Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வாசிப்பே வெற்றியின் வழிகாட்டி

போர் முடிந்த இரவு வேளையில், போர்களத்தில் ஒருவர் புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தார். அந்த நபரை பார்த்த ஒரு பெண் மணி கேட்டார்: ‘‘ஏன் எல்லோரும் ஓய்வெடுத்து உறங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் நீ மட்டும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாய்?” என்று.

அதற்கு அந்த நபர் சொன்னார்: ‘‘இன்று சிப்பாயாக பணிபுரியும் நான், இந்தப் படைக்கு ஒருநாள் தலைவனாக ஆக வேண்டுமென்று.”

அப்படி தன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட நபர், பின்னாளில் அந்தப் படைக்கு மட்டுமல்ல, அந்த நாட்டுக்கே மன்னன் ஆனார். அவர் தான் பிரான்ஸ் நாட்டை ஆண்ட ‘‘மாவீரன் நெப்போலியன்”.

ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும் மிகப்பெரிய சக்திகளில் ஒன்று வாசிப்பு. புத்தகங்கள் வெறும் எழுத்துக்களின் தொகுப்பு அல்ல; அவை அனுபவங்களின் களஞ்சியம், ஞானத்தின் பொக்கிஷம், எதிர்காலத்தை வடிவமைக்கும் கருவி. நேரத்தை வீணடிப்பவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் நேரத்தை முதலீடு செய்து அறிவைப் பெருக்கிக்கொள்பவர்களே வரலாற்றில் இடம்பிடிக்கிறார்கள்.

நெப்போலியனைப் பற்றிய இந்த நிகழ்வு நமக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. மற்றவர்கள் ஓய்வெடுத்த நேரத்தில் அவர் தனது மனதையும் அறிவையும் வளர்த்துக் கொண்டார். அவர் படித்தது வெறும் புத்தகம் அல்ல; தனது எதிர்காலத்தை உருவாக்கும் விதையை விதைத்தார். அதனால் தான் ஒரு சாதாரண சிப்பாயிலிருந்து ஒரு நாட்டின் மன்னனாக உயர்ந்தார்.

இன்றைய தலைமுறைக்கு இந்தப் பாடம் மிகவும் அவசியமானது. கைபேசி, சமூக வலைத்தளங்கள், பொழுதுபோக்கு ஆகியவற்றில் நேரத்தை செலவிடுவதற்குப் பதிலாக, தினமும் சில நிமிடங்களாவது நல்ல புத்தகங்களை, நாளேடுகளை, பருவ இதழ்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அறிவு வளரும்போது சிந்தனை வளரும்; சிந்தனை வளரும் போது செயல்கள் மாறும்; செயல்கள் மாறும்போது வாழ்க்கையும் மாறும்.

வெற்றி என்பது ஒரே நாளில் கிடைப்பதல்ல. சிறிய சிறிய நல்ல பழக்கங்களின் தொடர்ச்சியான பலனே பெரிய வெற்றியாக மாறுகிறது. வேத வாசிப்பு, ஜெபம், ஒழுக்கம், விடாமுயற்சி ஆகியவை ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். இன்று நாம் எடுக்கும் ஒரு நல்ல முடிவு, நாளைய நம் எதிர்காலத்தை மாற்றக்கூடியதாக இருக்கும்.

எனவே, ஒவ்வொரு நாளும் அறிவைத் தேடுங்கள். நல்ல புத்தகங்களை வாசியுங்கள். உங்கள் கனவுகளை பெரியதாக வைத்துக்கொள்ளுங்கள். கடவுள் கொடுத்த திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அறிவோடும், தாழ்மையோடும், விசுவாசத்தோடும் வாழும்போது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும்.

இறைவேதம் ‘‘புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்” (நீதி.1:5) என குறிப்பிடுகிறது. எனவே அறிவை வளர்க்கும் ஞானப்புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை நமக்குள் பழக்கப்படுத்துவோம்.

- அருள்முனைவர் பெ.பெவிஸ்டன்.