பகைமை காற்றைப் போல எல்லா இடங்களிலும் பரவிக் கிடக்கிறது. அரவணைத்து வளர்த்து, அல்லல்களில் இருந்து கட்டிக் காப்பாற்றிய, நம்மால் காப்பாற்றப்பட வேண்டிய அன்னை, தந்தையரிடம் பகை. அன்னை - தந்தையரை விட்டுவிட்டு நீயே கதி என்று வந்த மனைவியிடம் பகை. கட்டிக் காப்பாற்றி பண்போடு பராமரிக்கும்.
கணவரிடம் பகை.வளர்த்துவானேன்! வீட்டில் பகை, வெளியில் பகை, உள்ளத்தில் பகை, உறவில் பகை. ஆறறிவு படைத்த மனிதர்கள் என்று என்னதான், பெருமை பாராட்டிக் கொண்டாலும், பகையின் காரணமாக விலங்காகவே மாறிவிடும் மனிதர்கள் பலர். ஆனால், கொடூர குணம் படைத்ததாகச் சொல்லப்படும் விலங்குகளைக்கூட மிகவும் சாதுவாக மாற்றுபவர்கள்தான் - மகான்கள்.
அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர், வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சிதான் இது. நிகழ்ச்சி என்னவோ திருக்காளத்தியைத் தாண்டி ஒரு காட்டில் நிகழ்ந்ததாக இருந்தாலும், திருச்செந்தூர் - மதுரை முதலான தலங்களுக்குப் போய்விட்டுப் பிறகு, திருக்காளத்தியைத் தாண்டி காட்டில் நடந்த நிகழ்ச்சியைப் பார்க்கலாம். பிறந்து ஐந்து வயதாகியும் பேச்சு வராமல் ஊமையாகவே இருந்த குழந்தை, திருச்செந்தூர் முருகனருளால் பேசத் தொடங்கி, அப்போதே கந்தர் கலிவெண்பா பாடியது. அலை கடலோரம் இருக்கும் ஆறுமுக வள்ளலின் அருளைப் பெற்றுப் பாடிய அந்த குழந்தை...
ஆலவாய் நகரிலிருக்கும் அங்கயற்கண் அம்மையைத் துதித்து ``மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’’ பாடி மீனாட்சி அம்பாளே, தன் முத்தாரத்தைப் பரிசாகத் தரும்படியான பாக்கியம் செய்த குழந்தை... குமரகுருபரர். இவர்தான் கொடூர குணம் படைத்த விலங்கை சாதுவாக மாற்றியவர். குமரகுருபரர், காசிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த நேரம்...போகும் வழியில் அவர் திருக்காளத்தியில் தரிசனம் முடித்து, திருவேங்கட மலையிலும் தரிசனம் முடித்து, அங்கிருந்து புறப்படும் நேரத்தில்...
ஏராளமான மக்கள் ஒரு குழுவாக வந்து குமரகுருபரரை வணங்கினார்கள்; பணிவோடு கைகளைக்குவித்து நின்றார்கள். அவர்களின் அன்பைக் கண்டு குமரகுருபரர் கரங்களைக் குவித்தார்.``பெருமக்களே! இதுவரை என்னைப் பார்த்திடாத நீங்கள், உங்களுடன் எந்த விதமான தொடர்பும் இல்லாத எனக்கு, அளவு கடந்த அன்பும் மரியாதையும் செலுத்துகிறீர்களே! நன்றி!’’ என்றார். வந்தவர்கள் வாய் திறந்தார்கள்.
``பெருமானே! தங்கள் தோற்றமே எங்களைக் கையெடுத்துக் கும்பிட வைக்கிறது. உங்களுடைய சாதனைகளை எல்லாம் நாங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். அதனால்தான், எங்கள் குறையைத் தீர்க்கும் படியாக உங்களிடம் வேண்டி வந்திருக்கிறோம்’’ என்று நிறுத்தினார்கள். அவர்களை எல்லாம் ஒரு முறை நன்றாக உற்றுப் பார்த்தார் குமரகுருபரர்;``உங்கள் முகங்களை எல்லாம் பார்க்கும் போது, ஏதோ ஒரு பயமும் ஆபத்தும் உங்களைச் சூழ்ந்து இருப்பது தெரிகிறது.
அது என்னவென்று சொல்லுங்கள்! முடிந்தால் தீர்த்து வைக்கிறேன். இல்லாவிட்டால், சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தாவது உங்கள் துயரத்தை போக்க முயல்வேன்’’ என்றார். வந்தவர்கள் தங்கள் கஷ்டத்தைச் சொன்னார்கள்;``சுவாமி! இங்கே வனாந்தரத்தில் ஒரு சிங்கம் இருக்கிறது. அது அவ்வப்போது வந்து தொல்லை கொடுக்கிறது. இதுவரை எப்படியோ ஓடித் தப்பித்துப் பிழைத்து விட்டோம். இருந்தாலும் எந்த நேரம், என்ன ஆகுமோ என்று பயத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எப்படியாவது அந்தச் சிங்கத்திடம் இருந்து, நீங்கள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என வேண்டினார்கள். அவர்கள் குரலிலேயே அச்சம் தெரிந்தது. குமரகுருபரர் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி,``அந்தச் சிங்கத்திடம் இருந்து உங்களை நான் காப்பாற்றுகிறேன்.
கவலை படாதீர்கள்!’’ என்றார். காப்பாற்றுவதாகச் சொன்ன கருணாமூர்த்திக்குப் பழங்களும், உணவு வகைகளும் தந்து, அங்கேயே ஒரு வீட்டில் தங்க வைத்தார்கள். மறுநாள் பொழுது விடிந்தது. குமரகுருபரர் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, அனுஷ்டானங்களை முடித்தார். அதன்பின் மலை அடிவாரத்தில் இருந்த தோட்டத்திற்குக் குமரகுருபரர் சென்றபோது, ஊர் மக்களும் அவர் பின்னாலேயே சென்றார்கள்.
தோட்டத்தை அடைந்ததும் அங்கே ஓரிடத்தில் அமர்ந்து, இறைவனை எண்ணித் தியானத்தில் ஈடுபட்டார் குமரகுருபரர். அவரைச் சுற்றி ஊர் மக்கள் எல்லாம்,``இவர் மூலமாக நம் துயரம் நீங்க ஒரு வழி பிறக்காதா?’’ என்ற எண்ணத்தில் கவலை யோடு குமரகுருபரரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். குமரகுருபரர் தன்னை மறந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு தோட்டத்து மரங்களின் பின்னணியில் ஏதோ சலசலப்பு சத்தம் கேட்டது. அனுபவப்பட்ட அந்த ஊர் மக்களின் முகங்களில், அவசர அவசரமாகப் பயம் அப்பிக்கொண்டது. அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே மரங்களின் இடை வெளியில் இருந்து, ஒரு சிங்கம் வெளிப்பட்டு, குமரகுருபரர் தியானம் செய்து கொண்டிருந்த இடத்தை நோக்கி, சிங்க நடை போட்டு வந்தது. (பிறகு சிங்கம் வேறு எப்படி நடக்குமாம்.) அதைப் பார்த்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் கத்த வில்லையே தவிர, பலர் ஓட்டம் பிடித்தார்கள்.
ஓட முடியாத சிலர் அருகில் இருந்த மரங்களில் வேகவேகமாக ஏறினார்கள். ஒரு சிலர் மட்டும் சற்று தைரியத்தோடு குமரகுருபரர் அருகிலேயே பாதுகாவலாக நின்றார்கள்.
இருந்தாலும் எதற்கும் இருக்கட்டும் என்று, பட்டுப்போய்க் கீழே விழுந்த கிளைகளில் இருந்து, சற்று தடியான குச்சிகளை எடுத்து கைகளில் வைத்துக் கொண்டார்கள். இவ்வளவு கலவரங்களின் நடுவில் குமரகுருபரரின் தியானம் கலையவில்லை.
கம்பீரமாக வந்தாலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வந்த சிங்கம், குமரகுருபரரின் முன்னால் அப்படியே அமைதியாகப் படுத்துக் கொண்டது.குமரகுருபரரின் அருகிலேயே இருந்தவர்கள் பதற்றத்தையும் ஆச்சரியத்தையும் மாறிமாறிக் காட்டினார்கள். மரங்களில் ஏறி மறைந்து கொண்டவர்களோ, கீழே நடப்பதை எல்லாம் பார்த்து, தங்கள் கண்களையே நம்ப முடியாமல் தவித்தார்கள். நீண்ட நேரம் ஆயிற்று. குமரகுருபரர் தியானம் கலைந்து கண்களை திறந்தார். காலடியில் படுத்துக் கிடந்தபடி இருந்த சிங்கத்தையும் அருகில் இருப்பவர்களையும் பார்த்தார். அதன் பின் தன் தீர்த்த பாத்திரத்தில் இருந்து சிறிதளவு நீரைச் சிங்கத்தின் மீது தெளித்தார்.
அது முன்பைவிட அமைதியாக இருந்தது. குமரகுருபரர் அனைவரையும் அருகில் அழைத்தார். மரங்களில் இருந்தவர்களும் ஓடிப் போனவர்களும் திரும்பி வந்தார்கள். அவர்களிடம் குமரகுருபரர்,
``ஊர் மக்களே! இனிமேல் உங்களுக்குப் பயம் வேண்டாம். இந்தச் சிங்கம் நமக்கு நண்பனாகிவிட்டது. நீங்கள் அமைதியாக வாழலாம்’’ என்றார். அவ்வளவு பேர்களும் குமரகுருபரரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள். தங்கள் நன்றியைப் பலவிதங்களிலும் தெரிவித்துக் கொண்டார்கள்.
அவர்களிடம் விடைபெற்றுக் கொண்ட குமரகுருபரர், சிங்கத்தின் மீதேறி அங்கிருந்து புறப்பட்டார். (அந்தச் சிங்கத்தை காசிக்கு நெருங்குவதற்கு முன் குமரகுருபரர் அனுப்பிவிட்டார்) கொடூரமாக சீறிப்பாயும் மிருகங்களைக்கூட இவ்வாறு அமைதியாக்கிய மகான்கள் பலர் உண்டு. நம்மால் அவ்வாறு செய்ய முடியாவிட்டால்கூட, மனிதர்களிடமாவது அமைதியை பரப்ப முயற்சி செய்வோம்!
V.R.சுந்தரி


