ராஜகோபுர தரிசனம்!
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டத்தைச் சேர்ந்த பின்னாங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு புங்கவனேஸ்வரர் திருக்கோயில். இத்தலம் பழைய கல்வெட்டுகளில் ‘ராஜேந்திர சோளீஸ்வரம்’ என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள கற்கட்டுமானம் 11-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும், அது இரண்டாம் ராஜேந்திர சோழனின் பெயருடன் தொடர்புடையதாக இருந்திருக்கலாம் என்றும் வரலாற்று ஆவணம் குறிப்பிடுகிறது.
இக்கோயிலின் தொடக்கக் கல்வெட்டுகள் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதால், கோயில் 12-ம் நூற்றாண்டிலோ அல்லது 11-ம் நூற்றாண்டின் இறுதியிலோ கட்டப்பட்டிருக்கலாம். கோயிலின் மூலவர் புங்கவனேஸ்வரர், அம்மன் சௌந்தர்யநாயகி.
சோழர் காலத்துக்குப் பின்னரும் இக்கோயில் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது. இரண்டாம் ராஜாதிராஜ சோழன் காலத்தில், இக்கோயிலுக்கு நிலங்கள் உள்ளிட்ட பல கொடைகள் வழங்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் கல்வெட்டுகளில் காணப்படும் மற்றொரு சுவாரஸ்யமான செய்தி கி.பி. 1322-ம் ஆண்டு ஊர் மக்களால் வரியை செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது, நிலங்கள் வணிகர் ஒருவரிடம் விற்கப்பட்டன. பின்னர் அந்த நிலங்களையே அந்த வணிகர் கோயிலுக்குத் ‘தேவதானம்’ ஆக வழங்கியுள்ளார்.
பின்னாங்குடி புங்கவனேஸ்வரர் கோயிலின் கட்டிட வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. இக்கோயில் சோழர் காலக் கற்கோயில் மரபுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இப்பகுதியில் 11 மற்றும் 12-ம் நூற்றாண்டுகளில் உருவான கற்கோயில்கள் சோழர் காலக் கட்டிட மரபின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக, கருவறைக்கு வழங்கப்பட்ட கல் ஜன்னல் குடுமியான்மலையைச் சேர்ந்த ஒருவரால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இக்கோயிலின் மற்றொரு சிறப்பு அதன் கோபுரத்தின் மேல்தளச் சிற்பம். கற்களால் அமைக்கப்பட்ட கீழ்ப்பகுதியின் மேல் சுதைச் சிற்ப வேலைப்பாடுகளுடன் உயர்ந்து நிற்கும் இந்த அமைப்பில், மையப்பகுதி மற்றும் இருபுறங்களிலும் அமர்ந்த நிலையில் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சுற்றிலும் பல்வேறு அலங்கார வடிவங்கள், விலங்கு உருவங்கள் மற்றும் சிறிய சிற்பத் தொகுப்புகள் உள்ளன. இவற்றில் குறிப்பாக கோபுரத்தின் அடுக்குப் பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ள பூதகண உருவங்கள் குறிப்பிடத்தக்கவை. பூதகணங்கள் வெறும் அலங்காரத்திற்காக மட்டுமல்லாமல். பல்வேறு தோற்றங்களிலும் செயல்பாடுகளிலும் காட்டப்படுவது வழக்கம். இவற்றுக்கிடையே தாமரை இதழ்கள், கொடி போன்ற அலங்கார வடிவங்களும் இடம்பெற்றுள்ளன.
கோபுரத்தின் மேல்பகுதியில் மையமாகத் தெய்வ உருவம் அமைக்கப்பட்டு, அதைச் சுற்றிலும் அடுக்கடுக்கான அலங்காரப் பட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது காலப்போக்கில் ஏற்பட்ட தேய்மானங்களும், பழைய சுதைப் பூச்சின் அடையாளங்களும் காணப்படுகின்றன. உச்சியில் கலச அமைப்பு காணப்படுவதுடன், அதன் கீழ்ப்பகுதியில் தாமரை இதழ் போன்ற அலங்கார வடிவங்களும் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, கீழ்ப்பகுதியில் காணப்படும் கற்சிற்பக் கட்டுமானமும் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள சுதைச் சிற்ப மேலமைப்பும் இணைந்து உருவாக்கும் தோற்றம் இந்தக் கோயிலின் கட்டிடக் கலை தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது. இக்கோயிலின் வரலாற்றில் பாண்டியர் காலத்திற்கும் முக்கிய இடம் உள்ளது. இதன் மூலம் கோயில் பல நூற்றாண்டுகளாக வழிபாடு, பராமரிப்பு மற்றும் திருப்பணிகளுடன் தொடர்ந்து இயங்கி வருகிறது என்று தெரிய வருகிறது. சோழர் காலத்தில் தொடங்கி பாண்டியர் காலத்திலும் தொடர்ந்து செயல்பட்ட இத்தலம், பல்வேறு அரச மரபுகளின் காலங்களை கடந்துள்ளது.
பின்னாங்குடி ஊரின் பிற்கால வரலாறும் இக்கோயிலின் வரலாற்றோடு நெருக்கமாக இணைந்துள்ளது. 19-ம் நூற்றாண்டில் இங்கு அக்ரஹாரம் இருந்ததாகவும், சுமார் 20 முதல் 24 குடும்பங்கள் வசித்ததாகவும் கடுமையான வறட்சியின் காரணமாக பல குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறியதால், ஊரும் கோயிலும் நீண்டகாலம் பராமரிப்பின்றி இருந்துள்ளது. கோயிலில் இருந்த தெய்வச் சிலைகள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டதாகவும் பதிவுகள் தெரிவிக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோயிலின் புனரமைப்புப் பணிகள் 2009-ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டு, தொடர்ந்து திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. பின்னாங்குடி கோயில் வரலாறு மட்டுமின்றி, கல்வி மற்றும் அறிவுசார் மரபுடனும் தொடர்புடையதாக இருந்துள்ளது.
பழைய காலத்தில் இவ்வூரில் பல சமஸ்கிருத அறிஞர்கள் வாழ்ந்ததாகவும், அவர்களுடைய சில படைப்புகள் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் இருப்பதாகவும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பார்க்கும்போது, பின்னாங்குடி புங்க வனேஸ்வரர் திருக்கோயில் என்பது ஒரு பழமையான சிவாலயம் என்ற அடையாளத்தைத் தாண்டி, பல நூற்றாண்டுகளாக ஒரு ஊரின் சமூக, பொருளாதார, நிர்வாக மற்றும் சமய வரலாற்றை தன்னுள் பதிவு செய்திருக்கும் வரலாற்றுச் சின்னமாக விளங்குகிறது.
திலகவதி


