Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஆணவத்தை போக்கிய ராமதாசர்!

ஆணவம்! அது யாரையும் விட்டு வைப்பதில்லை. எவ்வளவுதான் உயர்ந்தவர்களாக, நல்லவர்களாக இருந்தாலும் ஆணவம் தலையை நீட்டி விடுகிறது. அந்த நேரத்தில், வந்து சேர்ந்த ஆணவத்தை நீக்குவது யார்? வீர சிவாஜி! சத்ரபதி சிவாஜி எனப்பெரும் புகழ் பெற்றவர்! பகைவர்களின் கோட்டைகளை, போரிட்டு வெற்றி கொண்ட பிறகு, சிதைந்திருக்கும் அக்கோட்டைகளை நல்லமுறையில் செப்பனிட்டு சீர்செய்ய ஏற்பாடு களைச் செய்வதும், வீரசிவாஜியின் வழக்கமான செயலாக இருந்தது. கோட்டைகளைப் பழுது பார்க்கும் செயலில், ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டிருப்பார்கள். அவர்களின் வாழ்க்கை, வீரசிவாஜி தரும் கூலியை வைத்து ஓடிக்கொண்டிருந்தது. ஒரு சமயம், சாம்நகட் எனும் கோட்டையைப் பணியாளர்கள் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வேலையை மேற்பார்வையிடுவதற்காக, வீரசிவாஜி அங்கு சென்றிருந்தார். அங்கே ஆயிரக்கணக்கானவர்கள் தீவிரமாக வேலைசெய்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், வீரசிவாஜியின் முகத்தில் புன்முறுவல் தோன்றியது.``ஹ! இவ்வளவு பேர்களின் வாழ்க்கையும் நம்மால்தானே நடக்கிறது! ம்...’’ எனும் ஆணவம் வீரசிவாஜியின் மனத்தில் தோன்றியது. எங்கோ இருக்கும் மின்சார சுவிட்சைப் போட்டவுடன், எங்கோ இருக்கும் விளக்கு எரிகிறது அல்லவா? அது போல, வீரசிவாஜியின் மனத்தில் தொன்றிய ஆணவம், அவர் குருவானஸ்ரீ சமர்த்த ராமதாசருக்குத் தெரிந்தது.

``நாட்டை ஆளக்கூடியவன்; தலைசிறந்த வீரன்; நல்லவன் என்று பேரெடுத்தவன்! நம் சிஷ்யன்! இப்படிப்பட்ட இவன், இப்படி ஆணவம் பிடித்து அலைந்தால், இவனால் செய்யப்பட வேண்டிய பல நல்ல செயல்கள், நடைபெறாமலே போய் விடும். மேலும், மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பதற்கு இணங்க, மக்களுமல்லவா கெட்டுப் போய் விடுவார்கள்!’’ என எண்ணிய குருநாதர், அப்போதே அங்கு வந்தார். வந்தவரை வணங்கி, மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார் வீரசிவாஜி.

``மன்னா! பழுதான கோட்டைகளைப் பழுது பார்க்கும் பணி நடைபெறுவதாக அறிந்தேன். நீயும் வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்’’ என்றார்ஸ்ரீ சமர்த்த ராமதாசர். வீரசிவாஜிக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி உண்டானது. குருநாதரை அழைத்துச் சென்று, நடைபெறும் வேலைகளை விரிவாகவே சுற்றிக் காட்டினார்.

பெருமிதம் பொங்கியது அவருக்கு. இருவருமாகப் பார்த்துக் கொண்டு வருகையில், வழியில் ஒரு பெரும்பாறை இருந்தது. அதைப் பார்த்தஸ்ரீ சமர்த்த ராமதாசர், ``மன்னா!  இந்தப் பாறை, ஏன் இங்கே இருக்கிறது?’’ எனக் கேட்டார். உடனே மேற்பார்வையாளரைக் கூப்பிட்ட வீரசிவாஜி, ``இந்தக் கல்லை உடைக்காமல், ஏன் இங்கே வைத்திருக்கிறீர்கள்?’’ எனக்கேட்டார்.

``பின்னர், பாதைபோடும் போது உடைத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று விட்டு வைத்திருக்கிறோம் மன்னா!’’ என்றார், மேற்பார்வையாளர். ``தவறு! இந்தப் பாறையை இப்படியே இங்கு விட்டு வைத்திருந்தால், யாராவது இடறி விழுந்துவிட்டால், என்ன செய்வது? ஆகையால் இப்பாறையை உடனே உடைத்து, இங்கிருந்து அப்புறப்படுத்துங்கள்!’’ என்றார்ஸ்ரீ சமர்த்த ராமதாசர்.

``ம்! ஆகட்டும்! ஆகட்டும்! உடனே இப்பாறையை உடைத்து அப்புறப்படுத்துங்கள்! சீக்கிரம்!’’ என ஆணையிட்டார், வீரசிவாஜி. பணியாளர்கள் வந்து, பாறையை உடைத்தார்கள்.  இரண்டாக உடைந்து விழுந்தது, பாறை. உடைந்த பாறையின் நடுவில், ஒரு சிறுகுழி இருந்தது; குழியில் சிறிதளவு தண்ணீரும் இருந்தது. அதிலிருந்து ஒருசிறு தேரை வெளியே குதித்தோடியது. கண்கள் விரிய அதைப் பார்த்தார், வீரசிவாஜி.

அப்போதுஸ்ரீ சமர்த்த ராமதாசர், தானும் ஆச்சரியப்படுவதைப் போல, ``மன்னா! பரவாயில்லையே! தலை சிறந்த சாமர்த்திய சாலியாக இருக்கிறாயே நீ! பாறைக்குள் இருக்கும் இந்தத் தேரைக்குத் தண்ணீர் வேண்டுமென்று, பாறைக்குள் ஒரு குழியைத் தோண்டி, அதற்குள் தண்ணீரையும் ஊற்றி வைத்திருக்கின்றாயே நீ! பலே! பலே!’’ எனப் பாராட்டினார். வீரசிவாஜிக்கு `சுருக்’கென்றது; தொழிலாளர்கள் எல்லோருக்கும், நாம்தான் உணவிட்டு வாழ்வளிக்கிறோம் எனக் கர்வப் பட்டோமே! கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளித்துக் காப்பாற்றும் கடவுள் தானே, இத்தொழிலாளர்களையும் ஆதரிக்கிறார்’’ எனும் எண்ணம், அவருக்குள் தோன்றியது.

அதே விநாடியில், குருநாதரின் திருவடிகளில் விழுந்தார்; ``குருநாதா! அடியேனை மன்னித்து விடுங்கள்!.. இத்தொழிலாளர்களையெல்லாம் அடியேன்தான் காப்பாற்றுகின்றேன் எனக் கர்வம் கொண்டது தவறுதான்’’ என வருந்தினார். சீடன் மனதில் தெளிவு என்னும் தீபத்தை ஏற்றி, அங்கிருந்த அகம்பாவம் எனும் இருட்டை நீக்கிய குருநாதரானஸ்ரீ சமர்த்த ராமதாசர், அமைதியாக அங்கிருந்து அகன்றார்.ஆணவம் எந்தவடிவில் வந்தாலும் சரி! அது கூடாது என்பதை விளக்கும் வரலாற்று நிகழ்ச்சி இது.

V.R.சுந்தரி