Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புரட்டாசி சனிக் கிழமையும் பெருமாளும்!

சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என்ற இரண்டு மனைவிகள். சஞ்ஜனாவுக்கு பிறந்தவர்கள் எமதர்மன், யமுனை நதி. சாயாவுக்கு பிறந்தவர் சனீஸ்வரன்.யமுனையில் வாழ்ந்த காளிங்கனை அடக்கி கிருஷ்ணர் அந்நதியை புனிதப்படுத்தியதால் ஆயர்பாடி மக்கள் கொண்டாடினர். அதை கண்டு சனீஸ்வரன் தன்னை அனைவரும் அமங்களமாக பாவிக்கிறார்கள் என வருந்தினான். அதை அறிந்த நாரதர் கிருஷ்ணரின் அன்பை பெற்றால் நலம் பெறுவாய் என்றார். அதற்கு முன் ஹோலிகா அரக்கியின் வரலாற்றினை கூறினார்.

அசுரன் இரண்யனின் மகன் பிரகலாதன் விஷ்ணுவின் பக்தன். இதை விரும்பாத இரணியன் மகனை கொல்ல தன் சகோதரியான ஹோலிகாவிடம் பொறுப்பை ஒப்படைத்தான். அவளுக்கு தீயின் வெம்மை தாக்காது. அதனால் பிரகலாதனை தீயில் தள்ளிய ஹோலிகா அவன் வெளியே வர முடியாதபடி கைகளால் அழுத்தினாள். பிரகலாதனை மகாவிஷ்ணு காப்பாற்றினார். இதனால் அவரை பழிவாங்க காத்திருந்தாள் ஹோலிகா. ஆயர்பாடியில் நந்தகோபரின் மகனான கிருஷ்ணர் வளர்வதை கேள்விப்பட்ட ஹோலிகா கிருஷ்ணரை அழிக்க இருக்கிறாள். அவளை நீ ஒழித்துவிட்டால் மங்கள சனீஸ்வரனாகும் பேறு பெறுவாய் என்று வாழ்த்தினார் நாரதர்.

ஹோலிகா ஆயர்பாடிக்கு செல்ல... அப்பொழுது கிருஷ்ணன் தன் நண்பர்களுடன் தீமைகளை ஒழிக்கும் வகையில் விறகுகளை அடுக்கி ஹோலி கொண்டாட தயாராயினர். ஹோலிகா விறகு கட்டுக்குள் ஒளிந்து கொண்டாள். அங்கு வந்த சனீஸ்வரன் தன் கொடிய பார்வையை ஹோலிகா மீது செலுத்த அவளது சக்தி மறைந்தது. விறகில் கிருஷ்ணன் தீயை மூட்ட, வெம்மை தாளாமல் ஹோலிகா எரிந்து சாம்பலானாள். நடந்த விஷயத்தை நாரதர் விவரிக்க சனீஸ்வரனை வாழ்த்திய கிருஷ்ணர், ‘‘இன்று முதல் நீயும் மங்களமானவனாக திகழ்வாய். சனிக்கிழமை புனித நாளாக விளங்கும். கலியுகத்தில் திருப்பதி வெங்கடேசப் பெருமாளாக வீற்றிருப்பேன்.

சனிக்கிழமையில் விரதம் இருந்து என்னை தரிசிப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவேன்’’ என வரம் அளித்தார்.நினைத்தது நிறைவேற திருப்பதி ஏழுமலையானுக்கு மாவிளக்கு நேர்ந்து கொள்பவர்கள் திருப்பதிக்கு செல்ல தேவையில்லை. புரட்டாசி சனியன்று நீராடி பக்தியுடன் மாவிளக்கு படைத்து வழிபட்டால், திருப்பதி ஏழுமலையான் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.

புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஏழுமலையானுக்கு விரதம் இருந்து அவரின் பரிபூரண அருளையும் சனி பகவானால் ஏற்படும் கிரக தோஷங்களையும் நீங்கி நலம் பெறுவோம்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.