கூத்தனூர் - சரஸ்வதி
கூத்தனூர் மகா சரஸ்வதி திருக்கோயில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சரஸ்வதி தலமாகும். தமிழகத்தில் சரஸ்வதிக்கென்று தனிச்சந்நதி அல்லாமல், மகா சரஸ்வதியே மூலவராக அருள்பாலிக்கும் சிறப்பு மிக்க கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு கலைமகள் வெண் தாமரையில் அமர்ந்த திருக்கோலத்தில், கையில் வீணையுடன் கல்வி, கலை, ஞானத்தை அருளும் அன்னையாகக் காட்சி தருகிறாள்.
இத்தலத்தின் சிறப்பு கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தருடன் நெருங்கிய தொடர்புடையது. ஒட்டக்கூத்தர் இத்தலத்தில் சரஸ்வதியை வழிபட்டு, கலைமகளின் அருளால் கவிபாடும் ஆற்றலைப் பெற்றார் என்பது தலவரலாறு. இதன் காரணமாகவே இத்தலம் ‘கூத்தனூர்’ என்ற பெயருடன் சரஸ்வதி வழிபாட்டில் தனிச்சிறப்பைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
நவராத்திரி விழாவும், குறிப்பாக விஜயதசமி நாளில் நடைபெறும் கல்வித் தொடக்கமும் (வித்யாரம்பம்) இக்கோயிலின் முக்கியமான வழிபாடுகளாகும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பெற்றோர் இங்கு வந்து சரஸ்வதியை வழிபட்டு, குழந்தைகளுக்கு முதன்முதலாக எழுத்தறிவிக்கும் சடங்கை மேற்கொள்கின்றனர். கலை மற்றும் கல்வித்துறையில் முன்னேற்றம் வேண்டுவோரும் இத்தலத்தில் வழிபடுகின்றனர்.
வழித்தடம்: மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் அருகே கூத்தனூர் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து சுமார் 21 கி.மீ., திருவாரூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. பூந்தோட்டத்திலிருந்து சுமார் 1 கி.மீ. சென்றால் கூத்தனூர் மகா சரஸ்வதி கோயிலை அடையலாம்.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் சரஸ்வதி
இங்கு சரஸ்வதி தேவிக்கு தனிச்சந்நதி அமைந்துள்ளது. கச்சபேஸ்வரர்-சுந்தராம்பிகை அருள்பாலிக்கும் இத்தலம் காஞ்சிபுரத்தின் பழமையான சிவத் தலங்களில் ஒன்றாகும். திருமால் கச்சபம் எனப்படும் ஆமை வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் கச்சபேசம் என்றும், இறைவன் கச்சபேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் வரலாறு காஞ்சிப் புராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கோயில் வளாகத்தில் விநாயகர், சூரியன், பைரவர், துர்க்கை, ஆதிகேசவப் பெருமாள் ஆகியோருடன் சரஸ்வதி தேவிக்கும் தனிச் சந்நதி இருப்பது குறிப்பிடத்தக்கது. கோயிலின் பழமை, பல்வேறு தெய்வங்களுக்கான சந்நதிகள் ஆகியவை இத்தலத்தின் தனிச்சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன.
வழித்தடம்: காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில், அன்னை இந்திரா காந்தி சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே உள்ளது. காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2.7 கி.மீ. தொலைவு. சென்னையிலிருந்து சுமார் 75 கி.மீ. பயணித்து காஞ்சிபுரம் வந்து, நகருக்குள் எளிதாக இத்தலத்தை அடையலாம்.
உத்தமர் கோயில் - ஞான சரஸ்வதி
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள உத்தமர் கோயில் திருக்கரம்பனூர் என்றும், பிச்சாண்டார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரே கோயில் வளாகத்தில் பிரம்மா - சரஸ்வதி, திருமால் - மகாலட்சுமி, சிவபெருமான் - பார்வதி ஆகிய மும்மூர்த்திகளும் அவரவர் துணைவியருடன் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிப்பது இத்தலத்தின் மிகப்பெரிய சிறப்பு. இங்கு பிரம்மாவின் துணைவியாக ஞான சரஸ்வதி தனிச்சந்நதியில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.
இத்தலத்தில் சப்த குருக்கள் எனப்படும் ஏழு குரு வடிவங்களும் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. பிரம்மா பிரம்ம குருவாகவும், சுப்பிரமணியர் ஞான குருவாகவும், வியாழன் தேவகுருவாகவும், சுக்கிரன் அசுரகுருவாகவும் இத்தல வழிபாட்டில் இடம்பெறுகின்றனர்.
சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளும் இத்தலத்தில் காணப்படுகின்றன. பின்னர் விஜயநகர மன்னர்கள் உள்ளிட்டோராலும் திருப்பணிகள் நடைபெற்றதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன.
வழித்தடம்: திருச்சிராப்பள்ளியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில், திருச்சி-சேலம் பிரதான சாலையில் நம்பர் 1 டோல்கேட் அருகே உத்தமர் கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ ரங்கத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு; உத்தமர் கோயில் ரயில் நிலையமும் அருகிலேயே உள்ளது.
திருக்கண்டியூர் - பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில் - சரஸ்வதி
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் உள்ள திருக்கண்டியூர், சிவபெருமானின் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகவும், பாடல் பெற்ற தலமாகவும் சிறப்புப் பெற்றது. இத்தலத்தில் பிரம்மசிரகண்டீஸ்வரர் சந்நதிக்கு அருகில் பிரம்ம தேவருக்கும் சரஸ்வதி தேவிக்கும் தனிச் சந்நதி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க சிறப்பு.
இங்குள்ள சரஸ்வதி நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார்; அருகில் பிரம்மதேவர் அமர்ந்த நிலையில் தாமரை மலரும் ஜபமாலையும் ஏந்தியபடி அருள்பாலிக்கிறார். கல்வி, ஞானம் மற்றும் கலைகளின் தெய்வமாகப் போற்றப்படும் சரஸ்வதியை இத்தலத்தில் பிரம்மதேவருடன் சேர்ந்து வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
இத்தலத்தின் தலபுராணம் பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை சிவபெருமான் பைரவர் வடிவில் அகற்றி, பிரம்மனின் கர்வத்தை அடக்கிய நிகழ்வுடன் தொடர்புடையது. அதன்பின்னர் பிரம்மா இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. கோயில் மேற்கு நோக்கிய அமைப்பில், ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் விளங்குகிறது; சோழர் கலைப்பாணியை வெளிப்படுத்தும் சிற்பங்களும் கட்டிடக்கலை அம்சங்களும் காணப்படுகின்றன.
வழித்தடம்: திருவையாற்றிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் திருக்கண்டியூர் அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருக்கண்டியூரை அடையலாம்..
திருப்பூந்துருத்தி - புஷ்பவனேஸ்வரர் கோயில் - சரஸ்வதி
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகிலுள்ள திருப்பூந்துருத்தியில் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர்- சௌந்தரநாயகி திருக்கோயில் அமைந்துள்ளது. இது திருநாவுக்கரசர் உள்ளிட்ட நாயன்மார்களால் பாடல் பெற்ற சிறப்புமிக்க சிவத்தலமாகும். இக்கோயிலின் கருவறை கோட்டத்தில் அமர்ந்த கோலத்தில் சரஸ்வதி தேவி தனது திருக்கரங்களில் எழுத்தாணி ஏந்தி அருள்பாலிக்கிறார்.
புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் பழமையான சோழர் காலக் கட்டிடக்கலைச் சிறப்புகளைக் கொண்டது. இறைவனை சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் வழிபட்டதாகத் தலவரலாறு கூறுகிறது. திருப்பூந்துருத்தி என்ற பெயருக்கு இப்பகுதி மலர்களும் மரங்களும் நிறைந்த துருத்தியாக விளங்கியதுடன் தொடர்புடைய விளக்கங்கள் உள்ளன. இத்தலத்தின் தீர்த்தங்களாக காசிப தீர்த்தம், சூரிய தீர்த்தம் குறிப்பிடப்படுகின்றன.
வழித்தடம்: தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாற்றுக்கு முன்பாக திருப்பூந்துருத்தியை அடையலாம். திருவையாறிலிருந்து சுமார் 7 கி.மீ., தஞ்சாவூரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
கங்கை கொண்ட சோழபுரம் - பிரகதீஸ்வரர் கோயில் - சரஸ்வதி
அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில், முதலாம் இராஜேந்திர சோழனால் 11-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட சோழர் கட்டிடக்கலையின் சிறப்புமிக்க திருக்கோயிலாகும்.
இக்கோயிலில் சரஸ்வதி தேவியின் அழகிய சிற்பம் இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, மகாமண்டபத்தில் வடக்குப் பகுதியில் சரஸ்வதியின் திருவுருவம் அமைந்துள்ளது சரஸ்வதி இங்கு நான்கு கரங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளார். கலை, கல்வி, ஞானத்தின் தெய்வமாகிய கலைமகளின் இச்சிற்பம் சோழர் காலச் சிற்பக்கலையின் நுட்பத்தையும் அழகுணர்வையும் வெளிப்படுத்துகிறது.
கோயில் கருவறையைச் சுற்றியுள்ள சிற்பங்களில் சரஸ்வதி, நடராஜர் உள்ளிட்ட உருவங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. சரஸ்வதி சிற்பம் இக்கோயிலின் குறிப்பிடத்தக்க கலைப் படைப்புகளில் ஒன்றாக ஆய்வாளர் களால் சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும், இங்கு சரஸ்வதியும் கஜலட்சுமியும் மகாமண்டபத்தின் இருபுறங்களில் அமைந்திருப்பது, தஞ்சைப் பெரிய கோயிலிலும் காணப்படும் ஒரு சிறப்பான அமைப்புடன் ஒப்பிடப்படுகிறது. இக்கோயிலின் சிற்பங்களில் சைவம் மட்டுமின்றி வைணவம், சாக்தம் உள்ளிட்ட பல்வேறு சமயக் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன என்பது இதன் சிறப்பு.
வழித் தடம்: தஞ்சாவூரிலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் கங்கை கொண்ட சோழபுரம் அமைந்துள்ளது. சென்னை-கும்பகோணம் பாதையில் மீன்சுருட்டிக்கு அருகே உள்ளது. அரியலூரிலிருந்தும் சுமார் 35 கி.மீ. தொலைவில் இத்தலத்தை அடையலாம்.
பத்மநாபபுரம் - சரஸ்வதி கோயில்
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்திற்குள் அமைந்துள்ள தேவரகெட்டு சரஸ்வதி கோயில், கலைமகளுக்காக அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோயிலாகும். இங்குள்ள சரஸ்வதி விக்கிரகம் கவிச் சக்ரவர்த்தி கம்பருடன் தொடர்புடையது என்ற பாரம்பரிய நம்பிக்கை மிகவும் சிறப்பானது. கம்பர் வழிபட்ட சரஸ்வதி விக்கிரகம் பின்னர் வேணாட்டரசர்களிடம் வந்து, பத்மநாபபுரத்தில் நிலைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த சரஸ்வதி விக்கிரகம் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவின்போது பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு ஒன்பது நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பின்னர் மீண்டும் பத்மநாபபுரம் கொண்டு வரப்படுகிறது.
சரஸ்வதி சந்நிதிக்கு முன்பாக அமைந்துள்ள நவராத்திரி மண்டபம், இசை, நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புடைய கலைமண்டபமாகும்.
வழித்தடம்: நாகர்கோவிலிலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் பத்மநாபபுரம் உள்ளது. நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை வழியாகச் சென்று, பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்தை அடையலாம். சரஸ்வதி கோயில் அரண்மனை வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ளது.
நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயில் - சரஸ்வதி
திருநெல்வேலி நகரின் புகழ்பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோயிலில், பொற்றாமரைக் குளத்தின் கரையில் சரஸ்வதி அம்மனுக்குத் தனிச்சந்நதி அமைந்துள்ளது.
நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயில் மிகப் பெரிய பரப்பளவைக் கொண்ட பழமையான சிவத்தலமாகும்; ஐந்து கோபுரங்களுடன் விளங்குகிறது. இக்கோயிலின் மூன்றாவது பிரகாரத்தில் சரஸ்வதி, பிரம்மா உள்ளிட்ட பல தெய்வங்களுக்கு தனித்தனி சந்நதிகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கல்வியில் சிறந்து விளங்க வேண்டுவோர் இங்குள்ள சரஸ்வதி சந்நதியில் வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் வித்யா சக்கரம் அமைந்திருப்பதும் கல்வி தொடர்பான வழிபாட்டின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது.
வழித்தடம்: திருநெல்வேலி சந்திப்பு பகுதியிலிருந்து கிழக்கு ரத வீதி வழியாகச் சென்று நெல்லையப்பர் கோயிலை அடையலாம். கோயில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
திருநெல்வேலி - ஸ்ரீ விஜய சரஸ்வதி கோயில்
திருநெல்வேலி சந்திப்பு, கிழக்கு கார் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ விஜய சரஸ்வதி கோயில், சரஸ்வதி தேவிக்கென்று அமைந்துள்ள தனித் திருக்கோயிலாகும்.
இங்குள்ள சரஸ்வதி தேவி பத்மாசனத் தோற்றத்தில், நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். தனது கைகளில் அட்சர மாலை (ஜெபமாலை), கமண்டலம், அபய முத்திரை மற்றும் பனை ஓலைச் சுவடி ஆகியவற்றை ஏந்தியுள்ளார்.
வழித்தடம்: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கிழக்கு கார் தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது. நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயிலிலிருந்தும் நகருக்குள் எளிதாகச் செல்லலாம்; திருநெல்வேலி சந்திப்பு பகுதியை அடைந்து அங்கிருந்து கிழக்கு கார் தெருவில் கோயிலை அணுகலாம்.
சிதம்பரம் - வீணை வித்யாம்பிகை
சிதம்பரம் நகரின் புகழ்பெற்ற தில்லைக் காளியம்மன் திருக்கோயிலின் பிராகாரத்தில், சரஸ்வதி தேவி “வீணை வித்யாம்பிகை” என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். கல்வி, கலை, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதிக்கு இங்கு வழங்கப்படும் “வித்யாம்பிகை” என்ற பெயர், கல்வி ஞானத்தை அருளும் அன்னையின் தனிச்சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.
இத்தலத்தில் சரஸ்வதி அருகிலேயே “கடம்பவன தட்சிண ரூபிணி” என்ற பெண் வடிவ தட்சிணாமூர்த்தியும் அருள்பாலிப்பது மிகவும் அரிய சிறப்பாகும்.
சிவனுக்கும் காளிக்கும் இடையே நடைபெற்ற நடனப் போட்டி தொடர்பான தலபுராணத்துடன் தில்லைக் காளியம்மன் கோயில் தொடர்புடையது. அந்தக் கோயில் வளாகத்திலேயே சரஸ்வதியும் தனிச்சிறப்புடன் அருள்கிறாள். சரஸ்வதியின் இந்த நின்ற திருக்கோலம், வழக்கமாகக் காணப்படும் அமர்ந்த கோலங்களிலிருந்து வேறுபட்ட விசேஷமான திருக்கோலமாக குறிப்பிடப்படுகிறது.
வழித்தடம்: சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து கடலூர் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்றால் தில்லைக் காளியம்மன் திருக்கோயிலை அடையலாம். அந்தக் கோயிலின் பிராகாரத்திலேயே வீணை வித்யாம்பிகை சரஸ்வதி சந்நதி உள்ளது.
குன்றக்குடி - ஞான சரஸ்வதி
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி-பிள்ளையார்பட்டி சாலையில் மயிலாடும்பாறை என்னும் இடத்தில் ஸ்ரீ ஞான சரஸ்வதி ஆலயம் அமைந்துள்ளது. சரஸ்வதிக்கென்று தனியாக அமைக்கப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
இங்கு ஞான சரஸ்வதி ஞான சொரூபிணியாகவும், சிவஞானத்தை அருளும் அம்பிகையாகவும் வழிபடப்படுகிறாள். ஒரு கையில் ஞானகங்கை, மற்றொரு கையில் ஜப மாலை, கீழ்க் கரங்களில் சுவடி மற்றும் ஞானமுத்திரையுடன் அருள்பாலிப்பதாக தலத் தகவல்கள் கூறுகின்றன. மாணவர்களின் கல்வி, ஞாபகசக்தி, அறிவுத்திறன் ஆகியவை சிறக்கவும், தேர்வு பயம் நீங்கவும் இங்கு வழிபாடு செய்கின்றனர். குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் சடங்கில், தேனால் நாவில் சரஸ்வதி மந்திரம் எழுதும் வழக்கமும் இத்தலத்தில் உள்ளது.
வழித்தடம்: காரைக்குடியிலிருந்து குன்றக்குடி வழியாகப் பிள்ளையார்பட்டி செல்லும் சாலையில் மயிலாடும்பாறை அமைந்துள்ளது. குன்றக்குடி மற்றும் பிள்ளையார்பட்டி இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில், கோவிலூர் - திருப்பத்தூர் சாலையில் ஞான சரஸ்வதி ஆலயத்தை அடையலாம்.


