சென்ற இதழில், சேலம் பற்றியும் அங்குள்ள கோட்டை கோயில்கள், திருமணிமுத்தாறு அருகில் இருக்கும் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த வீர ஆஞ்சநேயர் பற்றியும், அங்குள்ள மிருத்திகா பிருந்தாவனங்கள் பற்றியும், ஒரே ஒரு நாள் மன்னராக சிம்மாசனத்தில் அமர்ந்து, கிருஷ்ணதேவராயரை காப்பாற்றிய வியாசராஜரின் சரித்திரத்தை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட சிலைகளை பற்றியும் கண்டோம்.
இந்த இதழில், மேலும் சில தகவல்களை காணலாம். இங்கு முதன் முதலில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த வீர ஆஞ்சநேயர்தான் அருள்பாலித்து வந்திருக்கிறார். அதன் பின்னர், ஸ்ரீ வியாசராஜ மடத்தின் 37வது பீடாதிபதியான ஸ்ரீ வித்யா பிரசன்ன தீர்த்தர், சுமார், 1973 - ஆம் ஆண்டு வாக்கில், ஸ்ரீ வியாசராஜரின் மிருத்திகா பிருந்தாவனத்தை பிரதிஷ்டை செய்தார்.
அதன் பிறகு, வியாசராஜ மடத்தின் 38வது பீடாதிபதியான ஸ்ரீ வித்யாபயோநிதி தீர்த்தரால், 1985 - ஆம் ஆண்டு, ஸ்ரீ ஜெய தீர்த்தர், ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி ஆகியோர்களின் மிருத்திகா பிருந்தாவனத்தை ஸ்தாபித்தார். மேலும், கோயிலில் நவக்கிரகம் சந்நதி ஒன்றையும் பிரதிஷ்டை செய்தார்.
வீர ஆஞ்சநேயர், சுமார் நான்கு அடி உயரம் கொண்டு, கிழக்கு நோக்கி, நின்ற கோலத்தில் அருள்கிறார். அனுமன், வடக்கு நோக்கிச் செல்லத் தயாராக இருப்பதை போல் தோற்றமளிக்கிறார். அவரது தாமரை போன்ற பாதங்களில், தண்டை போன்ற கொலுசு (நூபுரம்) மிக அழகாக காணப்படுகின்றன. அது மட்டுமா! அனுமன் அணிந்திருக்கும் பஞ்சகச்சம் வேட்டி, இடுப்பில் உதரபந்தம் (உதரபந்தம் அல்லது உதரபந்தனம் என்பது இடைக்கு மேலே, மார்பிற்குக் கீழே அணியப்படும் ஒரு வகையான அரைப்பட்டிகை அல்லது ஒட்டியாணம் போன்ற அணிகலனைக் குறிக்கும்)மேலும், மேல் கையில் கேயூரம் (கேயூரம் என்பது மேல் தோளில் அணியும் ஒரு வகையான அணிகலன் (நகை) அல்லது தோளணி) மணிக்கட்டில் கங்கணம் ஆகியவைகளை அணிந்துகொண்டு மிக அழகாக காட்சியளிக்கிறார்.
வீரஆஞ்சநேயரின் வலது கை, சற்று உயர்த்தி `‘அபய முத்திரையுடன்” அருள்புரிகிறார். இடது கையை, இடது தொடையின் மீது கம்பீரமாக வைத்து, இடையில் சௌகந்திகா மலரையும் ஏந்தியிருக்கிறார், வீர ஆஞ்சநேயர். அந்த சௌகந்திகா மலர், இறைவனின் இடது தோள்பட்டைக்கு சற்று மேலே காணப்படுகிறது. மார்பில், மாலைகளும் பூணூலும் காணப்படுகின்றன.
அதே போல், அனுமனின் காதுகளில் குண்டலங்கள், தலைக்கு மேல் வால் உயர்ந்த நிலையில் இருப்பதையும், அதன் நுனியில் ஒரு சிறிய மணி இருப்பதையும் காணலாம்.
கோயிலில், பெரிய தியான மண்டபம் ஒன்றும் உள்ளது. இந்த தியான மண்டபத்தில், பாண்டுரங்கன் - ருக்மிணியின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சிவன், விநாயகர், நாகர் ஆகியோரும் பிரதிஷ்டை ஆகியிருக்கிறார்கள். இங்குள்ள துளசிச் செடியை பார்க்கப்பார்க்க கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இங்கு ஸ்ரீ சத்ய நாராயண ஸ்வாமி இருப்பதால், பௌர்ணமி அன்றும் விசேஷ நாட்கள் அன்றும் சத்ய நாராயண பூஜை செய்யப்படுகிறது. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் இருப்பதால் நரசிம்மர் ஜெயந்தியும், வீர ஆஞ்சநேயர் இருப்பதால் அனுமன் ஜெயந்தியும், ஜெயதீர்த்தர், ஸ்ரீ பாதராஜர், வியாசராஜர், ராகவேந்திரர் ஆகியோரின் மிருத்திகா பிருந்தாவனங்கள் இருப்பதால், ஆராதனைகளும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதேபோல், ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும், உற்சவர் ராகவேந்திரரின் புறப்பாடுகள் கோயில் வளாகத்தில் நடைபெறும்.
எப்படி செல்வது: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 3கி.மீ., தூரமும், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 850மீட்டர் தூரமும் கோட்டை மாரியம்மன் கோயிலில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் இக்கோயில்
அமைந்துள்ளது.
(தொடரும்)

