Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சடாரி

பகுதி 2

- சென்ற இதழின் தொடர்ச்சி

எம்பெருமான் சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கும் அரசன் என்றால், தாயார் கருணையே வடிவான பரிந்துரையாளர். இதையே ஸ்ரீவைஷ்ணவ தத்துவம் ‘‘புருஷகார பூதை” என்கிறது. ‘புருஷகாரம்’ என்றால் பரிந்துரைத்தல். ‘பூதை’ என்றால் அந்தப் பரிந்துரைக்கும் தன்மையையே தன் சொரூபமாக, இயல்பாக, கொண்டிருப்பவர் என்று பொருள். அதாவது தாயார் எப்போதுமே பரிந்துரை செய்பவளாக இருப்பதால்தான் அவளுக்கு இந்தப் பெயர். ஒரு தாய் தன் குழந்தையைத் தேடி ஓடி வருவது போல, அந்தப் பரிந்துரையின் வடிவமாகவே இருக்கும் ஜகந்மாதா தன் எல்லையைத் தளர்த்திக்கொண்டு வந்து ஹனுமனை ஆசீர்வதிக்கிறாள்.

ஹனுமனைப் பொறுத்தவரை வரதனும் ராமனும் ஒருவரே. அந்த அத்திவரதனின் திருமுகத்தில் தன் ஆருயிர் ராமனைத் தரிசிப்பவர் அவர்.’’எப்போதும் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டிருக்கும் இந்தத் தொண்டனுக்குத் துயரே வரக்கூடாது” என்று எம்பெருமானிடம் அவள் பரிந்துரை செய்யும் உன்னதமான தருணம் இது. தனக்கென வாழாமல் ராமனுக்காகவே வாழ்ந்த ஹனுமனின் பக்திக்கு, அந்த மகாலட்சுமியே நேரில் வந்து தரும் ஆகச்சிறந்த வெகுமதி இது. ஒரு அடியவனின் விநயத்திற்கு முன்னால், இறைவியின் சட்டதிட்டங்கள் கூட எப்படித் தளர்ந்து போகின்றன என்பதற்கு இந்தக் காஞ்சி வைபவமே சாட்சி.

சடாரி ஒரு தீட்சை. நம் தலையில் அது படும் அந்த ஒரு நொடி, நம் எண்ணங்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. அகங்காரம் கரைந்து, அந்தப் பாதங்களின் நிழலில் நாம் தஞ்சம் அடைகிறோம். ‘‘சடகோபரே உமது திருவடிகளைத் தாரும்” என்று நாம் கேட்பதன் அடையாளமே இந்தச் சடாரி. இனி நீங்கள் எப்போது பெருமாள் கோவிலுக்குச் சென்றாலும், சடாரி உங்கள் தலை மேல் வரும்போது அதை ஒரு வழக்கமான சடங்காகப் பார்க்காதீர்கள்.

கண்களை மூடி, உங்கள் மொத்த கர்வத்தையும் அந்தப் பாதங்களின் கீழே இறக்கி வைத்துவிடுங்கள். ‘‘பெருமாளே, என் புத்தி உனக்கு அடிமை” என்று ஒரு கணம் நினையுங்கள். அந்த உலோகம் உங்கள் உச்சந் தலையில் தரும் ஒரு மெல்லிய அழுத்தம், உங்கள் அகங்காரத்தின் மேல் விழும் அடியென உணருங்கள். அர்ச்சகர் சடாரியை எடுக்கும்போது, உங்கள் சுமைகள் அனைத்தையும் அந்த வைகுண்டவாசனே ஏற்றுக்கொண்டார் என்கிற நிம்மதியுடன் சந்நதியை விட்டு வெளியே வாருங்கள்.

சரணாகதி என்பது வெறும் மந்திர உச்சாடனங்களில் இல்லை. சடாரியை நாம் எத்தகைய விநயத்துடன் ஏற்றுக்கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. நாம் நம் தலையை எவ்வளவு தாழ்த்துகிறோமோ, அவ்வளவு உயரத்திற்கு நம் ஆத்மாவை அந்தத் திருவடிகள் உயர்த்தும்.

ஆகாஷ வாமன