Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காவல் தெய்வங்கள்

மதுரை அம்பலக்காரன்பட்டியில் வல்லடிக்காரர் அருள் புரிகிறார். இங்கு, பூதத்தின் தோள் மீது முன்னங்கால்களைத் தூக்கி வைத்தபடி காட்சி தருகிறது சேமங்குதிரை. ஆங்கிலேயர் ஒருவர் கேலி செய்ததால் அந்த சிலை புல்லைத் தின்று, கனைத்தும் காட்டியது. ஆகவே, வல்லடிக்காரருக்கு சமமாக வணங்கப்படுகிறது. கடலூர், திருநாரையூரில் தன் தேவியருடன் ஐயனார் அருள்பாலிக்கிறார். தன் பக்தர்களை ஆபத்துகளிலிருந்து காப்பதால் ‘மங்காமல் காத்த ஐயனார்’ என போற்றப்படுகிறார். பிரசவவலியால் துடித்த ஒரு பெண்ணிற்கு தாதியாக வந்து பிரசவம் பார்த்த பெருங்கருணையுடையவர் இந்த ஐயனார்.

சிவகங்கை மாவட்டம், பெரிச்சி கோயிலில் இரட்டை முக பைரவரை தரிசிக்கலாம். நவபாஷாணத்தால் ஆன இவருக்கு சாத்தப்படும் வடைமாலையை பிரசாதமாகத் தருவதில்லை. சந்நதியின் மேலே எறிந்து விடுகின்றனர். அதை பறவைகளும் உண்பதில்லை. இவரின் பின்முகம், பைரவரின் சீடனான சனிபகவானை நோக்கியபடி உள்ளதால் அந்த முகத்தை பக்தர்கள் தரிசிக்க முடியாது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாளை தரிசிக்கலாம். ஆலயஉள் பிராகாரத்திலுள்ள கிணறு என்றுமே வற்றியதில்லை. தனக்கு ஒரு புதரில் கிடைத்த இந்த ஐயனாரை ‘பெருமாளே’ என்று ஒரு வேடன் அழைத்ததால், இவர் சேவுகப்பெருமாள் ஆனார். இவருக்கு வில்வதளங்களாலேயே அர்ச்சனை நடைபெறுகிறது.

தூத்துக்குடி, காயாமொழியில் கற்குவேல் ஐயனாரை கண்குளிரக் காணலாம். கார்த்திகை மாதம் நடைபெறும் கள்ளர்வெட்டு திருவிழா புகழ்பெற்றது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நீர்காத்த ஐயனார் அருள்கிறார். ராஜபாளையத்தின் நீர்வளத்திற்கு இவரே காரணம் என்பது பொதுவான நம்பிக்கை.தேனி, உத்தமபாளையத்தில் பாறையடி முத்துக்கருப்பண்ணரின் ஆலயம் உள்ளது. பக்தர்கள் இவரை தன் தந்தையாகக் கருதி ஐயா என அழைக்கின்றனர். சுவாமியின் காலடியில் வாழைமட்டையைப் படைத்து அதில் பாதியைப் பிரசாதமாக பக்தர்கள் பெறுகிறார்கள். இதனால் குடும்பம் வாழையடி வாழையாகத் தழைக்கும் என்பது நம்பிக்கை.

சேலம், வெண்ணங்கொடியில் உள்ள முனியப்பரை, வேல்விலங்கு எனும் சிறிய இரும்புக் கம்பியால் பூஜித்தால் தீயசக்திகளின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம் என நம்பிக்கை. இந்த வழிபாடு கட்டுவர்த்தனம் என அழைக்கப்படுகிறது.

பெங்களூரு, விபூதிப்புரத்தில் வீரபத்திரரை காளிகாம்பாளோடு தரிசிக்கலாம். தலைக்கு மேலே லிங்கமூர்த்தி உள்ளதால் இவர், லிங்கவீரபத்திரர். மனக்குழப்பம், பயங்களை வீரபத்திரரும், மழலைப் பேறு தடையை காளிகாம்பாளும் விரட்டுகிறார்கள். மதுரை, மடப்புரத்தில் காளிதேவி திருவருள்பாலிக்கிறாள். இங்கு காசுவெட்டிப்போடும் பிரார்த்தனை புகழ்பெற்றது.

அனந்தபத்மநாபன்