Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வைத்தியநாத சாயி

1. ‘‘மந்திரமும் தந்திரமும் மருந்து மாகி

தீரா நோய் தீர்த்தருள வல்லான்’’

என்பது திருத்தாண்டகத்தில் அப்பர் வாக்கு.

மந்திரம் முதலிய மூன்றும் உடல்நோயைத் தீர்ப்பதுபோல பிறவி நோய் என்ற தீராத நோயையும் தீர்த்தல் பற்றி இறைவன் ‘வைத்தியநாதன்’ என்று போற்றப்படுகிறான். அதனால் அவன் எழுந்தருளியுள்ள தலம் ‘வைத்தீஸ்வரன் கோயில்’.‘‘பிரதமோ தைவ்யோ பிஷக்’’ என்று ஸ்ரீருத்ரம் பகவானைப் போற்றிப் பாடுகிறது. அதாவது ‘முதன்மையான தெய்வத்தன்மை வாய்ந்த மருத்துவன்’ என்பது கருத்து.விஷ்ணு ஸஹஸ்ர நாமம் அறுபத்திரண்டாம் ஸ்லோகத்தில், ‘பேஷஜம் பிஷக்’ என்று விஷ்ணு துதிக்கப்படுகிறார். பேஷஜம் என்றால் ஔஷதமாக, மருந்தாக இருப்பவன்; பிஷக் என்றால் மருத்துவன். எனவே, மருந்தாகவும், மருத்துவனாகவும் இருக்கின்றான் பகவான்.

மனிதர்களின் எண்ணற்ற நோய்களை குணப்படுத்துவதற்காக இந்திரனால் உபாசிக்கப்பட்ட இந்திராக்ஷீ ஸ்தோத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தேவியின் பல்வேறு நாமங்களை துதித்துப் போற்றும் இந்த ஸ்தோத்திரத்தில் ‘பூதஜ்வரம் முதல் ஜ்வராலாபஜ்வரம் வரை இருபத்திநான்கு ஜுரங்கள் குறிக்கப்படுகின்றன. அத்தனை ஜுரங்களும் நீங்க வேண்டும் என்பதே தேவியிடம் வேண்டும் பிரார்த்தனையாகும்.

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திவ்ய பிரபந்தம் ‘திருமாலை’ என்னும் தனிப்பெயர் கொண்டது. இதனால், ‘திருமாலை அறியாதார் திருமாலை அறியாதாரே’

என்னும் பெரியோர் மொழியும் வைணவத்தில் மிக பிரசித்தம்.

‘நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க

நரகமே சுவர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி’’

- என்று சேவிக்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார்.

முத்கலன் தானம் செய்யும் போது ‘கிருஷ்ணார்ப்பணம்’ என்று சொல்லிக் கொடுத்ததைப் பற்றி எமனும் முத்கலனும் பேசிக் கொண்டிருக்க அப்பொழுது நரகத்தில் உள்ளவர்கள் பகவானின் திருநாமத்தைக் கேட்டவுடனே அந்த நரகம் சுவர்க்க லோகமாக மாறியது என்கிறார் ஆழ்வார்.‘விஷ்ணு’ என்னும் சப்தத்தினாலே அனைத்து நோய்களும் நிவர்த்தியாகும் என்று பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.

2. இயற்கையிலேயே ஞானியினது வாழ்க்கையானது உள்ளும்-புறமும் இனிமையானதாய் இருக்கிறது. அவர்களின் பல்வேறு செயல்கள் மானுடத்தன்மை வாய்ந்தவை எனினும், அச்செயல்கள் தெய்வீகத் தன்மையில் நிலைபெற்றவை. பாபாவின் வாழ்க்கை பேரானந்த மானுடமாக உருப்பெற்றதாகும். ‘பரமாத்மாவிடம் சரண் புகுவோர் அவரது அருளால் மாயை பந்தங்களினின்றும் விடுவிக்கப்படுவர்’ என்பது மாயையைப் பற்றி பாபாவின் திருமொழி. மேலும், ‘‘யார் அதிர்ஷ்டசாலியோ எவருடைய பாவங்கள் ஒழிந்தனவோ அவர்கள் எனது வழிபாட்டை எய்துகிறார்கள். ‘சாயி, சாயி’ என்று எப்போதும் கூறிக்கொண்டிருப்பீர் களானால் நான் உங்களை ஏழ்கடலுக்கு அப்பால் எடுத்துச் செல்வேன். இம்மொழிகளை நம்புங்கள். நீங்கள் நிச்சயம் நன்மையடைவீர்கள். வழிபாட்டின் கூறுகள் எட்டோ, பதினாறோ எனக்குத் தேவையில்லை. எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நான் அமர்கிறேன்” என்று பாபா தமது அடியவர்களின் நலனுக்காக அருளிய அருள்மொழி. தம்மைத்தாமே முழுவதுமாகச் சரணடைவோர்களுக்கு இன்றும் தம் அருளை-பேரருளை பொழிந்து கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.

புனே, ஜுன்னர் தாலுகாவில் நாராயண்காவைச் சேர்ந்த பீமாஜி பாடீல் என்பவர் பல வியாதிகளாலும் நெடுநாள் நெஞ்சு வலியாலும் துன்பப்பட்டார். முடிவில் அது காசநோயாக மாறியதால் மிகவும் பலவீன மடைந்தார். எல்லாவித சிகிச்சை முறைகளும் அவருக்கு பலனளிக்கவில்லை. முடிவாக கடவுளை நோக்கி, ‘நாராயண மூர்த்தியே, இப்போது என்னைக் குணப்படுத்துவீராக’ என்று வேண்டிக்கொண்டார். சூழ்நிலைகள் எல்லாம் நன்றாக இருக்கையில் நாம் கடவுளை நினைப்பதில்லை. கேடும், துன்பமும், நோயும் வரும் போது தான் நாம் கடவுளை நினைக்கிறோம். ‘நோவுளார் வாயுளான்’ என்பது திருநானசம்பந்தர் தேவாரம்.

சீரடியிலுள்ள நானா சாஹேப் சாந்தோர்க்கர்க்கு தனது துன்பமனைத்தையும் கூறி ஒரு கடிதம் எழுதினார். ‘‘சாயியின் பாதங்களைச் சரணடையுங்கள். அது ஒன்று தான் சிறந்த வழி” என்று நானா பதில் கடிதம் எழுதினார். அதன் பொருட்டு பீமாஜி பாடீல் சீரடிக்கு வந்து பாபாவின் முன்னர் அமர்த்தி வைக்கப்பட்டார். பாடீலைப் பார்த்த பாபா, ‘ஓ! ஷாமா…. எங்கிருந்து இப்படிப்பட்டவர்களை பிடித்துக் கொண்டு வந்து என்மீது தள்ளுகிறாய்’ என்றார். முந்தைய தீய கர்மங்களாலேயே இந்நோய் வந்ததென்றும், அதில் தாம் தலையிடுவதற்கு விரும்பவில்லை என்றும் கூறிவிட்டார். ஆனால் பாடீல் பாபாவின் ஆசிகளுக்காக மன்றாடினார். அப்போது பாபாவின் உள்ளம் உருகியது.

‘‘பொறு, உன்னுடைய கவலைகளை தூர எறி. உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. இம்மசூதியில் காலடி எடுத்து வைக்கும் மனிதனின் துன்பம் எப்படிப்பட்டதாயினும் அவை நீங்கிவிடும். இந்த ஃபக்கீர் அன்பானவர்; கருணையானவர், இவ்வியாதியைக் குணப்படுத்துவார்” என்று பாடீலுக்கு அமைதியான வார்த்தைகளைக் கூறினார் பாபா. காசநோயால் தொடர்ந்து வாந்தியெடுக்கும் பாடீல் பாபாவின் சந்நிதானத்தில் எந்தவித துயரமும் இல்லாமல் அமைதியாக இருந்தார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது. பாபா பீமாபாய் வீட்டில் தங்கும்படி சொன்னார். பாடீல் அங்கு சென்றார்.

அந்த வீடு அசொளகரியமாகவும், சுகாதாரக் குறைவும் கொண்டது. எனினும், பாபாவின் உத்தரவிற்கு பாடீல் கீழ்ப்படிந்தார்.

‘நல்ல குருநாதன் நம்மை வருத்துவது

கொல்லுவதற்கல்ல கொல்லவல்ல பொல்லா வினையறுக்க;

நல்லாடை அழுக்கெடுக்கும் வண்ணான் அலர்சிலைமேல் மோதுவது

கிழிப்பதற்கல்ல கிளர்தூசி போவதற்கு’’

- என்று ஒரு பழம்பாடல் குருநாதரின் கருணையை எடுத்தியம்புகிறது. அதற்குப் பின் பீமாஜி பாடீலுக்கு இரண்டு கனவுகள் ஏற்பட்டன. முதல் கனவில் அவர் சிறுபையனாகத் தம் ஆசிரியர் முன்னால் செய்யுள் பாடங்களைச் சரியாக ஒப்பிக்காமல் பிரம்படி வாங்குவது போல் கண்டார். இரண்டாவது கனவில் ஒரு கல்லை யாரோ ஒருவர் தம் நெஞ்சின்மீது வைத்து மேலும் கீழும் உருட்டி கடுமையான வேதனையை உண்டாக்குவதாகக் கண்டார். இந்த இரண்டு கனவுகளின் மூலம் அவரது நோய் முற்றிலும் குணமடைந்தது.

பாபாவின் ஆசிகளோடு அவரிடம் விடைபெற்றுக் கொண்டு பாடீல் தம் ஊருக்குச் சென்றார். பாபாவின் அருளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர் புதுமுறையில் ‘‘ஸ்ரீ சத்ய சாயி விரத பூஜை’’ (அதாவது பௌர்ணமி ஸ்ரீசத்ய நாராயண பூஜை மாதிரியே செய்யப்படுவது) வழிபாட்டை தம் வீட்டில் தொடங்கினார். இன்றும் மகாராஷ்டிராவில் பௌணர்மி தோறும் இப்பூஜையை சாயி பக்தர்கள் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

எப்போதுமே பாபா நோய்களைத் தம் வாய்மொழியாலேயே குணப்படுத்தினார் என்று கூற முடியாது. பல சந்தர்ப்பங்களில் தமக்கே உரிய சிகிச்சை முறைகளைக் கூறுவார். உண்மையில் அவை மருத்துவ சாத்திரத்திற்கு விரோதமாகவும் அமையும் அல்லது அந்த நோயை அது அதிகரிக்கக் கூடியதாகவும் அமையும். ஆனால் அந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் போது அது சரியான பலன் தரும் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

நானாவின் முதுகில் ஒரு கட்டி இருந்தது. அந்தக் கட்டிக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. மறுநாள் அறுவை சிகிச்சை என்ற நிலையில் நானா தூங்கிக் கொண்டிருக்கும் போது கூரையிலிருந்து ஓட்டுத் துண்டு ஒன்று அந்தக் கட்டி மேலேயே விழுந்து அந்தக் கட்டி உடைந்தது. டாக்டர் அறுவைச் சிகிச்சை வேண்டாம் சரியாகி விட்டது என்றார். சில நாட்கள் கழித்து ‘என் விரலால் உன் கட்டியை நீக்கினேன்’ என்றார் பாபா.

ஷாமாவை விஷப்பாம்பு கடித்த போது நண்பர்கள் பாம்புக் கடிகளைக் குணப் படுத்தும் விட்டோபா கோயிலுக்குப் போக விரும்பினர். ஆனால் ஷாமா தமது விட்டோபாவான பாபாவிடம் தான் போவேன் என்று அடம் பிடித்தார். ஷாமா மசூதிப் படிகளில் ஏறத் தொடங்கியதுமே, ‘மோசமான பூசாரியே, ஏறாதே, போ, போய்விடு, இறங்கு’ என்று சத்தம் போட்டார். பின்கோபம் தணிந்து ஷாமாவிடம் ‘வீட்டுக்குப் போ, படுக்காதே, தூங்காதே’ என்றார். அதன்படி ஷாமா வீட்டிற்குத் திரும்பினார். காலையில் நன்றாகக் குணமடைந்தார். பாபா கோபமாகச் சொன்னது ஷாமாவின் உடலிலுள்ள விஷத்திற்குத் தானே தவிர அவரையல்ல என்பதை ஷாமா பின்னர் விளங்கிக் கொண்டார்.

‘‘மஹான்கள் பக்தர்களுக்கு லௌகீகமான நன்மைகளையும் ஆத்மிகமான நலன்களையும் தருவதற்காகவே இருக்கிறார்கள். நானும் என் பக்தனுக்கு அத்தகைய நலன்களைத் தருவதற்கு வந்திருக்கிறேன்’’ என்று பாபா அடிக்கடி சொல்வார்.ஒருமுறை பக்தர் ஒருவர் உலகாயத நன்மைகளை நாடி பாபாவிடம் வருவதைக் குறையாகச் சொன்னார். அதற்கு பாபா ஆட்சேபம் தெரிவித்து, ‘‘ஒரு போதும் அவ்வாறு செய்யாதே. எனது மக்கள் முதலில் அதற்காகத்தான் வருகின்றனர்.

தமது ஆசைகள் நிறைவேறி, வாழ்க்கை சௌகரியத்தை அடைந்தபிறகு அவர்கள் என்னைப் பின்பற்றி ஆத்மிகத் துறையில் முன்னேறுகிறார்கள். என்னைச் சேர்ந்தவர்களைத் தொலைதூரத்தில் இருந்தெல்லாம் பல்வேறு காரணங்களுக்காக இங்கே வரவழைக்கிறேன். அவர்களை வரவழைப்பது நான்தான். அவர்கள் தம்மிச்சைப்படி என்னிடம் வருவதில்லை. நான் அவர்களை என்னிடம் இழுத்துக் கொள்கிறேன்” என்றார். இத்தகைய அருள்மொழிச் சொற்கள் இன்னும் பலித்து வருகின்றன. சாயி சரணம்.

முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்