பில்லி, சூனியம்,பெரும்பகை அகல...
அமானுஷ்ய சக்திகளைத் தன் வசப்படுத்தி, பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் சில உத்திகளை இந்தக் காலத்திலும் சிலர் கையாண்டு வருகிறார்கள். குறிப்பாக, தற்கால விஞ்ஞான சாதனங்களும், வாழ்வியல் வசதிகளும் கொஞ்சமும் எட்டிப் பார்க்காத குக்கிராமங்கள் சிலவற்றில் இவை காணப்படுகின்றன.பில்லி, சூனியம், ஏவல், செய்வினை, மாந்திரீகம் என்ற பெயர்களில் இந்த அமானுஷ்ய சக்திப் பிரயோகங்கள், இன்றளவும் செலுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
துர்சக்திகளின் ஏவல் மூலமாக ஒருவருக்குத் தீராத நோயையும், மன பலவீனத்தையும், பொருள் இழப்பையும் உண்டாக்க முடியும் என்ற நம்பிக்கை இன்னமும் நிலவி வருவது வியப்பான வருத்தம்தான். இதில், இன்றளவும் கேரள மாந்திரீகம், தமிழக மாந்திரீகம் என்றெல்லாமும் பிராண்டுகள் இருப்பதும் விநோதமானதுதான். ஆனால், இந்த துர் சிந்தனை, துர்செயல் எல்லாம் பெண் தெய்வம் மூலமாக நிறைவேற்றப்படுவதாக நம்பப்படுவதும் விசித்திரமே.
ஆனால், அமானுஷ்ய சக்தியைத் தன் சுயநலத்துக்காக அல்லாமல், பொதுநல நோக்கில் பயன்படுத்துவதும் சில இடங்களில் நிகழத்தான் செய்கின்றன. அத்தகைய தலங்களில் ஒன்றுதான் கும்பகோணம் அருகே உள்ள ஸ்ரீ மகா பிரத்யங்கிரா தேவி திருக்கோயில். சென்னை சோழிங்கநல்லூரிலும் ஸ்ரீ மகா பிரத்யங்கிரா பீடம் என்ற வழிபாட்டுத் தலம் உள்ளது.
மகா பிரத்யங்கிரா தேவி என்ற அவதாரம் எப்போது நிகழ்ந்தது?
கொடியவனான ஹிரண்யனை வதம் செய்வதற்காக திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்தார். சிங்க முகம், கோரைப் பற்கள், தொங்கும் நாக்கு, சிவந்த கண்கள், கூர் நகங்கள் என்று தோற்றம் கொண்ட நரசிம்மர் இரண்யகசிபுவை இருகூறாகக் கிழித்து, அவன் உதிரத்தை உறிஞ்சி வதம் செய்தார். ஆனால், அவனுடைய ரத்தத்தோடு ஊறியிருந்த ஆணவம், அகங்காரம் போன்ற கெட்ட குணங்கள் நரசிம்மரிடம் சேர்ந்துவிட, அவர் கோபம் கூடியது. உக்கிரம் ஓங்கியது. யாருடைய வேண்டுதலாலும் அவரின் ஆக்ரோஷம் அடங்கவில்லை.
மனித குலத்துக்கும், தேவருலகத்துக்கும் ஹிரண்யன் இழைத்த கொடுமைகள் அத்தனை கடுமையாக இருந்ததால், அவனை வதைத்த பிறகும் நரசிம்மரின் கோபம் கொஞ்சமும் தணியாமலேயே இருந்தது. அந்த கோப உக்கிரம், அசுர பலம் கொண்டு விடுமோ என்று அகிலமே அஞ்சும் அளவுக்கு உயர்ந்தது. அந்த கோபாக்கினி பிரபஞ்சத்தையே எரித்து சாம்பலாக்கி விடுமே, அவ்வாறு ஆகிவிடுமானால், அதுவரையிலான ஹிரண்யனின் அரக்க செயல்களுக்கும், இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடுமே என்று பிற இறை வடிவங்கள் எல்லாம் பதறின.
இந்த வெம்மைச் சூழலைத் தணிக்கும் ஆர்வத்தில் சிவபெருமான் சரபேஸ்வரர் ரூபத்தை எடுத்தார். தங்க மயமான பிரமாண்டமான பறவையின் உடல், யாளி (சிங்கம்) முகமும் அதில் கூர்மையான கோரைப் பற்களும், தீப்பறக்கும் நெற்றிக் கண்ணும் கொண்ட உருவம் அது. கருடனைப் போன்ற கூர்மையான மூக்கும், யானையைப் போன்ற தீட்சண்யமான கண்களும் கொண்டிருந்த வடிவம்.
இவ்வாறு விசித்திரமான உருவம் எடுத்து நரசிம்மரின் பெருங்கோபத்தைத் தணிக்க முயன்றார் சிவபெருமான். ஆனாலும் அந்த உக்கிரம் அடங்கும் வழியாகக் காணோம். அப்போது சரபேஸ்வரரின் இறக்கையிலிருந்து உதிர்ந்த ஒரு இறகு, விசித்திரமான இன்னொரு புதுத் தோற்றம் காட்டியது. ஆயிரம் சிம்ம முகங்கள், இரண்டாயிரம் கைகள், தீக்கொழுந்துகளாகக் காட்சி தந்த தலைமுடி, கரிய நிறம், பருத்த உருவம், நீண்டு தொங்கும் நாக்கு, நீலநிற ஆடை, கரங்களில் கணக்கிடலங்கா ஆயுதங்கள் கொண்டு பத்ரகாளி உதித்தாள். அதேசமயம், நரசிம்மரின் உக்கிரம் அவர் உடலில் இருந்து ‘கண்ட பேருண்டம்’ என்னும் விசித்திரமான பறவையாக உதித்தது. மகாபத்ரகாளி, அந்தப் பறவையுடன் சண்டையிட்டு முடிவில் அதை விழுங்கினாள். இதனால் தன் உக்கிரம் முற்றிலுமாக நீங்கிவிட, நரசிம்மர் சாந்தமூர்த்தியாகி விட்டார்.
இவ்வாறு நரசிம்மரை அமைதிப்படுத்திய திருவுருவம்தான் மகா பிரத்யங்கிரா தேவி. ஆண் சிங்கத்தின் தலையும், மனிதப் பெண்ணின் உடலும் கொண்ட வித்தியாசமான தோற்றம். தைரியம், வீரம் என்ற சிவனின் கம்பீர குணமாக முகத்தையும், சக்தி, கருணை என்ற அம்பிகையின் சாந்த குணமாக உடலையும் வர்ணிக்கலாம். தன்னுடைய பெருமைகளை அறிந்த ஆங்கிரஸ், பிரத்யங்கிரஸ் என்னும் இரு மகரிஷிகள் தன் மீது செலுத்திய பக்தியை மெச்சி, அவர்கள் பெயர்களாலேயே தான் அழைக்கப்பட விரும்பினாள் - மகாபத்ரகாளி. அதனால் அவள் மகா பிரத்யங்கிராதேவி ஆனாள்.
ஆனால், மகா பிரத்யங்கிரா தேவியின் பரிபூரண வடிவம், 1008 சிங்க முகங்களையும் (இது மனித தலையின் உச்சியில் உள்ள 1008 இதழ்கள் கொண்ட சஹஸ்ரார சக்கரத்தைக் குறிக்கிறது), 2016 கரங்களையும் கொண்டதாக சிற்ப சாஸ்திரம் விவரிக்கிறது. இந்த பிரத்யங்கிரா தேவியால் நரசிம்மரை முழுவதுமாக சாந்தப்படுத்த முடிந்தது; பின்னாளில் இந்தக் கொடூர ஆனால், தெய்வீக அம்சத்தையும் இறை உருவாக வணங்கும் வழிபாட்டு முறை பக்தர்களுக்கு இடையே தோன்றியது.
முக்கியமாக பிறரை வசியப்படுத்துதல், என்னவென்றே, எதனாலென்றே புரிந்துகொள்ள முடியாத காரணங்களால் தான் பெருத்த துன்பத்துக்கு ஆளாவது போன்ற அதர்மம் சார்ந்த செயலில் ஈடுபட்டவர்கள், பிரத்யங்கிரா தேவியை வழிபட ஆரம்பித்தார்கள். ஆனால், இந்த பிளாக் மேஜிக்கை அம்பிகை ஊக்கப்படுத்தவில்லை, அதற்கு ஆதரவளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
என்னதான் அரக்கத் தோற்றம் கொண்டிருந்தாலும், நரசிம்மரின் கோபத்தை முற்றிலுமாக நீக்குவதற்காக எடுக்கப்பட்ட அவதாரம் அல்லவா அது? ஆகவே, கெடு விளைவை ஊக்குவிப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு தனிமனிதரின் உள்ளத்துக்குள்ளேயும் பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் ஆசாபாசங்களை நீக்கி அவர்களைப் புனிதராக்கும் அரிய சேவையைப் புரிந்து கொண்டிருக்கிறாள், தேவி. அதனால்தான் பிரத்யங்கிரா தேவி அனைவரும் வணங்கத்தக்க பெண் தெய்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறாள்.
ஆனால், தனக்கு ஏதேனும் செய்வினை செய்யப்பட்டிருக்கிறது என்று அஞ்சும் பக்தர்கள் இந்த அன்னையை வேண்டிக் கொண்டு குறிப்பிட்ட பரிகாரங்களை மேற்கொண்டால், முற்றிலுமாக அந்த பயமும், சோக விளைவுகளும் இல்லாமல் போகின்றன என்பது பக்தி நம்பிக்கை. அய்யாவாடி திருத்தலத்தில் மகா பிரத்யங்கிராதேவி இரண்டு ஆள் உயரத்தில், பிரமாண்டமாக, நான்கு சிம்மங்கள் பூட்டிய ரதத்தில் அமர்ந்த நிலையில், பதினெட்டுத் திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறாள். அன்னைக்கு அபிஷேகமோ, அர்ச்சனையோ செய்யப்படுவது இல்லை. தை மாதம், முதல் தினத்தன்று மட்டும் புனுகு தைலம் சாத்தப்படுகிறது.
மகா பிரத்யங்கிராதேவியை உபாசித்தால் எதிரிகளை எளிதாக வெல்லலாம் என்ற ரகசியத்தை அறிந்து கொண்ட ராவணனின் புதல்வன் இந்திரஜித், ராம - லக்ஷ்மணனை அழிக்க மகாபிரத்யங்கிராதேவியை வணங்கி, எட்டுத் திசைகளிலும் மயானங்கள் சூழ்ந்த ஒரு பகுதியில் நிகும்பலா யாகத்தை ஆரம்பித்தான். இதையறிந்த ராமன், பிரத்யங்கிராதேவியை பிரார்த்தித்தான். பிரத்யங்கிராதேவி காட்சி தர, ராமன் அவளிடம் ‘தர்மம் தழைக்க, அதர்மம் அழிய வேண்டும்’ என்று வரம் கோரினான். அன்னையும் வரமளித்து, ஆசிர்வதித்து மறைந்தாள்.
இங்கே இந்திரஜித் எவ்வளவோ இறைஞ்சியும் அன்னை அவன் முன் எழுந்தருளவில்லை. போரில் லக்ஷ்மணன் விட்ட அம்பு இந்திரஜித் மார்பைத் துளைத்தது. இந்திரஜித் இறக்கும் தருவாயில் அன்னையைத் துதித்தான். அவன் யாகம் இயற்றியபோது வராத தேவி இப்போது அவனுக்கு காட்சி அளித்தாள். ‘நீ, உன் தந்தை ராவணனோடு சேர்ந்து ஆரத்துக்கு எதிராகச் செயல்பட்டதால் என் அருள் உனக்கு கிட்டாது போயிற்று. எனவேதான், தர்மத்தின் துணையோடு நின்ற ராம-லக்ஷ்மணரை உன்னால் வெல்ல முடியவில்லை,’ என்று கூறினாலும், அன்னை அவனுக்கு மோட்சத்தை அளித்தாள். அதர்மத்துக்குத் துணை போனதால் இந்திரஜித்தால் எதிரிகளை வெல்ல முடியவில்லையே தவிர, அன்னை பிரத்யங்கிராதேவியை மனதாரத் துதித்ததால் அவனுக்கு முக்தியே கிட்டிவிட்டது!
இன்று மகாபிரத்யங்கிராதேவியின் ஆலயம் அமைந்திருக்கும் இடம்தான் இந்திரஜித் தனது நிகும்பலா யாகத்துக்காகத் தேர்ந்தெடுத்த யாகபூமி. இந்த ஆலயத்தைச் சுற்றி எட்டுத் திசைகளிலும் மயானங்கள் அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை பஞ்சபாண்டவர்கள் இங்கே வந்தபோது, தங்களுடைய அம்பறாத் தூணிகளையும், காண்டீபங்களையும் அன்னையின் காலடியில் சமர்ப்பித்துவிட்டு ஆல இலைகளால் அன்னையை ஆராதித்தனர்.
பிறகு தேவியின் அருளால் எதிரிகளை வென்று, இழந்த செல்வத்தை மீட்டனர். பஞ்சபாண்டவர் வழிபட்டதால், ‘ஐவர் பாடி’ என அழைக்கப்பட்ட இத்தலம், இன்று ‘அய்யாவாடி’ எனத் திரிந்து போயிற்று. இன்றும் அன்னை சந்நிதிக்கு எதிரே உள்ள தல விருட்சமான ஆலமரத்தில் ஒரே கொத்தில் ஐந்து விதமான இலைகள் காணப்படுகின்றன என்பது அந்தப் புராண சம்பவத்தின் சாட்சி.
அன்னையின் சந்நிதி அமைந்திருக்கும் இடமே யாகபூமி என்பதால் இங்கே யாகம் செய்தால் நியாயமான வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுகின்றன. யாகத்தில் அன்னம், நெய், பிற திரவியங்கள், புஷ்பங்கள், பழங்கள் என்று ஆகுதியாக இடப்படுகின்றன. மாந்திரீக உபாதைகள் நீங்க மிளகாய் வற்றல் போடுவதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
சிலர் குடும்பத்திலோ, பணியிடத்திலோ அநியாயமான முறையில் யாராலாவது வஞ்சிக்கப்படலாம்.
அவர்கள் இங்கே வந்து அன்னையிடம் முறையிட்டுக் கொள்ளலாம். கூடவே இருந்து குழிபறிக்கும் உறவினர்களும், நண்பர்களும் நம்மிடம் மிகவும் பாசத்துடனும், நட்புடனும் பழகுகிறார்களே, இவர்களா நமக்கு துரோகம் செய்வார்கள் என்று பெரிதும் நம்பி மோசம் போகும் துர்பாக்கியசாலிகள் அன்னை பிரத்யங்கிரா தேவியை சரணடையலாம். இது தவிர, எதிரிகளால் தீய மாந்திரீக முறையில் ஏவிவிடப்படும் பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, ரணம், ரோகம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், வீட்டில் தோன்றும் அனைத்து திருஷ்டி தோஷங்களால் அவதிப்படுபவர்களும் அன்னையின் அருள் நாடி வரலாம்.
இந்தக் கோயிலில் எப்படி பிரார்த்தனையை மேற்கொள்வது?
அன்னை பிரத்யங்கிரா தேவித் திருக்கோயிலுக்குத் தூய்மையான ஆடைகள் மட்டுமல்லாமல், சுத்தமான மனத்துடனும் வரவேண்டும், நம் வேண்டுதல்களில் நியாயம் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.முதலில் அன்னை முன் மனமுருக நம் பிரச்னைகளைச் சொல்லி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். அன்னைக்கு எலுமிச்சை மாலை சாத்த வேண்டும். நிகும்பலா யாகத்திற்குத் தேவையான திரவியங்களை நம்மால் இயன்றவரை வாங்கித் தர வேண்டும். யாகம் நடக்குபோது, நம் துயரங்களைத் தீர்த்தருளுமாறு நெகிழ்ந்து வேண்டிக் கொள்ளலாம்.
நம் பிரார்த்தனைக்கு அன்னை செவி சாய்ப்பாள். நாமே வியக்கும்படி எதிரிகள் நம்மை விட்டு விலகிவிடுவார்கள். நம் தோஷங்கள் எல்லாம் நிவர்த்தியாகும். பிறகு இக்கோயிலுக்கு வந்து அன்னைக்கு சிவப்பு வண்ணப் புடவை சாத்தியும், நிகும்பலா யாகத்தில் பங்கு கொண்டும், நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளலாம்.இந்தக் கோயிலில், ஒவ்வொரு அமாவாசை நாளன்றும் காலை பத்து மணிக்குத் தொடங்கும் நிகும்பலா யாகம், பிற்பகல் இரண்டு மணிக்கு நிறைவு பெறுகிறது. யாகம் முடிந்தவுடன், தயிர்சாதம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
செய்வினை, பில்லி, சூனியம், பொறாமை மற்றும் எதிரிகளின் தீய எண்ணங்களை முற்றிலுமாக எரித்துத் தீய்க்கும் கவசமாக விளங்குகிறாள், அம்பிகை, பிரத்யங்கிரா தேவி.புறப்பகையை மட்டுமல்லாமல், மனிதருக்குள் புதைந்திருக்கும் காமம், குரோதம், பேராசை முதலான அகப்பகைகளையும் தான் விழுங்கி பக்தரை சுத்தப்படுத்துகிறாள் தேவி. அதேபோல பக்தர்களின் கர்ம வினைகளைத் தான் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஞானத்தை அருள்கிறாள்.
ப்ரபுசங்கர்


