Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பதிகமும் பாசுரமும்

சைவமும், வைணவமும் தழைத்தோங்கும் ஆன்மிக பூமி, தமிழகம். வழிபடு மரபுகள் மாறுபட்டிருந்தாலும், அடுத்தடுத்து சைவ, வைணவ கோயில்கள் நிறைந்திருப்பதிலிருந்து இரு சமயங்களும் ஒரு முகத்தின் இரு கண்களாகப் போற்றப்பட்டு வரும் பண்பாட்டை நாம் இன்றளவும் கடைபிடித்து வருகிறோம். இந்த வகையில் தமிழகத்திலுள்ள சில தலங்களை இத்தொடரில் தரிசிக்கலாம். இவை ஒவ்வொன்றிலும் அமைந்திருக்கும் கோயில்களில் சைவ, வைணவ பாரம்பரியம் பரிமளிப்பதை நம்மால் உணர முடியும்.

வைணவக் கோயில்

களில், ஆழ்வார்களின் பாசுரங்களால் சிறப்பிக்கப்பெற்ற திவ்ய தேசங்களையும், சைவ கோயில்களில் நாயன்மார்களின் பதிகங்களால் போற்றப்பட்ட தலங்களையும் ஒப்பிட்டு நோக்குவோம்.

1. திருவரங்கம்/திருச்சிராப்பள்ளி

திருவரங்கம் அல்லது ஸ்ரீரங்கம், முதலாவது திவ்ய தேசமாகக் கருதப் படுகிறது. நான்கு யுகங்களில் பெருமாள் முறையே காஞ்சீபுரம், ஸ்ரீரங்கம், மேல்கொட்டை மற்றும் திருப்பதியில் கோயில் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. பெரியாழ்வார் (35), ஆண்டாள் (10), குலசேகர ஆழ்வார் (31), திருமழிசை ஆழ்வார் (14), தொண்டரடிப்பொடி ஆழ்வார் (55), திருப்பாணாழ்வார் (10), திருமங்கை ஆழ்வார் (73), பொய்கை ஆழ்வார் (1), பூதத்தாழ்வார் (4), பேயாழ்வார் (2), நம்மாழ்வார் (12) ஆகிய பதினொரு ஆழ்வார்கள் மொத்தம் 247 பாடல்களால் அரங்கனை மங்களாசாசனம் செய்து உள்ளனர்.

எடுத்துக்காட்டாக இரண்டு பாசுரங்களைப் பார்ப்போம்

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா. அமரரேறே. ஆயர்தம் கொழுந்தே. என்னும்,

இச்சுவை தவிர யான்போய் இந்திரலோக மாளும்,

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே

(தொண்டரடிப் பொடியாழ்வார் (873)

பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னைத் தன்

வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான்

கோர மாதவம் செய்தனன் கொல்? அறியேன் அரங்கத்து அம்மான் திரு

ஆர மார்வு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே

(திருப்பாணாழ்வார் - 931)

திருப்பாணாழ்வார் திருமாலின் அழகிய மாலை தம்மை ஈர்த்தது பற்றிக் கூறுகிறார். ‘‘அரங்கனே! பாரம் ஆன என் பழைய வினைகளை நீக்கினாய். என்னை உன் அருகில் அழைத்து என்னுள் புகுந்தாய். நான் என்ன புண்ணியம் செய்தேனோ!’’ என்று வியக்கிறார். தொண்டரடிப் பொடியாழ்வார் பெருமாளின் அழகை அருமையாக விவரிக்கிறார். தன்னை சொர்க்கத்தின் அரசனாக ஆக்கினாலும் கூட அரங்கனை விட்டுப்பிரிய மாட்டேன் என்று கூறுகிறார். அவர் பெருமாளின் தாமரை போன்ற அழகிய மென் சிவப்பு நிறமுடைய கண்களை உள்ளம் கசிந்து வர்ணிக்கிறார்.

தேவாரத்திலும், பிரபந்தத்திலும் பல இடங்களில், ‘என்னுள் புகுந்தான்’, ‘என் உளம் கவர் கள்வன்’எ ன்று இறைவனுடனான தங்கள் அனுபவத்தை நாயன்மார்களும், ஆழ்வார்களும் விளக்குகின்றனர். திருஞானசம்பந்தர் தன் முதல் பதிகத்திலேயே பிரமாபுரத்து இறைவனை, ‘என் உளம் கவர் கள்வன்,’ என்றும் ஆலவாய் ஈசனை, ‘என் உளமே புகுந்த அதனால்,’ என்று கோளறு திருப் பதிகத்திலும் விவரிக்கிறார். திருவலஞ்சுழிப் பதிகத்தில், ‘என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே, வலஞ்சுழி இறைவனைப் போற்றுவதற்கு’ என்றும் சொல்லி நெகிழ்கிறார். இவ்வகையில் முக்கியமான பாடல் பெற்ற இரு தலங்கள் திருவரங்கத்தின் அருகிலேயே உள்ளன.

ஒன்று, ஸ்ரீரங்கத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள திருவானைக்கோயில், இன்னொன்று, 6 கி.மீ தொலைவிலுள்ள தாயுமானவர் கோயில் (மலைக்கோட்டை). மேலும் 11 கி.மீ. தூரத்திலுள்ள திருப்பாலத்துறையையும், 9 கி.மீ தூரத்திலுள்ள திருவாசியையும் குறிப்பிடலாம்.

சிவத்தலங்களில் காஞ்சீபுரம் (நிலம் - ப்ருத்வீ), திருவானைக்கோயில் (நீர் - அப்பு), ஸ்ரீகாளஹஸ்தி (காற்று - வாயு), திருவண்ணாமலை (நெருப்பு - தேயு) மற்றும் சிதம்பரம் (ஆகாயம் - வான்) ஆகியன பஞ்சபூதத் தலங்களாக சிறப்பிக்கப்படுகின்றன. திருவாரூரையும் ப்ருத்வீ (நிலம்) தலமாகக் கருதுவதும் உண்டு திருவானைக்கோயில் தலத்தில் இறைவன் ஜம்புகேஸ்வரர் மீது திருஞானசம்பந்தர் (22), அப்பர் (20) சுந்தரர் (10) மூவரும் பாடிப் பரவசமடைந்திருக்கிறார்கள்.

மறைகளாயின நான்கும் மற்றுள பொருள்களும் எல்லாத்

துறையும் தோத்திரத் திறையும் தொன்மையும் நன்மையும் ஆய

அறையும் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும்

இறைவன் என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே

(சுந்தரர், 7.75.1)

‘நான்கு வேதங்கள், உப நிஷத்துகள், சமயங்கள், ஸ்தோத்திரங்கள் எல்லாம் புராதனமானவை மட்டுமல்ல, அனைவருக்கும் நன்மை அளிப்பவையும் ஆகும். இவையெல்லாம் நீர்த் தலமான ஆனைக்காவில் உறையும் ஆதிதேவனால் அருளப்பட்டவை. இந்த இறைவனைச் சேரும் அடியவர்களுக்கெல்லாம் நான் அடியவன்’ என்று நெக்குருகுகிறார் சுந்தரர்.

தாயுமானவ சுவாமி கோயில் திருச்சி மலைக்கோட்டையில் உள்ளது. பொதுவாக ஒரு கோயிலில் முதலில் விநாயகரை தரிசனம் செய்த பிறகுதான் மூலவரை தரிசிப்பது வழக்கம். ஆனால், இந்தக் கோயிலில், தாயும் ஆன பேரன்பு மிக்க மூலவரான தாயுமானவரை முதலில் தரிசித்து விட்டு, பிறகு மலை உச்சிக்குப் போய் பிள்ளையாரை தரிசிக்கிறோம்! திருஞானசம்பந்தர், அப்பர் இருவரும் இந்ததல மகிமையை ஆளுக்கு ஒரு பதிகம் பாடி சிறப்பித்துள்ளனர்.

நன்றுடையானைத் தீயதில்லானை நரைவெள்ளேறு

ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்

சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்

குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே

(சம்பந்தர்: 1.98.1)

சிவபெருமான் நல்லதையே அருள்பவன். நாம் எளிதில் அடைய முடியாத உயரத்திலும் நிலையிலும் இருப்பவன். அந்த இறைவனைப் பற்றிப் பாடப்பாட என் மனம் குளுமையையும் நல்லெண்ணத்தையும் அடையும், என்பது சம்பந்தரின் வாக்கு.சென்றடையாத திருவுடைய இறைவனைச் சென்றடைய நாம் நன்றுடையவர்களாகவும் தீமை இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும். திருநணா பதிகத்தில், சம்பந்தர் ‘செல்லா அருநெறிக்கே செல்ல அருள்புரியும் திருநணாவே,’ என்று கூறுகிறார். இறைவன் நாம் எளிதாக எட்டிவிட முடியாத நிலையில் இருப்பவர் என்பது புலனாகிறது.

2. சிதம்பரம் (தில்லைச் சிற்றம்பலம்) /திருச்சித்திரகூடம்)

சிதம்பரத்தில் உள்ள தில்லை நடராஜர் கோயில் உலகப் புகழ் பெற்றது. பஞ்ச பூத லிங்கங்களில் ஆகாச லிங்கக் கோயில் இது. பாடல் பெற்ற தலங்களிலே முதலானது. கோயில் என்றால், தில்லை சிற்றம்பலத்தையே குறிக்கும். தில்லை ஈசனின் பெருமையை திருஞானசம்பந்தர் (22), அப்பர் (88), சுந்தரர் (10) ஆகியோர் பாடிக் கொண்டாடியிருக்கிறார்கள்.

ஆடினாய் நறு நெய்யொடு பால்தயிர் அந்தணர் பிரியாத சிற் றம்பலம்

நாடினாய் இடமா நறுங் கொன்றை நயந்தவனே

பாடினாய் மறையோடு பல் கீதமும் பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்

சூடினாய் அருளாய் சுருங்க எமதொல்வினையே.

(சம்பந்தர் 3.1.1)

முதல் வார்த்தையாக சம்பந்தர், ‘ஆடினாய், என்று ஆரம்பிக்கிறார். என் கடந்த கால வினைகளை நீக்குவாய் என்று  விண்ணப்பம் செய்கிறார்.

கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே

செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய

முற்றா வெண்திங்கண் முதல்வன் பாதமே

பற்றா நின்றாரைப் பற்றா பாவமே

- என்றும் இன்னொரு பதிகத்தில் (1.80.1) பாடி மகிழ்கிறார்.

தில்லை வாழ் அந்தணர்கள் வேதத்தைக் கற்று, யாகங்கள் இயற்றி, இறைவனை மகிழ்விக்கின்றனர். இறைவன் பாதத்தை வழிபடுவோரைப் பாவங்கள் சேரா என்கிறார் சம்பந்தர். தில்லைக் கோயிலிலேயே நடராஜர் சன்னதிக்கு எதிரில் திவ்ய தேசமான திருச்சித்திர கூடம் உள்ளது. கோவிந்தராஜப் பெருமாள் புஜங்க சயனத்தில் தன் கரத்தையே தலையணையாக வைத்து, ஆனந்த சயனனாக, புன்முறுவலோடு காட்சி அளிக்கிறார்.

குலசேகர ஆழ்வார் (11), திருமங்கை ஆழ்வார் (21) இருவரும் பாசுரம் இயற்றிப் பெருமாளை மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். பெருமாளை ஸ்ரீராமனாகவே இருவரும் பார்க்கின்றனர். ஸ்ரீராமர் சீதா தேவியோடு மகிழ்ந்து இருந்த சித்திரகூடமாகக் கருதப் படுவதால் இந்தத் தலம், திருச்சித்திர கூடம் என்று பெயர் கொண்டது.

அங்கணெடு மதிள்புடைசூழயோத்தி யென்னும் அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி

வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண்முழுது முயக்கொண்ட வீரன்றன்னை,

செங்கணெடுங் கருமுகிலை யிராமன் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்

எங்கள்தனி முதல்வனையெம் பெருமான்றன்னை என்றுகொலோ கண்குளிரக் காணுநாளே

(குலசேகர ஆழ்வார், 741)

குலசேகர ஆழ்வார் சூரிய வம்சத்து ஸ்ரீராமரை, கோவிந்தராஜனாகப் பார்க்கிறார்; உள்ளம் நெகிழ்ந்து பாடுகிறார்.

ஊன்வாட உண்ணாது உயிர்க்காவலிட்டு உடலிற்பிரியாய் புலனைந்தும் நொந்து

தாம் வாடவாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாளகிற்பீர்

கானாட மஞ்ஞைக் கணமாடமாடே கயலாடுகானீர்ப் பழனம் புடையோய்

தேனாட மாடக்கொடியாடு தில்லைத் திருசித்ரகூடம் சென்று சேர்மின்களே

(திருமங்கை ஆழ்வார் 1158)

திருமங்கை ஆழ்வார் பக்தர்களைத் தில்லைச் சித்திர கூடத்திற்கு வருமாறு அறிவுறுத்துகிறார். கஷ்டப்பட்டு உடலை வருத்தி தவம் செய்ய வேண்டாம். நீங்கள் கேட்பதை சித்திர கூடத்துப் பெருமாள் அருள்வார் என்று அறைகூவி அழைக்கிறார். இந்தத் தலத்தின் பெருமையையும் ஆழ்வாரின் பக்தியையும் இப்பாசுரம் ஒருசேர உணர்த்துகிறது.

(தொடரும்)

பேராசிரியர் ஜி. ஸ்ரீநிவாசன்