Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கோரிக்கைகளை நிறைவேற்றும் சேலம் கோட்டை அனுமன்

பகுதி 1

மலைகள் நிறைந்த பகுதி

``சேலத்து மாம்பழம், தித்திக்கும் மாம்பழம்’’ என்று சின்னஞ்சிறு குழந்தைகள், முதல் முதலில் சேலத்தை பற்றியும், அங்கு விளையும் மாம்பழத்தை பற்றியும்தான் அறிந்து கொள்வர். ஆம்! கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம், மல்கோவா வகை மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடமாகும். இதனால், சேலத்தை ``மாங்கனி நகரம்’’ என்றும் அழைப்பார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியர்களுடன் வணிகத் தொடர்புகளைக்கொண்டிருந்த சேலம் மாநகரம், பழமையான இடமாகும். தொடக்கக் காலத்தில், நாகரிகமான குடியிருப்புகள், ஏதாவது ஆற்றங்கரை ஒட்டியே அமைந்திருக்கும். பின்னர் காலப் போக்கில், நவீன நகரங்களாக வளர்ச்சியடைந்திருக்கும்.

அந்த வகையில், சேலம் மாநகரம், ``திருமணிமுத்தாற்றின்’’ கரை ஒட்டித்தான் இருந்திருக்கிறது. அதன் பின்னர் காலப் போக்கில் தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரம் என்கின்ற அந்தஸ்தை சேலம் மாநகரம் பெற்றுள்ளது. வடக்கே நாகர்மலை, தெற்கே ஜருகுமலை, மேற்கே கஞ்சமலை மற்றும் கிழக்கே கோடுமலை ஆகிய மலைகள் சேலம் சுற்றிலும் அமைந்துள்ளன.

மேலும், `சேலம்’ என்ற பெயர், `சசைல’ (sashaila) என்ற சொல்லிலிருந்து உருவாகியிருக்கிறது. அதாவது, சசைல என்பதன் பொருள், மலைகள் நிறைந்த பகுதி என்பதாகும்.

ஹொய்சாலர் மற்றும் விஜயநகரப் பேரரசுக் காலங்களில், கோட்டை நகரமாகத் திகழ்ந்தது, சேலம் மாநகரம். அந்த சமயத்தில், பல கோயில்கள் கட்டப்பட்டன. மேலும், சேலத்தை பாதுகாப்பதற்காக மிகப் பெரிய அரண் அமைக்கப்பட்டிருந்தது.

கோட்டை கோயில்கள்

தற்போது இப்பகுதி ``கோட்டைப் பகுதி’’ (Fort Area) என்று அழைக்கப்படுகிறது. மிகவும் பழமையான பகுதியாகக் கருதப்படுகிறது. இங்கு ஏராளமான கோயில்கள் எழுப்பப்பட்டன. அக்கோயில்களுக்கு முன்னால் ``கோட்டை’’ என்கின்ற சொல் இருக்கும். உதாரணமாக;

``கோட்டை மாரியம்மன் கோயில், ``கோட்டை பெருமாள் கோயில்’’ (இங்கு ஸ்ரீ அழகிரிநாத பெருமாள் அருள்கிறார்), ``கோட்டை ஈஸ்வரன் கோயில்’’ (இக்கோயில் மேட்டு அக்ரஹாரத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ சுகவனேஸ்வரர் என்னும் பெயரில் அருள்புரிகிறார்). இப்படி சேலம் மாநகரின் புகழைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த சேலத்தில், நகரின் முக்கிய பகுதியான முதல் அக்ரஹாரம் பகுதியில், ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ``வீர ஆஞ்சநேயர்’’ வீற்றிருக்கிறார்.

பல மன்னர்களிடமிருந்து சேலம் மாநகரை கைப்பற்றினார், விஜயநகர பேரரசர், கிருஷ்ணதேவராயர். இவரின் அரசவையில் ராஜகுருவாக இருந்த வியாசராஜர், தமிழ்நாட்டின் மேற்குப் பகுதிகளான கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி ஆகிய இடங்களில் அனுமனை பிரதிஷ்டை செய்திருக்கிறார்.

மிருத்திகா பிருந்தாவனங்கள்

இப்படித்தான், சேலம் முதல் அக்ரஹாரத்தில் அனுமன் பிரதிஷ்டை ஆகி, சேலம் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோயில், எப்போது உருவானது என்பது பற்றிய ஆதாரப்பூர்வ விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், சுமார் 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வியாச ராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் கோயில் அருகில், எப்படியும் ஒரு ஆறு ஓடும். இக்கோயிலின் பின்புறத்திலும், ``திருமணிமுத்தாறு’’ ஓடுகிறது.

அதே போல், இந்த கோயில் அமைந்துள்ள பகுதி கடைகள் நிறைந்த பரபரப்பான ஒரு வணிகப் பகுதியாகும். இதற்கு நடுவில்தான் இக்கோயில் அமைந்துள்ளது. நுழைவாயில் மேலே.. ஸ்ரீ ராகவேந்திரர், ஸ்ரீ வியாசராஜர், ஸ்ரீ மத்வாச்சாரியார் (நடுவில்), ஸ்ரீ ஜெயதீர்த்தர், ஸ்ரீ புரந்தரதாசர் ஆகியோரின் திருவுருவங்கள் அழகாக காணப்படுகின்றன.

நுழைவாயில் வழியாக உள்ளே சென்றதும் மொத்தம் மூன்று சந்நதிகள் காணப் படுகின்றன. இடது பக்க சந்நதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரும், ஸ்ரீ ராகவேந்திரரின் மிருத்திகா பிருந்தாவனமும், வலது பக்க சந்நதியில் ஸ்ரீ ஜெயதீர்த்தர், ஸ்ரீ ஸ்ரீ பாத ராஜர், ஸ்ரீ வியாசராஜர் ஆகியோரின் மூலபிருந்தாவனமும், நடுப் பக்க சந்நதியில் ஸ்ரீ சத்ய நாராயணஸ்வாமியும், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த வீர ஆஞ்சநேயரையும் தரிசிக்கலாம். ஜெயதீர்த்தர், ஸ்ரீ பாதராஜர், வியாசராஜர், ராகவேந்திரர் ஆகியோரின் மிருத்திகா பிருந்தாவனம் இக்கோயிலில் இருப்பதாலும், இக்கோயில் வியாசராஜமடம் நிர்வாகத்தின் கீழ் வருவதாலும், இக்கோயிலை மடம் என்றும் அழைக்கிறார்கள்.

உயிரோட்டமுள்ள சிலைகள்

விஜய நகர பேரரசர் கிருஷ்ணதேவராயருக்கு சர்ப்ப தோஷத்தால் உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடர்கள் தெரிவிக்க, மன்னர் கிருஷ்ணதேவராயர் தன் ராஜ குருவான வியாசராஜரிடத்தில் தெரிவிக்க ஒரே ஒரு நாள் மட்டும், வியாசராஜர் முடிசூடி மன்னராக சிம்மாசனத்தில் அமர்கிறார். அப்போது அங்கு பாம்பு சரசரவென சிம்மாசனத்தை நோக்கி வேகமாக வருகிறது.

அந்த சமயத்தில் வியாசராஜர், தன் ஷாட்டியை (காவி வஸ்திரம்) எடுத்து பாம்பிற்கு முன்பு தூக்கி எறிகிறார். காவி வஸ்திரம் தீப் பிடித்து எரிகிறது. அதைக்கண்ட பாம்பு பயந்து ஓடிவிடுகிறது. இதனால், மன்னருக்கு ஏற்படவிருந்த சர்ப்ப தோஷம் நீங்குகிறது. (இதன் முழுக் கதையை பல இதழுக்கு முன்பு கண்டிருக்கிறோம்) இக்கதையினை அப்படியே அச்சு அசலாக, மூன்று சந்நதிகளுக்கும் எதிரில் சிலையாக வடிவமைத்திருக்கிறார்கள். இது காண்போரை மெய்சிலிர்க்கச் செய்கிறது.

(அடுத்த இதழிலும் இக்கோயில் தொடரும்...)