ராஜகோபுர மனசு
(வல்லாள கோபுரக் கதை) பகுதி 14
காலங்கள் வேகமாக நகர்ந்தன. வருடங்கள் அதேவேகத்துடன் கடந்து ஓடிப்போய் கொண்டேயிருந்தன. கிழக்கில் மெல்லமெல்ல வெளிச்சரேகை கூடியது. மன்னர் வீரவல்லாளன் இட்ட சிறுவிதை, சிறிதுசிறிதாக விருட்சமாக மாறிக் கொண்டிருந்தது. தென்னாட்டின் பல அரசுகள் மிக தைரியமாக முகலாயர் படைகளுக்கு எதிராக கிளம்பின. ஆவேசமாக போரிட்டு, அவர்களை விரட்டியடித்தன. மெல்ல, சுல்தானின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இடங்கள் குறைந்துக் கொண்டே வந்தன.
அதற்கு நிலையற்ற டெல்லிசுல்தான்களின் ஆட்சியும் சாதகமாகயிருந்தது. சுல்தானால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தங்களை சுயேட்சையாக அறிவித்துக் கொண்டதும், ஒரு காரணமாயிருந்தது. மாபார் என்கிற பகுதியின் ஆளுநர், ஜலாலுதீன் அசன்ஷா என்பவன், தன் கட்டுப்பாட்டிலிருந்த மதுரையை, சுதந்திரநாடாக அறிவித்துக் கொண்டான், “இனி தெற்குபக்க பிரதேசங்களுக்கு நானே சுல்தான்” என பறையறிவித்தான். அதை உறுதிச் செய்கிறவிதமாக, கப்பம்கட்டாமல் நிறுத்தியிருந்த அருணைசமுத்திரத்திற்கு, காரணம் கேட்டு கடிதமனுப்பினான்.
பதில்வராததால் கோபமானான். துளியும் தன்னை மதிக்காத அருணையை தாக்குவதற்கு, அலாவுதீன் உத்தௌஜி என்பவனது தலைமையில் ஒருபெரும்படையை அனுப்பிவைத்தான். மதுரை சுல்தானின் அப்பெரும்படைகளை மன்னர் வீரவல்லாளன் அருணைநகரின் எல்லையிலேயே எதிர்க் கொண்டார். ஆவேசமாக எதிர்த்துப் போரிட்டார்.
அந்த வயோதிகத்திலும், தளராமல் போரிட்ட மன்னரின் வீரம், ஹொய்சாளத்துப் படைவீரர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. உக்கிரவீரத்துடன் சண்டையிட்ட அவர்கள், முகலாயர் படைகளை துவம்சம்செய்தார்கள். ஆக்ரோசமாக போரிட்டு, கொன்று குவித்தார்கள். மன்னர் வீரவல்லாளனால், சுல்தான் தளபதி அலாவுதீன் உத்தௌஜி போர்க்களத்தில் கொல்லப்பட்டான். தங்களை வழிநடத்தி வந்த தளபதி செத்ததும், முகலாயர் படைகள் தலைதெறிக்க தப்பித்தோடின. ஆனால், தோற்ற வெறியில், அருணையை பழிவாங்க, தக்க சமயம்பார்த்து, காத்திருந்தன. வீரவல்லாளனின் அந்த வெற்றி, மற்ற எல்லா அரசர்களுக்கும் ஒரு நம்பிக்கையைத் தந்தது.
அந்த நம்பிக்கை, சுல்தானுக் கெதிரான எதிர்ப்புணர்வை எல்லோர்மனதிலும் வளர்ந்தது. அந்த எதிர்ப்புணர்வு மங்கிடாதபடி பார்த்துக்கொள்ள, மன்னர் வீரவல்லாளன் அருணைக்கும், அண்டை அரசுகளுக்கும் பயணித்துக் கொண்டே இருந்தார். ஆனால், எந்த பயணத்திலும், தான் ஏற்றுக் கொண்ட தீட்சைக்கான லிங்கபூஜையை தவறாமல் செய்துகொண்டே வந்தார். அவரையும்மீறி, அவருக்குள், ஏதோவொன்று, உருத்திராட்சமாலையை உருட்டிக் கொண்டு, இடைவிடாது சிவநாமத்தை ஜெபித்துக் கொண்டேயிருந்தது. அதனாலோ என்னவோ, அலைச்சலால் மேனி சற்று கறுத்துப் போயிருந்தாலும், முகத்தில் மட்டும் பிரகாசம் கூடிக் கொண்டே போனது.
மெல்லமெல்ல கனிந்து வருகிற மனது, கண்களில் ஒளியாக ஜொலித்தது. இதற்கிடையே, நான்கு திசைகளிலும், கோபுரப்பணிகள் தடைபடாது தொடர்ந்தன. கிழக்குகோபுரம் முழுமையாக, பொலிவாக, அழகாக எழும்பியிருந்தது. மற்றகோபுரங்களும் முடிவுறும் நிலையை எட்டியிருந்தன. இதுபற்றி, அப்போதுதான் ஒரு பயணம்முடித்து திரும்பியிருந்த மன்னர் வீரவல்லாளனுக்கு சேதியனுப்பப்பட்டது. சேதியறிந்து, மகிழ்ந்து, காலையிலேயே மனைவியரோடு மேற்பார்வையிட வந்த மன்னரை, எதிர்கொண்டு வரவேற்க காத்திருந்த இரவீந்திர பெருந்தச்சன், தோள்வரை புரளுகிற தலைமுடியும், நீண்டுவளர்ந்திருந்த வெண்ணிறதாடியும், நெற்றிமுழுக்க திருநீறுமாய், பார்ப்பதற்கு ஒருசிவ சித்தரைப்போல, அழகாய் பிரகாசித்த மன்னரைகண்டு, சற்று மிரண்டுதான் போனார்.
அவரையும்மீறி கைகள் கூப்பியபடியே ஓடிச்சென்று, மன்னர்முன் சடாரென விழுந்து வணங்கினார். தங்கள் ஆசான் வணங்குவதைக் கண்ட மற்றசிற்பிகளும், அவரவர் இடத்திலிருந்தபடியே, மன்னரை விழுந்து வணங்கினார்கள். மன்னர் சிற்பிகளைபார்த்து “போதும், எழுந்திருங்கள்’’ என சைகைசெய்தார். விழுந்த வணங்கிய பெருந்தச்சரையெழுப்பி, இழுத்து அணைத்துக் கொண்டார். பெரும்பிரியத்துடன் “எப்படியிருக்கிறீர்கள் பெருந்தச்சரே நலம்தானே?” என்றார்.
“ஒருகுறையுமில்லை அரசே. தங்களின் அணைப்பில், நினைப்பில் இருப்பவர்க்கு ஏதுகுறை?” பெருந்தச்சரின் பதிலுக்கு, அருணைமலையை காட்டிய மன்னர்
வீரவல்லாளன்.“அப்படியில்லை பெருந்தச்சரே. அவன் நினைப்பில் நாமெல்லோருமிருக்க, நமக்கேது குறை?” என்று அழகாக சிரித்தார். அவர் புன்னகை, எல்லோரையும்
மயக்கியது. “சரி, எதுவரை முடிந்திருக்கிறது ஈசனின் பணிகள்?” என்ற மன்னரின் கேள்வி, எல்லோரையும் சுயத்திற்கு திருப்பியது. ரவீந்திரப்பெருந்தச்சர், கோபுரப்பணிகள் குறித்த தற்போதைய விவரங்களை மன்னரிடம் தெரிவித்தார். தன் உதவியாளர்கள் தந்த, சில ஓவியங்களைக் காட்டி பேசினார்.
“இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் மொத்தவேலைகளும் முடிந்துவிடும். சரியெனில், கிழக்கு கோபுரத்திற்கான குடமுழுக்கு வேலைகளை, தாங்கள் இப்போதே
திட்டமிடலாம்” என்றவர். “உங்கள் முழுக்கனவுக்கதையும், சிற்பமாக கோபுரநிலைகளில் தயாராகிவிட்டது. பார்க்கிறீர்களா” என பணிவுடன் விண்ணப்பித்தார். மன்னர் கைகள் வீசி, மெல்ல மறுத்தார்.
“பிறகு பார்க்கிறேன். பெருந்தச்சரே, உங்கள் பணிகளால் உள்ளே நிறைந்து கிடக்கிறது. தங்களுக்கும், தங்கள்குழுவினர்க்கும் என்நன்றிகள். யாரிந்த சிற்பிகள் என்பதை காலப்போக்கில் மக்கள் மறந்துபோகலாம். ஆனால், ஈசன்நினைப்பில் எப்போதும் நீங்கள் எல்லோரும் நிற்பீர்கள்” என வாழ்த்தினார். வாழ்த்திய கையோடு, “ஏதேனும் வசதிகளில் குறைகளுண்டா” என கேட்டார்.“ஒரேயொரு குறைதான் உண்டு” மன்னர்முன் வாய்பொத்தி, பெருந்தச்சர் கிசுகிசுத்தார்.
“என்ன பெருந்தச்சரே?”
“முன்புபோல் தாங்கள் இங்குவருவதில்லை, அடிக்கடி நீங்கள்வந்தால், இன்னும் எங்களுக்கு உற்சாகமாயிருக்கும்” வெள்ளிக் கம்பிக்கற்றையாய் முளைத்திருந்த தாடிமயிர், அலைபாயும்படி, மீண்டும் அட்டகாசமாக சிரித்த மன்னர், பெருந்தச்சரின் கரங்களை பற்றிக்கொண்டு, “பொறுப்பு கூடியிருக்கிறது பெருந்தச்சரே. அதனால்தான் முன்புபோல் வரயியலவில்லை. அதனாலென்ன? நாளைமுதல் என்சார்பாக, என்மகனை வரச் சொல்கிறேன்” என சிரித்தார்.
“ஆனால், கும்பமரியாதையோடுதான், அவனை தாங்கள் வரவேற்க வேண்டும். அதில் குறைவைத்தால் அவன் கோபித்துக்கொள்வான். அவன் கோபம் பொல்லாதது. ஜாக்கிரதை. நல்லது. இப்போதைக்கு, எனக்கு விடைகொடுங்கள்” என மீண்டும் அட்டகாசச்சிரிப்பு சிரித்தார். எல்லோரின் வணக்கத்தையும் ஏற்றபடி, விடைபெற்றுக்கொண்டார். மகன் விருபாக்ஷவல்லாளனை, எக்காலத்திலும் முன்னிறுத்தியதே இல்லாத மன்னரின்சொல்லுக்கு அர்த்தம்புரியாது, உடன்நின்ற மூத்தவள் மல்லம்மா, தன்தங்கையை நோக்கினார்.
இளையவள் சல்லம்மாவோ உதடுபிதுக்கினார். மன்னரின் எண்ணம்புரியாமல், ரவீந்திர பெருந்தச்சன் உட்பட, எல்லோரும் குழம்பி, மறுநாள் வரப்போகும் இளவரசனுக்காக, மாவிலை தோரணங்கள் கட்டி, கோலமிட்டு காத்திருந்தார்கள். காலைவிடிந்ததும், தூரத்தில் எக்காளம் ஒலிக்கும் சப்தம்கேட்டது. மன்னரின்மகன் இளவரசர் வருகிறாரென எல்லோரும் பரபரப்பானார்கள். கும்பமரியாதையுடன் வரவேற்க தயாரானார்கள். ஆனால், நெருக்கத்தில் பார்த்தபோது, சிலபடைவீரர்களோடு, மாதப்பதண்டநாயகர் முன்னேவர, பாதம்தாங்கிகள் சுமந்தபடி, மூடியதிரையுடன் ஒருபல்லக்கு வந்துகொண்டிருப்பது தெரிந்தது.
“இதென்ன, இளவரசர் குதிரையில் வராமல், பல்லக்கில் வருகிறார்” என எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பல்லக்கு அவர்களை அடைந்தது. குதிரைமேல் அமர்ந்திருந்த மாதப்பதண்ட நாயகர் உட்பட, எல்லோரும் கால்வீசி கீழே இறங்கினார்கள். ஒழுங்குவரிசையானார்கள். எக்காளம் மீண்டும் ஊதப்பட்டது. கட்டியக்காரன் முன்னேவந்தான். உரத்தக் குரலில் துதிபாடினான்.
“ஹொய்சாலத்தின் சிம்மம், மன்னர் வீரவல்லாளனின் அன்புமகன், அருணையின் இளவரசன், மூவுலகத்தின் அதிபதி, இம்மண்ணின் நிரந்தர பாதுகாவலன், இங்கு நடக்கும் கோபுரப் பணிகளை பார்வையிட வந்திருக்கிறார். பராக்,பராக்” என அடித்தொண்டையில் கூவினான். பெருந்தச்சர் உட்பட, சிற்பிகளோடு பொதுமக்களெல்லோரும் பெருங்கூட்டமாக நின்றுகொண்டு, புரிந்தும், புரியாமல் ஆர்வத்துடன் பல்லக்கையே பார்த்திருக்க, பூரணகும்பம் சுமந்தபடி, முன்னேவந்த ஒரு அந்தணரால், திரைவிலக்கப்பட்டது.
திரைவிலகிய பல்லக்கின் உள்ளே, விசிறி மடிப்பு கொண்ட ராஜஅலங்கார தலைப்பாகை அணிந்தபடி, அழகாய் சிரித்தபடி, ஸ்ரீஅருணாச்சலேஸ்வரரின் ஐம்பொன்சிலை இருந்தது.
மொத்தகூட்டமும் அதிர்ந்து சிலநொடிகள் ஒன்றும்புரியாமல் நின்றது. ரவீந்திர பெருந்தச்சர் விக்கித்துப் போனார். சிற்பிகளெல்லோரும் இதென்னவென்று வியப்பானார்கள்.
“அடிமுடி காணமுடியா அண்ணாமலையார்தான், நமக்கு இளவரசரா?’’ என பரவசமானார்கள். வியப்புமாறாமல் படபடவென்று கன்னத்தில் அடித்துக் கொண்டு வணங்கி, படாரென்று பல்லக்கின்முன் விழுந்து கும்பிட்டார்கள். அருணைவாழ் மக்களை பொறுத்தவரை, ஸ்ரீஅருணாச்சலேஸ்வரன் பெற்ற தகப்பன்முறை. உண்ணாமலையம்மையோ ஆத்தாள்முறை.
“உலகையே ஆளுகின்ற ஈசன்தான். ஆனாலும், உனக்கு அப்பன்” என்றுதான் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டிருந்தது. அந்தநினைப்பில்தான் அவர்களின் அன்றாட வாழ்வியல் இருந்தது. நாளின், ஒருபொழுதாவது “அருணாசலனே, என்அப்பனே’’ என அழைக்காமல், அவர்கள் இருந்ததில்லை.
“அம்மையே, உண்ணாமலைத்தாயே” என நினைக்காமல் இருந்ததில்லை. ஆனால், “அண்ணாமலையார் எங்கள் இளவரசர் என்கிற இந்தஉணர்வு, அவர்களுக்கு வேறுவிதமாக இருந்தது. கிட்டத்தட்ட அதுவொரு தெய்வீக பரவசநிலைக்கு ஒப்பாகயிருந்தது.அந்த பரவசநிலையில் எல்லோருமிருக்கும்போதே, தளபதி மாதப்பதண்ட நாயகர் முன்னேவந்தார். “நம்அருணையின் இளவரசர் வாழ்க” என சிலைபார்த்து வணங்கினார். அப்படியே வலப்பக்கம் நகர்ந்து, சிலைகண்ட பிரமிப்பிலிருந்த ரவீந்திர பெருந்தச்சனிடம், மன்னரின் முத்திரையிட்ட கடிதம்தந்தார். அதிர்ந்து விக்கித்துப்போய் நின்றிருந்த ரவீந்திர பெருந்தச்சர், கடிதத்தின் முத்திரைகண்டு வணங்கி, கைகளில் பெற்றுக் கொண்டு, பிரித்துப் படித்தார். “ரவீந்திர பெருந்தச்சரே, இறைவனைகுறித்த அழகான கற்பிதங்களே, கற்பனைகளே, நமக்குள் கடவுள் சிந்தனையை பலமாக்குகின்றன.
அவனதுதரிசனத்தை மனதுக்கு மேலும் நெருக்கமாக்குகின்றன. அருணையின் இளவரசன் அருணாசலேஸ்வரன் என்கிற இதுவும் அவ்விதமே. அம்மையப்பனேயில்லாத ஈசன், என்மகன் என்பதுவும் அப்படியானதே. அதுவுமில்லாமல், கற்பனையோ, கற்பிதமோ, இப்படியான என்செயல், உங்கள்பணிக்கு நான்தருகிற மரியாதை. எம்பெருந்தச்சரின் பணியை கண்காணிக்க, அந்தக்கடவுளை வரச்செய்வதே, உமக்கு நான்தருகிற கௌரவம். உங்களுக்கும் உங்கள் ஸ்தபதிகள் குழுவினர்க்கும், வீரவல்லாளனின் அன்பும் பாராட்டும்.
மறுமுறைக்கான சந்திப்பில், நாம் விரிவாக பேசுவோம். வாழ்க ரவீந்திர பெருந்தச்சர். ஈசனடி வெல்க”கடிதம் படித்துமுடித்த பெருந்தச்சர், அந்த ஸ்ரீஅருணாச்சலேஸ்வரரையே தன்மகனென மன்னர் குறிப்பிட்ட அதிர்ச்சியிலிருந்து மீளாத மனநிலையில் இருந்தார். “எத்தனையோ மன்னர்கள், ஈசனுக்காக கோயில்கள் கட்டியிருக்கிறார்கள். மதில்சுருடன் கோபுரமெழுப்பியிருக்கிறார்கள். மண்டபம் அமைத்திருக்கிறார்கள். ஆனால், அத்தனை பேரும் ஈசனைப்பார்த்து, அப்பாவென்றே கதறியிருக்கிறார்களேயன்றி “அய்யேன், நான் உன்னடிமை” என அலறியிருக்கிறார்களே தவிர, இவர்களில் எவரும், ஈஸ்வரனை மகனாக உருவகப்படுத்திக் கொண்டு, மகனே என விளித்ததில்லை. ஆனால், தென்னாடுடைய அந்த சிவனை, எம்மன்னர் தன்மகனென மனதில் வரித்து’’ பெருந்தச்சர் அதற்குமேல் யோசிக்கமுடியாமல், கடிதத்தால் தன்முகத்தை மூடிக்கொண்டு மெல்ல விசும்பினார்.
விசும்பியபடியே உடம்பு அதிரும்படி அழுதார். சிலநொடிகள் அழுகையை தொடர்ந்தவர், அழுதபடியே நிமிர்ந்து, பெருங்குரலில் “மாமன்னர் வீரவல்லாளன் வாழ்க. மன்னரின் தவப்புதல்வன் அருணாச்சலேஸ்வரன் வாழ்க வாழ்க” என்றார். அவரோடு சேர்ந்து ஸ்தபதிகளும் “மாமன்னர் வீரவல்லாளன் வாழ்க. மன்னரின் தவப்புதல்வன் அருணாச்சலேஸ்வரன் வாழ்க வாழ்க” என்றார்கள்.
ஸ்தபதிகளின் வாழ்த்தொலி கேட்ட மக்களெல்லோரும் சேர்ந்து ஒருவித பரவசநிலையோடு, இருகைகளையும் தலைக்குமேல் கூப்பி வணங்கி, “அருணையின் இளவரசன் எங்கள் அருணாச்சலேஸ்வரன் வாழ்க. அருணையின் இளவரசன் எங்கள் அருணாச்சலேச்வரன் வாழ்க. மாமன்னரின் செல்வமகன் அருணாச்சலேஸ்வரன் வாழ்க” என கூட்டமாக வாழ்த்தொலி பாடினார்கள். அப்படி பாடியபடியே தங்கள் இளவரசனை, அவர்களோடு அழைத்துக் கொண்டு போனார்கள்.
மன்னர் வீரவல்லாளனின் மகனும், அருணையின் இளவரசருமான அருணாச்சலேஸ்வரர், கோபுரப்பணிகளை பார்வையிட, பெருந்தச்சரும், மாதப்பதண்ட நாயகரும், ஸ்தபதிகளும் துதிபாடியபடி முன்னே செல்ல, பல்லக்கில் அமர்ந்திருக்கும் தன்னை ஜனங்கள் பின்தொடர, மாறாத தன்புன்னகையோடு அசைந்தாடியபடி புறப்பட்டார்.
(தொடரும்)
தொகுப்பு: குமரன் லோகபிரியா