Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இஷ்ட தெய்வம் வடிவில் வந்து நேரில் காட்சி கொடுத்த சாய்பாபா..!!

சாய்பாபா, பக்தர்களுக்கு அவர்களின் இஷ்ட தெய்வங்களின் உருவங்களில் காட்சி தந்து, அருள் புரிந்த அற்புதங்கள் ஏராளம். டாக்டர் ஒருவருக்கு ஏற்பட்ட விசித்திரமான அனுபவம் ஆச்சர்யம் நிறைந்தது. அந்த டாக்டர், ராமரின் அதி தீவிர பக்தர். அவருக்கு வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். அந்த அதிகாரியோ சாய்பாபாவின் பரம பக்தர்.

ஒருமுறை வருவாய்த்துறை அதிகாரி ஷீர்டி சென்று சாய்பாபாவை தரிசிக்க விரும்பினார். அவர் எங்கு சென்றாலும் டாக்டர் நண்பரும் உடன் செல்வது வழக்கம். எனவே, ஷீர்டிக்குத் தன்னுடன் வருமாறு டாக்டரை அழைத்தார். அப்போது டாக்டர், நான் ஸ்ரீராமரையே தெய்வமாகக் கொண்டவன். எனக்கு எல்லாமே ஸ்ரீராமர்தான். ராமரை வணங்கும் நான், ஒரு முஸ்லிமை வணங்க விரும்பவில்லை. அதனால் நீங்கள் மட்டும் போவதுதான் சரி. நான் வரவில்லை! என்று உறுதிபடக் கூறிவிட்டார் டாக்டர்.

நண்பரான வருவாய்த்துறை அதிகாரி, ஸ்ரீராமர் மீது உங்களுக்கு உள்ள பக்தியை நான் அறிவேன். அதை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. மேலும், நீங்கள் சாய்பாபாவை வணங்கித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. யாரும் உங்களை வற்புறுத்தவும் மாட்டார்கள். நாம் இருவரும் சேர்ந்தே பயணம் செய்வது வழக்கம் ஆயிற்றே. எனது திருப்திக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் நீங்கள் வந்தே ஆக வேண்டும்! என்று உரிமையுடன் அழைத்தார்.

நண்பரின் அன்புக்குக் கட்டுப்பட்ட டாக்டர், அவருடன் ஷீர்டி சென்றார். இருவரும் பாபாவின் தரிசனத்துக்காக மசூதிக்குச் சென்றனர். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. சாய்பாபாவின் பக்தரான வருவாய்த்துறை அதிகாரி, மகானை வணங்குவதற்கு முன் அவரை முந்திக்கொண்டு முன்னால் விரைந்து சென்ற டாக்டர், எவரும் எதிர்பாராத விதமாக பாபாவின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். இரு கைகளையும் கூப்பி அவரை, பக்தியுடன் வணங்கினார்.

மட்டற்ற வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த அதிகாரி, மருத்துவரின் மனமாற்றத்துக்கான காரணத்தைக் கேட்டார். அந்த டாக்டர், என் அன்புக்குரிய ஸ்ரீராமர் அந்த ஆசனத்தில் வீற்றிருக்கக் கண்டேன். அதனால் பணிந்து வணங்கினேன். மீண்டும் நோக்கும்போது அங்கு சாயிபாபா இருந்தார். ராமர் வேறு; சாயி வேறு அல்ல என்று உணர்ந்துகொண்டேன். பாபா ஒரு முழுமையான யோகி. அவதார புருஷர்! என்று நெகிழ்ச்சியுடன் கண்ணில் நீர் மல்க, தழுதழுத்த குரலில் கூறினார். டாக்டருக்கு, அவரின் அன்புக்கு உகந்த ராமராகக் காட்சி கொடுத்து லீலை புரிந்த சாயிபாபாவின் பிறந்த நாள் ‘ராமநவமி’ அன்றுதான் என்பது பல பக்தர்களின் நம்பிக்கை.