Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராஜகோபுர தரிசனம்!

குழந்தை வேலப்பர் கோவில் பூம்பாறை

கொடைக்கானல் அருகே திண்டுக்கல் மாவட்டத்தின் பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ளது குழந்தை வேலப்பர் கோவில். முருகப்பெருமானை வழிபடும் முக்கிய தலமான இக்கோயில் மூன்றாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்தக் கோவில், பழனி தண்டாயுதபாணி கோவிலின் துணை கோவிலாகவும், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட முருகன் சிலையை கொண்ட இரண்டாவது கோவிலாகவும் சிறப்பு பெற்றுள்ளது.

பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில், சித்தர் போகரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட முருகன் சிலையை கொண்டுள்ளது. போகர், பழனி மலை மற்றும் பூம்பாறை மலை இடையே உள்ள யானை முட்டி குகையில் தங்கி, நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கி, இக்கோவிலில் பிரதிஷ்டை செய்தார். 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரி நாதரின் பாடலின் படி, முருகன் அருணகிரிநாதரை அரக்கனிடமிருந்து குழந்தை வடிவில் வந்து காப்பாற்றினார். எனவே இந்தக் கோவிலின் முக்கிய கடவுள் ‘குழந்தை வேலப்பர்’ என்று அழைக்கப்படுகிறார். 10ம் நூற்றாண்டில், பழனி மற்றும் பூம்பாறை நடுவில் உளள யானை முட்டி குகையில் அமர்ந்து தான் கற்று வந்த கலைகளை சோதிக்க ஒரு முருகன் சிலையினை உருவாக்கினார்.

அந்த சிலையை பழனி மலையில் பிரதிஷ்டை ெசய்தார். தண்டம் கொண்டு அச்சிலையினை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர் சூட்டினார். பின்னர் மீண்டும் போகர் வெளிநாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று அதே குகைக்குள் அமர்ந்து மேலும் ஒரு நவபாஷாண சிலையை அமைத்தார். அந்த சிலைதான் பூம்பாறையில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள கல்வெட்டுகளின் படி, இந்தக் கோவில் சேர வம்சத்தின் அரசரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

கோவிலின் வருடாந்திர தேரோட்ட திருவிழாவில் தேரின் முன் மற்றும் பின் பகுதிகளில் வடம் பிடித்து, தேர் இயக்கப்படுகிறது. மேலும், முருகனடியார்கள் தேரின் அச்சின் மீது 25,000 தேங்காய்களை உடைக்கும் வழிபாடு, கோவிலின் தனித்துவமான பாரம்பரியமாக இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. குழந்தை வேலப்பர் கோவில், மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்டுள்ளது என்பதை கிரந்த எழுத்துக்கள், பழமையான சிற்பங்கள், கலைப்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. கோவில், மேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது, இது தமிழ்நாட்டில் அரிதாக காணப்படும் அம்சமாகும். கோவில் அருகிலேயே, அருணகிரிநாதருக்காக அமைக்கப்பட்ட சிறிய கோவில் உள்ளது. குழந்தை வேலப்பரை வழிபடுபவர்களுக்கு, பாவ வினைகள் நீங்கும் என நம்பப்படுகிறது.

இக்கோவிலுக்கு ராஜகோபுரம் எதுவுமில்லை. மூலஸ்தானத்தில் மேல் உள்ள கோபுரம் மட்டுமே. குழந்தை வேலப்பர் கோவில், திராவிடக் கட்டிடக்கலையில் அமைக்கப்பட்டு, முகமண்டபம், மகா

மண்டபம், இடைநாழிகை, கருவறை ஆகிய கூறுகளைக் கொண்டுள்ளது. கருவறையின் மேலே கருங்கல்லால் கட்டப்பட்ட ஒற்றை நிலை விமானம் உள்ளது. இது நாற்கர

வடிவிலான சிகரத்துடன், உச்சியில் உலோந்க கவசத்துடன் அமைந்துள்ளது.

கோவில் வளாகத்தில், கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம், கொடிமரம், விளக்குத் தூண் போன்றவை அமைந்துள்ளன. கருவறையின் வடக்கில், கிழக்கு நோக்கி சிவனுக்கு சிற்றாலயம் உள்ளது. பிரகாரத்தைச் சுற்றி, விநாயகர், பைரவர், நவகிரகம், இடும்பன், நாகர், அருணகிரிநாதர், மள்ளர், பத்திரகாளியம்மன் ஆகியோருக்கு தனித்தனியான சந்நதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திலகவதி