை மற்றும் சனிக்கிழமை தோறும் அபிஷேகம், அர்ச்சனை செய்தல் வேண்டும்.

* திருமணம் இவர்களுக்கு முடிவாகி விட்டால், திருமணம் முடியும் வரை இவர்கள் போன் மூலமோ நேரடியாகவோ பேசிக் கொள்ளக் கூடாது.

* சந்திரனுக்கான ஹோமம் செய்வது சிறப்பான பரிகாரமாகும். இந்த ஹோமத்தை சந்திரன் வளர்பிறையாக இருந்து ரிஷபத்திற்கு வரும் திங்கட் கிழமை செய்வது சிறப்பான அமைப்பாகும். இது கடினமான பரிகாரம் தான். ஆனால், அதற்கான நாளை அறிந்து செய்வதற்கான பாக்கியங்கள் உண்டாவது அரிது. அது பௌர்ணமியாக அமைந்தால் மிக மிகச் சிறப்பான நாளாகும்.

* வெள்ளிக்கிழமை இரவும், ஞாயிற்றுக் கிழமை இரவும் சிறிய மண் கலயங் களில் நீர் நிரப்பி வைத்து அதனை அடுத்த நாள் சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் நீரோடு அப்படியே உடைத்துப் போடுவது நன்மை பயக்கும்.

* பௌர்ணமி அன்று அம்மன் கோயிலில் கிரிவலம் வருவது நன்மை தரும். குறிப்பாக திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து உண்ணாமுலை அம்மனை தரிசனம் காண்பது சிறப்பாகும். இங்குதான் வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்கள் ஜாதகம் எதைச் சொல்கிறதோ அந்த இடத்திற்கு செல்வதே சிறப்பான அமைப்பாகும்.

* இதில் ஏதும் இல்லையென்றால் கர்ம தோஷம் உள்ளதா என்று கண்டறிந்து பரிகாரம் செய்ய வேண்டும்.