Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பாவங்கள் மன்னிக்கப்படும் மகத்தான மாதம்..!

ரமலான் என்னும் சொல்லின் பொருள் ‘சுட்டுக் கரித்தல்’ என்பதாகும். அதாவது பாவங்களைச் சுட்டுக் கரிக்கும் மாதம் இது.இறைநம்பிக்கையுடனும் நற்கூலி கிடைக்கும் என்னும் எண்ணத்துடனும் ஒருவர் ரமலான் மாதம் நோன்பு வைத்தால் அது அடுத்த ரமலான் வரையுள்ள அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாய் அமையும் என்பது நபிமொழி.ரமலான் மாதத்தின் இரண்டாம் பத்து- அதாவது ரமலான் 11 முதல் 20 வரை- பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான நாள்களாகும். இந்த நாள்களில் அதிகமதிகம் நாம் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோரி பிரார்த்திக்க வேண்டும்.“நான் ஒரு நாளில் நூறு முறை பாவமன்னிப்புக் கோருகிறேன்” என்று கூறினார் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள்.முந்தைய, பிந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்ட புனித நபி(ஸல்) அவர்களே ஒரு நாளைக்கு நூறு முறை பாவமன்னிப்புக் கோரினார் எனும் போது, பாவக் குட்டையிலேயே மூழ்கியிருக்கும் நாம் எத்தனை முறை கோரவேண்டும் என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

ஒருமுறை நபியவர்கள் பள்ளிவாசல் உரைமேடையில் (மிம்பர்) ஏறும் போது வழக்கத்திற்கு மாறாக “ஆமீன்” என்று கூறினார்.உடனே தோழர்கள், “இறைத்தூதர் அவர்களே, வழக்கத்துக்கு மாறாக இன்று நீங்கள் ஆமீன் என்று சொன்னீர்களே, அது ஏன்?” என்று கேட்டனர்.அதற்கு நபிகளார், “நான் உரைமேடையில் ஏறும்போது, வானவர் தலைவர் ஜிப்ரீல் வருகை தந்தார். ‘யார் ரமலான் மாதத்தை அடைந்தபிறகும் அதில் நோன்பிருந்து பாவ மன்னிப்புப் பெறவில்லையோ அவர் நாசமாகட்டும்’ என்றார். நான் ஆமீன் (அப்படியே ஆகட்டும்) கூறினேன்” என்றார்.

இதிலிருந்து ரமலானில் நோன்பிருந்து பாவமன்னிப்புப் பெறுவதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.பாவ மன்னிப்புக் கோருபவர்களை இறைவன் பெரிதும் நேசிக்கிறான். யார் தங்களின் தவறுகளுக்கு மனம் வருந்தி, மன்னிப்புக் கோருகிறாரோ அவருடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுவதோடு அவர்கள் இறைவனின் அன்புக்கும் உரியவர்கள் ஆகிவிடுகின்றனர்.பாவமன்னிப்பு (தவ்பா) குறித்துப் புகழ்பெற்ற மார்க்க அறிஞர் மௌலானா முஹம்மத் பாரூக் கான் எழுதுகிறார்:

“தவ்பா என்பதற்கு மீளுதல், திரும்புதல், தலைசாய்த்தல் என்றெல்லாம் பொருள்கள் உண்டு. இந்த வகையில் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குத் திரும்புவதும் தவ்பாதான். இதற்காக முந்தைய நிலை மோசமாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நல்ல நிலைமையிலிருந்து இன்னும் சிறப்பான நல்ல நிலைமையின் பக்கம் மீள்வதும் தவ்பாதான்.“இந்தச் சொல் இறைவனைச்சுட்டுவதற்கும் ஆளப்படுகிறது. இறைவன் அடியானின் பக்கம் மீளுகிறான் எனில், அதற்கு இறைவன் அந்த அடியான் மீது கருணையும் கிருபையும் பொழிகின்றான்; அடியானைப் பொருந்திக் கொள்கிறான்; அடியானின் தவ்பாவை ஏற்றுக் கொள்கிறான்; அடியானின் பாவங்களை மன்னிக்கிறான்; அடியான் பக்கம் தன் கருணைப் பார்வையைத் திருப்புகிறான் என்று அதற்குப் பொருள்.

“மிகவும் சிறப்பான தூய்மையான சொல்தான் தவ்பா. இதில் மிக உயர்ந்த அளவிலான, மிகமிகக் கண்ணியமான திரையிடல், குற்றங்களை மறைத்தருளுதல் காணப்படுகிறது. இறைவன் மீதான பயபக்தியால் அடியான் கேவலத்திலும் கேவலமான செயலைக் கைவிட்டுவிடுகிறான். இனி வரும் நாள்களில் அந்தச் செயலின் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டேன் என உறுதிமொழியும் எடுத்துக் கொள்கிறான். அவனுடைய அந்தச் செயல் ஒப்புதல் வாக்குமூலமாகப் பார்க்கப்படாமல் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோரி செய்யப்படுகின்ற முறையீடாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.“இந்த அடிப்படையில் வாழ்வில் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற வசிய சக்தி கொண்ட சொல்தான் தவ்பா எனலாம்.”தூய ரமலானில் மனம் உருகி, கண்கள் கசிய இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோருவோம். அடுத்து வரும் 11 மாதங்களிலும் எந்தப் பாவத்திலும் ஈடுபட மாட்டோம் என்று உறுதிகொண்டு நேர்வழி நடப்போம்.

- சிராஜுல் ஹஸன்