Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

தூய ரமலானே வருக...!

ரமலான்..! வழிபாடுகளின் வசந்த காலம். இறைவனின் நினைவில் இதயங்கள் நனையும் இனிய பருவம்.ஓர் அடியான் தனித்திருந்தும் பசித்திருந்தும் விழித்திருந்தும் படைத்தவனுக்குத் தன்னையே அர்ப்பணித்துவிடுகிறான், இந்த நோன்பின் வாயிலாக.வயிற்றில் பசி; எதிரில் அறுசுவை உணவுகள். ஆயினும் நாம் அவற்றைத் திரும்பிப் பார்ப்பதும் இல்லை; விரும்பி ஏங்குவதும் இல்லை.நா வறள்கிறது; உதடு காய்கிறது; தாகம்..! தாகம்...! கைக்கு எட்டும் தொலைவில் குளிர்பானங்கள். ஆனாலும் நாம் அவற்றைத் தொட்டுக்கூட பார்ப்பதில்லை. சொட்டு நீரையும் பருகுவதில்லை.ஏன்?

‘ரமலான் மாதத்தில் பகலில் உண்பதையும் பருகுவதையும் இறைவன் தடை செய்துள்ளான்’ எனும் ஒரே காரணத்திற்காக.ஆண்டவனின் கட்டளைக்கு அடிபணிய வேண்டும் என்கிற உன்னத உணர்வு.தனியறையில் கொஞ்சம் சாப்பிட்டாலோ, பருகினாலோ என்ன ஆகிவிடப் போகிறது? யாருக்கும் தெரியப்போவதில்லை. நாமாகச் சொன்னால்தான் ஆயிற்று. சாப்பிட்டுவிட்டு நோன்பாளி போல நடிக்க முடியும். ஆனால் நாம் அப்படிச் செய்வதில்லை. ஏன்?

‘மனிதர்கள் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்; அவன் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்; அவனுடைய கட்டளையை மீறினால் நிச்சயம் அவன் தண்டிப்பான்’ எனும் அச்சம்- மறுமை உணர்வை இந்த நோன்பு நம் மனங்களில் நிலைநிறுத்திவிடுகிறது.உண்ணுதல், பருகுதல் தொடர்பாக மட்டுமல்ல, வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு திருப்பத்திலும் இறைவனுக்கு அஞ்சி வாழ வேண்டும்; அவனுடைய கட்டளைக்குப் பணிந்து வாழ வேண்டும். இந்தப் பயிற்சியை ரமலான் நோன்பு அளிக்கிறது.

இறைவன் திருமறையில் கூறுகிறான்:“இறைநம்பிக்கையாளர்களே, உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டதுபோல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாய்த் திகழக்கூடும்.” (குர்ஆன் 2: 183)இந்த நோன்பு மனிதர்களைப் பண்படுத்தும் விதமே அலாதியானது.ரமலான் தொடங்குவதற்கு முன்பு ‘வளவள’ என அரட்டை அடித்து வம்பு பேசிக்கொண்டிருந்தவர்கள் நோன்பு தொடங்கியதும் மௌனிகள் ஆகிவிடுகிறார்கள். சொற்களை அளந்து பேசுகிறார்கள்.பக்கத்து வீட்டுக்காரரிடம் சதா சண்டை சச்சரவு போட்டுக் கொண்டிருந்தவர்கள் ரமலானில் அடியோடு மாறிவிடுகிறார்கள். தங்கள் வீட்டில் சமைத்த நோன்புக் கஞ்சியையும் இனிப்புகளையும் பக்கத்து வீடுகளுக்கு அனுப்பிப் பாசத்தைப் பொழிகிறார்கள்.பத்து ரூபாய் இலாபத்துக்கு நூறு பொய்கள் கூறும் வணிகர்கள் இந்த மாதத்தில் பத்தாயிரம் ரூபாய் இலாபம் கிடைப்பதாக இருந்தாலும்கூடப் பொய் சொல்வதைத் தவிர்த்துவிடுகிறார்கள்.திரைப்பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருந்த உதடுகள் திருமறை வசனங்களை ஓதுகின்றன.

ஐந்து நிமிடம் ஓய்வு கிடைத்தாலும் அருள்மறையைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள்.எப்படிப்பட்ட மாற்றம்! என்னமாய் ஓர் ஆன்மிகப் பயிற்சி!அதனால்தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ரமலான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன.”வாருங்கள்..! இறைவனும் இறைத்தூதரும் கூறியுள்ளபடி இந்த மாதத்தில் முழுமையாக நோன்பு இருந்து அருள் வளங்களைப் பெற்றுக்கொள்வோம்.

- சிராஜுல் ஹஸன்.